Thursday, October 7, 2021

பெயல்செபூல்

இன்றைய (8 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 11:15-26)

பெயல்செபூல்

இயேசுவுக்கு நாம் மிகவும் ரொமான்டிக்கான பட்டங்களை - கிறிஸ்து, இறைமகன், தாவீதின் மகன், தலைமைக்குரு, அரசர் - என்று நிறையப் பட்டங்களைக் கொடுக்கிறோம். ஆனால், அவரின் சமகாலத்து எதிரிகள் அவருக்கு வழங்கிய பெயர்களில் ஒன்று 'பெயல்செபூல்'.

'பெயல்செபூல்' என்பவர் 'பேய்களின் அரசன் அல்லது இளவரசன் அல்லது தலைவன்' என்று புதிய ஏற்பாடு சொல்கிறது (காண். மத் 12:24, லூக் 11:15). இயேசுவின் எதிரிகள் அவரை பெயல்செபூல் பிடித்திருந்தாகவும் (காண். மாற் 3:24), அவரே பெயல்செபூல் என்றும் (காண். மத் 10:25), பெயல்செபூலின் பெயரைக் கொண்டே அவர் பேய்களை ஓட்டுகிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளில் 'பெயல்செபூப்' என்று உள்ளது. கிரேக்கத்தில் 'சாத்தானாஸ்' மற்றும் 'டியாபோலோஸ்' என்றால் எதிரி, எதிராளி, குற்றம் சுமத்துபவர், அல்லது தீய ஆவி என்பது பொருள். ஆனால், இவ்வார்த்தைகளுக்கும் 'பெயல்செபூலுக்கும்' நேரடியாக தொடர்பு எதுவும் இல்லை. அக்காடிய மொழியில் 'பெல் தபாதி' என்றால் 'பேச்சின் தலைவன்' என்பது பொருள். 'பெயல்செபூப்' மற்றும் 'பெயல்செபூல்' என்னும் வார்த்தைகள் இஸ்ரயேலின் சமகாலத்துக் கடவுளர்களான 'பாகால்-செபூப்' மற்றும் 'பாகால்-செபூல்' என்பவர்களிடமிருந்து வந்திருக்கலாம். 'பாகால்-செபூல்' என்றால் 'ஈக்களின் கடவுள்' அல்லது 'சாணத்தின் கடவுள்' என்பது பொருள். பெலிஸ்தியக் கடவுளான எக்ரோனும் பெயல்செபூல் என அழைக்கப்பட்டார் (காண். 2 அர 1:2-16). இவருக்கு 'கோவிலின் கடவுள்' என்ற பெயரும் உண்டு. இப்படியாக, பிறஇனத்துக் கடவுள் சாத்தானாகக் கருதப்பட்டு, அவரே சாத்தானின் தலைவனாக வரையறுக்கப்படுகின்றார்.

இயேசு தன்மேல் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை இரண்டு வகைகளில் எடுத்துக்கொள்கிறார்:

ஒன்று, 'நான் அலகையின் எதிரி!' என்று உறுதியாகக் கூறுகிறார். பேய் அல்லது அலகையை வெல்ல முடியாத எதிரி என்று ஏற்றுக்கொள்கிறார் இயேசு. தீமையை வெற்றி கொள்தல் என்பதோ, தீமையை முழுமையாக அழித்துவிடலாம் என்பதும் இயலாது என்பதை இயேசு ஏற்றுக்கொள்கின்றார். ஒரு வீடு தனக்கு எதிராக பிளவுபட்டால் அது விழுந்துவிடும். அலகை அலகைக்கு எதிராக எழுந்தால் அலகை விழுந்துவிடும். பெயல்செபூல் ஒருபோதும் அலகைக்கு எதிராக எழும்ப மாட்டார். இயேசு வெளியிலிருந்து அலகையை எதிர்க்கிறார். ஆக, பெயல்செபூல் அல்ல அவர்.

இரண்டு, 'நீங்களே பேய் பிடித்தவர்கள்' என்று உருவகமாகக் கூறுகிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற பேய் ஒதுங்க இடம் கிடைக்காமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே ஏழு பேய்களுடன் வருகிறது. அதாவது, 'உங்களிடமிருந்து நான் பேயை ஓட்டினாலும் நீங்கள் இன்னும் கேடுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்' என்று அவர்களை நினைத்துப் புலம்புகிறார் இயேசு.

நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதியில், இயேசு, 'திரும்பி வருகின்ற பேய்' உருவகத்தைக் கூறுகின்றார். தான் விட்டுச் சென்ற வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காண்கின்ற பேய் தன்னைவிட பொல்லாத ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டு வருகின்றது. பேய் பிடித்தவரின் பிந்தைய நிலை முந்தைய நிலையைவிட மோசமாகிறது.

அதாவது, வலியவனைத் தாங்க வேண்டிய ஆயுதத்தை நாம் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். கூட்டி அழகுபடுத்தியிருந்தால் மட்டும் போதாது. ஆக, தீமைக்கு எதிரான விழிப்புநிலை கொண்டிருக்க இயேசு நம்மை அழைக்கின்றார்.

1 comment:

  1. ‘ பெயல்செபூல்’…..பெயர்க்காரணம் எதுவாக இருப்பினும், இயேசு கூறும் “தான் அலகைக்கு எதிரி” எனும் சொற்கள் …அப்படியானால் அவர் பெயல்செபூல்தான்….அலகையை எதிர்க்கும் பெயல்செபூல்தான் என்று ஏற்றுக்கொள்கிறாரா? கொஞ்சம் குழப்பம் எழுகிறது மனத்தில்.
    இன்றைய நற்செய்தி வாசகத்தின் படி நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அழுக்கான வீட்டைப்பற்றியல்ல…அழகான வீட்டைப்பற்றியே.ஆம்! அழுக்கான…பாவக்கறை படிந்த ஒரு உள்ளத்தை விட்டு விரட்டப்பட்ட அலகை, அந்த உள்ளம் பாவக்கறை நீங்கி…அழகு படுத்தப்பட்டு… நல்லவனாக முயற்சி செய்து…இரண்டும்கெட்டான் நிலையிலிருக்கும் ஒரு உள்ளத்துக்காக அலைகிறது. இன்றைய வாசகங்கள் நம்மிடமிருக்க வேண்டிய ஜாக்கிரதை உணர்வு பற்றிச்சொல்கின்றன.”ஒருமுறை அலகையால் ஆட்சிசெய்யப்பட்ட நம் உள்ளம் மீண்டும் அலகை உள்ளே நுழையாவண்ணம் விழிப்பு நிலை கொண்டிருக்க வேண்டும்” எனும் இயேசுவின் அழைப்பிற்கு செவிமடுப்போம். நம் ஆயுதங்களைக் கூர்மையாக்கித் தயாராக வைத்திருப்போம்.வலியவனுக்கு எதிரான விழிப்புணர்வைத் தட்டி எழுப்பும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete