Wednesday, October 23, 2019

பிளவு உண்டாக்கவே

இன்றைய (24 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:49-53)

பிளவு உண்டாக்கவே

இரண்டு வாரங்களுக்கு முன் எங்கள் குருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான கருத்தமர்வு நடைபெற்றது. கருத்தமர்விற்குத் தலைப்பு, 'அருள்பணியாளர்களின் சமூக அக்கறை அல்லது பொறுப்புணர்வு.' செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் பேரருள்திரு. பாக்கிய ரெஜிஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். தன்னுடைய அருள்பணி அருள்பொழிவு அன்று தன்னுடைய தாய் தன்னிடம் சொன்ன வார்த்தைகளோடு - 'கல்வி கற்ற உலகும் பசி அற்ற உலகும் வேண்டும்' - உரையைத் தொடங்கினார். உரையில், டாக்டர். அம்பேத்கர் அவர்களின் மகாவாக்கியம் என்று சொல்லப்படுகின்ற, 'கற்பி-கலகம் செய்-ஒன்றுசேர்' என்பதை, அருள்பணியாளரின், 'இறைவாக்குப்பணி-ஆட்சிப்பணி-அர்ச்சிக்கும் பணி' என்னும் முப்பணிகளோடு ஒப்பிட்டார். மிக அழகான, மிகவும் புதுமையான, மிகவும் ஆழமான ஒப்பீடாக இது அமைந்திருந்தது.

'கலகம் செய்தல்' என்பதே அருள்பணியாளரின் 'ஆட்சிப்பணி' அல்லது 'ஆளும் பணி'.

'கலகம் செய்தல்' என்றால் என்ன?

யாருக்கு எதிராக 'கலகம் செய்தல்' வேண்டும்?

'கலகம் செய்தல்' என்பது 'மனக்கிளர்ச்சி அடைதல்.' அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி, ஒருவர் படிக்கின்ற படிப்பு, 'நான் ஏன் இப்படி இருக்கிறேன்?' 'என்னுடைய குடும்பம் ஏன் இப்படி இருக்கிறது?' 'என்னுடைய சமூகம் ஏன் இப்படி இருக்கிறது?' என்ற கேள்விகளை ஒருவருடைய உள்ளத்தில் எழுப்ப வேண்டும். கேள்வி கேட்கும் உள்ளமே கிளர்ச்சி அடைகிறது. உள்ளுக்குள் தோன்றும் இந்தக் கிளர்ச்சியே ஒருவரைத் தன்னுடைய அறியாமை என்னும்           தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. தனிமனிதர் ஒருவருக்குள் நிகழும் இக்கலகம் பின் மாற்றத்திற்கான கலகமாக மாறும். இப்படி 'கலகம் செய்யும்' ஒருவர், இதே போல 'கலக்கம் அடைந்த' இன்னொருவரோடு இணைந்து 'ஒன்று சேர்வார்.' அங்கே மாற்றம் உருவாகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தான் 'கலகம் செய்ய' வந்ததாகவும், இந்தக் 'கலகம் செய்தல்' ஒருவர் மற்றவரைப் பிரித்துவிடும் என்றும், இறுதியில் இறையாட்சித் தாகம் கொண்டோர் 'ஒன்று சேர்வர்' என்றும் சொல்கின்றார். 'மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்போதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்' என்கிறார். அதாவது, இயேசுவை அல்லது இறையாட்சியைத் தெரிந்துகொள்தல் என்பது 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' அல்லது 'அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்' என்ற தெரிவு அல்ல. மாறாக, அது இன்றே, இப்போதே 'பற்றி எரிய' வேண்டும். 'கலகம்' இன்றே என்னுள்ளே நடக்க வேண்டும். இவ்வாறாக, இறையாட்சிக்கான தெரிவின் உடனடித்தன்மையையும், வேகத்தையும் முன்வைக்கிறார் இயேசு. இயேசுவின் இறையாட்சிப் பணியின் சுருக்கமாக இவ்வார்த்தைகள் இருக்கின்றன. இயேசு சென்றவிடமில்லாம் தீயிட்டுக்கொண்டே சென்றார். ஆடம்பர மாளிகையில் பிறக்காமல் மாட்டுக்கொட்டிலில் பிறந்த போதே மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அரண்மனையில் இருப்பதற்குத் தீயிட்டார். ஆலயத்தில் இரண்டு செப்புக்காசுகள் போட்ட கைம்பெண்ணைப் பாராட்டியபோது தன்னுடைய சமகாலத்து மனிதர்களின் போலியான ஆன்மீகத்திற்குத் தீயிட்டார். 'சமாரியனைப் போல நீயும் செய்' என்று சொல்லி மறைநூல் அறிஞரை அனுப்பியபோது அவருடைய சமகாலத்துத் தீண்டாமைக்குத் தீயிட்டார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம், 'நானும் உன்னைத் தீர்ப்பிடேன்' என்று சொன்னபோது, அவர்களுடைய சட்டத்திலிருந்த ஓட்டைக்கும், அவர்களின் மேட்டிமைப் போக்கிற்கும் தீயிட்டார். இப்படியாக, அவர் சென்றவிடமெல்லாம் தீ பற்றி எரிந்தது. இயேசுவைத் தெரிந்துகொள்பவரும் அப்படியே இருத்தல் வேண்டும்.

மேலும், நெருப்பின் இயல்பு தொடர்ந்து முன்னே சென்றுகொண்டிருப்பது. நெருப்பு ஒருபோதும் பின்வாங்குவதில்லை. அது பின்வாங்குவதால் அது எரித்த பொருள் திரும்ப பழைய நிலைக்கு வருவதும் இல்லை. போகிற போக்கில் அது தான் தழுவும் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக்கொண்டே செல்லும். இறையாட்சிக்கான தெரிவைச் செய்கிற எவரும் மீண்டும் தன்னுடைய பழைய இயல்புக்குத் திரும்ப முடியாது. அவர் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும்.

இப்படி அவர் முன்னேறிச் செல்லும்போது, 'தெரிவு செய்தோர்' - 'தெரிவு செய்யாதோர்' என்ற பிளவு ஏற்படும். 'தெரிவு செய்தோர்' ஒன்று சேர்வர். தெரிவு செய்யாதோர் பிரிந்து நிற்பர். இந்தப் பிளவு விபத்து அல்ல. இது இப்படித்தான் நடக்கும். தாயின் கருவறையில் தாயோடு குழந்தையை இணைக்கும் தொப்புள்கொடி பிளவுண்டால்தான் குழந்தை உயிர்பெறும். நாம் இறுதியில் இம்மண்ணக வாழ்விலிருந்து பிளவுபட்டால்தான் விண்ணக வாழ்விற்குப் பிறக்க முடியும். உயிரினத்தின் செல்பிளவிலிருந்து, நமக்கு ஆற்றல்தரும் அணுப்பிளவு வரை பிளவு இன்றி உயிரும் வாழ்வும் இல்லை.

சில கேள்விகள்:

அ. இன்று இயேசு கொண்ட வந்த தீயை நாம் சௌகரியமாக அணைத்துவிட்டு, சின்னச் சின்ன மெழுகுதிரிகளை ஏற்றி, அதன் வெதுவெதுப்பை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். குளிரும் ஏற்புடையது, வெப்பமும் ஏற்புடையது. ஆனால், வெதுவெதுப்பு ஆபத்தானது. என்னுடைய வாழ்வில் நான் செய்யும் சமரசங்கள், என்னுடைய வாக்குறுதிகளை நான் தவறும் பொழுதுகள் போன்ற நேரங்களில் எல்லாம் நான் தீயைக் கொஞ்சம் கொஞ்சமாக அணைக்கிறேன். அங்கே மறுபடியும் தீயை நான் எரியச் செய்வது எப்படி?

ஆ. இன்று 'கலகம் செய்யும்' நான், இதே கிளர்ச்சியுடன் இருக்கும் நபரோடு ஒன்றுசேர எதைத் தடையாக உணர்கிறேன்? என்னை நானே இந்த இறையாட்சி இயக்கத்திலிருந்து அந்நியப்படுத்திக்கொள்கிறேனா?

இ. இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 6:19-23), கெட்ட நடத்தை மற்றும் நெறிகேட்டிலிருந்து 'பிளவு உண்டாக்கி' 'தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்களையே அடிமையாக்குங்கள்' என்கிறார் பவுல். இன்று நான் எதிலிருந்து விடுபட வேண்டும்?

1 comment:

  1. ஒரு தனிமனிதன் தனக்குள் கேட்கும் கேள்வியே ஒரு சமூக மாற்றத்தின் அடிநாதமாக அமைகிறது என ஆரம்பித்து அம்பேத்கார்,கலகம்,நெருப்பு என பல சிந்தனைகளைக் கட்டவிழ்த்து உள்ளார் தந்தை.இறுதியாக பிளவு எனும் ஒன்று இல்லையெனில் உயிரும்,வாழ்வும் இல்லையென முடிக்கிறார். முழு வலைப்பூவையும வாசித்து முடித்தபின் என்னுள் எழுந்த எண்ணம்...” இது என் போன்ற ஒரு சாமான்யனுக்கான வலைப்பூ இல்லை” என்பதே! தந்தையின் இறுதிக்கேள்விகளிலிருந்து நான் என் வாழ்க்கைக்கென்று எடுத்துக் கொண்டது இதுவே....”என்னுடைய வாழ்வில் நான் செய்யும் சமரசங்கள்,என்னுடைய வாக்குறுதிகளை நான் தவறும் பொழுதுகளில் எல்லாம் இயேசு ஏற்றிய தீயை நான் சிறிது சிறிதாக அணைக்கிறேன் எனும் உணர்வு இருந்தாலே போதும்....அந்தத் தீ கிஞ்சித்தும அணையாமல் என்னால் பார்த்துக்கொள்ள இயலும்” “ பிளவு உண்டாக்கவே” ........ “சேரும் இடம் சரியெனில் செல்லும் முறையும் சரியே!”...... ஒரு சமூக மாற்றம் ஏற்படுகிறதெனில் அது பிளவில் ஆரம்பித்தாலும் சரியே எனப்புரிய வைக்கும் ஒரு வலைப்பூவிற்காக தந்தையைப் பாராட்டுகிறேன். இறைவன் உங்களை...நீங்கள் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete