I. சாலமோனின் ஞானம் 7:7-11 II. எபிரேயர் 4:12-13 III. மாற்கு 10:17-30
தெளிவும் தெரிவும்
(இம்மறையுரை 2018ஆம் ஆண்டு எழுதப்பட்டது. சில மாற்றங்களுடன் நான் இங்கே மறுபதிப்பு செய்துள்ளேன்)
தெரிவுகளை நாம் தெளிவாக எப்படி எடுப்பது? - என்ற கேள்விக்கு விடையாக இன்றைய இறைவாக்கு வழிபாடு அமைகிறது. நாம் செய்யும் தெரிவுகளே நம்மை உருவாக்குகின்றன. ஆக, நம் தெரிவுகளைப் பற்றிய தெளிவு அல்லது தெளிவான தெரிவு மிகவும் அவசியமாகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 7:7-11), சாலமோன் அரசர் தான் ஞானம் பெற்ற நிகழ்வைப் பதிவு செய்கிறார். சாலமோன் கடவுளிடம் ஞானம் கேட்கும் நிகழ்வு கனவில் நடந்தேறுகிறது (காண். 1 அர 3:5-15). பிறப்பிலும், வளர்ச்சியிலும் எல்லாரையும் போல ஒத்திருத்த சாலமோன், எல்லாரும் பெற்றிருக்கும் ஒன்றைவிட தான் சிறந்ததைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இறைவனிடம் ஞானத்தை வேண்டிப் பெறுகின்றார். தான் மன்றாடியதால் இறைவனின் ஞானத்தின் ஆவி தன்னிடம் பொழியப்பட்டது (7:7) என்று சொல்லும் அவர் ஞானத்தின் மேன்மையை இன்றைய முதல் வாசகப் பகுதியில் விவரிக்கின்றார். இவ்வாறு அவர் பெற்ற ஞானமே அவரின் தெளிவிற்கும், தெரிவிற்கும் காரணமாக இருக்கிறது.
தான் பெற்ற ஞானம் மூன்று நிலைகளில் மேலோங்கி இருப்பதாக வர்ணிக்கிறார் சாலமோன்.
1. அதிகாரத்தைவிட மேலானது (7:8)
ஓர் அரசனின் அல்லது அதிகாரத்தின் அடையாளம் செங்கோலும், அரியணையும். இந்த இரண்டும் சாலமோனுக்கு இறைவனால் வழங்கப்பட்டவை அல்லது தன் தந்தை தாவீதிடமிருந்து அவருக்குக் கிடைத்தவை. ஆனால் இந்த இரண்டையும்விட அவர் ஞானத்தையே நாடித் தேடுகின்றார்.
2. செல்வத்தைவிட மேலானது (7:9)
மாணிக்கம், பொன், வெள்ளி இந்த மூன்றும்தான் பணமதிப்பாக சாலமோன் அரசன் காலத்தில் கருதப்பட்டவைவ. பணப்பரிமாற்றங்கள் இந்த மூன்று உலோகங்களை மையமாக வைத்தே நடத்தப்பட்டன. இந்த மூன்றையும் பெற்றவர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கினார். இந்த மூன்றையும்விட ஞானம் மேலானது என்கிறார் சாலமோன். ஞானத்திற்கு முன் பொன் வெறும் மண் எனவும், வெள்ளி களிமண் எனவும் சாலமோன் சொல்வது நமக்கு விந்தையாக இருக்கிறது. மண்ணையும், களிமண்ணையும் எடுத்து சல்லடை போட்டு தேடி, மிக அரிதாகக் கண்டுகொள்ளப்படும் பொருள்களே பொன்னும், வெள்ளியும். ஆனால் ஞானத்தோடு அவற்றைச் சேர்த்தால் அவை வெறும் மண்ணாகவும், களிமண்ணாகவும் ஆகிவிடுகின்றன.
3. உடல்நலத்;தைவிட, அழகைவிட மேலானது (7:10)
நம் கண்களில் தெரியும் ஒளியைவிட, நாம் உள்ளுக்குள் அனுபவிக்கும் உடல்நலத்தைவிட, நம் வெளிப்புறத்தில் மற்றவர்களுக்குத் தெரியும் நம் அழகைவிட ஞானம் மேலானது. உடல்நலம் அல்லது கண்களின் ஒளி அல்லது அழகு கடவுளின் கொடையாகக் கருதப்பட்டது. இவற்றை நம்மால் உருவாக்கிவிட முடியாது. வெளியிலிருந்து கடவுள்தான் இதை நமக்குத் தரவேண்டும். புறக்கண்களில் ஒளி மங்கினாலும், அகக் கண்களில் இருக்கும் ஞானம் என்றென்றும் மங்காத சுடரொளியாக இருக்கிறது. ஆக, ஒருவருக்கு உடல்நலம் எப்படி இன்றியமையாததோ, அப்படியேதான் ஞானமும். மேலும், வெளி அழகும், ஒளியும் மங்கினாலும், கறைபடியாத அழகையும், மங்காத சுடரொளியையும் தருகின்றது ஞானம்.
இவ்வாறாக, ஞானம் வந்ததால் தன்னிடம் எல்லாம் வந்து சேர்ந்தன (7:11) என ஞானத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார் சாலமோன்.
இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு தந்த மீட்பை அந்த மீட்பிற்கு கொடுக்கும் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என எழுதுகிறார். இதன் பின்னணியில் கடவுளுடைய வார்த்தையின் இயல்பு என்ன என்பதை இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் (காண். எபி 4:12-13) பதிவு செய்கின்றார். இன்றைய இரண்டாம் வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. இறைவார்த்தையின் இயல்புகளும், செயல்களும் (4:12)
இறைவார்த்தையின் இயல்புகள் மூன்று: உயிருள்ளது, ஆற்றல் மிக்கது, கூர்மையானது. இறைவார்த்தையின் செயல்களும் மூன்று: உடல் சார்ந்ததையும், ஆவி சார்ந்ததையும் பிரித்துக் காட்டுகிறது, வன்மையானது எது, மென்மையானது எது என்று அடையாளம் காட்டுகிறது, உள்ளத்தின் சிந்தனைகளை சீர்தூக்கி அல்லது பகுத்தாய்ந்து பார்க்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களின் நடுவில் எண்ணற்ற கடவுளர்கள் இருந்தனர். வானம், பூமி, நிலா, சூரியன், நட்சத்திரங்கள் என வானில் கண்டவற்றையும், கடல்மீன்கள், விலங்குகள் என நீரில் மற்றும் தரையில் வாழ்ந்தவற்றையும் வழிபட்டனர். தங்களின் இறைவனும் இவர்களைப் போல ஒருவர்தான் என்றும் நினைத்து, அவரின் வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டனர். ஆனால், யாவே இறைவன் தன் வார்த்தையால் உலகைப் படைத்தவர் (தொநூ 1), தன் கட்டளையால் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை எகிப்திலிருந்து மீட்டவர், தன் கட்டளைகளால் வழியாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டவர், பற்பல இறைவாக்கினர் வழியாக அவர்களின் வாழ்வையும், அழிவையும் சுட்டிக்காட்டியவர். வரலாற்றில் நுழைந்த வார்த்தையாக அவர் உயிருள்ளவர், ஆற்றல் மிக்கவர், கூர்மையானவர். இவரின் வார்த்தைகளின் முக்கியமான செயலும் இதுதான். அதாவது, நன்மை, தீமையைப் பகுத்தாய்ந்து நல்லதைத் தெரிந்து கொண்டு, தீயதைத்தள்ளிவிடுவது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடின உள்ளத்தால் தீயதைத் தேர்ந்து கொண்டதால் இறைவன் தரும் இளைப்பாற்றியைக் கண்டடையத் தவறிவிட்டனர் (எபி 4:1-11).
2. படைத்தவரும், நாமும் (4:12)
நம்மைப் படைத்த இறைவனுக்கு யாவும் தெரியும் என்பதால் நாம் அவரிடமிருந்து எதையும் மறைத்துவிட முடியாது. மேலும் அவருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றோம். கடவுளின் பார்வையை நாமும் பெற்றால் நம்மால் நன்மை, தீமையைக் கண்டுகொள்ளவும், தீமையை விலக்கவும் முடிகிறது.
இவ்வாறாக, 'உள்ளத்தின் எண்ணங்களை சீர்தூக்கிப் பார்க்கும்' இறைவார்த்தை ஒவ்வொருவரின் தெளிவுக்கும், தெரிவுக்கும் காரணமாக அமைகிறது என்பது இன்றைய இரண்டாம் வாசகம் அறிவுறுத்தும் பாடம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 10:17-30) இளவல் ஒருவரை நாம் சந்திக்கிறோம். கதாபாத்திரங்களின் அடிப்படையில் இன்றைய நற்செய்திப் பகுதியை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. இயேசுவும், செல்வரும் (10:17-22)
2. இயேசுவும், சீடர்களும் (10:23-27)
3. பேதுருவும், இயேசுவும் (10:28-30)
இன்றைய நற்செய்திப் பகுதி ஒத்தமைவு நற்செய்திகள் என்று சொல்லப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளில் காணக்கிடக்கிறது. மத்தேயு நற்செய்தியாளர் இந்தப் பகுதியோடு திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் உவமையைச் சேர்த்து எழுதுகின்றார். லூக்கா நற்செய்தியாளர் மிகவும் சுருக்கமான பகுதியாக இந்த நிகழ்வைப் பதிவு செய்கின்றார்.
1. இயேசுவும், செல்வரும் (10:17-22)
அ. இரண்டு வகை ஆன்மீகத்தை இயேசு முன்வைக்கின்றார்: ஒன்று, சட்டங்கள் பின்பற்றும் ஆன்மீகம். இரண்டு, இயேசுவைப் பின்பற்றும் ஆன்மீகம். பத்துக்கட்டளைகள் முடிவில்லாத வாழ்வு தரும் என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தாலும், இயேசு பத்துக்கட்டளைகளையும் பற்றிக் கேட்காமல் ஐந்தாம் கட்டளையிலிருந்து கேட்கின்றார். கடவுளுக்கும், மனிதருக்கும் உறவிற்கு அடிப்படையான முதல் நான்கு கட்டளைகளைப் பற்றி கேட்காமல், மனிதருக்கும், பிற மனிதருக்கும் இடையேயான உறவைக் குறித்த ஆறு கட்டளைகளை செல்வர் பின்பற்றுகிறாரா இல்லையா என்று கேட்கிறார். ஏன்? செல்வர் இயேசுவை 'நல்லவர்' என்று 'கடவுள்' என்று கண்டுகொள்கின்றார். ஆக, கடவுளுக்கும், அவருக்குமான உறவு செம்மையாகவே இருந்திருக்கும். மேலும், செல்வராய் இருந்து கொண்டு முதல் நான்கு கட்டளைகளைக் கடைப்பிடிப்பது வெகு எளிது. எனக்கு அடுத்திருப்பவரை நான் கண்டுகொள்ளாமல் கோவில் உண்டியலில் நான் லட்சம், லட்சமாகக் கொட்டுவது எளிதுதானே. இயேசுவைப் பின்பற்றும் ஆன்மீகத்தில் வெறும் ஆறு கட்டளைகள் தான் உள்ளன. இன்று நாம் பின்பற்றும் ஆன்மீகம் எத்தகைய ஆன்மீகம்?
ஆ. ஐந்து வினைச்சொற்கள். 'செல்', 'விற்பனை செய்', 'கொடு', 'வா', 'பின்செல்' என ஐந்து வினைச்சொற்களை அடுக்கடுக்காகக் கட்டளையிடுகின்றார் இயேசு. ஆனால் பாவம் அந்த இளவல். முதல் வினைச்சொல்லை மட்டும்தான் அவரால் செயல்படுத்த முடிந்தது: 'செல்கிறார்!' அவ்வளவுதான். இன்று இயேசுவை நான் பின்பற்றுவதில் அவரின் எத்தனை கட்டளைகளைக் கடைப்பிடிக்க முடிகிறது?
இ. முகவாட்டத்தோடு. புன்னகையோடு வந்தவர் முகவாட்டத்தோடு செல்கிறார். பாதிவழி வந்தவருக்கு மீதிவழி வர முடியவில்லை. நாம் பெறும் திருமுழுக்கும் மற்ற அருளடையாளங்களும் இயேசுவை நாம் பின்பற்றுவதற்கு பாதிவழிதான் உதவுகின்றன. மற்ற வழியில் நாம் அவரைப் பின்பற்று நம்மால் முடிகிறதா? அல்லது நம் முகமும் வாடிவிடுகிறதா?
2. இயேசுவும், சீடர்களும் (10:23-27)
செல்வம் பற்றியும், செல்வர்களின் இயலாமை பற்றியும் சொல்கிறார் இயேசு. செல்வம் இருந்தால் எல்லாம் இருக்கும் என்பது பொருள் அல்ல. செல்வத்தால் இறையரசை வாங்க முடியாது. 'ஊசியின் காது' என்பது எருசலேம் நகரின் மதில்களில் இருக்கும் சின்னச் சின்ன கதவுகள். ஒட்டகங்கள் இதில் நுழைய வாய்ப்;பில்லை. இந்த உருவகத்தின் வழியாக இயேசு செல்வத்தின் இயலாமை பற்றி விளக்குகின்றார். மேலும், 'இது மனிதர்களால் இயலாது என்றும், கடவுளால் மட்டுமே முடியும்!' என்றும் சொல்கின்றார். இன்றைய முதல்வாசகத்தின் பின்புலத்தில் இதைப் பார்த்தால் கடவுளின் ஞானம் பெற்றவர்களால் மட்டுமே இது முடியும். ஆக, மேலான இறைவனைத் தேர்ந்து கொள்வதா அல்லது கீழான செல்வத்தைத் தேர்ந்து கொள்வதா என்பதுதான் கேள்வி.
இதற்காக, செல்வமே தேவையில்லை என்று சொல்லிவிட முடியுமா? இல்லை. எபிரேயத்தில் 'செல்வம்' அல்லது 'செல்வந்தர்' என்பதற்கு 'ஆசீர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை நம் தமிழ்மொழியிலும் இருக்கிறது. ஆக, நான் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நான் உணர அல்லது பிறர்முன் துலங்க, நான் என் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டும். அதன்வழியாக நான் செல்வமும், பொருளும், புகழும் பெற வேண்டும். இதைத்தான் தூய இரேனியு, 'மனிதத்தின் மாட்சிமையே இறைமாட்சி' என்கிறார்.
3. பேதுருவும், இயேசுவும் (10:28-30)
'எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்ற பேதுருவின் கேள்வி சீடர்களின் ஒட்டுமொத்த கேள்வியாகவே இருக்கிறது. சீடர்களுக்கான கைம்மாறு, இம்மை மற்றும் மறுமை என்ற இரண்டு நிலைகளில் இருக்கிறது. இம்மையில் நூறு மடங்கு. நூறு மடங்கு என்பதும் உருவகமே. அதாவது, எதுவும் எனக்கு இல்லை என்பவர்களுக்கு, 'எல்லாமே எனது' என்று ஆகிறது. என்னேவொரு மனச்சுதந்திரத்தை இது தருகிறது! நிலைவாழ்வு என்பது இயேசுவில் கிடைக்கும் வாழ்வு.
இயேசுவிடம் வந்த செல்வந்த இளவலிடம் நிலைவாழ்வு பற்றிய தேடல் இருந்தது. ஆனால், அதற்கான தெளிவும், தெரிவும் இல்லை. ஆகையால்தான், அந்த இளவலை அன்பொழுகப் பார்க்கிறார் இயேசு. 'குறைப்பதில்தான்' நிறைவு இருக்கிறது என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது. ஆனால், குறைத்துவிட்டால் அது எப்படி நிறைவாகும்? என்பது இளவலின் ஆழ்மனக் கேள்வியாக இருக்கிறது.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்க்கைப்பாடம் ஒன்றுதான்: 'வாழ்வில் நாம் கொள்ளும் ஞானமிகு தெளிவே நம் தெரிவுகளை நலமானதாகச் செய்யும்.'
பல நேரங்களில் நாம் வாழ்வில் தவறான முடிவுகள் எடுக்கக் காரணம் நம் மனத்தில் இருக்கும் குழப்பமே. நாம் வளர வளர நாம் பெறும் அனுபவங்கள் நம் மனதில் அடுக்கடுக்காக படிந்துகொண்டே வருகின்றன. ஒரு குறிப்பிட்ட நிகழ்வுபற்றி நாம் முடிவெடுக்கும்போது, படிந்த அவ்வனுபவங்கள் மேலே எழும்பி நம்மில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றன. தெளிந்த நீரோடை போல, நீரோட்டத்தின் மேலிருந்தே தரையின் அழகைப் பார்ப்பது நமக்குக் கடினமாக இருக்கிறது.
இந்த நிலையிலிருந்து எப்படி விடுதலை பெறுவது?
1. சமரசம் இல்லாத தேடல்
சாலமோன் தன் சமகாலத்து அரசர்களின் தேடல்களை ஒரு நிமிடம் எண்ணிப்பார்க்கிறார்: சிலர் செங்கோலையும், அரியணையையும் தேடுகிறார்கள். அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள அனுதினம் போராடுகிறார்கள். மற்றும் சிலர் மாணிக்கம், பொன், வெள்ளி என செல்வத்தைத் தேடுகின்றனர். தேடி அவை கிடைத்தபின் அவற்றை அடுத்தவர்களிடமிருந்து பாதுகாக்க மிகவும் போராடுகின்றனர். மற்றும் சிலர் உடல்நலம், அழகு எனத் தேடி அலைகிறார்கள். ஆனால், சின்ன உணவுக் கோளாறும் உடல்நலத்தைப் பாதித்துவிடுகிறது. உடலில் படும் சின்னக் கீறலும் அழகை அசிங்கமாக்கிவிடுகிறது. இப்படியாக, மற்றவர்களின் தேடல்கள் எல்லாமே புறம் சார்ந்த, மற்றவர்களுக்குப் பயந்த, அடுத்தவர்களால் அச்சுறுத்தப்படுகின்ற, மிகவும் நொறுங்கிய தேடலாக இருக்கிறது. இந்தத் தேடல்கள் போதும் என்று சாலமோன் இவற்றைத் தன் தேடல்களாக்கிக்கொள்ளவில்லை. மாறாக, ஞானத்தை தேடுகின்றார். அந்தத் தேடல் சமரசம் இல்லாத தேடலாக இருக்கிறது. 'மிகச் சிறிய இலக்கை அடைவதைவிட, மிகப் பெரிய இலக்கை அடையாமல் தோற்பது நலம்' என்பார் பிளேட்டோ. பிளாட்டினம் ஆசைப்பட்டு கிடைக்காமல்போனால் பரவாயில்லை. களிமண் ஆசைப்பட்டு அது கிடைத்துவிட்டால்தான் ஆபத்து. ஏனெனில், களிமண் கிடைத்தவர் களிமண்ணைத் தாண்டி வேறெதையும் பார்க்கமாட்டார். ஆனால், பிளாட்டினம் கிடைக்காதவர் தொடர்ந்து தேடுவார். ஆக, இன்று முதலில் நம் தெரிவுகள் சரியானவையாக இருக்கவேண்டுமென்றால், மிகத் தாழ்ந்தவையோடு நாம் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து தேட வேண்டும். சில நேரங்களில் மிக உயர்ந்த இலட்சியங்களை நாம் தேடுவோம். அவற்றால் எந்தவொரு பயனும் நமக்கு இல்லாமல் இருப்பதாகத் தெரியும். ஆனால், காலப்போக்கில் அது நம் வாழ்வுப் பாதையை நல்லநிலைக்கு மாற்றிவிடும். செங்கோல், அரியணை, மாணிக்கம், பொன், வெள்ளி, உடல்நலம், அழகு என்பவை எல்லாம் காணக்கூடியவை. ஆனால், ஞானத்தை நம்மால் காண முடியாது. பல நேரங்களில் காணக்கூடியவற்றை நோக்கியே நம் மனம் ஓடுகிறது. காண்பவை நிலையற்றவை. காணாதவை நிலையானவை. அவற்றை நம்மால் காணமுடியாததால் அவை நமக்கு நீடித்த மகிழ்வைத் தருகின்றன.
2. நாம் அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்
இறைவார்த்தையின் பண்புகளை மிக நன்றாக எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இறுதியில், 'நாம் அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்' என்கிறார். அதாவது, நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுக்கும், நாம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு தெரிவுக்கும் நாம் பொறுப்பாளர்கள். இவற்றிற்கு நாம் அடுத்தவர்களைக் காரணம் காட்ட முடியாது. இறைவார்த்தை, 'உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.' நகைக்கடைக்குச் சென்று நம்முடைய பொன் நகையை மாற்ற, விற்க, அல்லது அடகு வைக்க விரும்பினால், கடைக்காரர் அந்த நகையை நம்மிடமிருந்து வாங்கித் தன் கையில் எடுத்து அதைச் சற்று தூக்கிப் பிடிப்பார். அந்தக் குறுகிய நேரத்தில் அவர் நம் நகையின் நிறம், வளமை, வேலைப்பாடு, எடை என அனைத்தையும் மதிப்பிட்டுவிடுவார். இந்தச் செயலுக்குப் பெயர்தான் 'சீர்தூக்கிப் பார்த்தல்.' ஆக, ஒவ்வொரு முறைம் நாம் தெரிவு செய்யுமுன், அந்தத் தெரிவில் உள்ள நல்லது, கெட்டது ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சீர்தூக்கிப் பார்க்க சில நொடிகள் போதும். ஆனால், அந்தச் சில நொடிகளை நாம் சரியாக பயன்படுத்தாததால் பல ஆண்டுகளை வருத்தத்தில் கழிக்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது. மேலும், நாம் கணக்குக் கொடுக்க வேண்டிய நபர் இறைவன். அவருக்கு நம் அகம், புறம், ஆன்மா, எலும்பு மூட்டு, மச்சை என அனைத்தும் தெரியும். சாதாரண மனிதர்களுக்குக் கீழ் வேலை பார்க்கும்போது எவ்வளவு கவனமாக இருக்கிறோம். அப்படியெனில், எல்லாம்வல்ல இறைவன்முன் நாம் இன்னும் எவ்வளவு கவனமாக இருத்தல் வேண்டும்!
3. கடந்து வந்த பாதை பற்றிய தெளிவு
இன்றைய நற்செய்தியில் வரும் இளவலுக்கு வயது 18 முதல் 25 வயதுக்குள்தான் இருக்க வேண்டும். இந்த வயசுல என்ன ஆசை இருக்கும் ஒரு இளைஞருக்கு? நல்ல வேலை, கைநிறைய சம்பளம், கைநிறைய மொபைல் ஃபோன், அந்த ஃபோனில் எந்நேரமும் இன்டெர்நட், பைக்கில் பின்னால் அமர ஒரு இளவல், நிறைய ஃபரண்ட்ஸ் என இப்படி நிறைய ஆசை இருந்திருக்க வேண்டும். இவற்றில் எது ஒன்றையாவது கேட்டிருக்கலாம். ஆனால், இவரின் ஆசை, 'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' எனக் கேட்கின்றார். ஆக, 25 வயதுக்குள் இந்த இளவல் இந்த முதிர்ச்சி பெற்றுவிட்டாரா? அல்லது வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிட்டாரா? அல்லது இன்பங்களைத் துறந்துவிடலாம் என எண்ணிவிட்டாரா?
'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' 'கட்டளைகளைக் கடைப்பிடி' 'இவையெல்லாம் கடைப்பிடித்துள்ளேன்' 'இன்னும் என்ன குறைவுபடுகிறது?' 'நிறைவுள்ளவராக விரும்பினால் போய் விற்று ஏழைகளுக்குக் கொடும் ...' இளைஞன் 'நிலைவாழ்வு பெறத்தானே' இயேசுவிடம் ஐடியா கேட்டான். ஆனால், இயேசு இங்கே 'நிறைவுள்ள வாழ்வு' பற்றி சொல்கிறாரே? 'குறைவில்தான் நிறைவு' என்ற புதிய புரிதலைத் தருகின்றார் இயேசு. ஆனால், அந்த இளைஞன் 'வருத்தத்தோடு செல்கின்றான்'. ஏன் வருத்தம்? இயேசுவின் ஐடியா ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்ததா? 'அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது' என நிகழ்வை நிறைவுசெய்கின்றார் மாற்கு அப்படி என்ன ஏராளமான சொத்து இருந்திருக்கும்? 'எங்கே புதையல் இருக்கிறதோ அங்கே இதயம் இருக்கும்' என்ற இயேசுவின் மலைப்பொழிவு வார்த்தைகள்படி, இந்த இளவலின் இதயம் சொத்தோடு இணைந்துகொண்டதோ? என்னைப் பொறுத்தவரையில் இந்த இளவலின் இந்தச் செய்கை பிடித்திருக்கிறது. ஏனெனில், 'முடியும்' என்றால் 'முடியும்' என்றும், 'முடியாது' என்றால் 'முடியாது' என்றும் அவரால் முடிவெடுக்க முடிகிறது. 'ஆம்' என்றால் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றால் 'இல்லை' என்று சொல்ல பழகிக்கொள்வது. அது கடவுளுக்கே என்றாலும். இப்படிப்பட்ட தெளிவை இந்த இளவல் நமக்குக் கற்றுத்தருகிறார். பேதுருவிடம் இந்த தெளிவு கொஞ்சம் குறைவுபடுகிறது என நினைக்கிறேன். ஆகையால்தான், தெரிவு செய்தபின், 'இது எப்படி? அது எப்படி? எங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று அங்கலாய்க்கின்றார். பேதுரு தான் கடந்த வந்த பாதை பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கிறார். ஆனால், இளவல் தெளிவாக இருக்கிறார். வருத்தத்தோடு சென்ற இளவல் மீண்டும் வருவார். அவர் நம் ஒவ்வொருவர் வழியாகவும் வருகின்றார்.
நம் வாழ்வின் தெளிவும், தெரிவும் பெற அவரின் ஞானம், அவரின் வார்த்தை, அவரின் அன்பான பார்வை நம் உடனிருப்பதாக!
நம் தெரிவுகள் தவறானாலும், தெளிவில்லாமல் இருந்தாலும், நம் முகம் வாடினாலும், அவர் நம்மை அன்பொழுக உற்றுப்பார்க்கிறார் - இன்றும், என்றும்.
ஆண்டின் பொதுக்காலம் 28ம் ஞாயிறுக்கான மறையுரை. “ தெரிவு” களின் “ தெளிவு” பற்றிச்சொல்ல வருகின்றன அனைத்து வாசகங்களும்! தெரிவு தெளிவாக இருப்பின் பாதி கிணறு தாண்டியதற்கொப்பாகும் என்பது நம் முன்னோர் கூற்று.
ReplyDelete‘தன் பிறப்பால் தான் பெற்ற செங்கோலையும்,அரியணையையும் விட, தான் இறைவனிடம் வேண்டிப்பெற்ற ஞானமே சிறந்தது’ என்கிறார் சாலமோன்.ஞானத்திற்கு முன், பொன்னும்,வெள்ளியும் வெறும் களிமண்ணே எனவும்,வெளி அழகும்,ஒளியும் மங்கினாலும், கறைபடியாத அழகையும் சுடரொளியையும் தருவது ஞானமே எனவும், இந்த ஞானம் ஒருவருக்கு வந்துவிடின் மற்ற எல்லாமே உடன் வந்த மாதிரிதான் என்று சொல்லும் முதல் வாசகம்…..
உயிருள்ள…ஆற்றல்மிக்க….கூர்மையான இறைவனின்வார்த்தைகள் நம் உள்ளத்தின் எண்ணங்களை சீர்தூக்கிப்பார்க்கவும், அதன் வழியாக நாம் கேட்கும் இறைவார்த்தை, நம் தெரிவுகளையும்,தெளிவுகளையும் முறைபடுத்தவும் நம்மை அழைக்கும் இரண்டாம் வாசகம்…
தன்னிடம் வந்து இறைவாழ்வு பெற என்ன செய்ய வேண்டுமெனக் கேட்ட இளவலுக்கு ‘செல்’,’விற்பனை செய்’,’கொடு’, ‘வா’, ‘பின்செல்’ எனும் வார்த்தைகளை இயேசு விடையாகத் தர, அவனுடைய பதில் முகவாட்டமே!குழப்பத்துடன் வந்தவன் குழப்பத்தைக் கூட்டியவனாய் செல்கிறான்.நாமும் பல நேரங்களில் இப்படிப்பட்ட குழப்பத்திற்கு ஆளாகிறோம்.நீரோட்டத்தின் மேலிருந்து தெளிந்த நீரோடையை நம்மால் பார்க்க இயலவில்லை.
இன்றைய வாசகங்கள் என் முன் வைக்கும் செய்தி என்ன? நாம் கண்ணால் காண இயலாத விஷயங்களே நமக்கு மகிழ்ச்சி தருபவை என்ற உணர்தலும்,நாம் முன் வைக்கும் தெரிவுகளை சீர்தூக்கிப்பார்த்தலும்,நம் தெரிவுகளில் தெளிவைக் காண்பதுமே!
தொடர்கின்றன தந்தையின் வார்த்தைகள்……”நம் வாழ்வின் தெளிவும்,தெரிவும் பெற அவரின் ஞானம்,வார்த்தை,அன்பான பார்வை நம் உடன் இருப்பதாக!
நம் தெரிவுகள் தவறானாலும்,தெளிவில்லாமல் இருந்தாலும், நம் முகம் வாடினாலும் அவர் நம்மை அன்பொழுகப் பார்க்கிறார்- இன்றும், என்றும்.”
குழப்பத்தோடே பாதி தூரம் நாம் கடந்திருப்பினும், நாம் மீதி தூரமும் கடக்க நமக்கு உதவுபவை நாம் முன் வைக்கும் தெளிவுகளும்,தெரிவுகளுமே என்ற செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகளும்! ஞாயிறு வணக்கங்களும்!!!