Thursday, October 10, 2019

பெயல்செபூல்

இன்றைய (11 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:15-28)

பெயல்செபூல்

இயேசுவுக்கு நாம் மிகவும் ரொமான்டிக்கான பட்டங்களை - கிறிஸ்து, இறைமகன், தாவீதின் மகன், தலைமைக்குரு, அரசர் - என்று நிறையப் பட்டங்களைக் கொடுக்கிறோம். ஆனால், அவரின் சமகாலத்து எதிரிகள் அவருக்கு வழங்கிய பெயர்களில் ஒன்று 'பெயல்செபூல்'.

'பெயல்செபூல்' என்பவர் 'பேய்களின் அரசன் அல்லது இளவரசன் அல்லது தலைவன்' என்று புதிய ஏற்பாடு சொல்கிறது (காண். மத் 12:24, லூக் 11:15). இயேசுவின் எதிரிகள் அவரை பெயல்செபூல் பிடித்திருந்தாகவும் (காண். மாற் 3:24), அவரே பெயல்செபூல் என்றும் (காண். மத் 10:25), பெயல்செபூலின் பெயரைக் கொண்டே அவர் பேய்களை ஓட்டுகிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளில் 'பெயல்செபூப்' என்று உள்ளது. கிரேக்கத்தில் 'சாத்தானாஸ்' மற்றும் 'டியாபோலோஸ்' என்றால் எதிரி, எதிராளி, குற்றம் சுமத்துபவர், அல்லது தீய ஆவி என்பது பொருள். ஆனால், இவ்வார்த்தைகளுக்கும் 'பெயல்செபூலுக்கும்' நேரடியாக தொடர்பு எதுவும் இல்லை. அக்காடிய மொழியில் 'பெல் தபாதி' என்றால் 'பேச்சின் தலைவன்' என்பது பொருள். 'பெயல்செபூப்' மற்றும் 'பெயல்செபூல்' என்னும் வார்த்தைகள் இஸ்ரயேலின் சமகாலத்துக் கடவுளர்களான 'பாகால்-செபூப்' மற்றும் 'பாகால்-செபூல்' என்பவர்களிடமிருந்து வந்திருக்கலாம். 'பாகால்-செபூல்' என்றால் 'ஈக்களின் கடவுள்' அல்லது 'சாணத்தின் கடவுள்' என்பது பொருள். பெலிஸ்தியக் கடவுளான எக்ரோனும் பெயல்செபூல் என அழைக்கப்பட்டார் (காண். 2 அர 1:2-16). இவருக்கு 'கோவிலின் கடவுள்' என்ற பெயரும் உண்டு. இப்படியாக, பிறஇனத்துக் கடவுள் சாத்தானாகக் கருதப்பட்டு, அவரே சாத்தானின் தலைவனாக வரையறுக்கப்படுகின்றார்.

இயேசு தன்மேல் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை எப்படி எடுக்கிறார்?

ஒருவேளை நம்மை யாராவது பிற தெய்வங்களின் கடவுளின் பெயரைச் சொல்லி - முருகன், சிவன், இசக்கி, காளி, பெருமாள் - வசை பாடினால் நாம் என்ன செய்வேன்?

நாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். அல்லது பெருமையாக எடுத்துக்கொள்வோம்.

இயேசு இதை இரண்டு வகைகளில் எடுத்துக்கொள்கிறார்:

ஒன்று, 'நான் அலகையின் எதிரி!' என்று உறுதியாகக் கூறுகிறார். பேய் அல்லது அலகையை வெல்ல முடியாத எதிரி என்று ஏற்றுக்கொள்கிறார் இயேசு. தீமையை வெற்றி கொள்தல் என்பதோ, தீமையை முழுமையாக அழித்துவிடலாம் என்பதும் இயலாது என்பதை இயேசு ஏற்றுக்கொள்கின்றார். ஒரு வீடு தனக்கு எதிராக பிளவுபட்டால் அது விழுந்துவிடும். அலகை அலகைக்கு எதிராக எழுந்தால் அலகை விழுந்துவிடும். பெயல்செபூல் ஒருபோதும் அலகைக்கு எதிராக எழும்ப மாட்டார். இயேசு வெளியிலிருந்து அலகையை எதிர்க்கிறார். ஆக, பெயல்செபூல் அல்ல அவர்.

இரண்டு, 'நீங்களே பேய் பிடித்தவர்கள்' என்று உருவகமாகக் கூறுகிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற பேய் ஒதுங்க இடம் கிடைக்காமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே ஏழு பேய்களுடன் வருகிறது. அதாவது, 'உங்களிடமிருந்து நான் பேயை ஓட்டினாலும் நீங்கள் இன்னும் கேடுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்' என்று அவர்களை நினைத்துப் புலம்புகிறார் இயேசு.

நிற்க.

'திரும்பி வந்த அந்த வீடு அழகுபடுத்தியிருப்பதைக் கண்டு'

- இந்த வார்த்தைகளோடு சிந்தனையை முடிப்போம்.

'நல்லவராய் இருப்பவர் வெற்றி பெறுவதில்லை' மற்றும் 'நல்லவராய் இருப்பவரை எல்லாரும் ஏமாற்றுவர்' என்னும் காணொளிகளைக் கண்டேன். அவற்றில் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் மிகவும் ஏற்புடையவையாக இருந்தன. 'ஏனெனில், நல்லவராய் இருப்பவர் தன்னையே சுருக்கிக்கொண்டு, எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், யாரோ எங்கோ ஒருவர் ஏற்படுத்திய அறநெறியைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார். அவரை மற்றவர்கள் - குறிப்பாக, தீயவர்கள் - எளிதில் தங்கள் வயமாக்கிக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வார்கள். ஏனெனில், தீமையையும் எதிர்க்கமாட்டார்கள் நல்லவர்கள்' என்று தொடர்ந்து பேசுகிறார் ஆசிரியர்.

நீங்களே சொல்லுங்கள்!

'பேய் வெளியேறியவுடன் வீட்டைக் கூட்டி அழகுபடுத்தியது' அந்த நபரின் தவறா?

ஒருவேளை வீடு அப்படியே கிடந்தால், அழுக்காய்க் கிடந்தால் இன்னும் ஏழு பேய்கள் வரவோ, இன்னும் நிலை கேடுறவோ வாய்ப்பில்லையே!

திரு. பெயல்செபூல் - நம்மிடம், நம்மோடு இருந்தாலும் பிரச்சினை, போனாலும் பிரச்சினை!


2 comments:

  1. “ பெயல்செபூல்” ..... தன் மொழிப்புலமை அனைத்தையும் ஒன்று திரட்டி இவ்வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல தந்தை முயன்றிடினும் நமக்கு வேண்டியதெல்லாம் ‘இயேசு பிற இனத்துக் கடவுள் சாத்தானாக கருதப்பட்டு,அவரே சாத்தானின் தலைவனாக வரையறுக்கப்படுகிறார் என்பதே!’தான் வெளியேயிருந்து பெயல்செபூபை எதிர்ப்பதால் தான் பெயல்செபூல் அல்ல என்றும்,தன் மக்களிடமிருந்து பேயை எத்தனை முறை விரட்டிடினும் அது திரும்பத் திரும்ப அவர்களை நோக்கியே படையெடுக்கிறது என்றும் அவர்களுடைய சாடலை எதிர்கொள்கிறார் இயேசு.இந்த வலைப்பூவின் பின்பகுதி சொல்லும் கருத்து கொஞ்சம் குழப்புவது உண்மை.” பேய் வெளியேறியவுடன் வீட்டைக்கூட்டி அழகுபடுத்தியது அந்த நபரின் தவறா? வீடு அப்படியே கிடந்தால் இன்னும் ஏழு பேய்கள் வரவோ,வீடு கேடுறவோ வாய்ப்பில்லையே!” என்கிறார் தந்தை.அப்படி எனில் பேய்கள் வந்து சென்ற சுவடுகளோடு நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டுமா? தந்தைக்கே வெளிச்சம்.ஒன்று மட்டும் ஏதோ புரிவது போல் உள்ளது.” எப்பவுமே நல்லவனாய் இருப்பவனை விட, புதிதாக நல்லவனாகும் முயற்சியில் இருப்பவனுக்கு சங்கடங்களும்,சோதனைகளும் அதிகம்” என்பதுவே அந்தப் புரிதல். உண்மைதான்! திரு.பெயல்செபூல்- நம்மிடம்,நம்மோடு இருந்தாலும் பிரச்சனை,போனாலும் பிரச்சனை! “ இதுதான் பதில்” ....எனறு இல்லை எனினும் ஏதோ நம்மை குழப்பிவிட்டு யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete