Tuesday, October 5, 2021

எங்களுக்கும் கற்றுக்கொடும்!

இன்றைய (6 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 11:1-4)

எங்களுக்கும் கற்றுக்கொடும்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்கின்றார். 

'இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கின்றார்.'

'எங்களுக்கும் கற்றுக்கொடும்!' என்று சீடர்கள் சொல்ல இரு காரணங்கள் உள்ளன: ஒன்று, இயேசு அடிக்கடி தனிமையில் செய்கின்ற இறைவேண்டல் அவர்களுக்குத் தூண்டுதலாக இருக்கின்றது. இரண்டு, இயேசுவின் சீடர்களுள் சிலர் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடர்களாக இருந்துள்ளனர். இதைப் பற்றி நாம் யோவான் நற்செய்தியின் தொடக்கத்தில் வாசிக்கின்றோம்.

இயேசுவும் உடனடியாகக் கற்றுக்கொடுக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இறைவேண்டலை மலைப்பொழிவின் ஒரு பகுதியாக எழுதுகின்றார். லூக்காவோ அதை இயேசுவின் இறைவேண்டலின் பின்புலத்தில் எழுதுகின்றார். இறைவேண்டலில் இரு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி, இறைவனையும் மையப்படுத்தியதாகவும், இரண்டாம் பகுதி, செபிக்கின்ற நபரை மையப்படுத்தியதாகவும் இருக்கின்றது. மேலும், எல்லாம் இறைவனிடமிருந்து வருவதாக இருந்தாலும், 'எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால்' என்ற வரியில், இது செபிக்கின்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய செயலாக இருக்கின்றது.

நாம் மன்னிப்பதால் இறைவன் நம்மை மன்னிக்கிறார் என்றால், அது இறைவனின் மன்னிப்பை நிபந்தனைக்கு உட்படுத்துவதாக இருக்கிறதே! என்று நாம் கேள்வி எழுப்பலாம்.

நாம் பிறரை மன்னித்தல் இறைவனின் மன்னிப்புக்கு நாம் விதிக்கும் நிபந்தனை அல்ல. மாறாக, இறைவனின் மன்னிப்பை உணர்வதற்கான தளத்தை மன்னித்தல் உருவாக்கித் தருகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில், யோனா, இறைவன் நினிவே நகர மக்களுக்கு வழங்கிய மன்னிப்பைப் பார்த்துப் பொறாமை கொள்கின்றார். இறைவன் புறவினத்தார்க்குக் காட்டிய இரக்கம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. இதை அவருக்கு ஓர் ஆமணக்குச் செடி வழியாக உணர்த்துகிறார் கடவுள்.

இயேசு கற்றுத்தருகின்ற இறைவேண்டல் இரு நிலைகளில் புரட்சிகரமாக உள்ளது: ஒன்று, கடவுளை 'அப்பா' என அழைக்குமாறு நம்மைத் தூண்டுகிறது. கடவுளை 'அப்பா' என அழைக்கும்போது, நாம் ஒருவர் மற்றவரை, 'சகோதரர், சகோதரிகள்' என அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். இரண்டு, மன்னித்தல் என்பதை ஒரு முக்கியமான வாழ்வியல் கூறாக முன்மொழிகின்றது. நம் வாழ்வின் இயங்குதளம் எப்போதும் நீதி என்று இருக்க முடியாது. இரக்கம் என்பதும் அங்கே கலந்திருக்கிறது என்பதையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. “எங்களுக்கும் கற்றுக்கொடும்”.. என்று தன்னைக் கேட்ட சீடர்களுக்கு அழகான இறைவேண்டலைக் கற்றுத்தருகிறார் இயேசு!” எங்களுக்கு எதிராக க் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதால்!” என்று நாம் சொல்லும் ஒவ்வொரு முறையும் நமக்குத்தீமை செய்த அனைவரையும் மன்னிக்க நாம் தயாராயிருக்கிறோம் என்று நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் நிபந்தனை! இறைவனுக்கு நாம் செய்து தரும் சத்தியப்பிரமாணம்!
    நாம் இந்த இறைவேண்டலை நமதாக்கிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் இறைவன் நம் தந்தை என்பதால்…’ அவரில்’ நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் நம் சகோதர- சகோதரிகளாக்கிக் கொள்ளும் பேற்றுக்கு ஆளாகிறோம்.நம் வாழ்வின் இயங்குதளத்தில் ‘நீதி’ ஒன்றே நிரந்தரமாக இருக்கமுடியாதென்பது உண்மையே! “இறைவனின் இரக்கத்தின்” வெளிச்சம் வெளிப்பட அவ்வப்பொழுது அங்கே ‘அநீதி’ தலைகாட்டுவதில் தப்பில்லை.ஆனால் அது நிரந்தர இடத்தைப்பிடித்து விடாமல் பார்த்துக்கொள்தல் நம் கடமை.
    “ விண்ணகத்திலிருக்கிற எங்கள் தந்தையே!” என்று நாம் குரலெழுப்பும் ஒவ்வொரு முறையும் இறைவனுக்கு நம்மீதுள்ள இரக்கமும்,நாம் நம் சகோதர- சகோதரிகள் மீது காட்ட வேண்டிய மன்னிப்பும் நம் மனங்களை நிரப்பட்டும்!
    அழகானதொரு இறைவேண்டல்….அர்த்தமுள்ளதொரு விளக்கம்… தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete