Sunday, October 17, 2021

புனித லூக்கா

இன்றைய (18 அக்டோபர் 2021) திருநாள் 

புனித லூக்கா

நற்செய்தியாளரும், பவுலின் உடனுழைப்
பாளருமான புனித லூக்காவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கின்றார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' என்று இன்றைய முதல் வாசகத்தில் (2 திமொ 4:9-17) பவுல் திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துகின்றார். பவுலின் தனிமை, பணிச்சுமை, மற்றும் பணித்தேவை ஆகியவற்றை இந்த வாக்கியம் நமக்கு எடுத்துச் சொல்வதோடு, லூக்காவின் உடனிருப்பையும், மாற்கின் தேவையையும் நமக்கு உணர்த்துகிறது.

லூக்கா மற்றும் மாற்கு என்னும் பெயர்கள் இங்கே அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளன. நம் புதிய ஏற்பாட்டில் உள்ள நான்கு நற்செய்தியாளர்களில் மத்தேயு மற்றும் யோவான் திருத்தூதர்கள் குழாமைச் சார்ந்தவர்கள். லூக்கா மற்றும் மாற்கு ஆகியோர் திருத்தூதர்கள் வழியாக – பவுல் மற்றும் பேதுரு - இயேசுவைப் பற்றி அறிந்துகொள்கின்றனர். மேலும், லூக்கா மற்றும் மாற்கு ஆகியோர் தாங்கள் எழுதவிருக்கும் நற்செய்தி பற்றி ஒருவர் மற்றவருடன் கலந்தாலோசித்திருப்பார்களா? என்றும் தோன்றுகிறது. இங்கே என்ன ஆச்சர்யம் என்றால், பவுல், லூக்கா, மற்றும் மாற்கு ஆகியோரின் எண்ணம் முழுவதிலும் இயேசு மட்டுமே நிறைந்திருக்கிறார். அப்படி என்றால், எந்த அளவுக்கு இயேசு அனுபவம் அவர்களைப் பாதித்திருக்கும்!

இன்று பல சமூக வலைதளங்களில் இளவல்களும், பெரியவர்களும் தங்கள் பணிகளுக்கு நடுவே இறைவார்த்தை அறிவிப்பதையும், இறைவார்த்தைப் பணியில் ஈடுபடுவதையும் காணும்போதும், ப்ரென்டன் வோக்ட் போன்ற இளவல்கள் கத்தோலிக்கத் திருஅவையின்மேல் கொண்ட தாகத்தாலும், இயேசு அனுபவத்தாலும் உந்தப்பட்டு செய்யும் பணிகளையும் காணும்போதும் என்னை அறியாமல் ஒரு குற்றவுணர்வு பற்றிக்கொள்கின்றது. இறையாட்சிப் பணிக்காக என்னையே அர்ப்பணம் செய்வதாகச் சொல்லும் நான் எந்த அளவுக்கு என் நேரத்தையும் ஆற்றலையும் இப்பணிக்கென செலவழிக்கிறேன்? என் ஆற்றலும் நேரமும் சிதறிப் போகக் காரணம் என்ன? அல்லது இயேசு அனுபவம் என்னைப் பாதிக்கவில்லையா? தேவையற்ற பேச்சு, பயணம், நிர்வாகம்சார் பிரச்சினைகள், கவனச்சிதறல்கள் என என் பணி பாதிக்கப்படுவது ஏன்?

இன்று லூக்கா நம் அனைவருக்கும் உந்துசக்தியாக இருக்கட்டும் என்பதே என் இறைவேண்டல்.

லூக்கா தன் நற்செய்தியை மிக அழகாக எழுதுகின்றார். இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் விண்ணேற்றம் வரை உள்ள நிகழ்வுகளை, 'பயணம்' என்ற ஒற்றைக் கயிற்றில் கட்டுகின்றார். இவரே திருத்தூதப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதாலும், 'வாழ்க்கை என்பது ஒரு பயணம்' என்ற ஞானத்தை இவர் பெற்றிருந்ததாலும் இவர் இப்படிப் பதிவு செய்திருக்க வேண்டும். 

கடவுளின் இரக்கத்தை, இயேசுவின் இறைவேண்டலை, தூய ஆவியாரின் ஆற்றலை என இவருடைய நற்செய்தி கடவுளைப் பற்றிய புதிய பார்வையை நமக்குத் தருகின்றது. இத்திருநாளில் நாம் இவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

(அ) பிளவுபடா அர்ப்பணம்

லூக்கா நற்செய்தியாளர் பற்றிய நாவல் ஒன்றில், அவருடைய இளவயது காதலியை திருமணம் செய்யத் துடிக்கின்றார். அப்போது அக்காதலி சொல்லும் வார்த்தைகள் மிக அழகானவையாக இருக்கும்: 'நீ நிரந்தரத்திற்காகப் படைக்கப்பட்டவன். தற்காலிகத்தின்மேல் உனக்கு நாட்டம் வேண்டாம். உன் எழுத்துகள் நிரந்திரமாக வேண்டுமெனில், உன் ஆசை வார்த்தைகளைச் சுருக்கிக்கொள்!' எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும். தன் பிளவுபடா அர்ப்பணத்துக்காக லூக்கா கொடுத்த விலை அதிகம். இன்று அவருடைய எழுத்துகள் நிரந்தரமாகிவிட்டன. அவருடைய எழுத்துகளில் பொதிந்துள்ள இலக்கியத் திறமும் மொழிப் புலமையும் நமக்கு வியப்பளிக்கின்றன. நாம் எடுக்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையிடம் பிளவுபடா அர்ப்பணம் கொண்டிருத்தல் நலம்.

(ஆ) வரலாற்று உணர்வு

லூக்கா, கிறிஸ்து நிகழ்வை வெறும் இறையியல் நிகழ்வாகப் பதிவு செய்யாமல், மனுக்குலத்தின் வரலாற்றில் - நேரத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டு  - நடந்த நிகழ்வாகப் பதிவு செய்கின்றார். 'வரலாற்று உணர்வு' நம்மை வேரூன்றியவர்களாகவும், கிளைபரப்புபவர்களாகவும் இருக்கச் செய்கின்றது. வரலாற்று உணர்வுதான் நாம் ஏதாவது ஒன்றை இந்த மனுக்குலத்திற்குச் செய்ய வேண்டும் என்று நம்மைத் தூண்டுகின்றது. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றுக்கும், நமக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. வரலாற்று உணர்வு நமக்கு எதிர்நோக்கைத் தருகின்றது. வரலாற்று உணர்வு, நாம் யாவரும் தனிமை அல்ல என்று நமக்கு உணர்த்துகிறது.

(இ) இயேசுவின்மேல் கண்கள்

தன் பணி மற்றும் பயணத்தின் தடைகள் அனைத்திலும் லூக்கா வெற்றி காணக் காரணம் அவருடைய கண்கள் மேல்நோக்கியே இருந்தன. மேலிருந்து பார்க்கும் இயேசுவின் கண்கள் வழியாக நாம் பார்க்கும்போது நம் கண்முன் நிற்கும் அனைத்தும் சிறியதாகவே தெரிகின்றது. ஆக, நாம் பெருமை பாராட்டவோ, தயங்கி நிற்கவோ எதற்கும் இடமில்லை. இயேசுவைப் பற்றிய பல தகவல்களை லூக்கா மரியாவிடம் சேகரித்ததாக திருஅவை மரபு நமக்குச் சொல்கிறது. இது லூக்காவிடம் விளங்கிய உறவு ஆற்றலைக் காட்டுகிறது. மனித உறவுகள் அல்லது தொடர்புகளே நம்மையும் நம் பணியையும் மேம்படுத்தும் என்ற லூக்காவின் அறிதல் நமக்கு வியப்பாக இருக்கிறது.

லூக்காவும், லூக்கா எழுதிய நற்செய்தியும் இன்று நம் உள்ளத்தில் நிறையட்டும்!

1 comment:

  1. பாசமும்,நேசமும் மிக்க வார்த்தைகளைத் தன்னுள்ளே கொண்டதொரு பதிவு.பவுல் தன் நேசமிக்க பிள்ளை திமோத்தேயுவுக்கு எழுதிய மடலின் “ லூக்கா மட்டுமே என்னுடனே இருக்கிறார்” எனும் வரிகள் பவுலுக்கு லூக்கா ஒரு “ உதவிக்கரமாகவே” இருந்துள்ளார் என்பதைக் காட்டுகின்றன.
    ‘நாம் செய்யும் காரியங்களில் சமரசமில்லா அர்ப்பணிப்பும்,நம் வேர்களின் வீரியமறிந்து, எதார்த்தத்தை நோக்கி நடைபோடுவதும்,நம் கண்களை இயேசுவை நோக்கிப்பதிப்பதுமே அழிவில்லா வாழ்விற்கு இட்டுச்சல்லும் வழிகள்’ என்று சொல்ல வைக்கிறார் லூக்கா.வாழ்க்கையே ஒரு பயணம் என்பதால் அதை வாழ்வாங்கு வாழவேண்டுமென்பதும், நம் பணியை மேம்படுத்தும் விஷயம் உறவு என்பதால் நம் உறவுகளைப் போற்ற வேண்டுமென்பதும் புனித லூக்கா நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள்.
    இன்று பல இளவல்கள் கத்தோலிக்கத் திரு அவையின் மேல் உள்ள தாகத்தால் உந்தப்பட்டு பல நற்செயல்கள் புரிகிறார்கள் என்பது பெருமைக்கும்,நம் பாராட்டுக்குமுரிய விஷயமே! ஆனால் அதற்காகத் தந்தை தன் மேல் ஒரு குற்ற உணர்வை சுமத்திக்கொள்ள தேவையில்லை என நினைக்கிறேன்.”என் வாழ்வே இறைவனின் வார்த்தையைப் பரப்புவது” எனும் விதத்தில்… தன்னையும்,தன் சுகபோகங்களையும் மறந்து கடமை ஒன்றையே கண்ணாகப் பாவிக்கும் தங்களின் வாழ்க்கை பலருக்குப் பாடம்.தாங்கள் தங்களைப்பற்றி பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
    இறைவனை நோக்கிய பயணத்தில் புனித லூக்காவின் வார்த்தைகள் நம் உள்ளத்தை நிரப்பட்டும்! நிறையட்டும்!! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete