Thursday, October 24, 2019

மழை வரும்

இன்றைய (25 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:54-59)

மழை வரும்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கும் என் நண்பர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  மருத்துவரைச் சந்திக்கச் சென்றிருந்தார். என் நண்பரின் எடையைப் பார்த்த மருத்துவர், 'நீங்கள் அதிக எடை கொண்டிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் குறைய வேண்டும். இல்லை என்றால் உடல் பருமன் மற்றும் அதையொத்த நோய்கள் வந்துவிடும்' என்றார். மருத்துவரின் எச்சரிக்கையைக் கேட்ட நண்பர் போர்க்கால அடிப்படையில் உடல் எடையைக் குறைத்துவிட்டார். கடந்த வாரம் தன்னுடைய கண்ணத்தில் ஏற்பட்ட கொப்புளம் ஒன்றிற்கு அதே மருத்துவரிடம் சென்றார் நண்பர். 'உன்னுடைய உடல் பருமனைப் பற்றி ஏதாவது சொன்னாரா?' என்று நான் கேட்டேன். 'ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் நான் போன முறை பார்த்ததைவிட மிகவும் குண்டாகிவிட்டார். அவருக்குத்தான் இப்போது உடல் பருமன்' என்றார் நண்பர்.

நிற்க.

தன் கண் முன்னே ஒருவர் உடல் பருமன் நோய்க்கான அறிகுறையைக் கொண்டிருப்பதைக் காண்கிற மருத்துவர், அதை அடுத்தவரில் பார்த்தாரே அன்றி, தன்னிடம் அவ்வறிகுறிகளைப் பார்க்கவோ, அல்லது அவரிடம் பாடம் கற்ற அவர் தன்னிடம் செயல்படுத்தவோ இல்லை.

இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வெளிவேடம் என்கிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: (அ) அறிகுறிகளை அறிந்துகொள்ளுதல், (ஆ) எதிரியிடம் சமரசம் செய்துகொள்தல். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றது.

முதலில், அறிகுறிகளை அறிந்துகொள்ளுதல்.

'மேற்கிலிருந்து மேகம் எழுவதைப் பார்க்கும்போது மழை வரும் என்கிறீர்கள். தெற்கிலிருந்து காற்று அடிக்கும்போது வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்.' பாலஸ்தீனம்-இஸ்ரேலுக்கு மேற்கே மத்திய தரைக்கடல் இருக்கிறது. மேற்கில் மத்திய தரைக்கடலில் உருவாகும் மேகங்கள் மேலைக்காற்றால் அடித்துவரப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் மழை பெறும். பாலஸ்தீனம்-இஸ்ரேலுக்கு தெற்கே எகிப்துப் பாலைவனம் இருக்கிறது. தெற்கிலிருந்து வீசும் காற்று வெப்பக் காற்றாக இருப்பதால் பாலஸ்தீனம்-இஸ்ரரேல் வெப்பம் பெறும். இது பொதுமக்கள் அறிவு. அறிவியல், விஞ்ஞான அறிவு தேவையில்லை. கண்ணுக்கு எதிரே தெரியும் நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் இவர்கள், கண்ணுக்கு எதிரே நிற்கும் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இவர்களை 'வெளிவேடக்காரர்' என்றழைக்கின்றார் இயேசு. 'வெளிவேடம்' என்பது 'ஒன்றை அறிந்திருந்தும் அதை அறியாததுபோல செயல்படுவது.' இது அறியாமையில் நிகழ்வது அல்ல. வெளிவேடத்தில் ஒருவர் அறிந்திருந்தும் தன் அறிவிற்கு ஏற்பச் செயல்பட மறுக்கிறார். இயேசுவைப் பற்றிய உண்மை அவர்களுடைய கண்களுக்கு நேரே இருந்தது. 'கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?' என்பார்கள். ஆனால், தங்கள் முன்னால் நின்ற கைப்புண்ணைக் காண இவர்கள் நிறையக் கண்ணாடிகளைத் தேடினர். தாங்கள் தேடிய அறிகுறிகள் கிடைத்தும், அவரே மெசியா என்று அறிந்தும், அந்த அறிவின்படி செயல்பட மறுத்தனர்.

இதையே முதல் பகுதியில், 'கண்ணுக்கு முன் நிற்பவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்' என்று எச்சரிக்கிறார் இயேசு.

இரண்டாவதாக, எதிரியிடம் சமரசம் செய்தல்.

'நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?' என்ற கேள்வியோடு தொடங்குகிறார் இயேசு. தொடர்ந்து எதிரியோடு வழியில் சமரசம் செய்துகொள்தல் பற்றிப் பேசுகின்றார். இதை சட்டசமரசம்சார் திட்டமாக மத்தேயு (காண். 5:25-26) பதிவு செய்கிறார். உடனடியாகச் செய்ய வேண்டியதை உடனடியாகச் செய்யவில்லை என்றால் அதன் விளைவு ரொம்ப மோசமாக இருக்கும் என்பதை உணர்த்தும் அறநெறிப் பாடம் இது. ஆனால், இங்கே, லூக்கா, இயேசுவுக்கான உருவகமாகப் பார்க்கிறார். 'எதிரி' என்பவர் 'இயேசு.' 'ஆட்சியாளர்' அல்லது 'நடுவர்' என்பவர் 'தந்தையாகிய கடவுள்.' 'வழக்கு' என்பது 'இயேசுவைப் பற்றிய இடறல்.' 'நீதிமன்ற அலுவலர்' என்பவர் 'ஆவியாராகிய கடவுள்.' 'சிறை' என்பது 'இறைவனைக் காண முடியாத இடம் அல்லது நிலை.' 'கடைசிக் காசு' என்பது 'மனமாற்றம்.' ஆக, இப்போதே ஏற்றுக்கொண்டு வழக்கைத் தீர்த்துக்கொண்டால் பின்னால் துன்பப்படத் தேவையில்iலேயே என்கிறார் இயேசு.

இப்பகுதியில், இவர்களுடைய பிரச்சினை அறிந்துகொள்வது அல்ல, மாறாக, 'இவர்தான், இதுதான்' என்று தீர்மானம் செய்யாமல் இருப்பதுதான். இவர்களால் ஏன் தீர்மானிக்கவோ அல்லது இயேசுவைத் தெரிவு செய்யவோ முடியவில்லை. அவர்கள் இயேசுவைக் குறித்து இடறல்பட்டனர். 'இவரா! இவர் எப்படி?' என்றனர். அல்லது அவர் மேல் கோபம் கொண்டனர். அல்லது அவர்மேல் பொறாமை கொண்டனர். இக்காரணங்களால் அவர்களால் நல்லது என்று தெரிந்தும் நல்லவரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 7:18-25), பவுல், 'நான் நன்மை செய்ய விரும்பினாலும் என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது' என்று சொல்வதோடு, 'அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?' என்று புலம்பி இறைவேண்டல் செய்கின்றார்.

உடல்சார் அறிதல்களையும் கடக்கும் ஒருவரே இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், அவரைத் தெரிவு செய்யவும் முடியும்.

சில கேள்விகள்:

அ. 'புகைப்படிப்பது தவறு,' 'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது தவறு' என்று நாம் அறிந்தும், அந்த அறிவிற்கேற்ப செயல்பட மறுக்கும் தருணங்களிலும் நாம் வெளிவேடக்காரர்கள் என்பதை நான் அறிகிறேனா? என்னுடைய அறிதலுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை நான் எப்படி குறைக்கிறேன்?

ஆ. 'சரியான நேரத்தில் இடப்பட்ட ஒரு தையல் ஒன்பது தையல்களைத் தடுக்கும்' என்பது ஆங்கிலப் பழமொழி. 'இப்படித்தான்! இதுதான்!' என்று நான் உடனடியாகத் தீர்மானம் எடுக்கத் தயங்குகிறேனா?

இ. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான என்னுடைய மனப்போராட்டத்தில் நான் எப்படிச் செயலாற்றுகிறேன்? தீமையை நியாயப்படுத்துகிறேனா? அல்லது இப்போராட்டத்திலிருந்து விடுபட இறையருள் வேண்டுகிறேனா?


1 comment:

  1. தங்கள் முன்னால் நின்ற கைப்புண்ணைக் காண இவர்கள் நிறையக் கண்ணாடிகளைத் தேடினர்; மற்றும் தாங்கள் தேடிய அறிகுறிகள் கிடைத்தும், அவரே மெசியா என்று அறிந்தும், அந்த அறிவின்படி செயல்பட மறுத்தனர் என்பதற்கும், பொறாமையின் காரணமாக நல்லது என்று தெரிந்தும்,நல்லவரைத் தெரிந்து கொள்ள அந்த மக்களால் முடியவில்லை என்பதற்கும் ஒரே காரணம் உடல்சார் அறிதல்களை அம்மக்கள் கடக்கவில்லை என்பதுதான் என்று நமக்கு உணர்த்துகின்றன இன்றைய வாசகங்கள்.தந்தை தரும் இந்தத் தகவல்களின் பின்னனியில் நான் தற்போது என்ன செய்கிறேன் என்பதை விட என்ன செய்யப்போகிறேன் என்பதே சரியான பதிலாக இருக்குமென்பதால், நான் அறிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில், என் புரிதலை விசாலமாக்கவும், ஒரு பிரச்சனை என்று வருகையில் அந்த நேரத்துக்கேற்ற தீர்மானத்தை காலவிரயம் செய்யாமல் எடுக்கவும், இதுவா இல்லை அதுவா? எது சரி எனும் குழப்பம் வருகையில் தேர்ந்து,தெளிந்து ஒரு முடிவை எடுக்க இறையருளை நாடவும் அழைக்கப்படுகிறேன். இவற்றை இங்கே எழுத் தில் அச்சாக்குவதை விட இத்தீர்மானங்களை எனதாக்கிக் கொள்வது எத்துணை கடினம் என்பதும் எனக்குத்தெரியும். Though flesh is weak, my spirit is strong. என்னுள, உறையும் இறைவனின துணை கொண்டு இத்தீர்மானங்களை நிறைவேற்ற என்னால் முடியுமென நம்புகிறேன்.எரிவதா, வேண்டாமா எனும் நிலையிலிருக்கும் ஒரு திரியைத் தூண்டிவிடும் வேலையை வெகு நேர்த்தியாக செய்யும் தந்தையை இறைவன்நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete