வீட்டுப் பொறுப்பாளர்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் இறுதிக்கால போதனை தொடர்கிறது. 'தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்?' என்னும் கேள்வியை எழுப்புகின்ற இயேசு, 'தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர்' என்று பதில் தருகின்றார்.
இந்த நற்செய்தி வாசகப் பகுதியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு இரு பெயர்கள் நினைவுக்கு வருவதுண்டு. ஒன்று, அருள்தந்தை பெர்க்மான்ஸ் (ஜெபத்தோட்டம்). இவர் தன்னை இந்த உருவகத்தோடு இணைத்துப் பார்க்கின்றார். தலைவரால் பொறுப்பாளராக ஏற்படுத்தப்படுதல் என்பது அருள்பொழிவு செய்யப்படுதல். மேலும், அருள்பணியாளர் எப்போதும் பொறுப்பாளரே அன்றி, அவர் தலைவர் அல்லர். மற்றும் அவருடைய பணி ஊழியருக்குப் படியளப்பதே தவிர, தனக்குப் படியளப்பது அல்ல. அருள்பணியாளர்களுக்கான இந்த உருவகத்தை அருள்தந்தை பெர்க்மான்ஸ் நமக்கும் கற்றுத் தருகின்றார். இரண்டாவது பெயர், முதல் ஏற்பாட்டு யோசேப்பு. யோசேப்பு எகிப்து நாட்டில் அடிமையாக விற்கப்படுகின்றார். அடிமையாக போத்திபாரின் இல்லத்திற்குள் நுழைந்த அவர் சில நாள்களில் போத்திபாரின் வீட்டுப்பொறுப்பாளராக மாறுகின்றார். நிகழ்வின்படி, போத்திபாரின் இல்லத்தரசி இவர்மேல் மையல் கொள்கின்றார். யோசேப்பின் கண்ணியம் நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. தான் தன் கடவுளாலும் தன் சகோதரர்களாலும் கைவிடப்பட்ட நிலையிலும், 'கடவுளின் கண்களில் தீயதெனப்படுவதை நான் செய்யலாமா?' எனக் கேட்கின்றார் யோசேப்பு. மேலும், இல்லத்திலிருந்து தப்பி வெளியே ஓடுகின்றார். இதுதான் பொறுப்பாளரின் நேர்மை.
வீட்டுப் பொறுப்பாளர் என்ற நிலைக்கு இரு பண்புகள் அவசியம். இந்த இரு பண்புகளுமே யோசேப்பிடம் இருந்தன. ஒன்று, தன் வரையறை மற்றும் எல்கையை அறிவது, வரையறுப்பது, உறுதி செய்வது. இரண்டு, எப்போது வெளியேற வேண்டுமோ, அப்போது வெளியேறுவது. பொறுப்பாளர் தலைவராக முயற்சிக்கவும் கூடாது, ஊழியரோடு அமர்ந்து உண்டு குடிக்கவும் கூடாது. தன் வரையறையை அறிந்தவராகவும், உறுதி செய்பவராகவும் அவர் இருத்தல் வேண்டும். மேலும், வாழ்வின் மிக முக்கியமான பண்பு ஒன்றைவிட்டு வெளியேறக் கற்றுக்கொள்வது. மகாபாரதத்தில் அர்ச்சுனரின் மகன் அபிமன்யு பற்றிய ஒரு நிகழ்வு உண்டு. அபிமன்யு எதிரியின் போர் வளையத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவார். ஆனால், அவருக்கு அதிலிருந்து வெளியேறுவது எப்படி எனத் தெரியாததால் போரில் கொல்லப்படுவார். உறவுநிலையாக இருக்கலாம், நாம் செய்கின்ற வேலையாக இருக்கலாம், நம் வாழ்வின் படிநிலையாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும், 'இந்த இடத்தை விட்டு நான் எப்போது வெளியேற வேண்டும்?' என்ற கேள்விக்கு விடை எனக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தேவைக்குமேல் தங்குதல் ஆபத்தானது.
இறுதியாக, இயேசு, 'மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்' என்கிறார். ஊழியக்காரர்களிடம் கொடுக்கப்படுவது குறைவு. ஏனெனில், அவர்கள் பெறும் வெகுமதியும் குறைவு. அவர்களின் பொறுப்புணர்வும் குறைவு. ஆனால், வீட்டுப் பொறுப்பாளரிடம் ஊழியர்கள் கொடுக்கப்படுகின்றார்கள். அவர்களின் வெகுமதியும் பொறுப்புணர்வும் அதிகம்.
நம் வாழ்வில் இதை நன்றாகக் கவனிக்கலாம். இதை மேலாண்மையியலில் ஸ்னோபால் இஃபெக்ட் என்றழைப்பார்கள். அதாவது, ஸ்னோபால் மேலேயிருந்து உருண்டு விழத் தொடங்கும்போது சிறிய பந்து போல இருக்கும், அது மலையிலிருந்து சறுக்கி கீழே வரும்போது, வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அளவு கூடிக்கொண்டே இருக்கும். கீழே வரும்போது அது பெரிய பனிப்பாறையாக வரும். நம் வாழ்விலும் பொறுப்புணர்வும் வேகமும் அதிகரிப்பதைப் பொறுத்து நம் வாழ்வில் பணிகளும் கூடிக்கொண்டே வரும்.
அதிகம் ஓய்ந்திருப்பவர் அல்லர், மாறாக, அதிகம் பணி செய்பவரே இந்த உலகை மாற்றக் கூடியவர். ஏனெனில், ஓய்வு என்பதில் இயக்கம் இல்லை. பணியில் எப்போதும் இயக்கம் உள்ளது.
வீட்டுத்தலைவருக்கும், ஊழியருக்கும் நம்பிக்கைதரும் வகையில் செயல்படும் “வீட்டுப்பொறுப்பாளர் யார்?” எனும் கேள்வியை எழுப்பும் இயேசு, “தலைவர் வந்து பார்க்கும் போது தன் பணியைச் செய்து கொண்டிருப்பவரே!” எனும் பதிலையும் தருகிறார். இந்தப் பணியாளர்களுக்கு எடுத்துக்காட்டாக இருவரை முன்மொழிகிறார் தந்தை. முன்னவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.ஆனால் பழைய ஏற்பாட்டு யோசேப்பு? கடவுளாலும்,சகோதர்ர்களாலும் கைவிடப்பட்ட நிலையிலும் கடவுளின் கண்களில் தீயதெனப்பட்டதைத் தவிர்க்க அந்த இடத்தை விட்டே நகர்கிறார்.இப்படிப்பட்டதொரு பொறுப்பாளருக்கு இறைவன் தந்த பரிசு தான் “ எகிப்து நாட்டிற்கே பொறுப்பாளியாக்கியது!” இப்படிப்பட்ட பொறுப்பாளரின் இலக்கணமாக “நான் எப்பொழுது இந்த என் நிலையிலிருந்து வெளியேற வேண்டும்?!” எனும் கேள்விக்கு பதில் தெரிந்தவராக இருக்கவேண்டும் என்கிறார் தந்தை. எனக்கொரு சந்தேகம்… எப்பொழுது வெளியேற வேண்டுமெனும் மனநிலையில் இருப்பவர் தன் முழு ஈடுபாட்டையும் பார்க்கும் வேலையில் காட்ட முடியுமா? என்பதே!
ReplyDeleteமலையிலிருந்து உருண்டு வரும் பனித்துகள்கள் கீழே வந்து விழுகையில் பெரிய பனிக்கட்டியாக மாறும் என்பதை ஒருவருக்குப் பொறுப்புணர்வும்,வேகமும் கூடுகையில் வாழ்வின் பணிகளும் கூடும் என்பதோடு பொறுத்திப்பார்ப்பது அழகு! இதற்கு தந்தையை விட வேறு யாரை எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்?
ஓய்ந்திருப்பவர் அல்ல; பணிசெய்பவரே இவ்வுலகை மாற்றக்கூடியவர்.உண்மைதான்… நேற்றையத் தலைப்பை இன்றையத் தலைப்புடன் பொறுத்திப்பார்க்கையில் “விழித்திருக்கும் எந்தப் பணியாளனும் வீட்டுப்பொறுப்பாளராகலாம்” எனும் உண்மை புரிகிறது.
தலைவனாக…பொறுப்பாளனாகத் துடிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்! தந்தைக்கு நன்றிகள்!!!