Monday, October 25, 2021

பேறுகால வேதனை

இன்றைய (26 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 13:18-21)

பேறுகால வேதனை

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:18-25), கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்கேற்கும் படைப்பு பற்றி எழுதுகின்ற பவுல், இரு முக்கியமான சொற்களைப் பயன்படுத்துகின்றார்: 'பேராவல்,' 'பேறுகால வேதனை.' இந்த இரண்டு சொல்லாடல்களோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம். 

யோவான் நற்செய்தியில் இவற்றையொத்த சொல்லாடல்களை இயேசுவும் பயன்படுத்துகின்றார்: 'பிள்ளையைப் பெற்றெடுக்கும் தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை மறந்துவிடுகிறார்' (காண். யோவா 16:21).

பேறுகால வேதனை பற்றி ஆண்களுக்குத் தெரியாது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவதுண்டு. ஆனால், பேறுகால வேதனை என்பதை பல ஆண்கள் உருவகமாக அறிவர். குடும்பத்தில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் போது, திடீரென மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அதற்காக தன் சேமிப்பைக் கரைக்கின்ற வேளையில், பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து முடிவுகள் எடுக்கின்ற வேளையில், மற்றும் புத்தகம் எழுதுகின்ற போது, பாடல் எழுதுகின்ற போது, இசை அமைக்கின்ற போது என நிறைய நிலைகளில் பேறுகால வேதனையை ஆண் அனுபவிக்கின்றார். 

நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்தது, ஐன்ஸ்டைன் சார்பியல் கோட்பாட்டைக் கண்டறிந்தது, மைக்கேல் ஆஞ்சலே பியத்தா சிலை வடித்தது என எல்லா சாதனைகளுக்குப் பின்னரும் பேறுகால வேதனை ஒளிந்திருக்கவே செய்கிறது. 

'படைப்பே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கிறது' என எழுதும் பவுலின் கற்பனைத்திறம் நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. 

பேறுகால வேதனை என்பதை நான் எப்படி புரிந்துகொள்கிறேன்?

தோல்வி அடைய விரும்பாத சிறு முயற்சியே பேறுகால வேதனை. பேறுகால வேதனையில் தவிக்கும் பெண் தனக்கு வலிக்கிறது என்பதற்காக, தன் முயற்சியை நிறுத்த இயலாது. அப்படி அவர் முயற்சித்தால் அது அவருக்கே ஆபத்தாக முடியும். பெண்ணின் வயிற்றில் ஏற்படும் சிறு சிறு அசைவுகளும் பேறுகால வேதனையில் முக்கியம். ஆக, தோல்வி அடைய இயலாத ஒரு நிலையை பேறுகால வேதனை ஏற்படுத்துகிறது. சின்னஞ்சிறிய முயற்சிகளில்தான் பேறுகால வேதனை அடங்கியுள்ளது.

தோல்வி அடைய இயலாத அல்லது விரும்பாத மனப்பக்குவத்தில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கும் முயற்சி பெரிய மாற்றத்தை இந்த உலகில் ஏற்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறையாட்சி பற்றிய இரு உருவகங்களை இயேசு முன்மொழிகின்றார்: 'கடுகுவிதை,' 'புளிப்பு மாவு.' இவை இரண்டும் காணக் கூடிய அளவில் பெரிய நிலையில் தென்படுவதில்லை. ஆனால், விதையின் வளர்ச்சியையும் புளிப்பு மாவின் பரவலையும் யாரும் தடுக்க முடியாது. தோல்வி அடைய இயலாத நிலையில் அது வளர்ந்துகொண்டே இருக்கும். மேலும், இவை இரண்டும் சின்னச்சின்ன அளவில் மாறி வளரக் கூடியவை. 

நம் வாழ்வில் நாம் எந்த முயற்சி எடுத்தாலும், பேறுகால வேதனையை மனத்தில் வைத்துச் செய்தால் - அதாவது, தோல்வி அடைய மறுத்து, பின்வாங்க மறுத்து, சின்னச் சின்ன அடிகள் எடுத்து வைத்தல் - வெற்றி பெறுதல் நலம்.

இன்று ஒரு பயிற்சிக்காக, நம்மைச் சுற்றி இருக்கும் மரம், செடி, கொடிகள், விலங்குகள், நிலா, சூரியன், மழை என அனைத்தையும் ஒரு நொடி நின்று இரசித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு அசைவிலும் பேறுகால வேதனை தெரிகிறது என்பது நிதர்சனமான உண்மை.

1 comment:

  1. தன் உதரத்தில் உள்ள சிசுவை வெளியே கொணர ஒரு பெண் செய்யும் முயற்சி மட்டுமல்ல பேறுகால வேதனை….பிள்ளையைப் பெற்ற பிறகும் அந்தப் பிள்ளையின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நிலையிலும் அவள் படும் பாடு….எதிர்கொள்ளும் பிரச்சனை….குடும்பத்தில் அவளின் உழைப்பிற்குப் பரிசாக கிடைக்கும் உதாசீனம்…..இது எதற்கும் அருகில் வர முடியாது ஒரு ஆணின் வேதனை.தோல்வி அடைய விரும்பாத ஒருவர் எடுக்கும் சிறு முயற்சியே பேறுகால வேதனை எனும் தந்தையின் கூற்று ….எல்லா முயற்சிக்கும் இது பொருந்தாது.ஆனால் அதே சமயத்தில் எந்த முயற்சி எடுத்தாலும்,பேறுகால வேதனையை மனத்தில் வைத்துச்செய்தால் அது வெற்றி பெறுதல் நிச்சயமே! இந்த உணர்வை மனத்தில் கொண்டு இயற்கையின் அத்தனை படைப்பையும் உற்றுப்பார்த்தால் அவற்றின் ஒவ்வொரு அசைவிலும் பேறுகால வேதனை தெரிகிறது….என்பது பார்ப்பவரின் தன்மையைப்பொறுத்தது.
    என்னளவில் பேறுகால வேதனை எனும் உணர்வை உணர்ந்த எந்த ஆணும்….எந்தக் குழந்தையும் சம்பந்தப்பட்ட பெண்ணை நோகச்செய்யுமுன், செய்வது சரியா என இருமுறை யோசிக்க வேண்டும்.பெண்களுக்கு மட்டுமே பரிட்சயமான ஒரு விஷயத்தை அனைவரையும் உணரச்செய்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete