Wednesday, October 20, 2021

பிளவு

இன்றைய (21 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 12:49-53)

பிளவு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தான் 'கலகம் செய்ய' வந்ததாகவும், இந்தக் 'கலகம் செய்தல்' ஒருவர் மற்றவரைப் பிரித்துவிடும் என்றும், இறுதியில் இறையாட்சித் தாகம் கொண்டோர் 'ஒன்று சேர்வர்' என்றும் சொல்கின்றார். 'மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்போதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்' என்கிறார். அதாவது, இயேசுவை அல்லது இறையாட்சியைத் தெரிந்துகொள்தல் என்பது 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' அல்லது 'அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்' என்ற தெரிவு அல்ல. மாறாக, அது இன்றே, இப்போதே 'பற்றி எரிய' வேண்டும். 'கலகம்' இன்றே என்னுள்ளே நடக்க வேண்டும். இவ்வாறாக, இறையாட்சிக்கான தெரிவின் உடனடித்தன்மையையும், வேகத்தையும் முன்வைக்கிறார் இயேசு. இயேசுவின் இறையாட்சிப் பணியின் சுருக்கமாக இவ்வார்த்தைகள் இருக்கின்றன. இயேசு சென்றவிடமில்லாம் தீயிட்டுக்கொண்டே சென்றார். ஆடம்பர மாளிகையில் பிறக்காமல் மாட்டுக்கொட்டிலில் பிறந்த போதே மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அரண்மனையில் இருப்பதற்குத் தீயிட்டார். ஆலயத்தில் இரண்டு செப்புக்காசுகள் போட்ட கைம்பெண்ணைப் பாராட்டியபோது தன்னுடைய சமகாலத்து மனிதர்களின் போலியான ஆன்மீகத்திற்குத் தீயிட்டார். 'சமாரியனைப் போல நீயும் செய்' என்று சொல்லி மறைநூல் அறிஞரை அனுப்பியபோது அவருடைய சமகாலத்துத் தீண்டாமைக்குத் தீயிட்டார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம், 'நானும் உன்னைத் தீர்ப்பிடேன்' என்று சொன்னபோது, அவர்களுடைய சட்டத்திலிருந்த ஓட்டைக்கும், அவர்களின் மேட்டிமைப் போக்கிற்கும் தீயிட்டார். இப்படியாக, அவர் சென்றவிடமெல்லாம் தீ பற்றி எரிந்தது. இயேசுவைத் தெரிந்துகொள்பவரும் அப்படியே இருத்தல் வேண்டும்.

மேலும், நெருப்பின் இயல்பு தொடர்ந்து முன்னே சென்றுகொண்டிருப்பது. நெருப்பு ஒருபோதும் பின்வாங்குவதில்லை. அது பின்வாங்குவதால் அது எரித்த பொருள் திரும்ப பழைய நிலைக்கு வருவதும் இல்லை. போகிற போக்கில் அது தான் தழுவும் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக்கொண்டே செல்லும். இறையாட்சிக்கான தெரிவைச் செய்கிற எவரும் மீண்டும் தன்னுடைய பழைய இயல்புக்குத் திரும்ப முடியாது. அவர் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும்.

இப்படி அவர் முன்னேறிச் செல்லும்போது, 'தெரிவு செய்தோர்' - 'தெரிவு செய்யாதோர்' என்ற பிளவு ஏற்படும். 'தெரிவு செய்தோர்' ஒன்று சேர்வர். தெரிவு செய்யாதோர் பிரிந்து நிற்பர். இந்தப் பிளவு விபத்து அல்ல. இது இப்படித்தான் நடக்கும். தாயின் கருவறையில் தாயோடு குழந்தையை இணைக்கும் தொப்புள்கொடி பிளவுண்டால்தான் குழந்தை உயிர்பெறும். நாம் இறுதியில் இம்மண்ணக வாழ்விலிருந்து பிளவுபட்டால்தான் விண்ணக வாழ்விற்குப் பிறக்க முடியும். உயிரினத்தின் செல்பிளவிலிருந்து, நமக்கு ஆற்றல்தரும் அணுப்பிளவு வரை பிளவு இன்றி உயிரும் வாழ்வும் இல்லை.


2 comments:

  1. “இயேசுவைத் தெரிந்து கொள்வது நாளை பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயமல்ல; அது இப்போதே பற்றியெரியவேண்டும்” எனும் வார்த்தைகளில் இறையாட்சிக்கான தெரிவின் உடனடித்தன்மையையும், வேகத்தையும் முன்வைக்கும் ஒரு பதிவு.இந்தத் தீயை அவர் மாட்டு கொட்டகையில் பிறந்த போதும்…ஆலயத்தில் தன்னிடமிருந்த செப்புக்காசுகளைப்போட்ட கைம்பெண்ணப் பாராட்டியபோதும்..”சமாரியனைப்போல் நீயும் செய்” என மறைநூல் அறிஞரை அனுப்பியபோதும்…” நானும் உன்னைத்தீர்ப்பிடேன்” என விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேசிய போதும்….அவரின் ஒவ்வொரு சொல்- செய்கையிலும் வெவ்வேறு விஷயங்களுக்காகத் தீ மூட்டுவதற்கே முன்னுரிமை கொடுத்து வாழ்ந்தார் என்கின்றன இன்றையப் வரிகள்.ஒரு முறை பற்றிவிட்டால் முன்னேறிச் செல்லும் நெருப்பாக…நாமும் முன் வைத்த காலை பின்னே செல்லாமல் பார்த்துக்கொள்வது நம் கட்டாயம். ‘கலகம் வந்தால் தான் காரியம் தெளிவாகும்’ என்பது போல, இங்கே நல்லவை நடக்க…செல் பிளவிலிருந்து ஆற்றல் தரும் அணுப்பிளவு போல “ தெரிவு செய்தோர் ஒன்று சேர்வதும்” “தெரிவு செய்யாதோர் பிரிந்து நிற்பதும்” நடக்க வேண்டிய எதார்த்தங்கள்! இயேசுவின் வீரியமிக்க போதனையை கொளுந்துவிட்டெரியும் தீக்கு சம்மாக்கி தந்தை கொடுத்திருக்கும் இந்தப் பதிவு உண்மையிலேயே பற்றியெரிவதையும்….அது நம்மையும் பற்றிக் கொள்வதையும் உணரமுடிகிறது. …தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. நானும் கூட என் வாழ்க்கைப்பயணத்தில், அடுத்தவரில் பற்றியெரியும் தீயாக இல்லையெனினும், மின்மினிப்பூச்சியாக மிளிரும் ஒரு ஒளிக்கற்றையாக வேணும் ஒரு சொல்லையோ…செயலையோ தர முடிந்தால் எத்துணை நலம்!

    ReplyDelete