Wednesday, December 11, 2019

பொடிப்பூச்சி

இன்றைய (12 டிசம்பர் 2019) முதல் வாசகம் (எசா 41:13-20)

பொடிப்பூச்சி

திருவருகைக்காலத்தின் முதல் வாசகங்களை வாசிக்கும்போதெல்லாம், 'பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதுபோல' என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.

ஏன் கடவுள் இஸ்ரயேல் மக்களை நாடுகடத்துமாறு விட வேண்டும்? அப்படி விட்டபின் ஏன் அவர்களைப் பார்த்து குய்யோ முறையோ என்று புலம்ப வேண்டும்? அப்புறம் ஏன், 'உன்னை அப்படி ஆக்குவேன், இப்படி ஆக்குவேன்' என்று இறைவாக்குரைக்க வேண்டும்?

'கலகலப்பு' திரைப்படத்தில 'இதுக்கு பருத்திமூட்டை பேசாமா குடோன்லயே இருக்கலாம்ல!' என்று சொல்வதுபோல இருக்கிறது.

இஸ்ரயேல் என்ற பிள்ளையை நன்றாகக் கிள்ளி விடுகின்ற ஆண்டவராகிய கடவுள் தொட்டிலை மாங்கு மாங்கு என்று ஆட்டி குழந்தையைத் தூங்கவைக்க முயல்கின்றார்.

'புழுவே, பொடிப்பூச்சியே' என்று கொஞ்சும் அவர், அவர்களோடு உடனிருப்பதாக வாக்களிப்பதோடு, 'உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன்' என்று உயர்த்துகின்றார். வலுவற்ற புழுவாக இருக்கும் இஸ்ரயேல் மலைகளைப் போரடித்து நொறுக்கும் அளவிற்கு உறுதியான இரும்புக் கம்பியாக மாறுகிறது இறைவனின் தொடுதலால்!

இறைவனின் உடனிருப்பும் தொடுதலும் கிடைப்பவர்கள் இப்படி மாறியிருப்பதை நாம் வரலாற்றில் நிறையவே கண்டுள்ளோம்.

ஒரு பக்கம், இறைவனின் செயல்கள் நமக்குப் புரியாமல் இருந்தாலும், மறுபக்கம் அவரின் உடனிருப்பு நமக்கு ஆற்றல்தருவதாகவே இருக்கிறது.


Tuesday, December 10, 2019

சோர்ந்திருப்பவர்கள்

இன்றைய (11 டிசம்பர் 2019) நற்செய்தி (மத் 11:28-30)

சோர்ந்திருப்பவர்கள்

'சோர்வு' - இது நாம் எல்லாரும் அனுபவத்திருக்கும் ஓர் உணர்வு.

நீண்ட நேரம் வேலை செய்தால், அல்லது உடல்நலக்குறைவால் அல்லது நிறைய மருந்துகள் எடுக்கும்போது அல்லது போதிய உணவு இல்லாதபோது உடல் சோர்வு அடைகிறது. நீண்ட நேரம் வாசித்தால், யோசித்தால், எழுதினால் மூளை சோர்வடைகிறது. எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தால், உறவுகளில் சிக்கல்கள் எழுந்தால் மனம் சோர்வடைகிறது. நீண்ட நாள்கள் செபிக்காமல் இருந்தால், விவிலியம் வாசிக்காமல் இருந்தால், நற்கருணையைச் சந்திக்காமல் இருந்தால் ஆன்மா சோர்வடைகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் தன்னையே உடல் சோர்வு அகற்றுபவராக முன்வைக்க, நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னையே உள்ளத்தின் (அல்லது மனத்தின் அல்லது ஆன்மாவின்) சோர்வு அகற்றுபவராக முன்வைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டாம் எசாயா எனப்படும் நூலின் ஆசிரியர், 'இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர். வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர் சோர்வடையார்' என்று ஆண்டவர்மேல் நம்பிக்கை கொள்பவர் பெறுகின்ற ஆறுதலை எடுத்துரைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு, 'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்னிடம் வாருங்கள்' என்றழைத்து, 'உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்' என்கிறார்.

உடல் சோர்வை அகற்ற வழி ஆண்டவர்மேல் கொள்ளும் நம்பிக்கை.

உள்ளத்துச் சோர்வை அகற்றும் வழி இயேசுவிடம் வருவது, அவருடைய நுகத்தை ஏற்றுக்கொள்வது, அவரிடம் கற்றுக்கொள்வது.

தனக்காக மட்டுமே உழைக்கும் உடல் சோர்ந்து போகும். சின்னக் குழந்தை ஒன்றை வளர்க்கும் தாயை எடுத்துக்கொள்வோம். அந்தத் தாய் ஒவ்வொரு வேலையையும் இரண்டு முறை செய்ய வேண்டும். தான் சாப்பிட வேண்டும், தன் குழந்தைக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும், தான் தூங்க வேண்டும், குழந்தையையும் தூங்க வைக்க வேண்டும். ஆனால், அவள் சோர்வடைவதில்லை. தன்னுடைய மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் நீண்ட தூரம் சைக்கிள் மிதித்து வேலைக்குச் சென்றுவிட்டு, நடுஇரவில் வந்து, அரைகுறையாய்த் தூங்கி மீண்டும் அடுத்த நாள் ஓடும் தந்தையும் சோர்வடைவதில்லை. ஏனெனில், இவர்கள் இருவருமே தங்களுக்காக மட்டும் உழைப்பதில்லை.

இன்றைய உலகம் என்னை எனக்காக மட்டும் உழைக்குமாறும், என்னுடைய இன்பத்தை மட்டும் காணமாறும் என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. என்னுடைய நலனுக்காக யாருடைய நலனையும் நான் இழக்க வைக்கலாம் என்று எனக்கு அறிவுறுத்துகிறது.

தன்னையே பார்க்கும் உள்ளம் சோர்ந்து போகும். என்னுடைய நலன், அக்கறை பற்றியே நாடினால் என் உள்ளமும் சோர்ந்துவிடும்.

ஆனால், நான் மற்றவர்களுக்காக உழைக்கிறேன், மற்றவர்களுக்காக எண்ணுகிறேன் என மனிதர்களை மையமாக வைத்தால் இன்னொரு கட்டத்தில் சோர்வு வந்துவிடும்.

ஆக, என்னையும், என் சக மனிதர்களையும் தாண்டி என் ஆண்டவரில் நான் நம்பிக்கைகொள்ளும்போது என் ஆற்றல் பெருகுகிறது.

இன்று நாம் எண்ணிப்பார்ப்போம்?

நான் எப்போதெல்லாம் உடல், மூளை, மனம், ஆன்ம சோர்வடைகிறேன்?

இச்சோர்விலிருந்து வெளிவர நான் தேடும் மனிதர்கள் யார்?

அம்மனிதர்கள் தர முடியாத ஆற்றலை என் இறைவன் தருகிறார் என்ற நம்பிக்கையும், அனுபவமும் எனக்கு உண்டா?

அவர் அளிக்கும் ஓய்வையும், இளைப்பாறுதலையும் நான் அடையத் தடையாக இருப்பவை எவை?

என் கால்களில் நானே சங்கிலிகளைக் கட்டிக்கொண்டு, என் முதுகில் மணல் மூடையை ஏற்றிக்கொண்டு, 'எனக்கு சோர்வாக இருக்கிறது' என ஏன் புலம்புகின்றேன்? நான் அவிழ்க்க வேண்டிய சங்கிலி எது? நான் இறக்கிவைக்க வேண்டிய மணல்மூடை எது?


Monday, December 9, 2019

தொலைந்து போனவர்கள்

இன்றைய (10 டிசம்பர் 2019) முதல் வாசகம் (எசாயா 40:1-11)

தொலைந்து போனவர்கள்

2005ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி வெளிவந்த இணையதளச் செய்தி: 'பைஜாமா அணிந்து ஒரு மனிதர் இறந்து கிடந்தார்.' ஒருவர் இறக்கிறார் என்றால் அவர் தன்னுடைய வீட்டில் உறவினர்கள் சூழ்ந்து நிற்க இறந்து போயிருக்கலாம். அல்லது மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதர் இறந்து கிடந்தது அடுக்குமாடிக்கட்டிடம் ஒன்றின் 12வது மாடியில். இந்த அடுக்குமாடிக்கட்டிடத்தை இடிக்க நபர்கள் சென்றபோது ஒரு மனிதர் அவருடைய அறையில் இறந்து கிடப்பதைக் காண்கிறார்கள். அவர் அருகில் உள்ள மேசையில் இருந்த காலண்டர் 1985ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி என்று காட்டுகிறது. அங்கே விரிக்கப்பட்டிருந்த டைரியிலும் அதே தேதிதான் இருந்தது. இறந்துகிடந்தது ஒரு நபர் அல்ல. ஒரு எலும்புக்கூடு பைஜாமா அணிந்து படுத்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இறந்து எலும்புக்கூடாய் மாறியிருக்கிறார். யாரும் அவரைத் தேடவில்லை. டோக்யோ மாநகரம் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நகரம். யார் எங்கே இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை யாரும் கண்டுபிடித்துவிட முடியும். பைஜாமாவில் இறந்து கிடந்த நபர் நமக்கு நிறையக் கேள்விகளை வைக்கின்றார்:

20 வருடங்களாக இவரை யாருமே தேடவில்லையா?

இவருக்கென்று நண்பர்கள் கிடையாதா?

யாரும் தேவையில்லை என்று இவர் முடிவெடுத்து தன்னையே தனிமைப்படுத்தக் காரணம் என்ன?

மற்றவர்களின் பார்வையிலிருந்து இவர் தொலைந்துபோனாரா?

'ஓடும் ஆறு' என்ற நூலில் இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார் பவுலோ கோயலோ.

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் 'ஆயன் தன் மந்தையைத் தேடும்' உருவகம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஃபோனில் நமக்கு 'தவறிய அழைப்புகள்' - 'மிஸ்ட் கால்ஸ்' இருக்கும்போது நம்மில் தோன்றும் உணர்வு என்ன? சில எண்கள் நமக்கு எரிச்சலைத் தந்தாலும், சில எண்கள் நமக்கு ஆர்வத்தைத் தூண்டினாலும், ஒட்டுமொத்தமாக நம்மை யாரோ தேடியிருக்கிறார்கள் என்பதையே 'தவறிய அழைப்புகள்' நமக்குக் காட்டுகின்றன.

தன் மந்தையிலிருந்து தவறியவர்களை அழைக்கிறார் கடவுள்.

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலம் பாபிலோனியப் படையெடுப்பு. பாபிலோனியப் படையெடுப்பில், அங்கே நாடுகடத்தப்பட்டு திக்கற்றவர்களாய் நின்ற மக்களைத் தம்மிடம் அழைக்கின்ற கடவுள், 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்' என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் தேடுதல் மூன்று நிலைகளில் இருக்கின்றது:

அ. ஆயனைப் போல தம் மந்தையை அவர் மேய்ப்பார்

கூலிக்காரன் மேய்ப்பதற்கும் ஆயன் மேய்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. கூலிக்காரன் மந்தையை ஒரு பொருளாகப் பார்ப்பான். ஆயன் அதை உயிராகப் பார்ப்பார். ஆபத்து என்று வரும்போது கூலிக்காரன் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள முனைவான். ஆயனோ மந்தையின் நலனுக்காக தன் உயிரையும் இழக்கத் துணிவார். கூலிக்காரன் மந்தையோடு இருக்கும் தன்னுடைய உடனிருப்பை பணமாகப் பார்ப்பான். ஆயன் அப்படிப் பார்ப்பது இல்லை.

ஆ. ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்

ஆட்சி செலுத்துகின்ற ஆண்டவரின் கை இங்கே இளம் பிஞ்சு ஆடுகளை அரவணைக்கிறது. ஆட்டுக்குட்டிகளை வழக்கமாக ஆயன் தன்னுடைய கோல் அல்லது குச்சியைக் கொண்டே ஒன்று சேர்ப்பார். குட்டி ஆடுகளை ஒன்று சேர்க்க கைகளைப் பயன்படுத்த வேண்டுமானால் ஆயன் குனிய வேண்டியிருக்கும். ஆண்டவர் என்னும் ஆயன் தன் குட்டிகளைப் பயமுறுத்தும் கோலை விடுத்துத் தன் கைகளால் அரவணைத்துக்கொள்ள குனிகின்றார். அவருக்கு வலித்தாலும்!

இ. சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்

மற்ற மந்தையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியாத சினையாடுகளின்மேல் சிறப்பான கவனம் செலுத்துகிறார் ஆயன். மேலும், சினையாடுகளே ஓநாய்களின் பாய்ச்சலுக்கு ஆளாபவை. ஆனால், அவற்றின்மேல் சிறப்பான கவனம் செலுத்துவதன் வழியாக அவைகளைப் பாதுகாக்கிறார் ஆண்டவர் என்னும் ஆயன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 99 ஆடுகளை விட காணாமற்போன ஓர் ஆட்டை மதிப்பானதாகக் கருதுகிறார் ஆயன்.

இவை சொல்வது ஒன்றேதான்.

நாம் நம் வாழ்வில் தொலைந்துபோகும் தருணங்களில் ஆண்டவர் நம்மைத் தேடுகின்றார்.

அன்றாட வாழ்வில் தொலைந்துபோகும் நம் சகோதர, சகோதரிகளை நாம் தேடினால் நாமும் ஆயர்களே!


Sunday, December 8, 2019

தூய்மை நிலையும் நோக்கும்

இன்று கன்னி மரியாளின் அமல உற்பவத்திருநாளைக் கொண்டாடுகிறோம்.

பிரான்சு நாட்டில் லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்திய மரியாள், 'நாமே அமல உற்பவம்' என்று தன்னை வெளிப்படுத்துகின்றார்.

'அன்னை மரியாள் பிறப்பின்போதே பாவ மாசு இன்றிப் பிறந்தார்' - இதுதான் அமல உற்பவ நம்பிக்கைக் கோட்பாட்டின் பொருள்.

கடவுள் மரியாளின் வாழ்க்கை வகுத்த திட்டமே அமல உற்பவம்.

இன்று நாம் நம்முடைய வாழ்விற்கு நிறையத் திட்டங்களைத் தீட்டுகிறோம். ஆனால், நம்முடைய வாழ்விற்கென்று கடவுள் ஒரு நோக்கத்தை வைத்திருக்கின்றார். நோக்கம் தெளிவாகிவிட்டால் நம்முடைய திட்டம் கூர்மைப்படுத்தப்படும்.

இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-6,11-12), பவுல், 'நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் கிறிஸ்து வழியாக நம்மைத் தேர்ந்தெடுத்தார்' என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 3:9-15,20) படைப்பின் தொடக்கத்தில் நம்முடைய முதற்பெற்றோர் தவறியபோது, அவர்களைக் கண்டிக்கின்ற கடவுள், அவர்களுடைய வாழ்வியல் வரைபடத்தையும் கொடுக்கின்றார்.

மரியாளின் அமல உற்பவம் அவருடைய வாழ்வின் நிலையையும் நோக்கத்தையும் நமக்குச் சொல்கிறது.


Sunday, November 3, 2019

கைம்மாறு

இன்றைய (4 நவம்பர் 2019) நற்செய்தி (லூக் 14:12-14)

கைம்மாறு

ஆங்கிலத்தில் 'பொலிடிக்கலி கரெக்ட்' (politically correct) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதாவது, நான் பேசுவதும், எழுதுவதும், சொல்வதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஏற்புடையதாக, சமூகத்திற்கு இடறல் விளைவிக்காததாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, டோல் கேட்டில் திருநங்கையர் இரக்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம். நான் காரில் எனக்கு அருகிலிருப்பவரிடம், 'ஓர் அலி அல்லது ஓர் ஒன்பது பணம் கேட்கிறார்' என்று நான் சொன்னால், நான் 'பொலிடிக்கலி கரெக்ட்' அல்ல. அது மட்டுமல்ல. நான் அவர்களுடைய மாண்புக்கு எதிராகப் பேசுகிறவன் ஆகிவிடுவேன். கண் தெரியாதவரை 'குருடன்' என அழைப்பது, காது கேட்காதவரை 'செவிடன்' என அழைப்பது, அல்லது என் வகுப்பு மாணவரை 'மக்கு' என அழைப்பது போன்றவை. நான் பேசுவதில்கூட மற்றவரின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற பின்னணியில் உருவானவைதான் 'திருநங்கை', 'மாற்றுத்திறனாளி', 'அறிவுத்திறன் குறைந்தவர்' போன்ற வார்த்தைகள். வெறும் பெயர்கள் மட்டுமல்ல. அவர்களைக் குறிப்பிட்டு அவர்களுடைய செயல்களையும் நான் விமர்சனம் செய்யக்கூடாது. 'திருநங்கையர் அடாவடித்தனம் செய்வார்கள்' என்று நான் சொன்னாலும் அது தவறு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கொஞ்சம் 'பொலிடிக்கலி நாட் கரெக்ட்' என்றே தெரிகிறார். யாரையெல்லாம் விருந்துக்கு அழைக்கக்கூடாது, விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று சொல்கின்ற இயேசு, 'நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றவரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை' என்கிறார். இதை ஒருவேளை ஏழையோ, அநாதையோ, கால் ஊனமுற்றவரோ, அல்லது பார்வையற்றவரோ வாசித்தால் அல்லது கேட்டால் அவருடைய மனம் எப்படி பதைபதைக்கும்? ஏன் அவர்களிடம் கைம்மாறு செய்ய ஒன்றுமே இல்லையா? பொருளால் செய்வதுதான் கைம்மாறா? அன்பால், உடனிருப்பால் செய்வது கைம்மாறு ஆகாதா? இன்றைய நாளில் கால் ஊனமுற்றவர் அல்லது பார்வையற்றவர் செல்வத்தில் உயர்ந்த நிலையில் இல்லையா? 

இந்தக் கேள்விகள் இன்று நாம் கேட்பது சரி.

ஆனால், இயேசுவின் காலத்தில் நிலை அப்படி அல்ல. ஏழைகளும், உடல் ஊனமுற்றவர்களும், அநாதைகளும், கைம்பெண்களும் சமூகத்தின் சாபங்களாகக் கருதப்பட்டனர். இன்றைய நம் அரசியல் சூழல்கூட, ஏழ்மையைக் களைவதற்குப் பதிலாக, ஏழையரையே ஒட்டுமொத்தமாகக் களைய மெனக்கெடுவதுபோலத்தான் இருக்கிறது.

இப்பாடத்தின் சொல்லாடல் பிரச்சினைகளை விட்டுவிட்டு பாடத்திற்கு வருவோம்.

இயேசுவின் சமகாலத்தில் விருந்தோம்பல் என்பது ஒருவரின் சமூக அந்தஸ்தை மற்றவர்களுக்குக் காட்டி பெருமை கொள்ளவும், அல்லது மற்றவர்களைவிட தான் உயர்ந்தவர் என்று பெருமிதம் கொள்ளவும், அல்லது இல்லாதவர்களை அவமானப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. மேலும், விருந்தோம்பல் செய்பவர் கைம்மாறு கருதியே விருந்தோம்பல் செய்தார். இந்த நிலையில் விருந்தோம்பல் பற்றிப் பேசுகிற இயேசு ஏழைகளால் விருந்தோம்பல் செய்ய முடியாது என்று சொன்னாலும், கடவுள் அவர்கள் சார்பாக விருந்தோம்பல் செய்வார் என்று சொல்வதன் வழியாக அவர்கள் கடவுளின் கண்மணிகள் என்றும், கடவுளின் பார்வையில் உயர்ந்தவர்கள் என்றும் சொல்லி அவர்களுடைய சமூக நிலையை உயர்த்துகின்றார்.

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் எவை?

அ. நான் அனைத்திலும் கைம்மாறு செய்ய நினைப்பது தவறு. ஏனெனில், கடவுளிடமிருந்து நான் பெற்ற கொடைகளுக்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, தாயின் அன்பு, தந்தையின் தியாகம், உடன்பிறப்புக்களின் உடனிருப்பு, தோழர்களின் தோழமை போன்றவற்றிற்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்யவே முடியாது. கைம்மாறு செய்வதைப் பற்றி நான் யோசிக்கும்போது கணக்குப் பார்ப்பவனாக மாறிவிடுகிறேன். இன்று என் வாழ்வில் கடவுள் இனியவர்கள் பலர் வழியாக ஆற்றிய செயல்களை நாம் பட்டியல் இடுவோமா? கைம்மாறு செய்ய முடியாத இந்நிலையில் அவர்களை நான் கடவுளின் கொடையாக ஏற்றுக்கொள்கிறேனா?

ஆ. பிறரைப் பார்க்கும் என்னுடைய பார்வை எப்படி இருக்கிறது? ஒருவரின் அடையாளங்களைக் கடந்து என்னால் பார்க்க முடிகிறதா? நான் பார்க்கும் ஒருவரில் என்னுடைய வலுவின்மையையும் நொறுங்கிநிலையையும் நான் அனுபவிக்க முடிகிறதா?

இ. இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 11:29-36), 'கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை' என்கிறார் பவுல். இவை நமக்கு மிகவும் ஆறுதல் தருகின்றன. ஒரு பக்கம், நம்முடைய குற்றவுணர்வைக் களைகின்றன. இன்னொரு பக்கம், நம்முடைய அழைத்தல் மற்றும் அருள்கொடைகள் பற்றி இன்னும் அக்கறையுடனும் பொறுப்புடனும் இருக்க நம்மைத் தூண்டுகின்றன. நம்மிடம் அவர் கைம்மாறு கருதுவதில்லை என்றாலும், நாம் பொறுப்புணர்வுடன் இருக்க அவர் விழைகின்றார்.


Friday, November 1, 2019

அனைத்து ஆன்மாக்கள் நாள்

இன்றைய (2 நவம்பர் 2019) திருநாள்

அனைத்து ஆன்மாக்கள் நாள்

இன்றைய நாளில் இறந்த நம் முன்னோர்களை நினைவுகூறுகின்றோம். நேற்று நாம் நினைவுகூர்ந்தவர்களும் இறந்த நம் முன்னோர்களே. அவர்கள் மகிமை பெற்றவர்கள். கடவுளை நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். இன்று நாம் நினைவுகூர்பவர்கள் பாதி வழி சென்று மீதி வழி செல்ல முடியாதவர்கள். 'துன்புறும் திருச்சபையில்' உள்ள இந்த உறுப்பினர்களுக்காக நாம் இன்று செபிக்கின்றோம்.

அ. துன்புறும் நிலை அல்லது உத்தரிக்கிற நிலை என்றால் என்ன?

நம்முடைய கத்தோலிக்க நம்பிக்கையில் மோட்சமும் நரகமும் உண்டு. 'மோட்சம் போகும் அளவிற்கு புண்ணியம் செய்யாதவர்கள்' அல்லது 'நரகத்தில் வீழ்த்தப்படும் அளவிற்கு மோசமாக இல்லாதவர்கள்' என்னும் இடைப்பட்ட மக்கள், சிறிதுகாலம் துன்புற்று, தங்கள் தவற்றுக்குப் பரிகாரம் செய்து மோட்சத்திற்குள் நுழைபவர்கள் இவர்கள்.

நான் ஓர் ஆலயத்திற்குச் சென்றபோது, 'உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!' என்று மக்கள் செபிக்கக் கேட்டேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த ஆன்மாக்களே நம் செபத்தின் தேவையில் இருப்பவர்கள். இவர்கள் எப்படி நமக்காக வேண்ட முடியும்? இவர்கள் கடவுளின் முகத்தைக் கண்டுவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து காண முடியாமல் இருக்கிறார்கள். எனவே அவர்கள் நமக்காகக் செபிக்கும் தகுதி பெற்றவர்களே.

ஆ. இறந்தவர்களுக்காக செபிப்பது சரியா?

காலத்தையும் இடத்தையும் கடந்த நம் முன்னோர்களுக்கு, காலத்திற்கு இடத்திற்கும் உட்பட்டு நாம் செய்யும் செபமும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலியும் பலன் தருமா?

இயேசு எல்லாப் பாவங்களுக்காகவும் இறந்து மீட்பைக் கொண்டுவந்துவிட்டார் என்றால், நான் செய்யும் செபம் அவருடைய இறப்பைவிடப் பெரியதா? அவர் செய்த மீட்புச் செயல் இறந்தவர்களுக்கு கிடையாதா?

துன்பத்தை உணர உடல் அவசியம். உடல் இல்லாத ஆன்மாக்கள் எப்படி துன்புற முடியும்?

வெறுங்கையராய் வீடு திரும்பிய இளைய மகனை தந்தை ஏற்றுக்கொள்வது போல, புண்ணியம் ஏதும் இல்லாத வெறுங்கையராய் நாம் செல்லும்போது கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரா?

கிறிஸ்தவ மதம் சாராதவர்களுக்கு என்ன நடக்கும்?

போன்ற கேள்விகள் இந்த நாளுக்குச் சவாலாக இருக்கின்றன.

2 மக்கபேயர் 12ல் இறந்தோர்க்காக செபிக்க யூதா பணம் திரட்டுவதைப் பார்க்கிறோம். மேலும், 1 கொரி 15ல் வாழ்வோர் ஒருவர் இறந்த ஒருவரின் சார்பாக திருமுழுக்கு பெறும் நிகழ்வைப் பார்க்கிறோம்.

இ. இன்றைய நாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

1. இணைந்திருத்தல்
இறந்த நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறப்புக்கள், நண்பர்கள் ஆகியோரோடு நாம் இணைந்திருக்கின்றோம். நமக்கும் அவர்களுக்கும் உள்ள இணைப்பைக் கொண்டாடுகிறோம். நாம் எல்லாரும் பிறக்கிறோமே தவிர, இறப்பதில்லை. ஏனெனில், எங்கோ, எப்படியோ வாழ்கிறோம். ஆகையால்தான், இறந்தவர்களின் கல்லறைகளை ஊருக்கு வெளியே வைத்து அவர்களைக் காவல் தெய்வங்களாகப் பாவிக்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே இருக்கின்றது. வாழ்வை வாழ்ந்து முடித்த அவர்கள் வாழும் நமக்கு வழிகாட்டிகள். ஆக, இன்றைய நாளில் நாம் ஏற்றும் மெழுகுதிரி அவர்களின் இருப்பை நாம் கண்டுகொள்ளும் ஒளிக்கீற்றாக இருக்கின்றது.

2. நம்முடைய நிலையாமையைக் கொண்டாட வேண்டும்

'இவ்வுலகில் எதுவும் நிரந்தரமல்ல' என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது இந்நாள். 'நாம எப்பவும் இருப்போம்' என்று நினைத்து வாழ்ந்தவர்கள் இன்று கல்லறைகளில் இருக்கிறார்கள். இப்படி நினைத்து வாழும் நாமும் ஒருநாள் கல்லறையில் இருப்போம். இதுதான் இயற்கையின் நியதி. ஆகையால்தான் சபை உரையாளர், 'வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்தும் தப்ப முடியாது' (காண். 8:7-8) என்கிறார். 'இந்தப் போருக்கு நான் வரல' என்று சொல்லி விலகவோ, 'இவ்வளவு பணம் வைத்துக்கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள்' என்று பணயம் கட்டவோ முடியாது. ஆனால், நாம் பயப்படத் தேவையில்லை. 'இறப்புதான் வாழ்க்கையை நாம் இனிமையாக வாழ நம்மைத் தூண்டுகிறது' என்பார் ஆப்பிள் நிறுவன இணைஉருவாக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ். நாம் நிலையற்றவர்கள். எனவே, நிலையற்ற இத்தருணத்தை - ஒளியை - பயன்படுத்தி, நிலையானதைச் சம்பாதிக்க வேண்டும். நம்முடையை நிலையாமையை, வலுவின்மையைக் கொண்டாடும் மனமுதிர்ச்சி அவசியம். இந்த மனமுதிர்ச்சி பெற நாம் பற்றுக்களைக் களைதல் வேண்டும். பயம் மற்றும் குற்றவுணர்வு விடுத்தல் வேண்டும்.

3. இறப்புக்கு முன் வாழ்வு

இறப்புக்குப் பின் வாழ்வைப் பற்றிக் கவலைப்படும் நாம் இறப்புக்கு முன் இருக்கும் வாழ்வு பற்றிக் கவலையில்லை பல நேரங்களில். சில நேரங்களில் இறப்புக்கு முன் நாம் வாழ்வதே இல்லை. நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்வார்கள். முதல் வாழ்க்கை நாம் பிறக்கும் நாளிலிருந்து தொடங்குகிறது. இரண்டாவது வாழ்க்கை, 'நமக்கு ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது' என்று உணரும் நாளில் தொடங்குகிறது. பலர் இரண்டாவது வாழ்வை இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. 'எனக்கு ஒரு வாழ்க்கைதான் உண்டு' என்று உணரும்போது அதை நான் அமைதியுடன் மகிழ்வுடன் வாழ்வேன். சண்டை சச்சரவுகளில் வீணாக்க மாட்டேன். ஆண்டுகள் என்று பார்த்தால் வாழ்க்கை நீண்டது போலத் தெரியும். ஆனால், பத்தாண்டுகள் என்று பார்த்தால் மிகவும் குறைவு. வாழ்க்கை என்னும் ஓவியம் நேரம் என்ற தாளில் வரையப்படுகிறது. நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழித்தல் அவசியம். இதனால்தான், திருப்பாடல் ஆசிரியர், 'எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே. வலிமை மிகுந்தோர்க்கு எண்பது. அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்' (90:10) என்று நிலையாமையைக் கொண்டாடுவதோடு, 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்' (90:12) என்று மன்றாடுகின்றார்.

ஆண்டவரே, இறந்த நம்பிக்கையாளர்கள் உம் இரக்கத்தால் நிலையான அமைதியில் இளைப்பாறுவார்களாக! முடிவில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக! இன்றும்! என்றும்!!

Thursday, October 31, 2019

புனிதர் அனைவர் பெருவிழா

இன்றைய (1 நவம்பர் 2019) திருநாள்

புனிதர் அனைவர் பெருவிழா

திருஅவையின் அட்டவணைக்குள் வராதவர்கள், ஆனால், புனித வாழ்வை வாழ்ந்தவர்கள், அல்லது திருஅவையின் போதனைப்படி 'மகிமைபெற்ற திருஅவையில்' இருக்கும் அனைத்து இனியவர்களின் திருநாள் இன்று. இன்றைய முதல் வாசகம் (காண். திவெ 7:2-4,9-14) இவர்களை முத்திரையிடப்பட்டவர்கள் என்றழைக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் யோவான், நாம் இங்கேயே கடவுளின் மக்களாக இருக்கிறோம் என்று புனித நிலையை இவ்வுலகம் சார்ந்ததாகப் பதிவு செய்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் பேறுபெற்றோர் பாடத்தை வாசிக்கின்றோம். இக்குணங்களைக் கொண்டிருப்பவர்கள் புனித நிலையை அடைகிறார்கள் அல்லது விண்ணரசை உரிமையாக்கிக்கொள்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக உரோமையில் புனிதர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நடந்த மறுநாளில் இணையதள தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றில் அதே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்குப் பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர், 'மனிதர்களாகச் சேர்ந்து ஒருவரை எப்படி புனிதராக்க முடியும்?' என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். புனிதராக்குகின்ற மனிதர்கள் இறைவனின் பெயரால், திருஅவையின் பெயரால், அல்லது இறைமக்களின் பெயரால் இந்நிகழ்வை நடத்துகிறார்கள் என்று நாம் சொன்னாலும் அவருக்கு அப்பதில் ஏற்புடையதாக இருக்காது.

'நான் நீதிமான்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன்' என்று சொன்ன இயேசு, 'அனைத்துப் புனிதர்கள் விழா' கொண்டாட விரும்புவாரா? என்று கேட்டார் என் நண்பர். இயேசு ஒருவேளை நம்மோடு இருந்தால் 'அனைத்துப் பாவிகள் விழா' தான் கொண்டாடியிருப்பார் என்றார் அவர்.

புனிதர்களை நாம் மிகவும் கொண்டாடி அவர்களை அந்நியப்படுத்திவிடும், அல்லது உடுப்பி ஓட்டல் சர்வர் நிலையில், நம்மிடம் 'ஆர்டர்' எடுத்து, அதைக் கொண்டு வந்து நம் தட்டில் வைக்கும் நபராகப் பார்க்கும் போக்கும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ்வதோ, அல்லது அவர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களை வாழ்வாக்குவதோ நமக்குக் கடினமாக இருக்கும் என்று, அவர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதற்குப் பதிலாக, அவர்களது பக்தர்களாக மாறும் எளியை வழியைத் தெரிவுசெய்துகொண்டோமோ என்று கேட்கவும் தோன்றுகிறது.

இந்தத் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

ஒன்று,

'உங்களுக்குப் புனிதராக விருப்பமா?' என்று நம்மிடம் யாராவது கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்?

புனிதர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். ஆனால், சாதாரண மனிதர்களைவிட அவர்கள் கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா' செய்தார்கள். அந்தக் கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா' தான் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துகிறது. அவர்கள் யாரும் செல்லாத பாதையில் நடந்து சென்றார்கள்.

பயத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் நடுவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணிச்சல் கொண்டார்கள் - செபஸ்தியார் போல!

தன் திறமை மதிக்கப்படாத இடத்தில் கொஞ்சம் எக்ஸ்டரா பொறுமை காத்தார்கள் - பதுவை அந்தோனியார் போல!

சொத்துக்கள் நிறைய வேண்டும் என்று நினைத்தவர்கள் நடுவில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தார்கள் - பிரான்சிஸ் அசிசி, வனத்து அந்தோனியார் போல!

இவர்கள் சேரி மக்கள். இவர்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கேட்டவர்கள் நடுவில், அந்த மக்களுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா தன் ஆற்றலையும் நேரத்தையும் கொடுத்தார்கள் - அன்னை தெரசா போல!

இப்படி இவர்கள் கொஞ்சம் கொஞ்சம் எக்ஸ்டரா செய்தார்கள். அவ்வளவுதான்!

நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று நம்மிடையே வாழ்ந்து இன்று மறைந்தவர்களும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தவர்கள்தாம் - அவர்களும் இன்று புனிதர்களே!

ஆக, நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யும்போதும், எக்ஸ்டரா மைல் நடக்கும்போதும் புனிதராகிறோம்.

இரண்டு,

இருப்பது அல்ல, மாறுவது.

இருப்பது அல்ல, மாறுவதே மதிப்பு பெறுகிறது. மாற்றம் கூடக்கூட மதிப்பு கூடுகிறது.

பால் மதிப்புக்குரியதுதான். ஆனால், பால் தயிரானால் அதன் மதிப்பு கூடுகிறது. வெண்ணெய் அல்லது பாலாடைக்கட்டியானால் இன்னும் கூடுகிறது. பால்கோவா, பால் அல்வா ஆனால் இன்னும்கூடுகிறது. நெய் ஆனால் இன்னும் அதிக மதிப்பு பெறுகிறது.

ஆனால், இந்த மாற்றம் எளிதான செயல் அல்ல.

இந்த மாற்றத்திற்கு தன்னையே உட்படுத்த பால் நிறைய சூட்டைத் தாங்க வேண்டும், பாத்திரம் விட்டு பாத்திரம் மாற வேண்டும், மத்தால் திரிக்கப்பட வேண்டும், கையால் சுரண்டப்பட வேண்டும்.

புனிதர்கள் சொல்லும் இரண்டாம் பாடம் இதுதான். நாம் இருப்பதில் அல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதில்தான் மதிப்பு இருக்கிறது.

பாரக் ஒபாமா அவர்களின் மனைவி மிஷல் ஒபாமா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, 'பிகமிங்' என்ற தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார். 'நான் என்னவாக மாற விரும்புகிறேன்' என்ற கேள்வி நம்முடைய இருப்பையே புரட்டிப்போடும் என்கிறார்.

'அவரால் முடியும், அவளால் முடியும். என்னால் ஏன் முடியாது?' என்று கேட்டதால்தான் லொயோலா இஞ்ஞாசியார் மாற்றத்தின் கருவியாகிறார்.

ஆக, நாம் எப்படி மாற வேண்டும் என்பதைக் கற்றுத்தருகிறார்கள் புனிதர்கள்.

மூன்று,

எதிர்நோக்கு.

'எல்லாம் கடந்துவிடும்' என்பர். சரி! கடந்தால் என்ன? கடந்தாலும் காத்திருத்தல்தான் எதிர்நோக்கு.

'எல்லாம் கடந்துவிடும்' என நினைப்பவர்கள் புனிதர்கள் ஆக முடியாது.

'துன்பம் கடந்துவிடும்' என்று செபஸ்தியார் நினைத்திருந்தால் ஓய்ந்திருப்பார் இல்லையா?

எதிர்நோக்கு கொண்டிருந்தார். கடந்துவிடுவதற்கு முன் துன்பத்தை ஏற்கின்றார்.

நம் வாழ்வில் எதிர்நோக்கு என்னும் மெழுகுதிரியை நாம் அணையாமல் காத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகின்றனர் புனிதர்கள்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா, கொஞ்சம் மாற்றம், கொஞ்சம் எதிர்நோக்கு - இதுவே புனிதம்!

Wednesday, October 30, 2019

தள்ளிப் போ!

இன்றைய (31 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:31-35)

தள்ளிப் போ!

'நீ இங்கிருந்து போய்விடு! நீ எங்களுக்கு வேண்டாம்!' என்று சொன்ன மக்களைப் பார்த்து, எருசலேமைப் பார்த்து இயேசு கண்ணீர் வடிக்கின்றார். நாம் புனித நாடுகளுக்குச் சென்றோம் என்றால், எருசலேம் மதில்களுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கைத் தாண்டி, பள்ளத்தாக்கின் மறுபக்கத்தில் 'தோமினுஸ் ஃப்ளேவிட்' ('ஆண்டவர் அழுதார்' அல்லது 'ஆண்டவர் கண்ணீர் வடித்தார்') என்ற ஆலயம் உண்டு. அந்த ஆலயம் இருக்கும் இடத்திலிருந்து மீண்டும் இந்தப் பக்கம் பார்த்தால் எருசலேம் நகரின் அழகையும், அதன் கிரீடம் போல இருக்கும் ஆலயத்தையும் பார்க்கலாம். அந்த ஆலயத்தில் உள்ள ஒரு கதவு 'மெசியாவின் வருகைக்கு' என்று இருக்கும். 'மெசியாவின் வருகைக்கு' என்று பெயரிட்டு வைத்திருக்கின்ற ஆலயம், மெசியாவைக் கண்டும் கதவைத் திறக்க மறுக்கிறதே என்பதுதான் இயேசுவின் ஆதங்கமாக இருக்கிறது. இந்த ஆதங்கமே, இந்தக் கையறுநிலையே இயேசுவின் கண்களை வியர்க்க வைக்கின்றன.

'எருசலேமே! எருசலேமே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன்னை அரவணைத்துக்கொள்ள விரும்பினேன்! உனக்கு விருப்பமில்லையே!' என்று கண்ணீர் வடிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, 'இங்கிருந்து போய்விடும். ஏரோது உம்மைக் கொல்லத் தேடுகிறான்!' என்கின்றனர். வழக்கமாக, பரிசேயர்கள் இயேசுவுக்கு எதிராகச் செயல்படுவார்கள். ஆனால் இங்கே அவர் சார்பாக, அவரைக் காப்பாற்றும் நோக்குடன் பேசுகிறார்கள். அல்லது, 'ஏரோதின் பெயரைச் சொன்னால் பயந்து ஓடிவிடுவான்' என்று நினைத்துக்கூடச் சொல்லியிருக்கலாம். திருமுழுக்கு யோவானைக் கொன்ற ஏரோது இயேசுவையும் கொல்லத் தேடுகிறான். ஆகையால்தான், எருசலேம் இறைவாக்கினரைக் கொல்லும் நகரம் என்றழைக்கிறார் இயேசு. இயேசு பயந்துவிடவில்லை. ஏரோதுவை 'குள்ளநரி' என்றழைக்கின்றார். இந்தப் பெயர் ஏரோதுக்கு இயல்பாகவே வழங்கப்பட்ட பெயர். ஏனெனில், பல தந்திர வேலைகளைச் செய்பவர் ஏரோது. 'மூன்று நாள் பொறுத்துக்கொள்' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. 'மூன்று நாள்' என்பது '72 மணி நேர' அளவை அல்ல, மாறாக, இயேசுவின் இறையாட்சிப் பணி நிறைவை அடையாளமாக இங்கே குறிக்கிறது.

இங்கே இரண்டு விடயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்:

(அ) நாம் ஒவ்வொருவரும் எருசலேம் ஆலயம்தான். இந்த ஆலயத்தில் இறைவன் நுழைவதற்கென்று கதவு ஒன்று இருக்கிறது. ஆனால், நாம் எத்தனை முறை அதை நாம் பூட்டி வைக்கின்றோம்? கதவு மட்டுமல்லாமல் சில நேரங்களில் பெரிய பள்ளத்தாக்கும் இருந்து இறைவனை நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. இந்தப் பிளவை நாம் எப்படி சரி செய்வது? அவரை ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், அவரிடம் தஞ்சம் அடைவதன் வழியாகவுமே.

(ஆ) என்னுடைய இலக்கிற்கு தடைகள் வரும்போது நான் அவற்றை எப்படிக் கையாளுகிறேன்? பயந்து பின்வாங்குகிறேனா? அல்லது துணிந்து முன்னேறுகிறேனா? இயேசு துணிந்து முன்னேறுகின்றார். ஏரோதுவோ, எருசலேம் மக்களின் கல்மனமோ அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.

இந்த இரண்டு விடயங்களையும் ஒரே புள்ளியில் நிறுத்துகிறது இன்றைய முதல் வாசகம்:

'கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?' என்ற கேள்வியைக் கேட்கும் கடவுள், தானே விடையளிக்கிறார்: 'வேதனை, நெருக்கடி, இன்னல், பட்டினி, ஆடையின்மை, இடர், சாவு' எதுவும் நம்மை அவரிடமிருந்தும், கிறிஸ்துவின் அன்பினின்றும் பிரிக்க முடியாது. அப்படி இவை வந்தாலும் 'அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்' என்கிறார்.

இது எப்படி சாத்தியமாகும்?

இதுதான் பவுலின் ஆழமான இறையனுபவம்.

'கடவுள் என் சார்பில் இருக்கிறார்' என்று உணர்வது மிகவும் ஆழமான இறையனுபவம். அதாவது, என் வாழ்வில் நிகழும் எல்லா நிகழ்வுகளிலும் நான் அவருடைய கைவன்மையைக் காண வேண்டும்.

இதையொட்டிய திருப்பாடல் 124 இக்கருத்தை இன்னும் சிறப்பாக விளக்குகிறது:

'ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - எதிராளிகள் நம்மை விழுங்கியிருப்பார்கள்! பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்! ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!'

சில கேள்விகள்:

அ. இயேசுவின் முகம் என்னைப் பார்த்து அழுகிறதா? புன்முறுவல் பூக்கிறதா?

ஆ. என்னுடைய இலக்கு நோக்கிய பயணத்தில் நான் எவற்றால் பின்வாங்குகிறேன்?

இ. 'கடவுள் என் சார்பாக இருக்கிறார்' என்று உணர்ந்த வாழ்வியல் அனுபவங்கள் எவை?


Tuesday, October 29, 2019

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து

இன்றைய (30 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:22-30)

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து

இயேசு ஒரு யூதராக இருந்ததால் இயேசுவின் மீட்பு யூதர்களுக்கு மட்டும்தான் என்ற புரிதல் தொடக்க கிறிஸ்தவர்களுக்கு நிறையவே இருந்தது. புறவினத்தார்க்கு மீட்பு இல்லை என்ற புரிதல் மேலோங்கியிருந்ததன் பின்புலத்தில் இன்றைய நற்செய்தி வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தியை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. எருசலேம் நோக்கி இயேசு (13:22)

இயேசு எருசலேம் நோக்கிச் செல்வதை லூக்கா அடிக்கடி பதிவு செய்கிறார் (காண். 9:51, 53, 57, 10:1, 38, 11:1, 13:22, 33, 14:25, 17:11, 18:31, 18:37, 19:1,11,28). ஆனால், எதற்காக இயேசு எருசலேம் செல்கிறார் என்பதை மூன்றுமுறை மட்டுமே - தொடக்கத்தில் (9:51), நடுவில் 17:11), இறுதியில் (18:35) - பதிவுசெய்கிறார். இக்குறிப்பு நமக்கு உணர்த்தவது என்ன? என் வாழ்வின் இலக்கு எனக்கு தெளிவாக இருக்கின்றதா? ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பத்து ஆண்டுகளுக்குப் பின், இருபது ஆண்டுகளுக்குப் பின் என நான் என்ன திட்டங்கள் அல்லது இலக்கை நிர்ணயித்துள்ளேன்? இலக்கைப் பின்தொடர்வதற்கான மனவுறுதியும் விடாமுயற்சியும் என்னிடம் இருக்கிறதா?

ஆ. மீட்பு பெறுபவர் சிலர்தானா? (13:23)

வழியில் பலர் இயேசுவிடம் பல விடயங்களைக் கேட்கின்றனர். இறந்த கலிலேயர்கள், விவாதங்கள் என நிறைய விடயங்களில் ஒன்றாக, 'மீட்பு எல்லாருக்குமா?' என்று கேட்கப்பட, இயேசு அதற்கு நேரிடையாகப் பதில்கூற மறுக்கின்றார்.

இ. இடுக்கமான வாயில் (13:24)

'இடுக்கமான வாயிலில் நுழைவது' பற்றி அண்மையில் டி.டி. ரங்கராஜன் இப்படி எழுதுகிறார்: 'நம் ஒவ்வொருவரிலும் இரண்டு அல்லது மூன்று மனிதர்கள் ஒரே நேரத்தில் வாழ்கின்றனர். இவர்களை நான் குறைத்து ஒரே நபராக எப்போதும் வாழ முயற்சிக்க வேண்டும். ஒரே நபராக வாழும்போது என்னில் உண்மையும், நாணயமும், நேர்மையும் இருக்கும். ஒரே நபராக இருப்பவரே இடுக்கமான வாயிலுக்குள் நுழைய முடியும்.' இன்று நான் எத்தனை மனிதர்களாகப் பிளவுண்டு வாழ்கிறேன்?

ஈ. உங்களை எனக்குத் தெரியாது (13:25-28)

'இவரை எனக்குத் தெரியும்!' என்று இயேசுவிடம் செல்பவர்களை, 'உங்களை எனக்குத் தெரியாது' என்கிறார் இயேசு. ஆக, இயேசுவுடன் உணவு உண்ட, குடித்த, போதனையைக் கேட்ட நெருக்கம் மட்டும் போதாது. மாறாக, அவருடன் ஒருவர் கொண்டுள்ள தனிப்பட்ட உறவே அவருக்கு மீட்புத் தரும்.

உ. எல்லாரும் வரலாம் (13:29-30)

ஆக, அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமாய் கதவுகள் திறக்கப்படுகின்றன. இலக்கு தெளிவாய் இருக்கும் எவரும், இடுக்கமான வாயில் வழியே நுழையும் எவரும் உள்ளே வந்து பந்தியில் அமரலாம். இவ்வாறாக, கடைசியானவர்கள் முதன்மையாவார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:26-30) கூட்டுஒருங்கியக்கம் (synergy) என்ற மேலாண்மை விதி பற்றிப் பேசுகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது, அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.' இதையே, 'ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கும்போது பிரபஞ்சமே அவருக்கு ஒத்துழைக்கும்' என்கிறார் நாவலாசிரியர் பவுலோ கோயலோ. இலக்கு தெளிவானவர்களும், இடுக்கமான வாயிலில் நுழைபவர்களும் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கிறார்கள்.

சில கேள்விகள்:

அ. என்னுடைய வாழ்வின் குறுகிய மற்றும் நீடித்த இலக்குகள் எவை? அவற்றை நான் எப்போதும் என் கண்முன் கொண்டுள்ளேனா?

ஆ. நான் இடுக்கமான வாயில் வழியே நுழைய, ஒற்றை நபராக மாற, தடையாக இருப்பவை எவை?

இ. கடவுளின் ஆவியார் என்னில் நிகழ்த்தும் கூட்டுஒருங்கியக்கத்தை நான் அனுபவிக்கிறேனா?


Monday, October 28, 2019

விதையும் மாவும்

இன்றைய (29 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:18-21)

விதையும் மாவும்

இறையாட்சி பற்றிய இயேசுவின் உருவகங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. நம்ம வீட்டு அஞ்சறைப்பெட்டியின் மூடியைச் சுற்றிவிட்டு, அதன் ஒரு பெட்டியில் கிடக்கும் கடுகுமணிகளைக் கையில் எடுத்து, 'இதோ! இறையாட்சி இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்!' என்கிறார். பின் அப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார். ஒரு டம்ளரில் வீட்டுத்தலைவி எடுத்து வைத்த புளிக்கார மாவு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தள்ளிப் பார்க்கிறார். அங்கே ஒரு பானை நிறைய புதிதாய் அரைத்த மாவு இருக்கிறது. 'இந்தப் புளிக்காரத்தை இந்த மாவில் கொட்டவா?' என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டுக்கொண்டே அந்த மாவில் கொட்டி, அருகிலிருந்த அகப்பையை எடுத்து மெதுவாகக் கிண்டி விடுகின்றார். 'மொத்தத்தையும் போட்டுட்டீங்களா?' என்று சிணுங்குகிறாள் அந்தப் பெண்மணி. 'ஆம்!' என்று சொல்லிக்கொண்டே வரவேற்பரைக்குள் ஓடியவர், அங்கே இருந்த சீடர்களிடம், 'இறையாட்சி இந்தப் புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்' என்கிறார்.

இயேசுவின் உருவகங்கள் வெகுசன மக்களுக்கும் புரியக்கூடிய வகையில் இருக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியை கடுகுவிதை மற்றும் புளிப்புமாவுக்கு ஒப்பிடுகின்றார்.

முதலில் இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்றால் (அ) திருச்சபை, (ஆ) விழுமியங்கள், (இ) இறப்புக்குப் பின் வாழ்வு என்று நிறைய புரிதல்கள் இருக்கின்றன. ஆனால், இறையாட்சி என்பது இயேசு. அவ்வளவுதான். அதனால்தான், 'இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது. ஏனெனில் நான் உங்கள் நடுவில் இருக்கிறேன்' என்கிறார் இயேசு. இயேசு இயங்கும் இறையாட்சித் தளம் இந்த உலகம்.

அ. கடுகுவிதை

யூதர்கள் கடுகுவிதையை எல்லா விதைகளிலும் மிகச் சிறியதாகக் கருதினார்கள் (காண். மத் 13:31-33, மாற் 4:30-32). இயேசுவும் 'கடுகளவு நம்பிக்கை' (காண். லூக் 17:6) என்று சொல்லும்போது, கடுகின் சிறிய அமைப்பையே சொல்கின்றார். 'கடுகு' என்பது 'ஸினாப்பிஸ் நீக்ரா' என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கிறது. இத்தாவரம் நான்கு அடிகளிலிருந்து பதினைந்து அடிகள் வரை வளரும். ஆகையால் இதை மரம் என்றும் அழைப்பர். இயேசு கடுகுவிதையின் வளர்ச்சியைப் பற்றிப் பேசினாலும், அவருடைய அழுத்தம் கடுகுவிதையின் தொடக்கம் மற்றும் இறுதியைப் பற்றியே இருக்கின்றது. சிறிய தொடக்கம். ஆனால், பெரிய முடிவு. சிறிய விதை பெரிய மரமாகிறது.

இங்கே மற்றொரு வாக்கியத்தையும் சொல்கின்றார்: 'வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.' இயேசுவின் 'விதைப்பவர்' எடுத்துக்காட்டில், பறவைகள் விதைகளின் எதிரிகளாக இருக்கின்றன (காண். லூக் 8:5, 12). ஆனால், இங்கே அவைகள் விருந்தினர்களாக வருகின்றன. ஆக, இறையாட்சி என்ற கடுகு மரம் வெறும் 'செல்ஃபோன் டவர்' அல்ல. மாறாக, பறவைகளை ஈர்த்து அவைகளுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும் தன்மை கொண்டது. 'பறவைகள்' என்பது 'புறவினத்தாரைக்' குறிப்பதாக திருஅவைத் தந்தையர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் (காண். தானி 4:12, 21, திபா 104:13, எசே 17:23). உருவகத்தை நிறைவேற்றும் விதமாகக் கூட 'பறவைகளைப் பற்றி' இயேசு சொல்லியிருக்கலாம்.

ஆ. புளிப்புமாவு

புளிப்புமாவு என்பது நாம் பாலில் ஊற்றும் தயிர் உறை போன்றது. பழைய தயிர் புதிய பாலில் ஊற்றப்படும்போது பாலும் தயிராகிவிடுகின்றது. 'புளிப்புமாவு' என்று சொல்வது இன்று நாம் ரொட்டி அல்லது கேக் செய்யும்போது சேர்க்கும் 'ஈஸ்ட்' என்ற பாக்டீரியா. இது மாவில் சேர்க்கப்பட்டு கொஞ்ச நேரத்தில் மாவு நெகிழ்வுத்தன்மை அடைகிறது. மாவில் உள்ள க்ளுக்கோஸூடன் சேரும் இந்தப் பாக்டீரியா கார்பன்-டை-ஆகஸ்ஸைடாக மாறி சின்ன சின்ன காற்றுப் பைகளை மாவில் உருவாக்குகிறது. இப்போது அடுமனையில் இடப்படும்போது வெப்பத்தில் காற்றுப் பைகள் இன்னும் விரிய மணமான, சுவையான கேக் அல்லது பிரட் கிடைக்கிறது. மாவு எந்த அளவில் இருந்தாலும் புளிக்காரம் அந்த அளவிற்குச் செயலாற்றும். அதே செய்திதான். சிறிய தொடக்கம். பெரிய முடிவு.

புளிக்காரம் யார் பார்த்தாலும்பார்க்காவிட்டாலும் தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும். இதன் வேலையைப் பாதி இரவில் நிறுத்த முடியாது. இது செய்து முடித்த வேலையை மீண்டும் திருப்ப முடியாது. இறையாட்சியும் அத்தகையதே.

புளிப்புமாவு விவிலியத்தில் எதிர்மறையான பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். லூக் 12:1, 1 கொரி 5:6-8, கலா 5:9). ஆனால், இங்கே நேர்முகப் பொருளில்தான் உள்ளது.

சரி!

கடுகுவிதையும் புளிப்புமாவும் போல இiறாட்சி இன்று இருக்கிறதா? எப்போது உலகம் பெரிய மரமாகவும் புளிப்பான மாவாகவும் மாறும்?

இந்த எதிர்நோக்கு அல்லது காத்திருத்தலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:18-25) பவுல் மற்றொரு உருவகத்தின்வழி விளக்குகிறார்: 'படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது.' 'தள்ளு!' 'தள்ளு!' என்று ஒருபக்கம் வலி, இன்னொரு பக்கம் முடியாத போது பெருமூச்சு. ஆனால், இறுதியில் மகிழ்ச்சி! இறையாட்சியை, இயேசுவைக் கையில் ஏந்தும் மகிழ்ச்சி!


Sunday, October 27, 2019

புனித சீமோன், யூதா

இன்றைய (28 அக்டோபர் 2019) திருநாள்

புனித சீமோன், யூதா

இன்று நம் தாய்த்திருச்சபை திருத்தூதர்களும் புனிதர்களுமான சீமோன், யூதா திருநாளைக் கொண்டாடுகிறது. 'தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா அல்லது ததேயு' என்று இவர்களை அழைக்கின்றார் லூக்கா. சீமோனை மையமாக வைத்த பக்தி முயற்சிகள் அதிக அளவில் இல்லை. ஆனால், அன்னை மரியாள், அந்தோனியார்க்கு அடுத்த நிலையில் உலகெங்கும் அதிக பக்தர்களை ஈர்க்கக்கூடியவர் யூதா ததேயு எனலாம். 'கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்' அல்லது 'கையறுநிலையின் பாதுகாவலர்' இவர். இவர் இயேசுவின் உறவினர் என்பதும், கானாவூரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்வு நடந்தது இவருடைய திருமணத்தில்தான் என்பதும் மரபுவழிச் செய்தி. நான் உரோமையில் என் படிப்பிற்காகச் சென்றிருந்தபோது எனக்கு அடைக்கலம் தந்தது புனித யூதா ததேயு பங்குத்தளம்தான். இன்று அந்தப் பங்குத்தளத்தின் திருநாள். கையின் இடுக்கில் ஒரு பெரிய கட்டையும், இடுப்பில் தான் எழுதிய கடிதப் பகுதியையும், இரண்டு கைகளில் இயேசுவின் முகம் தாங்கிய துணியையும் (வெரோணிக்காவுக்கு இயேசு வழங்கியது) ஏந்தியவராக இவர் காட்சி அளிப்பார் அந்தப் பங்குத்தளத்தில்.

திருத்தூதர்கள் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள் அல்லது பாலங்கள். இவர்களை அடித்தளங்கள் என்கிறார் பவுல் (காண். முதல் வாசகம்).

இவ்விரு திருத்தூதர்களும் இன்று நமக்குச் சொல்வது என்ன?

அ. அழைத்தல் அனுபவம் பெறுதல்

'இயேசு ஒரு மலைக்குப் போனார். கடவுளிடம் வேண்டினார். விடிந்ததும் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்' என்று வேகமாக நாம் நற்செய்தி நூலில் வாசித்துவிடுகின்றோம். ஆனால், அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தால் நமக்கு வியப்பின்மேல் வியப்பாக இருக்கிறது. பெரிய கூட்டம். அந்தக் கூட்டத்தின் நடுவில் சில சீடர்கள். எல்லாரும் நிற்கிறார்கள். இயேசு அவர்கள் முன்னால் நின்று, 'நீ வா! சீமோன் ... நீ வா! ததேயு! உன்னைத்தான் ... வா!' என்று சொல்லும்போது மற்ற சீடர்கள் நடுவில், மற்ற மக்கள் நடுவில் அவர்கள் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருப்பார்கள்! 'நானா!' என்று ஓடியிருப்பார்கள். சிலர் தயங்கியிருப்பார்கள். ஆனால், அழைக்கப்பட்ட அனைவரும் சென்றுவிடுகின்றனர். கூட்டத்திலிருந்து பெயர் சொல்லி அழைக்கப்படுதல் ஒரு முக்கியமான அனுபவம். நம்மை யாராவது கூட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதிச் செயல்பட்டால் நமக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில், கூட்டத்தில் நம்முடைய தனித்தன்மை அழிக்கப்படுகிறது. ஆக, என்னுடைய தனித்தன்மையை இறைவன் எனக்கு நினைவூட்டும் நிகழ்வுதான் அழைத்தல் அனுபவம். இன்றும் குருத்துவ அருள்பொழிவில் திருத்தொண்டர்களையும், திருத்தொண்டர் அருள்பொழிவில் மாணவர்களையும், துறவற சபையில் முதல் மற்றும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும் இளவல்களையும், திருமுழுக்கின் போது நம்மை பெயர் சொல்லி அழைப்பதன் பொருள் இதுதான். இந்த அழைத்தல் அனுபவம் ஒருநாள் அனுபவம் அல்ல. இது அன்றாட அனுபவமாக இருத்தல் வேண்டும்.

ஆ. அவரோடு நிற்றல்

இவர்கள் இயேசுவுடன் நிற்க வேண்டும். ஆக, இவர்களுக்கென்ற தனிப்பட்ட நிற்றல் இனி இல்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தோடும், உறவினர் நண்பர்களோடும் இனி நிற்க முடியாது. இயேசுவோடு நிற்க அவர்கள் மற்றவற்றை இழக்க வேண்டும். இல்லை என்றால், இயேசுவை நெறித்துக்கொண்டு நிற்பது போல ஆகவிடும். இயேசுவுடன் நிற்க நான் என்னுடைய முதன்மைகளைக் கைவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் என் இல்ல அதிபருடன் வெளியே செல்ல வேண்டுமென்றால், எனக்கென அன்று நான் வைத்திருக்கும் வேலைகளை விட்டு எழ வேண்டும். இதையும் பார்த்துக்கொண்டே அவரோடு செல்ல முடியாது. அவரோடு சென்றுகொண்டே இவற்றைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க நேரிட்டால் இரண்டிலும் முழுமை இராது.

இ. அவருடைய பணிகளைச் செய்தல்

இயேசு திருத்தூதர்களுடன் சமவெளில் நின்றுகொண்டு மூன்று பணிகளைச் செய்வதாகப் பதிவு செய்கிறார் லூக்கா: மக்களுடன் பேசுகிறார் அல்லது போதிக்கிறார், அவர்களின் பிணிகளை நீக்குகின்றார், தீய ஆவியை அகற்றுகிறார். போதித்தல், நலம் தருதல், தீமையை அகற்றுதல் - இம்மூன்றும்தான் திருத்தூதருடைய பணிகள். திருத்தூதராக இருப்பவர் இந்த மூன்று பணிகளிலும் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. இன்று பல நேரங்களில் நான் போதிக்கத் தயங்குகிறேன். நலம் தரும் வார்த்தைகளைக் பேசுவதில்லை. என்னிடம் உள்ள தீமையை அகற்றுவதையே பெரிய போராட்டமாகக் கருதுகிறேன். இப்பணிகளோடு சமரசம் செய்துகொள்ளும்போது என் பணியில் பிறழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.

இறுதியாக,

'மக்கள் யாவரும் இயேசுவைத் தொட முயன்றனர்' என முடிகிறது நற்செய்தி வாசகம்.

இயேசுவைத் தொடுவதற்கான கருவிகள்தாம் திருத்தூதர்கள். நீங்களும் நானும் திருத்தூதர்களாக இருந்தால் இன்னும் பலர் இயேசுவைத் தொட முடியும் - இன்றும் என்றும்!

Friday, October 25, 2019

கதையாடல்கள்

இன்றைய (26 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:1-9)

கதையாடல்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு கதைகள் (13:1-5), ஒரு உவமை (13:6-9) என்று மூன்று கதையாடல்களைக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு கதைகளின் இறுதியில், 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே மடிவீர்கள்!' என்ற எச்சரிக்கையும், உவமையின் இறுதியில், 'ஆண்டவர் நம்முடைய நீதித்தீர்ப்பின் நாளைத் தள்ளிப் போடுகிறார்' என்ற நம்பிக்கையும் தரப்படுகிறது. இன்னும் சிலர், இரண்டு கதைகளும் தனிநபர் மனமாற்றத்தை வலியுறுத்த, உவமை குழு அல்லது சமூக மனமாற்றத்தை வலியுறுத்துகிறது என்று சொல்கின்றனர்.

அ. இரண்டு கதைகள்

'சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான்' என்று சொல்கின்றனர். கடவுளுக்குப் பலி செலுத்தச் சென்றவர்களுக்கா இப்படி நடக்க வேண்டும்? என்று நாம் கேட்போம். கடந்த உயிர்ப்பு பெருவிழாத் திருப்பலியின்போது கொழும்பில் குண்டு வெடித்தபோது நாம் இப்படித்தான் கேட்டோம். பிலாத்து இப்படிச் செய்ததாக வரலாற்றுப் பதிவு இல்லை. ஆனால், முதலாம் அக்ரிப்பா தான் கலிகுலாவிற்கு எழுதும் கடிதம் ஒன்றில், 'பிலாத்து இரக்கமற்ற முரடன், காட்டுமிராண்டி' என்று சொல்வதைப் பார்க்கும்போது இந்நிகழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த சோகமான நிகழ்வை இயேசுவிடம் சொல்கின்றனர் மக்கள். 'ஐயயோ! அப்படியா! பாவம்! உரோமை அரசு ஒழிக! அப்பாவி உயிர்கள் காக்கப்பட வேண்டும்! என்ன கொடுமை! அச்சச்சசோ!' இப்படி ஏதாவது ஒரு எதிர்வினையை மக்கள் இயேசுவிடம் எதிர்பார்க்க, இயேசுவோ, அவர்கள் எதிர்பாராத ஒன்றைச் சொல்கின்றார்: 'இவர்கள் மற்ற எல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?' இதைச் சொன்ன இயேசுவை அவர்கள் எப்படி சும்மா விட்டார்கள் என்று தெரியவில்லை! 'நாங்க ஒன்னுமே நினைக்கலயேப்பா! நீ பாட்டுக்க எதையோ சொல்ற?' என்று மனதிற்குள் கேட்டிருப்பார்கள். இயேசுவின் சமகாலத்தில் விபத்து அல்லது திடீர் மரணம் போன்றவற்றிற்கு ஒருவரின் பாவமே காரணம் என்று மக்கள் நினைத்தனர். 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்!' என்கிறார். 'அவர்கள் இறந்தது பற்றி நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனம் மாறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருப்பதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' எனச் சொல்கிறார் இயேசு. இரண்டாவது நிகழ்வும் இதையொத்ததே - சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே! - இந்நிகழ்வு ஓர் இயற்கைப் பேரிடர். முந்தையது மனித வன்முறை.

ஆக, 'வன்முறை, பேரிடர், விபத்து, நோய் எதுவும் எந்நேரமும் நடக்கலாம். ஆகையால் எப்போதும் தயாராய் இருங்கள்' என்று சொல்வதுபோல இருக்கிறது. 'மனம் மாறுதல்' என்பது லூக்காவில் அடிக்கடி வரும் ஒரு கருத்துரு (காண். 3:3, 3:8, 5:32, 13:3, 5, 15:7, 16:30, 17:3, 24:47). 'மனம் மாற்றம்' என்றால் என்ன? பாவத்திலிருந்து மாறுவதா? அப்படி என்றால், பாவம் செய்யாதவர்களுக்கு மனமாற்றம் தேவையில்லையா? இந்தக் கேள்விக்கு இன்றைய முதல் வாசகம் (காண். உரோ 8:1-11) விடை தருகிறது. நம்மிடம் இருக்கின்ற ஊனியல்பின் செயல்கள் மறைந்து ஆவிக்குரிய இயல்பு மலர்தலே மனமாற்றம். இது ஒருநாள் நிகழ்வு அன்று. கொஞ்சம் கொஞ்சமாக நிகழும் நிகழ்வு.

ஆ. ஒரு உவமை

'ஒருவர் திராட்சைத் தோட்டத்தில் அத்த மரம் வைத்திருக்கிறார் ... அத்திமரத்தில் கனிகள் இல்லை ... இதை வெட்டிவிடும் என்கிறார் ... தொழிலாளர் இன்னும் ஒரு வருடம் காத்திருப்போம் என்கிறார்.' திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரயேல் மக்களையும், அத்திமரம் என்பது அவர்களின் திருச்சட்டத்தையும் குறிக்கிறது. தொழிலாளர் இயேசுவாகவும் தோட்ட உரிமையாளரைக் கடவுளாகவும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே இறுதியில் தோட்டக்காரர் காத்திருக்க அனுமதித்தாரா அல்லது மரம் வெட்டப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. ஆனால், காத்திருக்க வாய்ப்பு நிறைய இருக்கிறது.

இந்த மரம் ஏன் பலன் கொடுக்கவில்லை? (அ) அது தேவையற்ற இடத்தில் இருந்ததாலா? அல்லது (ஆ) அதனுடைய மண் இறுகிப் போனதாலா? அல்லது (இ) ஊட்டச்சத்து குறைவினாலா? வாசகரே விடை காண வேண்டும்.

சில கேள்விகள்:

அ. இயேசுவின் செய்தி இன்று ஏதோ பெந்தேகோஸ்தே பாஸ்டரின் பயமுறுத்தும் செய்திபோல இருக்கிறது. 'சுனாமி வரப்போகிறது. உலகம் அழியப் போகிறது. 666 என்ற எண்ணோடு அந்திகிறிஸ்து பிறந்திருக்கிறான். இதோ இயேசு சீக்கிரம் வருகிறார்' என்று பயமுறுத்தி, இன்றே நீங்கள் மனம் மாறுங்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது. மனம் மாறியவர்களும் இறந்து போவதை நாம் எப்படி நியாயப்படுத்துவது? இறப்பு எந்த நேரமும் வரலாம். அதற்கேற்ற ஆயத்தநிலையைத்தான் இயேசு மனமாற்றம் என்று அழைக்கிறார். என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நான் எச்சரிக்கையாகப் பார்க்கிறேனா? அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கிறேனா?

ஆ. 'இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்று தலைவர் அத்திமரத்தைக் காட்டிக் கேட்கின்றார். இன்று நான் என்னுடைய குருத்துவக் கல்லூரியில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறேனா? என்னுடைய வகுப்பறையில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறேனா? அல்லது என்னுடைய இருப்பால், இயக்கத்தால் கனி தருகிறேனா?

இ. ஊனியல்பு என்னை இறுக்கிவிட வாய்ப்புண்டு. காற்று புகாத அளவிற்கு மண் இறுகினால் மரம் வளர்வதில்லை. இன்று நான் கொத்தி எருப்போட வேண்டிய இடம் எது? என் உள்ளம் கடினமாகிவிட்டதா? என் மனம் ஊட்டம் அற்றுவிட்டதா?

Thursday, October 24, 2019

மழை வரும்

இன்றைய (25 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:54-59)

மழை வரும்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கும் என் நண்பர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  மருத்துவரைச் சந்திக்கச் சென்றிருந்தார். என் நண்பரின் எடையைப் பார்த்த மருத்துவர், 'நீங்கள் அதிக எடை கொண்டிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் குறைய வேண்டும். இல்லை என்றால் உடல் பருமன் மற்றும் அதையொத்த நோய்கள் வந்துவிடும்' என்றார். மருத்துவரின் எச்சரிக்கையைக் கேட்ட நண்பர் போர்க்கால அடிப்படையில் உடல் எடையைக் குறைத்துவிட்டார். கடந்த வாரம் தன்னுடைய கண்ணத்தில் ஏற்பட்ட கொப்புளம் ஒன்றிற்கு அதே மருத்துவரிடம் சென்றார் நண்பர். 'உன்னுடைய உடல் பருமனைப் பற்றி ஏதாவது சொன்னாரா?' என்று நான் கேட்டேன். 'ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் நான் போன முறை பார்த்ததைவிட மிகவும் குண்டாகிவிட்டார். அவருக்குத்தான் இப்போது உடல் பருமன்' என்றார் நண்பர்.

நிற்க.

தன் கண் முன்னே ஒருவர் உடல் பருமன் நோய்க்கான அறிகுறையைக் கொண்டிருப்பதைக் காண்கிற மருத்துவர், அதை அடுத்தவரில் பார்த்தாரே அன்றி, தன்னிடம் அவ்வறிகுறிகளைப் பார்க்கவோ, அல்லது அவரிடம் பாடம் கற்ற அவர் தன்னிடம் செயல்படுத்தவோ இல்லை.

இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வெளிவேடம் என்கிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: (அ) அறிகுறிகளை அறிந்துகொள்ளுதல், (ஆ) எதிரியிடம் சமரசம் செய்துகொள்தல். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றது.

முதலில், அறிகுறிகளை அறிந்துகொள்ளுதல்.

'மேற்கிலிருந்து மேகம் எழுவதைப் பார்க்கும்போது மழை வரும் என்கிறீர்கள். தெற்கிலிருந்து காற்று அடிக்கும்போது வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்.' பாலஸ்தீனம்-இஸ்ரேலுக்கு மேற்கே மத்திய தரைக்கடல் இருக்கிறது. மேற்கில் மத்திய தரைக்கடலில் உருவாகும் மேகங்கள் மேலைக்காற்றால் அடித்துவரப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் மழை பெறும். பாலஸ்தீனம்-இஸ்ரேலுக்கு தெற்கே எகிப்துப் பாலைவனம் இருக்கிறது. தெற்கிலிருந்து வீசும் காற்று வெப்பக் காற்றாக இருப்பதால் பாலஸ்தீனம்-இஸ்ரரேல் வெப்பம் பெறும். இது பொதுமக்கள் அறிவு. அறிவியல், விஞ்ஞான அறிவு தேவையில்லை. கண்ணுக்கு எதிரே தெரியும் நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் இவர்கள், கண்ணுக்கு எதிரே நிற்கும் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இவர்களை 'வெளிவேடக்காரர்' என்றழைக்கின்றார் இயேசு. 'வெளிவேடம்' என்பது 'ஒன்றை அறிந்திருந்தும் அதை அறியாததுபோல செயல்படுவது.' இது அறியாமையில் நிகழ்வது அல்ல. வெளிவேடத்தில் ஒருவர் அறிந்திருந்தும் தன் அறிவிற்கு ஏற்பச் செயல்பட மறுக்கிறார். இயேசுவைப் பற்றிய உண்மை அவர்களுடைய கண்களுக்கு நேரே இருந்தது. 'கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?' என்பார்கள். ஆனால், தங்கள் முன்னால் நின்ற கைப்புண்ணைக் காண இவர்கள் நிறையக் கண்ணாடிகளைத் தேடினர். தாங்கள் தேடிய அறிகுறிகள் கிடைத்தும், அவரே மெசியா என்று அறிந்தும், அந்த அறிவின்படி செயல்பட மறுத்தனர்.

இதையே முதல் பகுதியில், 'கண்ணுக்கு முன் நிற்பவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்' என்று எச்சரிக்கிறார் இயேசு.

இரண்டாவதாக, எதிரியிடம் சமரசம் செய்தல்.

'நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?' என்ற கேள்வியோடு தொடங்குகிறார் இயேசு. தொடர்ந்து எதிரியோடு வழியில் சமரசம் செய்துகொள்தல் பற்றிப் பேசுகின்றார். இதை சட்டசமரசம்சார் திட்டமாக மத்தேயு (காண். 5:25-26) பதிவு செய்கிறார். உடனடியாகச் செய்ய வேண்டியதை உடனடியாகச் செய்யவில்லை என்றால் அதன் விளைவு ரொம்ப மோசமாக இருக்கும் என்பதை உணர்த்தும் அறநெறிப் பாடம் இது. ஆனால், இங்கே, லூக்கா, இயேசுவுக்கான உருவகமாகப் பார்க்கிறார். 'எதிரி' என்பவர் 'இயேசு.' 'ஆட்சியாளர்' அல்லது 'நடுவர்' என்பவர் 'தந்தையாகிய கடவுள்.' 'வழக்கு' என்பது 'இயேசுவைப் பற்றிய இடறல்.' 'நீதிமன்ற அலுவலர்' என்பவர் 'ஆவியாராகிய கடவுள்.' 'சிறை' என்பது 'இறைவனைக் காண முடியாத இடம் அல்லது நிலை.' 'கடைசிக் காசு' என்பது 'மனமாற்றம்.' ஆக, இப்போதே ஏற்றுக்கொண்டு வழக்கைத் தீர்த்துக்கொண்டால் பின்னால் துன்பப்படத் தேவையில்iலேயே என்கிறார் இயேசு.

இப்பகுதியில், இவர்களுடைய பிரச்சினை அறிந்துகொள்வது அல்ல, மாறாக, 'இவர்தான், இதுதான்' என்று தீர்மானம் செய்யாமல் இருப்பதுதான். இவர்களால் ஏன் தீர்மானிக்கவோ அல்லது இயேசுவைத் தெரிவு செய்யவோ முடியவில்லை. அவர்கள் இயேசுவைக் குறித்து இடறல்பட்டனர். 'இவரா! இவர் எப்படி?' என்றனர். அல்லது அவர் மேல் கோபம் கொண்டனர். அல்லது அவர்மேல் பொறாமை கொண்டனர். இக்காரணங்களால் அவர்களால் நல்லது என்று தெரிந்தும் நல்லவரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 7:18-25), பவுல், 'நான் நன்மை செய்ய விரும்பினாலும் என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது' என்று சொல்வதோடு, 'அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?' என்று புலம்பி இறைவேண்டல் செய்கின்றார்.

உடல்சார் அறிதல்களையும் கடக்கும் ஒருவரே இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், அவரைத் தெரிவு செய்யவும் முடியும்.

சில கேள்விகள்:

அ. 'புகைப்படிப்பது தவறு,' 'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது தவறு' என்று நாம் அறிந்தும், அந்த அறிவிற்கேற்ப செயல்பட மறுக்கும் தருணங்களிலும் நாம் வெளிவேடக்காரர்கள் என்பதை நான் அறிகிறேனா? என்னுடைய அறிதலுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை நான் எப்படி குறைக்கிறேன்?

ஆ. 'சரியான நேரத்தில் இடப்பட்ட ஒரு தையல் ஒன்பது தையல்களைத் தடுக்கும்' என்பது ஆங்கிலப் பழமொழி. 'இப்படித்தான்! இதுதான்!' என்று நான் உடனடியாகத் தீர்மானம் எடுக்கத் தயங்குகிறேனா?

இ. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான என்னுடைய மனப்போராட்டத்தில் நான் எப்படிச் செயலாற்றுகிறேன்? தீமையை நியாயப்படுத்துகிறேனா? அல்லது இப்போராட்டத்திலிருந்து விடுபட இறையருள் வேண்டுகிறேனா?


Wednesday, October 23, 2019

பிளவு உண்டாக்கவே

இன்றைய (24 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:49-53)

பிளவு உண்டாக்கவே

இரண்டு வாரங்களுக்கு முன் எங்கள் குருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான கருத்தமர்வு நடைபெற்றது. கருத்தமர்விற்குத் தலைப்பு, 'அருள்பணியாளர்களின் சமூக அக்கறை அல்லது பொறுப்புணர்வு.' செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் பேரருள்திரு. பாக்கிய ரெஜிஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். தன்னுடைய அருள்பணி அருள்பொழிவு அன்று தன்னுடைய தாய் தன்னிடம் சொன்ன வார்த்தைகளோடு - 'கல்வி கற்ற உலகும் பசி அற்ற உலகும் வேண்டும்' - உரையைத் தொடங்கினார். உரையில், டாக்டர். அம்பேத்கர் அவர்களின் மகாவாக்கியம் என்று சொல்லப்படுகின்ற, 'கற்பி-கலகம் செய்-ஒன்றுசேர்' என்பதை, அருள்பணியாளரின், 'இறைவாக்குப்பணி-ஆட்சிப்பணி-அர்ச்சிக்கும் பணி' என்னும் முப்பணிகளோடு ஒப்பிட்டார். மிக அழகான, மிகவும் புதுமையான, மிகவும் ஆழமான ஒப்பீடாக இது அமைந்திருந்தது.

'கலகம் செய்தல்' என்பதே அருள்பணியாளரின் 'ஆட்சிப்பணி' அல்லது 'ஆளும் பணி'.

'கலகம் செய்தல்' என்றால் என்ன?

யாருக்கு எதிராக 'கலகம் செய்தல்' வேண்டும்?

'கலகம் செய்தல்' என்பது 'மனக்கிளர்ச்சி அடைதல்.' அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி, ஒருவர் படிக்கின்ற படிப்பு, 'நான் ஏன் இப்படி இருக்கிறேன்?' 'என்னுடைய குடும்பம் ஏன் இப்படி இருக்கிறது?' 'என்னுடைய சமூகம் ஏன் இப்படி இருக்கிறது?' என்ற கேள்விகளை ஒருவருடைய உள்ளத்தில் எழுப்ப வேண்டும். கேள்வி கேட்கும் உள்ளமே கிளர்ச்சி அடைகிறது. உள்ளுக்குள் தோன்றும் இந்தக் கிளர்ச்சியே ஒருவரைத் தன்னுடைய அறியாமை என்னும்           தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. தனிமனிதர் ஒருவருக்குள் நிகழும் இக்கலகம் பின் மாற்றத்திற்கான கலகமாக மாறும். இப்படி 'கலகம் செய்யும்' ஒருவர், இதே போல 'கலக்கம் அடைந்த' இன்னொருவரோடு இணைந்து 'ஒன்று சேர்வார்.' அங்கே மாற்றம் உருவாகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தான் 'கலகம் செய்ய' வந்ததாகவும், இந்தக் 'கலகம் செய்தல்' ஒருவர் மற்றவரைப் பிரித்துவிடும் என்றும், இறுதியில் இறையாட்சித் தாகம் கொண்டோர் 'ஒன்று சேர்வர்' என்றும் சொல்கின்றார். 'மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்போதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்' என்கிறார். அதாவது, இயேசுவை அல்லது இறையாட்சியைத் தெரிந்துகொள்தல் என்பது 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' அல்லது 'அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்' என்ற தெரிவு அல்ல. மாறாக, அது இன்றே, இப்போதே 'பற்றி எரிய' வேண்டும். 'கலகம்' இன்றே என்னுள்ளே நடக்க வேண்டும். இவ்வாறாக, இறையாட்சிக்கான தெரிவின் உடனடித்தன்மையையும், வேகத்தையும் முன்வைக்கிறார் இயேசு. இயேசுவின் இறையாட்சிப் பணியின் சுருக்கமாக இவ்வார்த்தைகள் இருக்கின்றன. இயேசு சென்றவிடமில்லாம் தீயிட்டுக்கொண்டே சென்றார். ஆடம்பர மாளிகையில் பிறக்காமல் மாட்டுக்கொட்டிலில் பிறந்த போதே மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அரண்மனையில் இருப்பதற்குத் தீயிட்டார். ஆலயத்தில் இரண்டு செப்புக்காசுகள் போட்ட கைம்பெண்ணைப் பாராட்டியபோது தன்னுடைய சமகாலத்து மனிதர்களின் போலியான ஆன்மீகத்திற்குத் தீயிட்டார். 'சமாரியனைப் போல நீயும் செய்' என்று சொல்லி மறைநூல் அறிஞரை அனுப்பியபோது அவருடைய சமகாலத்துத் தீண்டாமைக்குத் தீயிட்டார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம், 'நானும் உன்னைத் தீர்ப்பிடேன்' என்று சொன்னபோது, அவர்களுடைய சட்டத்திலிருந்த ஓட்டைக்கும், அவர்களின் மேட்டிமைப் போக்கிற்கும் தீயிட்டார். இப்படியாக, அவர் சென்றவிடமெல்லாம் தீ பற்றி எரிந்தது. இயேசுவைத் தெரிந்துகொள்பவரும் அப்படியே இருத்தல் வேண்டும்.

மேலும், நெருப்பின் இயல்பு தொடர்ந்து முன்னே சென்றுகொண்டிருப்பது. நெருப்பு ஒருபோதும் பின்வாங்குவதில்லை. அது பின்வாங்குவதால் அது எரித்த பொருள் திரும்ப பழைய நிலைக்கு வருவதும் இல்லை. போகிற போக்கில் அது தான் தழுவும் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக்கொண்டே செல்லும். இறையாட்சிக்கான தெரிவைச் செய்கிற எவரும் மீண்டும் தன்னுடைய பழைய இயல்புக்குத் திரும்ப முடியாது. அவர் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும்.

இப்படி அவர் முன்னேறிச் செல்லும்போது, 'தெரிவு செய்தோர்' - 'தெரிவு செய்யாதோர்' என்ற பிளவு ஏற்படும். 'தெரிவு செய்தோர்' ஒன்று சேர்வர். தெரிவு செய்யாதோர் பிரிந்து நிற்பர். இந்தப் பிளவு விபத்து அல்ல. இது இப்படித்தான் நடக்கும். தாயின் கருவறையில் தாயோடு குழந்தையை இணைக்கும் தொப்புள்கொடி பிளவுண்டால்தான் குழந்தை உயிர்பெறும். நாம் இறுதியில் இம்மண்ணக வாழ்விலிருந்து பிளவுபட்டால்தான் விண்ணக வாழ்விற்குப் பிறக்க முடியும். உயிரினத்தின் செல்பிளவிலிருந்து, நமக்கு ஆற்றல்தரும் அணுப்பிளவு வரை பிளவு இன்றி உயிரும் வாழ்வும் இல்லை.

சில கேள்விகள்:

அ. இன்று இயேசு கொண்ட வந்த தீயை நாம் சௌகரியமாக அணைத்துவிட்டு, சின்னச் சின்ன மெழுகுதிரிகளை ஏற்றி, அதன் வெதுவெதுப்பை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். குளிரும் ஏற்புடையது, வெப்பமும் ஏற்புடையது. ஆனால், வெதுவெதுப்பு ஆபத்தானது. என்னுடைய வாழ்வில் நான் செய்யும் சமரசங்கள், என்னுடைய வாக்குறுதிகளை நான் தவறும் பொழுதுகள் போன்ற நேரங்களில் எல்லாம் நான் தீயைக் கொஞ்சம் கொஞ்சமாக அணைக்கிறேன். அங்கே மறுபடியும் தீயை நான் எரியச் செய்வது எப்படி?

ஆ. இன்று 'கலகம் செய்யும்' நான், இதே கிளர்ச்சியுடன் இருக்கும் நபரோடு ஒன்றுசேர எதைத் தடையாக உணர்கிறேன்? என்னை நானே இந்த இறையாட்சி இயக்கத்திலிருந்து அந்நியப்படுத்திக்கொள்கிறேனா?

இ. இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 6:19-23), கெட்ட நடத்தை மற்றும் நெறிகேட்டிலிருந்து 'பிளவு உண்டாக்கி' 'தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்களையே அடிமையாக்குங்கள்' என்கிறார் பவுல். இன்று நான் எதிலிருந்து விடுபட வேண்டும்?

Tuesday, October 22, 2019

வீட்டுப் பொறுப்பாளர்

இன்றைய (23 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:39-48)

வீட்டுப் பொறுப்பாளர்

நேற்றைய நற்செய்தியில் தன்னுடைய வருகையை 'வீட்டுத் தலைவர்' என்று உருவகம் செய்த இயேசு, இன்றைய நற்செய்தியில் 'திருடன்' என்று உருவகம் செய்கின்றார். கடவுளர்களைத் திருடன் என்று வர்ணிப்பது இந்து மரபில் ('கோகுலத்துக் கண்ணன் வெண்ணெய் திருடுவது') உள்ளது போல கிறிஸ்தவ மரபிலும் உண்டு எனலாம். ஆயத்தமாய் இருந்தால் திருடன் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கலாம். ஆனால், ஆயத்தமாய் இருந்தாலும் மானிடமகனின் வருகையைத் தடுக்க முடியாது. அவர் வரும்போது நாம் அவருடைய கொள்ளைப் பொருளாய் மாறிவிடுவோம். நம் அன்பிற்குரியவர்களே, 'பொன்னே, புதையலே' என்று நாம் கொஞ்சுவது போல, அவர் நம்மைக் கொஞ்சிக்கொண்டே அள்ளிச் சென்றுவிடுவார்.

இது நற்செய்தியின் முதல் பகுதி.

இரண்டாம் பகுதி பேதுருவின் ஒரு கேள்வியோடு தொடங்குகிறது: 'ஆண்டவரே, இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?' என்கிறார். இயேசுவும் கேள்வியாலே விடை தருகிறார்: 'தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யர்?'

இந்தக் கேள்வியின் பின்புலத்தில்தான் அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் தன்னுடைய 'எஜமானனே' என்ற பாடலை எழுதுகின்றார்.

எல்லாரையும் 'பணியாளர்' என்று அழைக்கின்ற இயேசு, திருத்தூதர்களை 'பொறுப்பாளர்கள்' என்று அழைக்கின்றார். இவர்கள் இரண்டு நிலைகளில் முதன்மை பெறுகிறார்கள்: ஒன்று, தலைவரின் விருப்பத்தை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இரண்டு, இவர்களிடம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டிருப்பதால் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்.

இங்கே இயேசு நம்முடைய பொருளாதார மற்றும் இயற்பியல் விதிகளை ஒட்டிப் பேசுகின்றார். 'அதிகமான பொருளுக்கு அதிகமான பொருள்' என்பது பொருளாதார விதி. 'அதிக உயரத்திலிருந்து விழுந்தால் அதிக ஆபத்து' என்பது இயற்பியல் விதி.

இந்தப் பொறுப்பாளர் இரண்டு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் இயேசு: 'நம்பிக்கைக்கு உரியவர்,' 'அறிவாளி.' நம்பிக்கை உரியவராய் இருத்தல் என்பது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. அறிவாளியாய் இருத்தல் என்பது எனக்குச் சமமாக அல்லது கீழ்நோக்கி இருத்தல் வேண்டும். இது மாறினால்தான் நிர்வாகப் பிரச்சினை வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தன்னுடைய தலைமை ஆசிரியரிடம் அறிவாளியாய் இருக்க நினைத்தால் அது அவருடைய வேலைக்கு ஆபத்தாய் முடியும். அதுபோல, ஆசிரியர் தனக்குக் கீழிருக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராய் நடக்க ஆரம்பித்தால் மேலிருப்பவர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடும். ஆக, 'வீட்டுப் பொறுப்பாளர்' இந்த இரண்டு பண்புகளையும் சரியான திசையில் கொண்டிருக்க வேண்டும். இரண்டுமே மதிப்பீடுகள்தாம். ஆனால், அவைகளின் திசைகளே அவற்றை பயனுள்ளவை ஆக்குகின்றன.

இந்தப் பொறுப்பாளர் மூன்று குணங்களைப் பெற்றிருத்தல் கூடாது: ஒன்று, தனக்குத்தானே சாக்குப் போக்கு சொல்லக் கூடாது, இரண்டு, தனக்குக் கீழிருக்கும் பணியாளர்களை அடித்தல் கூடாது, மற்றும் மூன்று, மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் கூடாது. ஆக, இவருடைய மனம், கரம், ஆன்மா அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும்.

மேலும், பொறுப்பாளர் நிலை என்பது இவர் தெரிந்தெடுத்த நிலை அல்ல. மாறாக, இவர்மேல் சுமத்தப்பட்ட ஒன்று. இவர் தன் தலைவரின் விருப்பத்திற்குக் கீழ் தன்னுடைய விருப்பத்தை வைத்துவிட்டார். ஆக, பொறுப்புணர்வு இன்னும் அதிகம் தேவை. இதுவே, இவரிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்ட நிலை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 6:12-18), 'எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள்' என்று சொல்கிறார் பவுல். அடிமைகள் தங்களுடைய சுதந்திரத்தை விற்றவர்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் எதையும் செய்ய முடியாது. நாம் ஒன்றுக்கு அடிமையாகிவிட்டால் அது நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். இதையே, புனித அகுஸ்தினார், 'கட்டுப்படுத்தப்படாத எந்தப் பழக்கமும் தேவையாக மாறிவிடும்' என்கிறார்.

சில கேள்விகள்:

அ. இயேசுவின் இரண்டாம் வருகையை விட்டுவிடுவோம். அன்றாடம் அவர் என்னிடம் வரும் மூன்றாம் வருகைக்கு - இறைவார்த்தை, அருளடையாளம், இறைமக்கள் வழி - நான் ஆயத்தமாய் இருக்கிறேனா?

ஆ. என் அருள்பணித்தளம், என் குடும்பம் என அனைத்திலும் நான் 'பொறுப்பாளராக' இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கைக்குரிய நிலையும், அறிவும் சரியான திசையில் இருக்கின்றனவா? என்னுடைய மனம், உடல், ஆன்மா தூய்மையாக இருக்கிறதா?

இ. என் தேவையாக மாறிவிட்ட என்னுடைய பழக்கங்கள் எவை? அல்லது இன்று நான் எதற்கெல்லாம் என்னையே அடிமையாக்கி இருக்கிறேன்? பொறுப்பாளர்கள் தங்களுடைய தலைவருக்கு மட்டுமே உரித்தானவர்கள்!


Monday, October 21, 2019

காத்திருக்கும் பணியாளர்

இன்றைய (22 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:35-38)

காத்திருக்கும் பணியாளர்

நான் உதவிப் பங்குத்தந்தையாய் இருந்த ஒரு பங்கில் ஒருநாள் மதிய உணவு வேளை. பங்குத்தந்தை வருவதற்கு கால தாமதம் ஆகிவிட்டது. நான் மேசையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினேன். சாப்பிடத் தொடங்கிய சற்று நேரத்தில் பங்குத்தந்தை வந்தார். வந்தவர், 'நான் எல்லாம் உதவிப் பங்குத்தந்தையாய் இருந்தபோது எவ்வளவு நேரமானாலும் பங்குத்தந்தை வருவதற்காகக் காத்திருப்பேன்' என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தார். உடனே நான் மனதிற்குள்ளேயே, 'நான் எல்லாம் பங்குத்தந்தையாய் இருந்தால் அப்படி யாரையும் காத்திருக்க வைக்க மாட்டேன்' என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டேன்.

இன்று யாரும் யாருக்காகவும் காத்திருக்க தயாராக இல்லை.

கணவன் சாப்பிட்டபின் அவனுடைய தட்டில் சாப்பிடலாம் என்று மனைவி காத்திருப்பதில்லை.

மனைவி வந்தவுடன் தூங்கச் செல்லலாம் என்று கணவன் காத்திருப்பதில்லை.

பெற்றோர்கள் வந்தவுடன் டிவி பார்க்கலாம் என்று குழந்தைகள் காத்திருப்பதில்லை.

குழந்தைகள் வந்தவுடன் செபம் செய்யலாம் என்று பெற்றோர்கள் காத்திருப்பதில்லை.

பணம் சம்பாதித்து செலவழிக்கலாம் என்ற மனநிலையை மாற்றி, செலவழித்துப் பின் பணம் கட்டலாம் என்ற மனநிலையில் கிரெடிட் கார்ட் நம்மைக் காத்திருக்க விடுவதில்லை.

காய்கறி வாங்கி, கழுவி, சமைத்து உண்ணக் காத்திருத்தலை ஸ்விக்கி அனுமதிப்பதில்லை.

கடிதம் தந்த காத்திருத்தலை இன்றைய வாட்ஸ்ஆப்பின் இரட்டை புளுடிக் தருவதில்லை.

'காத்திருத்தல்' இன்று 'காலவிரயம்' என்று பார்க்கப்படுகிறது.

ஆனால், சில தொழில்கள் காத்திருத்தலை மூலதனமாகக் கொண்டே இருக்கின்றன. பெரிய இல்லத்தின் வாயில் காப்போன், நான்குவழிச் சாலையில் செய்யும் வாகனங்களுக்குப் பச்சைக் கொடி காட்டி உணவுக்கு அழைப்போன், எல்கையில் துப்பாக்கி பிடித்திருப்போன் என்று நிறைய வேலைகளுக்குக் காத்திருத்தல் தேவைப்படுகின்றன.

இப்படிப்பட்ட தொழில்தான் வீட்டு வேலைக்காரன் அல்லது பணியாளன். இவருடைய தொழிலை உருவகமாக வைத்துத் தன்னுடைய இரண்டாம் வருகைக்கான தயாரிப்பை தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. பணியாளர்கள் தங்களுக்கென்று எந்த நேரமும் இல்லாதவர்கள். ஏனெனில், அவர்கள் தங்களுடைய நேரத்தை பணத்திற்காக தங்களுடைய தலைவனுக்காக விற்றவர்கள். ஆக, அவர்கள் தலைவன் சொல்வதைக் கேட்டே ஆகவேண்டும்.

இந்தப் பணியாளர் எப்படி இருக்க வேண்டும்? மூன்று பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:

அ. இடையை வரிந்து கட்டியிருக்க வேண்டும்

'இடையை வரிந்து கட்டுதல்' என்பது வேலைக்கான தயார்நிலையையும், கூர்நோக்குத் தன்மையையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில், 'டு புல் அப் ஒன்ஸ் ஸாக்ஸ்' என்பார்கள். நாம் ஓய்வெடுக்கும் போது முதலில் செய்வது இடையைத் தளர்த்துவது. அதற்கு எதிர்மாறாக, இடையைக் கூட்டிக் கட்டும்போது வேலைக்குத் தயாராகிறோம். இதையே இன்று 'பிஸினஸ் ஸூட்' என்கிறோம். இந்த ஸூட்டில் இருப்பவர் தான் தயார் என்பதைத் தான் இறுகக் கட்டியிருக்கும் இடைக்கச்சை (பெல்ட்) வழியாக மற்றவருக்குத் தெரிவிக்கிறார். மேலும், இடைக்கச்சையானது வாள் (காண். இபா 3:8), கரண்டி, சாவிக்கொத்து, வாக்கிடாக்கி, டூல் கிட் போன்ற தொழிற்கருவிகளை கைக்கு அருகில் வைத்துக்கொள்ளவும் பயன்படுகிறது. ஆக, இடையை வரிந்துகட்டியிருக்கும் ஒருவர் பணிக்குத் தயார்நிலையில் இருக்கிறார்.

ஆ. விளக்குகள் எரிந்துகொண்டிருக்க வேண்டும்

அணைந்த விளக்குகள் ஓய்வைக் குறிக்கின்றன. எரியும் விளக்குகள் வேலையைக் குறிக்கின்றன. நாம் தயாராய் இருக்கிறோம் என்பதைத் தக்கவைக்கும் நிலையே விளக்குகளை எரியவிடுவது. வீட்டில் விளக்குகள் எரியும்போது நாம் மற்றவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர்களுக்குக் காட்டுகிறோம். இன்று விளக்குகளை எரித்துக்கொண்டிருந்தால் அது 'மின் ஆடம்பரம் அல்லது அழிவு' என்று கருதப்படும். இயேசுவின் சமகாலத்தில் விளக்கை ஏற்றுவதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. ஆக, ஏற்றிய விளக்கை அவர்கள் அணையாமல் பார்த்துக்கொண்டனர்.

இ. காத்திருக்கும் இதயம் வேண்டும்

இதில்தான் எதிர்நோக்கு இருக்கின்றது. நன்றாக ஆடை அணிந்து, விளக்கை ஏற்றினால் போதாது. தலைவர் வருவார் என்ற எதிர்நோக்கு பணியாளருக்கு இருக்க வேண்டும். காத்திருக்கும் இதயம்தான் கதவு திறக்கும். கதவு திறந்தே வைக்கப்பட்டால் திருடர் வந்துவிட வாய்ப்புண்டு. கதவும் பூட்டியிருக்க வேண்டும். தட்டப்பட்டவுடன் அது தலைவர்தான் என்று அறியும் தெளிவும், உடனே திறக்கும் திறமையும் வேண்டும். மேலும், கோபம் அல்லது பயம் இருப்பவர் காத்திருப்பதில்லை. கோபமாய் இருக்கும் மனைவி கணவருக்குக் காத்திருப்பதில்லை. பயம் கொண்டிருக்கும் மாணவர்கள் ஆசிரியருக்காய் காத்திருப்பதில்லை. கோபமும் பயமும் இல்லாத ஒருவரே காத்திருக்க முடியும்.

இப்படி ஒரு பணியாளர் இருந்தால் தலைவர் அவரை வாழ்த்துவார், பாராட்டுவார், நிறையக் கூலி கொடுப்பார்.

இங்கே அவர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் தலைவர் பணியாளர்களை அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்கின்றார். இதையே இயேசு காத்திருக்கும் நமக்கும் செய்வார்.

ஆக, இந்த உவமை நாம் பணியாளர்கள்போல இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. மாறாக, தலைவராகிய இயேசுவும் நமக்குப் பணிவிடை செய்யும் பணியாளர்போல இருப்பார் என்று சொல்கிறது. இதையே பவுல் இன்றைய முதல் வாசகத்தில், 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' என்கிறார். ஆக, 'பணியாளர்' என்ற பாவத்திற்கு, 'அருள்' என்ற தலைவர் பணிவிடை செய்கிறார்.

இந்த விழிப்புநிலையையே பேறுபெற்ற நிலை என்கிறார் இயேசு.

சில கேள்விகள்:

அ. இன்று பணியாளருக்குரிய பண்புகள் - இடையை வரிந்து கட்டுதல், விளக்கை ஏற்றிவைத்தல், காத்திருக்கும் இதயம் கொண்டிருத்தல் - என்னில் எப்போதெல்லாம் குறைவுபடுகின்றன? இறைவனைத் தலைவராகக் கொண்டு நான் பணியாளர் ஆவதில் எனக்கு நிறைய சுதந்திரம் இருக்கின்றது. நான் வெறும் பொறுப்பாளர் என்ற உணர்வு என் வாழ்வை இனிதாக்குகிறது - ஏனெனில், நான் என் தலைவருக்கு உரிமையானவன்.

ஆ. இயேசுவே எனக்கு ஒரு பணியாளராக பணிவிடை செய்கிறார் என்றால், அதே பணிசெய்யும் மனநிலை எனக்கு இருக்கிறதா?

இ. 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' என்பது என் வாழ்வியல் அனுபவமாக இருக்கிறதா? என்னுடைய வலுவின்மையை இறைவன் செயலாற்றும் வல்லமையாகப் பார்க்கிறேனா?

Sunday, October 20, 2019

அறிவிலியே

இன்றைய (21 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:13-21)

அறிவிலியே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறது. அக்கூட்டத்திலிருக்கும் ஒருவர், 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்!' எனக் கேட்கிறார். யூதர்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற தோராவில் இச 21:17, எண் 27:1-11, எண் 36:7-9 ஆகிய இடங்களில் சொத்துக்கள் பிரிப்பு அல்லது பரம்பரைச் சொத்துக்கள் பகிர்ந்தளிப்பு பற்றிய விதிகள் கூறப்பட்டுள்ளன. இவ்விதிகளை இயேசுவின் சமகாலத்தில் ரபிக்கள் விளக்கிச் சொல்வார்கள். இயேசுவையும் ஒரு ரபி என்று நினைக்கின்ற கூட்டத்து மனிதர் மிகச் சரியாக அவரை, 'போதகர்' என அழைக்கின்றார். இவருடைய தந்தை இறந்திருக்க வேண்டும். இவர் வீட்டில் இரண்டாவது அல்லது அதற்கு அடுத்த மகனாக இருந்திருப்பார். ஏனெனில் மூத்த மகனுக்கே சொத்தின் பெரும்பான்மை செல்லும். ஆக, தனக்கு வீட்டில் இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்ய இயேசுவை அழைக்கிறார் இந்த இளவல்.

'என்னை உங்களுக்கு நடுவராக நியமித்தவர் யார்?' என்ற இயேசுவின் கேள்வி, மோசேயைப் பார்த்து எபிரேயன் ஒருவன் எகிப்தில் கேட்ட கேள்வி போல இருக்கிறது: 'உன்னை எங்களுக்கு நடுவனாக நியமித்தவன் எவன்?' (காண். விப 2:14). இந்த இடத்தில் தான் நடுவர் இல்லை என்றாலும், இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு ஒரு மகாவாக்கியத்தை உதிர்க்கின்றார்: 'எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!'

இயேசுவின் வார்த்தைகளில் 'பேராசை வேண்டாம்' என்ற எச்சரிக்கையும், 'உடைமைகள் வாழ்வு தருவதில்லை' என்ற உறுதியும் அடங்கியிருக்கிறது.

பேராசை என்பது ஆசையின் எக்ஸ்ட்ரா வளர்ச்சி. ஒன்றுமில்லாமல் இருக்கும் ஒரு முனிவர் பிச்சையெடுக்க மரத்தின் கீழ் அமர்கிறார். ஒரு திருவோடு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். பின், தூங்க ஒரு கல் கிடைத்தால் நலம் என்கிறார், பின் ஒரு பாய், பின் சிறிய குடிசை, பின் அருகே சென்று வர மிதிவண்டி. ஆக, ஒன்று கிடைத்தவுடன் மற்றொன்றுக்கு மனம் தாவுகிறது. ஆனால், கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், நமக்குக் கிடைக்கும் இவை எவையும் நம்முடைய வாழ்வை - அதாவது, நமக்குள் இருக்கும் ஆன்மாவைக் - கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. இவற்றால் உடல் பயனடையுமே தவிர ஆன்மாவிற்குப் பயனேதும் இல்லை. ஆன்மாவிற்குள் தேவையற்ற பயமும், கவலையும், பொறாமையும் வந்து கட்டில் போட்டு படுத்துக்கொள்கின்றன.

மேலும் இயேசு, 'அறிவற்ற செல்வன் உவமை' சொல்கிறார். இந்தச் செல்வன் எதில் அறிவற்றவன்? நிதிமேலாண்மையில் இவன் சிறந்த அறிவாளி. விவசாயத்தில், பணத்தைப் பெருக்குவதில், வேலைக்காரர்களையும், இடத்தையும் மேலாண்மை செய்வதில் இவன் பெரிய ஞானி. ஆனால், எதில் தவறிவிட்டான்? 'நெஞ்சே, நீ ஓய்வெடு, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டியவை கிடைத்துவிட்டன!' என்று சொல்கிறான். இதில் தான் தவறுகிறான்.

'பல்லாண்டுகளுக்குத் தேவையானவை இருக்கின்றன!' ஆனால், 'உனக்குப் பல்லாண்டுகள் இருக்கின்றனவா?' எனக் கேட்கின்றார் கடவுள். 'இந்த இரவே உன் உயிர் உன்னைவிட்டுப் போய்விடும். நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'

இங்கேயும் இரண்டு விடயங்கள்: ஒன்று, என் பணம் என்னுடைய உயிரை எனக்குள் கட்டிவைக்க முடியாது. ஒருவேளை மருத்துவச் சிகிச்சை செய்யப் பணம் உதவலாம். ஆனாலும், சிகிச்சையின் பலன் பணத்தில் இல்லை. இரண்டு, நாம் இங்கிருந்து செல்லும்போது எல்லாவற்றையும் விட்டுச்செல்ல வேண்டும். இதை மனிதர்களின் பெரிய சாபமாகக் கருதுகிறார் சபை உரையாளர். ஏனெனில், மடையர்களிடம் விட்டுச்செல்ல வேண்டும் என வருந்துகிறார் அவர். நம்ம பக்கத்து வீட்டுக்காரர் வீட்டைக் காலி செய்கிறார் என வைத்துக்கொள்வோம். 'இந்த மிதிவண்டியை எங்களால் தூக்கிப் போக முடியாது. நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்' என நம்மிடம் தந்துவிட்டுப் போகிறார். அந்த மிதிவண்டியால் எனக்குப் பயன் என்றால் நான் அதை மதிப்பேன். ஆனால், எனக்குப் பயனில்லை என்றால் அது எனக்குச் சுமையாக மாறிவிடும். இதே நிலைதான் நாம் சொத்துக்களை விட்டுச்செல்லும்போதும். ஒருவர் அரும்பாடுபட்டு, கண்விழித்து, உடல்நலம் மறந்து சம்பாதிக்கும் சொத்தை, ஒன்றுமே செய்யாமல் தான்தோன்றித்தனமாக சுற்றித்திரியும் மூடன் ஒருவனுக்கு விட்டுச் செல்ல வேண்டுமே என்று புலம்புகிறார் சபை உரையாளர் (காண். சஉ 4:8-20). 'மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர். வருவது போலவே இவ்வுலகைவிட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் எதையும் தம்மோடு எடுத்துச்செல்வதில்லை' (காண். சஉ 4:15).

சில கேள்விகள்:

அ. இயேசு இப்படிச் சொல்வதால் மனித உழைப்பையோ, நேர்மையையோ, செல்வம் சேகரித்தலையோ குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக, செல்வத்தால் எல்லாம் முடியும் என்ற நம்முடைய எண்ணத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றார். செல்வத்தைப் பற்றிய என் எண்ணம் என்ன?

ஆ. என்னுடைய பேராசையின் அளவுகோல் எது? என்னிடம் உள்ளவற்றின்மேல் நான் அதிகம் பற்றுக்கொண்டுள்ளேனா? என்னுடைய அடையாளத்தையும் பிறருடைய அடையாளத்தையும் பொருள்களை வைத்து தீர்மானிக்கிறேனா?

இ. 'நான், எனக்கு, என்னுடைய' என்ற நிலையில் என்னைக் கடந்து என்னால் மற்றவரையும் கடவுளையும் பார்க்க முடியாமல் நான் இருக்கிறேனா? இந்த நிலையைக் கடக்க நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையால் ஆபிரகாம் கடவுளுக்கு ஏற்புடையவரானார் எனப் பெருமை பாராட்டுகிறார் பவுல் (காண். முதல் வாசகம், உரோ 4:20-25)


Thursday, October 17, 2019

புனித லூக்கா

இன்றைய (18 அக்டோபர் 2019) திருநாள்

புனித லூக்கா

இன்று நாம் நற்செய்தியாளரும், பவுலின் உடனுழைப்பாளருமான புனித லூக்காவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்' - என்று இன்றைய முதல் வாசகத்தில் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்' என்ற இந்த வாக்கியத்தில் பவுல் அனுபவிக்கும் தனிமை, இயலாமை, ஆட்கள் பற்றாக்குறை, மற்றும் லூக்காவின் நீங்காத உடனிருப்பு என அனைத்தையும் ஒருசேர நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.


இதையே இன்று நாம் தனிப்பட்ட கேள்வியாகக் கேட்டுப் பார்க்கலாம்.

'இன்றைக்கு என்னுடன் இருப்பது யார்?'

அல்லது 'யார் மட்டுமே என்னோடு இருப்பதாக இன்று நான் உணர்கிறேன்?'

லூக்கா நற்செய்தியாளர் நீங்காத உடனிருப்பை நற்செய்திப் பணிக்கு எப்படித் தர முடிந்தது? இன்று லூக்கா நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

அ. இரக்கத்தின் நற்செய்தி

லூக்காவின் நற்செய்தியை நாம் இரக்கத்தின், மகிழ்ச்சியின் நற்செய்தி என்று சொல்கின்றோம். 'கடவுளின் முகம் இரக்கம்' என்ற புதிய புரிதலைத் தந்தவர் லூக்கா மட்டுமே. இவரின் இந்தப் புரிதல் இயேசுவைப் பற்றி மட்டுமல்ல, கடவுளைப் பற்றியே நாம் புதிய புரிதலைப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவுகிறது. இன்று கடவுளை நாம் இரக்கம் என்று பார்க்கத் தொடங்கினால், ஒருவர் மற்றவரையும் இரக்கத்தின் கண்கொண்டு நம்மால் பார்க்க முடியும்.

ஆ. இலக்கியத்திறன்

லூக்காவின் கிரேக்க எழுத்து நடையும், வாக்கியப் பயன்பாடும் மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களின் கிரேக்க எழுத்து நடை மற்றும் வாக்கியப் பயன்பாட்டைவிட நேர்த்தியாகவும், மேன்மையாகவும் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தன்னுடைய வாழ்க்கைக்கு தான் தேர்ந்துகொண்டது மருத்துவப் பணி என்றாலும், எழுத்துப்பணியிலும், இலக்கியத் திறத்திலும், சிறந்து விளங்கியதோடல்லாமல், அதை நற்செய்தி எழுதுவதற்குப் பயன்படுத்தியதால் இறவாமைக்குச் சென்றுவிடுகிறார் லூக்கா. இன்று நாம் நம்முடைய திறன்கள் மற்றும் திறமைகளை நற்செய்தி அறிவிப்புக்குப் பயன்படுத்துகிறோமா? எந்த அளவிற்கு நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள நினைக்கிறோம்?

இ. பயணமும் தொடர்பும்

திருத்தூதர் பணிகள் நூலில் பெரும்பாலும் லூக்கா பவுலோடு உடனிருக்கிறார். மேலும், அவருடைய தொடர்பு மேன்மக்களோடும் அரச அதிகாரிகளோடும் இருக்கிறது. சென்றவிடமெல்லாம் தன்னுடைய மருத்துவப் பணியாலும் பலரை இவர் தன்னிடம் ஈர்த்திருக்க வாய்ப்பு உண்டு. அயராமல் பயணம் செய்வதிலும், மிகுதியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும் இவர் சிறந்தவராக இருக்கிறார். 'நீ பலரால் பார்க்கப்படவில்லை என்றால், உன்னை எளிதாக மறந்துவிடுவார்கள்' என்பது ஆங்கிலப் பழமொழி. பல இடங்களுக்குப் பயணம் நம் பார்வையை அகலமாக்குகிறது. நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளும், அத்தொடர்பில் உள்ளவர்களுக்கு நாம் தரும் மதிப்பீடுகளும் நமக்கு பன்மடங்கு பலனைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-9) இயேசு தன்னுடைய சீடர்கள் 72 பேரை இருவர் இருவராக அனுப்புகிறார். அங்கேயும் மேற்காணும் மூன்று பாடங்களே வலியுறுத்தப்படுகின்றன. (அ) சீடர்கள் தங்களுடைய கடவுள் அனுபவத்தை நற்செய்தியாக அறிவிக்க வேண்டும், (ஆ) தங்களுடைய திறனைப் பயன்படுத்த வேண்டும், (இ) நிறையத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்'

இதே வார்த்தைகளை நம் அன்புக்குரிய யாராவது நம்மைப் பற்றிச் சொல்ல முடியுமா? அந்த அளவிற்கு நம் உடனிருப்பு இருக்கிறதா?


Wednesday, October 16, 2019

நினைவுச் சின்னங்கள்

இன்றைய (17 அக்டோபர் 2019) நற்செய்தி (காண். லூக் 11:47-54)

நினைவுச் சின்னங்கள்

திருச்சி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு ஆண்டனி டிவோட்டா அவர்கள் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருடைய இறுதி ஊர்வலத் திருப்பலி இன்று காலை திருச்சி புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. ஆயருடைய உடல் இறுதித் திருப்பலிக்குப் பின், அவருடைய விருப்பத்தின்படி, பெங்களுரு புனித யோவான் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டது.

'ஆயர் தன் உடலைத் தானம் செய்தார்' என்ற செய்தி பொதுமக்களிடம் பரவ ஆரம்பித்தபோது அது மூன்றுவகை எதிர்வினைகளை எழுப்பியது. ஒன்று, ஏற்கனவே உடல் தானம் பற்றித் தெரிந்தவர்கள், 'இது ஒன்றும் புதிதல்லவே. நிறையப் பேர் தங்களுடைய உடலை மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக்காகக் கொடையாகக் கொடுக்கிறார்கள்' என்று அமைதியாயினர். இரண்டு, உடல் கொடை பற்றித் தெரியாதவர்கள், 'இது மாபெரும் செயல். இதுவரை இப்படி யாரும் செய்ததில்லை. இவர் இருக்கும் போதும் தன்னையே கொடுத்தார். இறந்தபின்னும் தன்னையே கொடுத்தார்' என்று ஆயரைப் புகழ்ந்தார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் இன்னும் உடல் கொடை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. மூன்று, உடல் கொடை பற்றித் தெரிந்தும் தெரியாதவர்கள், 'ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்டு உடல் குப்பையில் எறியப்படும் என்றால், இறப்புக்குப் பின் வாழ்வு, இறப்புக்குப் பின் உடலோடு வாழ்வு என்ற நம்பிக்கை என்ன ஆவது?' என்று கத்தோலிக்கத் திருஅவையின் கோட்பாடுகளை ஆழமாகப் பிடித்துக்கொண்டிருப்பவர்களின் எதிர்வினை இப்படியாக இருக்கிறது. கண்கொடை செய்தால் உயிர்ப்புக்குப் பின் கண்கள் இருக்காது என்பது இன்னும் சிலரால் நம்பப்படுகிறது. மேலும், இந்த மூன்றாம் வகையினர், 'ஆயரின் இறந்த நினைவை நாம் எப்படிக் கொண்டாடுவது? எந்தக் கல்லறைக்குச் சென்று மாலை இடுவது? அவருக்கு எப்படி மரியாதை செலுத்துவது?' என்று கேட்டு, 'மறைமாவட்டம் மருத்துவ ஆய்வுக்குப் பின் ஆயருடைய உடலை வாங்கி அடக்கம் செய்ய வேண்டும் அல்லது ஆயருடைய நினைவாக சின்னம் ஒன்றை எழுப்ப வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டனர்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள்' என்று தன் சமகாலத்துப் பரிசேயர்கள், குருக்கள், மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுகின்றார் இயேசு.

அதாவது, 'நீங்களே இறைவாக்கினர்களைக் கொலை செய்கிறீர்கள். நீங்களே நினைவுச் சின்னமும் எழுப்புகிறீர்கள்' என்றும் சொல்வதோடு, நீங்கள் எழுப்பும் நினைவுச்சின்னங்களே நீங்கள் கொலையாளிகள் என்பதற்குச் சாட்சிகள் என்று மொழிகின்றார்.

இன்று நாம் நினைவுச்சின்னங்களை விட்டுச்செல்ல நினைக்கின்றோம். அல்லது நம்முடைய பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் நினைவாக நினைவுச்சின்னங்களை வைத்திருக்கின்றோம்.

நினைவுச் சின்னங்கள் வெறும் அடையாளங்களே!

எடுத்துக்காட்டாக, என்னுடைய தந்தையின் கல்லறை என்னுள் தூண்டி எழுப்பும் உணர்வை, அந்தப் பகுதியில் நின்று இன்னொருவருக்காக குழி தோண்டுபவரை ஒன்றும் பாதிக்காது. அவரைப் பொறுத்தவரையில் அது இன்னொரு கல்லறை அவ்வளவுதான். ஆக, நினைவுச்சின்னங்கள் பாதிப் பொருளைத்தான் கொண்டிருக்கின்றன. அதன் மற்ற பாதிப் பொருள் அதைக் காண்பவரின் உள்ளத்தில் இருக்கின்றது.

இறப்பை எதிர்கொள்கின்ற நாம், இறப்பை வெல்ல, அல்லது காலத்தையும் நேரத்தையும் நீட்டித்துக்கொள்ள முனைகின்றோம். 'உன் நினைவாக ஒரு சிறிய தோட்டம், அழகான புத்தகம், அல்லது நல்ல குழந்தை என இந்த மூன்றில் ஒன்றை உனக்குப் பின் விட்டுச்செல்' என்கிறது செல்டிக் பழமொழி. 'மனிதர்கள் நினைவில் நீ நிற்க உன் பெயரில் நகரைக் கட்டி எழுப்பு' என்கிறது சீராக்கின் ஞானநூல்.

அதே வேளையில், 'முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை. அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை' (சஉ 1:11) என எச்சரிக்கிறார் சபை உரையாளர்.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்வது என்ன?

நினைவுச் சின்னங்கள் எழுப்புவது பற்றி இது பேசவில்லை.

ஆனால், அடுத்தவர் நினைப்பார், நினைக்கமாட்டார், அல்லது இப்படி நினைப்பார், அப்படி நினைப்பார் என்பதைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஆன்மாவின் நிறைவிற்கு ஒருவர் வாழ்கிறார் என்றால் அதுவே சிறப்பு.

மேதகு ஆயர் அவர்களின் எளிமை, தாராள உள்ளம், பொதுநிலையினர் பங்கேற்பின்மேல் உள்ள ஆர்வம், திட்டமிடல், சொத்துக்களை உருவாக்குதல், நிதிநிலையைச் சீர்படுத்துதல், சகஅருள்பணியாளர்களோடு உறவு, மேய்ப்புப்பணி கற்பனைத்திறன் போன்ற மதிப்பீடுகள்அவரின் மதிப்பீடுகளாகப் பேசப்பட்டன.

இம்மதிப்பீடுகளே இவரின் நினைவுச் சின்னங்கள்.


Tuesday, October 15, 2019

அடையாளம் தெரியாத கல்லறைகள்

இன்றைய (16 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:42-46)

அடையாளம் தெரியாத கல்லறைகள்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் கொஞ்சம் மென்மையாக பரிசேயர்களைச் சாடத் தொடங்கிய இயேசு அவர்களை இன்று அதிகமாகவே சாடுகின்றார்.

அவர்கள் வெளிப்புறச் சடங்கைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு உள்ளார்ந்த மதிப்பீடுகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், தங்களின் இருப்பு என்னவென்று தெரிந்தும் அதிகம் இறுமாந்து இருக்கிறார்கள் என்றும், மற்றவர்கள்மேல் சுமைகளைச் சுமத்தி தாங்கள் ஓய்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்கின்றார்.

'நீங்கள் முதன்மையான இருக்கைகளையும் மற்றவர்களின் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்' என்று சொல்கின்ற இயேசு, 'நீங்கள் அடிப்படையில் மக்கள் ஏறிச்செல்லும் கல்லறைகள்' என்கிறார்.

கல்லறைகளை யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. கல்லறைகள் வெளிப்புறத்தில்; அழகாக இருந்தாலும் உள்ளே அழுகியிருப்பவை. கல்லறைகளுக்குள் செல்லும் யாரும் திரும்புவதில்லை.

இப்படியாக, யாரும் ஒரு பொருட்டாகக் கருதாமல், உள்ளுக்குள்ளே அழுகியிருக்கும், மற்றவர்களுக்கு விரக்தியைக் கொடுக்கும் பரிசேயர்கள் தங்களை முதன்மையானவர்களாகவும், அழகானவர்களாகவும், நம்பிக்கை தருபவர்களாகவும் காட்டுவதை இயேசு சாடுகின்றார்.

மொத்தத்தில், இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவது தவறு.

இதுவே இறுமாப்பு.

எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் சிப்ஸ் - லேய்ஸ் - பாக்கெட்.

உள்ளே இருக்கும் சிப்ஸ் என்னவோ குறைவுதான். ஆனால், அதில் இருக்கும் காற்று அதிகம்.

நாம் கொடுக்கும் பணம் காற்றுக்குத்தான் அன்றி சிப்ஸூக்கு அல்ல.

இன்று, இல்லாததையும் இருப்பது போலக் காட்டினால்தான் மதிப்பு என்ற போலியான மதிப்பீட்டைத் தருகிறது இவ்வுலகம்.

ஆனால், இருப்பதில் நிறைவாக இருப்பதே இனிமை என்கிறார் இயேசு.


Monday, October 14, 2019

உட்புறத்தில் உள்ளவற்றை

இன்றைய (15 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:37-41)

உட்புறத்தில் உள்ளவற்றை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பரிசேயர் ஒருவரின் வீ;ட்டிற்கு உணவருந்த அழைக்கப்படுகின்றார். உணவருந்தும் முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைகின்றார். அவரின் உள்ளுணர்வைப் புரிந்துகொள்கின்ற இயேசு உள்புறத் தூய்மையை வலியுறுத்துவதோடு, புதிதாக ஒரு கருத்தையும் சொல்கின்றார்:

'உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும்     தூய்மையாயிருக்கும்.'

இதைச் சொல்லுமுன் 'உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன' என்கிறார் இயேசு.

அப்படி என்றால், ஒருவர் தனக்கு உள்ளே இருக்கின்ற கொள்ளையையும் தீமையையும் தர்மமாகக் கொடுக்க வேண்டுமா?

இல்லை.

உங்களுடைய உள்ளத்தில் தூய்மையாக - அதாவது, பரிவு, இரக்கம், கனிவு, மனவுறுதி, மன்னிப்பு, அன்பு, தாராள உள்ளம் கொண்டிருக்க - இருக்க வேண்டிய நீங்கள் இவற்றை கொள்ளை மற்றும் தீமையால் நிரப்பியுள்ளீர்கள். அவற்றைக் களையுங்கள். களைந்துவிட்டு, பரிவு, இரக்கம், கனிவு ஆகியவற்றை தர்மமாகக் கொடுங்கள் என்கிறார்.

'கொள்ளை, தீமை'

இவை இரண்டும் நம்மை நமக்குள்ளே திரும்பியவர்களாக வாழச் செய்கின்றன.

'கொள்ளையில்' ஈடுபடும் ஒருவர், தனக்குள்ளதும் தனக்கு, பிறருக்குரியதும் தனக்கு என எண்ணிக்கொள்கிறார்.

'தீமையில்' ஈடுபடும் ஒருவர், தன் இருப்பை மட்டும் முன்னிறுத்தி மற்றவரின் இருப்பை அழிக்கின்றார்.

பிறருக்கு உரியதை தனதாக்க நினைப்பவரும், தீமையை அழிக்க நினைப்பவரும் ஒரு போதும் தர்மம் செய்ய முடியாது. அவர் தன்னுடைய பொருள் மட்டுமல்ல, நேரம், ஆற்றல், திறன் எதையும் அடுத்தவருக்குக் கொடுக்க மாட்டார்.

என் மனதில் இன்று இவ்விரண்டு உணர்வுகள் - 'கொள்ளை,' 'தீமை' - இருக்கின்றனவா?

இவற்றை அகற்றினால் நான் என்னை மற்றவர்களுக்குத் தர முடியும்.

அந்தத் தருதலே என்னைத் தூய்மையாக்கும்.


Thursday, October 10, 2019

பெயல்செபூல்

இன்றைய (11 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:15-28)

பெயல்செபூல்

இயேசுவுக்கு நாம் மிகவும் ரொமான்டிக்கான பட்டங்களை - கிறிஸ்து, இறைமகன், தாவீதின் மகன், தலைமைக்குரு, அரசர் - என்று நிறையப் பட்டங்களைக் கொடுக்கிறோம். ஆனால், அவரின் சமகாலத்து எதிரிகள் அவருக்கு வழங்கிய பெயர்களில் ஒன்று 'பெயல்செபூல்'.

'பெயல்செபூல்' என்பவர் 'பேய்களின் அரசன் அல்லது இளவரசன் அல்லது தலைவன்' என்று புதிய ஏற்பாடு சொல்கிறது (காண். மத் 12:24, லூக் 11:15). இயேசுவின் எதிரிகள் அவரை பெயல்செபூல் பிடித்திருந்தாகவும் (காண். மாற் 3:24), அவரே பெயல்செபூல் என்றும் (காண். மத் 10:25), பெயல்செபூலின் பெயரைக் கொண்டே அவர் பேய்களை ஓட்டுகிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளில் 'பெயல்செபூப்' என்று உள்ளது. கிரேக்கத்தில் 'சாத்தானாஸ்' மற்றும் 'டியாபோலோஸ்' என்றால் எதிரி, எதிராளி, குற்றம் சுமத்துபவர், அல்லது தீய ஆவி என்பது பொருள். ஆனால், இவ்வார்த்தைகளுக்கும் 'பெயல்செபூலுக்கும்' நேரடியாக தொடர்பு எதுவும் இல்லை. அக்காடிய மொழியில் 'பெல் தபாதி' என்றால் 'பேச்சின் தலைவன்' என்பது பொருள். 'பெயல்செபூப்' மற்றும் 'பெயல்செபூல்' என்னும் வார்த்தைகள் இஸ்ரயேலின் சமகாலத்துக் கடவுளர்களான 'பாகால்-செபூப்' மற்றும் 'பாகால்-செபூல்' என்பவர்களிடமிருந்து வந்திருக்கலாம். 'பாகால்-செபூல்' என்றால் 'ஈக்களின் கடவுள்' அல்லது 'சாணத்தின் கடவுள்' என்பது பொருள். பெலிஸ்தியக் கடவுளான எக்ரோனும் பெயல்செபூல் என அழைக்கப்பட்டார் (காண். 2 அர 1:2-16). இவருக்கு 'கோவிலின் கடவுள்' என்ற பெயரும் உண்டு. இப்படியாக, பிறஇனத்துக் கடவுள் சாத்தானாகக் கருதப்பட்டு, அவரே சாத்தானின் தலைவனாக வரையறுக்கப்படுகின்றார்.

இயேசு தன்மேல் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை எப்படி எடுக்கிறார்?

ஒருவேளை நம்மை யாராவது பிற தெய்வங்களின் கடவுளின் பெயரைச் சொல்லி - முருகன், சிவன், இசக்கி, காளி, பெருமாள் - வசை பாடினால் நாம் என்ன செய்வேன்?

நாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். அல்லது பெருமையாக எடுத்துக்கொள்வோம்.

இயேசு இதை இரண்டு வகைகளில் எடுத்துக்கொள்கிறார்:

ஒன்று, 'நான் அலகையின் எதிரி!' என்று உறுதியாகக் கூறுகிறார். பேய் அல்லது அலகையை வெல்ல முடியாத எதிரி என்று ஏற்றுக்கொள்கிறார் இயேசு. தீமையை வெற்றி கொள்தல் என்பதோ, தீமையை முழுமையாக அழித்துவிடலாம் என்பதும் இயலாது என்பதை இயேசு ஏற்றுக்கொள்கின்றார். ஒரு வீடு தனக்கு எதிராக பிளவுபட்டால் அது விழுந்துவிடும். அலகை அலகைக்கு எதிராக எழுந்தால் அலகை விழுந்துவிடும். பெயல்செபூல் ஒருபோதும் அலகைக்கு எதிராக எழும்ப மாட்டார். இயேசு வெளியிலிருந்து அலகையை எதிர்க்கிறார். ஆக, பெயல்செபூல் அல்ல அவர்.

இரண்டு, 'நீங்களே பேய் பிடித்தவர்கள்' என்று உருவகமாகக் கூறுகிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற பேய் ஒதுங்க இடம் கிடைக்காமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே ஏழு பேய்களுடன் வருகிறது. அதாவது, 'உங்களிடமிருந்து நான் பேயை ஓட்டினாலும் நீங்கள் இன்னும் கேடுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்' என்று அவர்களை நினைத்துப் புலம்புகிறார் இயேசு.

நிற்க.

'திரும்பி வந்த அந்த வீடு அழகுபடுத்தியிருப்பதைக் கண்டு'

- இந்த வார்த்தைகளோடு சிந்தனையை முடிப்போம்.

'நல்லவராய் இருப்பவர் வெற்றி பெறுவதில்லை' மற்றும் 'நல்லவராய் இருப்பவரை எல்லாரும் ஏமாற்றுவர்' என்னும் காணொளிகளைக் கண்டேன். அவற்றில் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் மிகவும் ஏற்புடையவையாக இருந்தன. 'ஏனெனில், நல்லவராய் இருப்பவர் தன்னையே சுருக்கிக்கொண்டு, எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், யாரோ எங்கோ ஒருவர் ஏற்படுத்திய அறநெறியைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார். அவரை மற்றவர்கள் - குறிப்பாக, தீயவர்கள் - எளிதில் தங்கள் வயமாக்கிக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வார்கள். ஏனெனில், தீமையையும் எதிர்க்கமாட்டார்கள் நல்லவர்கள்' என்று தொடர்ந்து பேசுகிறார் ஆசிரியர்.

நீங்களே சொல்லுங்கள்!

'பேய் வெளியேறியவுடன் வீட்டைக் கூட்டி அழகுபடுத்தியது' அந்த நபரின் தவறா?

ஒருவேளை வீடு அப்படியே கிடந்தால், அழுக்காய்க் கிடந்தால் இன்னும் ஏழு பேய்கள் வரவோ, இன்னும் நிலை கேடுறவோ வாய்ப்பில்லையே!

திரு. பெயல்செபூல் - நம்மிடம், நம்மோடு இருந்தாலும் பிரச்சினை, போனாலும் பிரச்சினை!


Wednesday, October 9, 2019

தொல்லை கொடுக்காதே

இன்றைய (10 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:5-13)

தொல்லை கொடுக்காதே

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இறைவேண்டல் பற்றிக் கற்பித்த இயேசு, தொடர்ந்து இறைவேண்டலில் ஒருவரிடம் இருக்க வேண்டிய விடாமுயற்சியை இன்று நமக்கு உருவகமாகக் கற்பிக்கின்றார்.

என்னுடைய மாணவர்கள் என்னுடைய கதவுகளை இரவு நேரத்தில் தட்டினால் எனக்குக் கோபம் வருவதுண்டு. நாங்கள் இளங்குருமடத்தில் படிக்கும்போது எங்களுடைய அதிபர் தந்தை அவர்களின் கதவுகளை தெரியாமலும் யாராவது தட்டிவிடக்கூடாது. தட்டிவிட்டால் அவ்வளவுதான். ஆனால், பல நேரங்களில் நம்முடைய கதவுகள் தட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

நாம் ரொம்ப மும்முரமாக ஏதாவது எழுதிக்கொண்டிருக்கும் நேரம் யாராவது காலிங் பெல் அடித்தால், ஓடி ஆடிவிட்டு கொஞ்சம் அயரலாம் என்று நினைத்துச் சற்றுச் சாய, 'அம்மா' என்று யாராவது அழைத்தால் நமக்கு நிறைய கோபம் வரும்.

அந்தக் கோபத்தை முதலில் நாம் அமைதியாக மாற்றுவோம். உள்ளே இருந்துகொண்டு இல்லாததுபோல இருக்க முயற்சிப்போம். அந்த நபர் விடவில்லை என்றால் அவருடைய தொல்லையை நீக்குவதற்காகவே வந்து திறப்போம். இப்படி தொல்லையின் பொருட்டு நம்மிடம் உதவிகள் வாங்கிச் சென்றவர் பலர் இருப்பார்கள்.

ஏன் நாம் அடுத்தவரைத் தொல்லையாக நினைக்கிறோம்? அல்லது நமக்கு ஏன் கோபம் வருகிறது?

'என்னுடைய முதன்மையை யாரெல்லாம் அல்லது எதெல்லாம் சிதைக்கிறதோ அது எனக்குத் தொல்லையாகத் தெரிகிறது. அல்லது அந்த நேரத்தில் எனக்கு கோபம் வருகிறது.' இது எல்லாருக்கும்தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் வீட்டிற்குள் இருக்கும் அந்த நபர் புதிதாய் குழந்தை பெற்றவராக இருக்கலாம். குழந்தையைத் தூங்க வைப்பதன் பிரச்சினை அவர்களுக்குத்தான் தெரியும். இப்போது யாராவது எழுப்பினால் தானும் எழுந்து தன்னுடைய குழந்தையும் எழுந்த என வேலைகள் இரண்டாகிவிடும். ஆக, அவருடைய முதன்மை சிதைக்கப்படுவதால் அவர் அதைத் தொல்லை என நினைக்கிறார். ஆனால், தொல்லை கூடக்கூட முதன்மையோடு அவர் சமரசம் செய்துகொள்கின்றார். எழுந்து கதவைத் திறந்து தேவையானதைக் கொடுக்கின்றார்.

இதைக் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தால் கடவுளுக்கு என்று எந்த முதன்மைகளும் இல்லை. நாம் எல்லாரும் ஒரே நேரத்தில் அவருடைய முதன்மைகள். ஆக, அவர் நம்மைத் தொல்லை என்று நினைப்பதில்லை. இது முதல் பாடம்.

தொடர்ந்து இயேசு ஒரு மகாவாக்கியத்தைக் கற்பிக்கின்றார்: 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'

இந்த மூன்றிலும் யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர் தன்னுடைய தேவையை கேட்டோ, தேடியோ, தட்டியோ முதலில் பதிவு செய்ய வேண்டும். பசி இருக்கிற குழந்தை அழ வேண்டும், அல்லது ஏதாவது ஒன்று செய்து தன் தாயிடம் தன் தேவையைப் பதிவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அந்தத் தேவை நிவர்த்தி செய்யப்படும். அதுவும் எந்தத் தேவையோ அந்தத் தேவை மட்டும். மீன் கேட்டால் மீன், முட்டை கேட்டால் முட்டை.

ஆனால், தந்தை என்ன செய்கிறார்? கேட்பவருக்குக் கேட்டதைத் தராமல் மேலான நற்கொடையான தூய ஆவியைத் தருகின்றார். ஆக, கடவுளின் கொடுத்தல் நாம் கேட்பதையும் மிஞ்சுகிறது.

இயேசுவின் மகாவாக்கியம் நம்முடைய முன்னெடுப்பை வலியுறுத்துகின்றது. இங்கே கடவுள் நம்மைக் கேட்க வைக்கிறார் என்பது பொருள் அல்ல. மாறாக, என்னுடைய தேவை என்ன என்பதை வரையறை செய்யும் சுதந்திரத்தை எனக்குத் தருகின்றார்.

நான் நண்பனாகச் சென்றால் அவர் என்னைப் பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார்.