Saturday, October 30, 2021

வாழ்வின் முதன்மைகள்

ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

I. இணைச்சட்டம் 6:2-6 II. எபிரேயர் 7:23-28 III. மாற்கு 12:24-34

வாழ்வின் முதன்மைகள்

மனித குலம் தன் முதல் அடியை எடுத்துவைக்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நம்மைத் தொடர்ந்து வரும் கேள்வி, 'வாழ்வின் முதன்மை எது?' அல்லது 'எல்லாவற்றிலும், எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் பொருந்தக் கூடிய வாழ்வின் முதன்மை எது?' மெய்யியல், இறையியல், அறிவியல் என எல்லாத் துறைகளும் இக்கேள்விக்கான விடையைத் தேடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய கேள்வி முதல் ஏற்பாட்டுக் காலத்திலும், இயேசுவின் காலத்திலும் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கான மோசே மற்றும் இயேசுவின் பதில்களும், அவை நமக்கு விடுக்கின்ற அழைப்புகளுமே இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் கேட்கவிருப்பவை.

இன்றைய முதல் வாசகம், யூத நம்பிக்கை அறிக்கையின் அடிநாதமாகக் கருதப்படுகின்றது. 'பெரிய ஷெமா' அல்லது 'பெரிய கேட்டல்' என்றழைக்கப்படுகின்ற இந்தப் பகுதி, 'கேள்' ('செவிகொடு') என்ற வினைச்சொல்லோடு தொடங்குகிறது. நம் வாசகப் பகுதியில், இச்சொல் இருமறை வருகின்றது. இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய பாலைநிலப் பகுதியின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றனர். பாலும் தேனும் பொழிகின்ற வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் அவர் நுழைவதற்கு முன் மோவாபு சமவெளிப் பகுதியில் மோசே அவர்களுடன் உரையாடுகின்றார். அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளின் முக்கியமான பகுதிகளை மீண்டும் சுட்டிக்காட்டுகின்றார். புதிய நாட்டில் அவர்களுடைய வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். அவர்கள் தன் போதனைகளை நினைவில் வைத்திருப்பது சாத்தியமன்று என உணர்கின்ற மோசே, அவர்களுடைய நம்பிக்கை மற்றும் வாழ்வுக்கு அடிப்படையான இரு விடயங்களை, 'செவிகொடு' என்னும் இரு கட்டளை வினைச்சொற்கள் வழியாக எடுத்துரைக்கின்றார்.

முதலில், 'கட்டளைகளுக்குச் செவிகொடுத்தல்.' கட்டளைகள் என்பவை ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக சீனாய் மலையில் வழங்கிய பத்துக் கட்டளைகளையும், மற்றும் பல்வேறு சூழல்களில் மோசே மக்களுக்கு வழங்கிய நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளையும் உள்ளடக்கியவை. கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் பலன் நெடுநாள் வாழ்வு என முன்மொழிகின்றார் மோசே. இரண்டாவதாக, 'ஆண்டவர் ஒருவரே கடவுள், ஆண்டவர் மட்டுமே!' என்பதைக் 'கேள்' என்கிறார் மோசே. இங்கே, 'ஆண்டவர்' என்பது யாவே இறைவனின் பெயரைக் குறிக்கின்றது. இந்தக் கடவுளே இஸ்ரயேலின் கடவுள் என்பதை உறுதியாகக் கூறுகின்ற மோசே இதுவே முதன்மையான நம்பிக்கை அறிக்கை என்றும், இந்த அறிக்கையின்மேல் தான் இஸ்ரயேலின் சமயம் கட்டப்படுகிறது என்றும் மறைமுகமாகக் கூறுகின்றார். இந்தக் கடவுளை 'முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும் இஸ்ரயேல் மக்கள் அன்பு செய்தல் வேண்டும்.' இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில், 'இதயம்' என்பது சிந்திக்கும் தளமாகவும், 'ஆன்மா' என்பது உயிர் உறையும் தளமாகவும், 'வலிமை' என்பது உயிர் ஆற்றல் என்றும் கருதப்பட்டது. ஆக, ஒருவரின் உடல், உள்ளம், உயிர் என அனைத்திலும் இறைவன் உறைய வேண்டும் என்பது மோசேயின் 'செவிகொடு' கட்டளை வழியாகத் தெளிவாகின்றது. இஸ்ரயேல் பின்நாள்களில் அனுபவித்த அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் அவர்கள் இக்கட்டளைகளை மறந்தது தான்.

ஆக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் ஒருவர் முதன்மையாகக் கொள்ள வேண்டியது ஆண்டவராகிய கடவுளை அன்பு செய்தல் என்பது முதல் வாசகத்தின் பாடம்.

இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு எழுதப்பட்;ட திருமடலின் ஆசிரியர், தனிப்பெரும் தலைமைக்குரு இயேசு என்னும் கருத்துருவைத் தொடர்கின்றார். இயேசுவின் குருத்துவம் அல்லது அருள்பணியாளர் நிலை நீடித்த மற்றும் நிலையானதொன்றாக இருக்கிறது. மற்ற தலைமைக்குருக்கள் மனிதர்கள் என்பதால் அவர்களுடைய குருத்துவம் அவர்களுடைய வாழ்வோடு முடிந்துவிடுகிறது. ஆனால், இயேசு, கடவுள் என்ற நிலையிலும், இறந்து உயிர்பெற்ற நிலையிலும் நிரந்தரமானவராக இருக்கின்றார். ஆக, அவருடைய அருள்பொழிவும் நிரந்தரமானதே. 'நீர் என்றென்றும் குருவாக இருப்பீர்' என்று கடவுள் அளித்த வாக்குறுதியில் அவருடைய குருத்துவம் கட்டப்பட்டிருப்பதால் அது நிரந்தரமானதாக இருக்கின்றது. இயேசுவின் குருத்துவத்தின் முதன்மை கடவுளுடைய வாக்குறுதியில் நிலைபெறுவதாக அமைந்துள்ளது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவைச் சந்திக்க வருகின்ற மறைநூல் அறிஞர் குழப்பமுற்றவராக இருக்கின்றார். இவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் வரவில்லை. மாறாக, தன் குழப்பத்திற்கு விடை அல்லது தெளிவு காணவே வருகின்றார். இயேசுவின் காலத்தில் யூதச்சட்டத்தில் 613 கட்டளைகளும் நியமங்களும் விதிமுறைகளும் இருந்தன. இவற்றுள் முதன்மையானவை எவை என்று ஒவ்வொரு ரபியும் அல்லது ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நிலையில் கற்பித்தது. மேலும், ஒரு பள்ளி சார்ந்தவர்கள் மற்ற பள்ளி சார்ந்தவர்களோடு வாதாடவும் விவாதிக்கவும் செய்தனர்.

இயேசு தன் விடையை மிக எளிதாக முன்வைக்கின்றார். முதல் ஏற்பாட்டின் 'ஷெமா' கட்டளையைச் சுட்டிக்காட்டி இறையன்பையும், லேவியர் நூல் 19:18-ஐச் சுட்டிக்காட்டி, அடுத்திருப்பவருக்கான அன்பையும் முன்வைத்து இரண்டையும் ஒரே தளத்தில் நிறுத்துகின்றார். ஆக, கட்டளைகளுக்குள் படிநிலை அமைப்பை உருவாக்காமல், கட்டளைகள் ஒன்று மற்றொன்றோடு தொடர்புடையவை என்றும், கட்டளைகளுக்குள் அடிப்படையான தொடர்பை ஏற்படுத்துவது அன்பு என்றும் முன்வைக்கிறார் இயேசு.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில், அன்பு என்ற சொல் வாழ்வின் முதன்மையை நிர்ணயத்தாலும், இறைவனை அன்பு செய்தல் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதிலிருந்து புறப்படுவதே பிறரன்பு.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

நாம் இந்த நாள்களில் மாமன்றத்தின் மறைமாவட்ட நிலையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

ஒட்டுமொத்த திருஅவை அளவிலும், நம் மறைமாவட்ட அளவிலும், நம் தனிப்பட்ட வாழ்விலும் நம் முதன்மைகளைச் சரி செய்ய இந்த நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. வாழ்வின் முதன்மைகளைச் சரி செய்ய நாம் முதன்மைகள் எவை என்பதை முதலில் வரையறுத்துக்கொள்ள வேண்டும். மேலும், அந்த முதன்மைகள் முதன்மையாக இருக்க வேண்டும். தொடர்ந்து முதன்மைகளைத் தக்க வைக்க முயற்சிகள் வேண்டும்.

இறையன்பு என்பதே நாம் கொண்டிருக்க வேண்டிய இணைதலைக் குறிக்கிறது. அதாவது, இதுவே அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கின்றது. இறைவனை நாம் அன்பு செய்தல் என்பதைப் பல நேரங்களில் செபித்தல், அல்லது திருப்பலி ஒப்புக்கொடுத்தல் என்று குறுகிய அளவில் சுருக்கியே நாம் புரிந்துகொள்கின்றோம். ஆனால், இறையன்பு என்பதை நான் நம் வாழ்வின் தொடக்க நிலை என்று புரிந்துகொள்கின்றேன். இயேசு தன் தந்தையுடன் இறைவேண்டலில் இணைந்திருந்தார். இறைவேண்டல் வழியாகத் தன் இணைப்பை நாள்தோறும் புதுப்பித்துக்கொண்டார் இயேசு. ஆக, இயேசுவின் ஆன்மா, உள்ளம், மற்றும் உடல் என அனைத்தும் இந்த இணைப்பிலிருந்தே ஊட்டம் பெற்றன.

பிறரன்புக்கும் இறையன்புக்கும் நடுவில் இருப்பது 'தன்னன்பு.' 'உன்னை அன்பு செய்வது போல' என்று மொழிகின்றார் இயேசு. தன்னன்பு என்பது தன்னலம் அல்ல. மாறாக, தன்மதிப்பு. தன் உடலை எவரும் குறைத்து அன்பு செய்வதில்லை என்கிறது விவிலியம். இயல்பாகவே நாம் நம்மேல் அன்பும் ஆவலும் காட்டுகின்றோம். தன்னன்பில் நான் என்னை அறிந்து, ஏற்றுக்கொண்டு, மதிக்கிறேன்.

பிறரன்பு என்பது நான் அடுத்தவருக்கு நீட்ட வேண்டிய கரம். இறைவனின் காலூன்றி, என்னையே உயர நிறுத்தி, என் கரத்தை மற்றவர்களுக்கு நீட்டும்போதுதான் என் வாழ்வை நான் பயனுள்ளதாக மாற்ற முடியும். அப்படி இல்லையென்றால் என் வாழ்க்கை எனக்குள்ளாகவே முடிந்துவிடும்.

இன்றைய பதிலுரைப்பாடல் ஆசிரியர், 'என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்' (காண். திபா 18) என்று தன் அன்பை ஆண்டவராகிய கடவுள்முன் அறிக்கையிடுகின்றார். இந்த அன்பை அறிக்கையிட்ட ஆசிரியர், தன் வாழ்வை இந்தப் பற்றுறுதியின் நிழலில் நகர்த்துகின்றார். தன் வாழ்வின் முதன்மையை அறிவதும் அறிக்கையிடுவதும் வாழ்வதற்கான தொடக்கம் என உணர்கிறார் ஆசிரியர்.

3 comments:

  1. ஆண்டின் பொதுக்காலம் 31ம் ஞாயிறுக்கான மறையுரை.வாழ்வின் முதன்மை எது? உயிருள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னையும்…பிறரையும் பார்த்துக்கேட்கும் கேள்வி. இன்னும் விடை காணப்படாத ஒரு கேள்வி. ஒருவேளை அதற்கு விடை தெரிந்து விட்டால் அடுத்து மனிதனுக்கு வாழ்க்கையில் செய்ய ஏதுமில்லை என்பதாலோ என்னவோ, அந்தவிடையை மனிதபுத்திக்கு அப்பாற்பட்டதாகவே வைத்துள்ளார் இறைவன்.இக்கேள்விக்கான பதில்களை இயேசுவும்…மோசேயும் தந்துள்ளார்களெனில் அவை நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதானா? எனும் இன்னொரு கேள்விக்கும் சேர்த்தே பதிலைத் தேட அழைப்பு விடுக்கும் வாசகங்கள் தான் இன்றையவை.
    வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழையும் முன், தன் கருத்துக்களை இஸ்ரேல் மக்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாத ஒன்று என்று கண்ட மோசே, தான் சொல்ல வேண்டியதை சுருக்கமாக “ செவி கொடு” எனும் கட்டளையாக வைக்கிறார்.ஆண்டவராகிய கடவுளை முழு இதயத்தோடும்,ஆன்மாவோடும் எல்லாச்சூழ்நிலைகளிலும் வழிபட வேண்டுமென்றும்…ஆன்மா என்பது இறைவன் உறையும் தளமாகையால்..அந்த உயிரிலும்,உடலிலும் உறையும் இறைவனை அன்பு செய்வதே நம் முதன்மையான கட்டளை எனவும், இக்கட்டளையைக் கடைபிடிப்பதன் மூலம் நமக்கு வாழ்நாள் கூடும் எனும் போனஸையும் சேர்த்தே தருகிறது முதல் வாசகம்!

    இயேசு கடவுள் என்ற நிலையிலும்..இறந்து உயிர் பெற்ற நிலையிலும் அவர் நிரந்தரமானவராகவும்…” நீர் என்றென்றும் குருவே” எனும் கடவுள் அவருக்களித்த வாக்குறுதியில் கட்டப்பட்டிருப்பதால் அவருடைய “ குருத்துவமும் நிரந்தமானதே” என்று குருத்துவத்தை முன்வைக்கும் இரண்டாம் வாசகம்!

    “ எது முதன்மையான கட்டளை?” எனும் கேள்வியுடன் வரும் இளவலுக்கு “ அன்பின்” மகத்துவம் பற்றிய புரிதல் தரப்படுகிறது. அவன் புரிந்து கொண்டானா? என்பது வேறு விஷயம். “இறைவனை அன்பு செய்வதே வாழ்வின் முதன்மை” எனவும்…அந்த முதன்மையிலிருந்து பிறப்பதே “ பிறரன்பு” எனவும் பதில் தரப்படுகிறது.

    இன்றைய இறைவார்த்தை வழிபாடாக, “முழுமுதற்கடவுளுடனான தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதன் மூலம் “ இறையன்பை” நம் வாழ்வின் முதன்மையாக்குவதும்….., என்னில் உறையும் இறைவனோடு என்னையும் இணைத்து என் மதிப்பை…பெருமையைத் தக்க வைத்துக் கொள்வதும்…..என்னைச் சுருக்கி,என் கரங்களை நீட்டி என் அயலானுக்குப் பொருளாகவோ….பொருள் செறிந்த விஷயமாகவோ கொடுப்பதுமே!” என்கிறார் தந்தை.

    “ தன் வாழ்வின் முதன்மையை அறிவதும்…அறிக்கையிடுவதுமே வாழ்விற்கான தொடக்கம்” என நினைக்கும் பதிலுரைப்பாடலின் ஆசிரியர் போல் நானுமிருந்தால், “என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூறுகின்றேன்” என்று என்னாலும் அறிக்கையிட முடியும். முதன்மையைப் புரிந்து கொண்டால் முழுவதையும் புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையைத் தந்த ஒரு மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete
  2. அருமையான பதிவு... அன்பு தான் உயிருள்ள பலி... இந்த பலியே நம் வாழ்வாக...நம் வாழ்வு உண்மையான பலியாக வாழ்வின் முதன்மையாக அன்பை வைத்திருப்போம்.

    ReplyDelete