Tuesday, December 10, 2019

சோர்ந்திருப்பவர்கள்

இன்றைய (11 டிசம்பர் 2019) நற்செய்தி (மத் 11:28-30)

சோர்ந்திருப்பவர்கள்

'சோர்வு' - இது நாம் எல்லாரும் அனுபவத்திருக்கும் ஓர் உணர்வு.

நீண்ட நேரம் வேலை செய்தால், அல்லது உடல்நலக்குறைவால் அல்லது நிறைய மருந்துகள் எடுக்கும்போது அல்லது போதிய உணவு இல்லாதபோது உடல் சோர்வு அடைகிறது. நீண்ட நேரம் வாசித்தால், யோசித்தால், எழுதினால் மூளை சோர்வடைகிறது. எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தால், உறவுகளில் சிக்கல்கள் எழுந்தால் மனம் சோர்வடைகிறது. நீண்ட நாள்கள் செபிக்காமல் இருந்தால், விவிலியம் வாசிக்காமல் இருந்தால், நற்கருணையைச் சந்திக்காமல் இருந்தால் ஆன்மா சோர்வடைகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் தன்னையே உடல் சோர்வு அகற்றுபவராக முன்வைக்க, நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னையே உள்ளத்தின் (அல்லது மனத்தின் அல்லது ஆன்மாவின்) சோர்வு அகற்றுபவராக முன்வைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டாம் எசாயா எனப்படும் நூலின் ஆசிரியர், 'இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர். வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர் சோர்வடையார்' என்று ஆண்டவர்மேல் நம்பிக்கை கொள்பவர் பெறுகின்ற ஆறுதலை எடுத்துரைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு, 'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்னிடம் வாருங்கள்' என்றழைத்து, 'உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்' என்கிறார்.

உடல் சோர்வை அகற்ற வழி ஆண்டவர்மேல் கொள்ளும் நம்பிக்கை.

உள்ளத்துச் சோர்வை அகற்றும் வழி இயேசுவிடம் வருவது, அவருடைய நுகத்தை ஏற்றுக்கொள்வது, அவரிடம் கற்றுக்கொள்வது.

தனக்காக மட்டுமே உழைக்கும் உடல் சோர்ந்து போகும். சின்னக் குழந்தை ஒன்றை வளர்க்கும் தாயை எடுத்துக்கொள்வோம். அந்தத் தாய் ஒவ்வொரு வேலையையும் இரண்டு முறை செய்ய வேண்டும். தான் சாப்பிட வேண்டும், தன் குழந்தைக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும், தான் தூங்க வேண்டும், குழந்தையையும் தூங்க வைக்க வேண்டும். ஆனால், அவள் சோர்வடைவதில்லை. தன்னுடைய மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் நீண்ட தூரம் சைக்கிள் மிதித்து வேலைக்குச் சென்றுவிட்டு, நடுஇரவில் வந்து, அரைகுறையாய்த் தூங்கி மீண்டும் அடுத்த நாள் ஓடும் தந்தையும் சோர்வடைவதில்லை. ஏனெனில், இவர்கள் இருவருமே தங்களுக்காக மட்டும் உழைப்பதில்லை.

இன்றைய உலகம் என்னை எனக்காக மட்டும் உழைக்குமாறும், என்னுடைய இன்பத்தை மட்டும் காணமாறும் என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. என்னுடைய நலனுக்காக யாருடைய நலனையும் நான் இழக்க வைக்கலாம் என்று எனக்கு அறிவுறுத்துகிறது.

தன்னையே பார்க்கும் உள்ளம் சோர்ந்து போகும். என்னுடைய நலன், அக்கறை பற்றியே நாடினால் என் உள்ளமும் சோர்ந்துவிடும்.

ஆனால், நான் மற்றவர்களுக்காக உழைக்கிறேன், மற்றவர்களுக்காக எண்ணுகிறேன் என மனிதர்களை மையமாக வைத்தால் இன்னொரு கட்டத்தில் சோர்வு வந்துவிடும்.

ஆக, என்னையும், என் சக மனிதர்களையும் தாண்டி என் ஆண்டவரில் நான் நம்பிக்கைகொள்ளும்போது என் ஆற்றல் பெருகுகிறது.

இன்று நாம் எண்ணிப்பார்ப்போம்?

நான் எப்போதெல்லாம் உடல், மூளை, மனம், ஆன்ம சோர்வடைகிறேன்?

இச்சோர்விலிருந்து வெளிவர நான் தேடும் மனிதர்கள் யார்?

அம்மனிதர்கள் தர முடியாத ஆற்றலை என் இறைவன் தருகிறார் என்ற நம்பிக்கையும், அனுபவமும் எனக்கு உண்டா?

அவர் அளிக்கும் ஓய்வையும், இளைப்பாறுதலையும் நான் அடையத் தடையாக இருப்பவை எவை?

என் கால்களில் நானே சங்கிலிகளைக் கட்டிக்கொண்டு, என் முதுகில் மணல் மூடையை ஏற்றிக்கொண்டு, 'எனக்கு சோர்வாக இருக்கிறது' என ஏன் புலம்புகின்றேன்? நான் அவிழ்க்க வேண்டிய சங்கிலி எது? நான் இறக்கிவைக்க வேண்டிய மணல்மூடை எது?


3 comments:

  1. அருட்பணி யேசு....
    அடுக்கடுக்காய்...தொடுத்திருக்கும்,
    வினாக்களுக்கு.... விடைகாண...முற்படுவோம்...
    இறையோடு இணைவோம்...
    நன்றி 🙏

    ReplyDelete
  2. ”சோர்வு”..... உடல் சோர்வு, மூளைச்சோர்வு, மனச்சோர்வு,ஆன்மா சோர்வு என அடுக்கிக்கொண்டே போகிறார் தந்தை. தனக்காக மட்டுமே உழைக்கும் உடல் விரைவில் சோர்ந்து போகும் என்றும், பிறர் நலன் கருதி உழைக்கும் குடும்பத்தின் தாயும் தந்தையும் சோர்வைக்காண்பதில்லை என்றும் முன்வைக்கிறார் தந்தை. அப்படி எனில் பிறர் நலம் பேணி வாழ்பவர்கள் என்றுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே! அது சாத்தியமா என்ன? தெரியவில்லை.என்னதான் நாம் சோர்வு கண்ட நேரங்களில் ‘மனிதர் எனக்குத் தரமுடியாத ஆற்றலை இறைவன் மட்டுமே தரமுடியும்’ என என் மனம் கூறினாலும் அப்போதைய நிம்மதிக்கு நாம் தேடுவது நம் உறவுகளைத்தானே! ஆனால் அந்த உறவுகளே நமக்கு சோர்வாகிப்போனால்? நாட்டில் நடக்கும் பல தற்கொலைகளுக்கும் காரணமே இம்மாதிரி நேரங்களில் பிறக்கும் மனச்சோர்வு தான்.எல்லாம் கையைவிட்டுப்போன பின்பே பலருக்கு படைத்தவனின் நினைவு வருகிறது.தந்தையின் வரிகள் சோர்ந்து போன மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன. என் சோர்வுக்குக் காரணம் என் அகமா இல்லை புறமா? நான் அவிழ்க்க வேண்டிய சங்கிலியும்,இறக்கிவைக்க வேண்டிய மூட்டையும் எவை? விடை தெரிந்தால் மனது “எல்லாமே நீ” என்று சுமைகளை அகற்றும் இறைவனை சரணாகதியடைவது நிச்சயம். நமது சோர்வை ஒருபுறம் ஒதுக்கி வைத்து நம் எதிரில் உள்ளவரின் சோர்வு போக்க முற்பட்டால் நாமும் கூட தெய்வப்பிறவிகளே! இன்றைய காலத்தின் கட்டாயம் கருதி தந்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete