Friday, November 1, 2019

அனைத்து ஆன்மாக்கள் நாள்

இன்றைய (2 நவம்பர் 2019) திருநாள்

அனைத்து ஆன்மாக்கள் நாள்

இன்றைய நாளில் இறந்த நம் முன்னோர்களை நினைவுகூறுகின்றோம். நேற்று நாம் நினைவுகூர்ந்தவர்களும் இறந்த நம் முன்னோர்களே. அவர்கள் மகிமை பெற்றவர்கள். கடவுளை நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். இன்று நாம் நினைவுகூர்பவர்கள் பாதி வழி சென்று மீதி வழி செல்ல முடியாதவர்கள். 'துன்புறும் திருச்சபையில்' உள்ள இந்த உறுப்பினர்களுக்காக நாம் இன்று செபிக்கின்றோம்.

அ. துன்புறும் நிலை அல்லது உத்தரிக்கிற நிலை என்றால் என்ன?

நம்முடைய கத்தோலிக்க நம்பிக்கையில் மோட்சமும் நரகமும் உண்டு. 'மோட்சம் போகும் அளவிற்கு புண்ணியம் செய்யாதவர்கள்' அல்லது 'நரகத்தில் வீழ்த்தப்படும் அளவிற்கு மோசமாக இல்லாதவர்கள்' என்னும் இடைப்பட்ட மக்கள், சிறிதுகாலம் துன்புற்று, தங்கள் தவற்றுக்குப் பரிகாரம் செய்து மோட்சத்திற்குள் நுழைபவர்கள் இவர்கள்.

நான் ஓர் ஆலயத்திற்குச் சென்றபோது, 'உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!' என்று மக்கள் செபிக்கக் கேட்டேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த ஆன்மாக்களே நம் செபத்தின் தேவையில் இருப்பவர்கள். இவர்கள் எப்படி நமக்காக வேண்ட முடியும்? இவர்கள் கடவுளின் முகத்தைக் கண்டுவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து காண முடியாமல் இருக்கிறார்கள். எனவே அவர்கள் நமக்காகக் செபிக்கும் தகுதி பெற்றவர்களே.

ஆ. இறந்தவர்களுக்காக செபிப்பது சரியா?

காலத்தையும் இடத்தையும் கடந்த நம் முன்னோர்களுக்கு, காலத்திற்கு இடத்திற்கும் உட்பட்டு நாம் செய்யும் செபமும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலியும் பலன் தருமா?

இயேசு எல்லாப் பாவங்களுக்காகவும் இறந்து மீட்பைக் கொண்டுவந்துவிட்டார் என்றால், நான் செய்யும் செபம் அவருடைய இறப்பைவிடப் பெரியதா? அவர் செய்த மீட்புச் செயல் இறந்தவர்களுக்கு கிடையாதா?

துன்பத்தை உணர உடல் அவசியம். உடல் இல்லாத ஆன்மாக்கள் எப்படி துன்புற முடியும்?

வெறுங்கையராய் வீடு திரும்பிய இளைய மகனை தந்தை ஏற்றுக்கொள்வது போல, புண்ணியம் ஏதும் இல்லாத வெறுங்கையராய் நாம் செல்லும்போது கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரா?

கிறிஸ்தவ மதம் சாராதவர்களுக்கு என்ன நடக்கும்?

போன்ற கேள்விகள் இந்த நாளுக்குச் சவாலாக இருக்கின்றன.

2 மக்கபேயர் 12ல் இறந்தோர்க்காக செபிக்க யூதா பணம் திரட்டுவதைப் பார்க்கிறோம். மேலும், 1 கொரி 15ல் வாழ்வோர் ஒருவர் இறந்த ஒருவரின் சார்பாக திருமுழுக்கு பெறும் நிகழ்வைப் பார்க்கிறோம்.

இ. இன்றைய நாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

1. இணைந்திருத்தல்
இறந்த நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறப்புக்கள், நண்பர்கள் ஆகியோரோடு நாம் இணைந்திருக்கின்றோம். நமக்கும் அவர்களுக்கும் உள்ள இணைப்பைக் கொண்டாடுகிறோம். நாம் எல்லாரும் பிறக்கிறோமே தவிர, இறப்பதில்லை. ஏனெனில், எங்கோ, எப்படியோ வாழ்கிறோம். ஆகையால்தான், இறந்தவர்களின் கல்லறைகளை ஊருக்கு வெளியே வைத்து அவர்களைக் காவல் தெய்வங்களாகப் பாவிக்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே இருக்கின்றது. வாழ்வை வாழ்ந்து முடித்த அவர்கள் வாழும் நமக்கு வழிகாட்டிகள். ஆக, இன்றைய நாளில் நாம் ஏற்றும் மெழுகுதிரி அவர்களின் இருப்பை நாம் கண்டுகொள்ளும் ஒளிக்கீற்றாக இருக்கின்றது.

2. நம்முடைய நிலையாமையைக் கொண்டாட வேண்டும்

'இவ்வுலகில் எதுவும் நிரந்தரமல்ல' என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது இந்நாள். 'நாம எப்பவும் இருப்போம்' என்று நினைத்து வாழ்ந்தவர்கள் இன்று கல்லறைகளில் இருக்கிறார்கள். இப்படி நினைத்து வாழும் நாமும் ஒருநாள் கல்லறையில் இருப்போம். இதுதான் இயற்கையின் நியதி. ஆகையால்தான் சபை உரையாளர், 'வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்தும் தப்ப முடியாது' (காண். 8:7-8) என்கிறார். 'இந்தப் போருக்கு நான் வரல' என்று சொல்லி விலகவோ, 'இவ்வளவு பணம் வைத்துக்கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள்' என்று பணயம் கட்டவோ முடியாது. ஆனால், நாம் பயப்படத் தேவையில்லை. 'இறப்புதான் வாழ்க்கையை நாம் இனிமையாக வாழ நம்மைத் தூண்டுகிறது' என்பார் ஆப்பிள் நிறுவன இணைஉருவாக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ். நாம் நிலையற்றவர்கள். எனவே, நிலையற்ற இத்தருணத்தை - ஒளியை - பயன்படுத்தி, நிலையானதைச் சம்பாதிக்க வேண்டும். நம்முடையை நிலையாமையை, வலுவின்மையைக் கொண்டாடும் மனமுதிர்ச்சி அவசியம். இந்த மனமுதிர்ச்சி பெற நாம் பற்றுக்களைக் களைதல் வேண்டும். பயம் மற்றும் குற்றவுணர்வு விடுத்தல் வேண்டும்.

3. இறப்புக்கு முன் வாழ்வு

இறப்புக்குப் பின் வாழ்வைப் பற்றிக் கவலைப்படும் நாம் இறப்புக்கு முன் இருக்கும் வாழ்வு பற்றிக் கவலையில்லை பல நேரங்களில். சில நேரங்களில் இறப்புக்கு முன் நாம் வாழ்வதே இல்லை. நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்வார்கள். முதல் வாழ்க்கை நாம் பிறக்கும் நாளிலிருந்து தொடங்குகிறது. இரண்டாவது வாழ்க்கை, 'நமக்கு ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது' என்று உணரும் நாளில் தொடங்குகிறது. பலர் இரண்டாவது வாழ்வை இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. 'எனக்கு ஒரு வாழ்க்கைதான் உண்டு' என்று உணரும்போது அதை நான் அமைதியுடன் மகிழ்வுடன் வாழ்வேன். சண்டை சச்சரவுகளில் வீணாக்க மாட்டேன். ஆண்டுகள் என்று பார்த்தால் வாழ்க்கை நீண்டது போலத் தெரியும். ஆனால், பத்தாண்டுகள் என்று பார்த்தால் மிகவும் குறைவு. வாழ்க்கை என்னும் ஓவியம் நேரம் என்ற தாளில் வரையப்படுகிறது. நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழித்தல் அவசியம். இதனால்தான், திருப்பாடல் ஆசிரியர், 'எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே. வலிமை மிகுந்தோர்க்கு எண்பது. அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்' (90:10) என்று நிலையாமையைக் கொண்டாடுவதோடு, 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்' (90:12) என்று மன்றாடுகின்றார்.

ஆண்டவரே, இறந்த நம்பிக்கையாளர்கள் உம் இரக்கத்தால் நிலையான அமைதியில் இளைப்பாறுவார்களாக! முடிவில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக! இன்றும்! என்றும்!!

1 comment:

  1. எடுத்த எடுப்பிலேயே “ பாதி வழி சென்று மீதி வழி செல்லமுடியாதவர்களெனத்’‘ ‘துன்புறும் திருச்சபையில்’ உள்ள நம் இன்னுயிர் முன்கனோர்ளைக் குறிப்பிடுகிறார் தந்தை.தந்தையின் முதல் கேள்விக்கு (அ)என்னால் ஓங்கி ‘ஆம்’ எனச்சொல்லமுடியும். சிறுவயது ஞானோபதேச வகுப்புக்களில் சொல்லிக்கொடுத்ததை நான் இன்றுவரை வழக்கமாக்க்கொண்டு அதன் பலன்களை அறுவடை செய்து கொண்டுமிருக்கிறேன்..தந்தையின் இரண்டாம் கேள்வி (ஆ)பல சவால்களை உள்ளடக்கியது என்பது அவரும் அதற்கு சரியான பதில் தராமல் விவிலியக் குறிப்புக்களோடு நிறுத்திக்கொண்டதிலிருந்து புரிகிறது.ஆயினும் இன்றைய நாளின் செய்தியாகத் தந்தை தரும் குறிப்புகள் உள்ளத்தைக் குளிர்விக்கின்றன.வாழ்வை வாழ்ந்து முடித்த நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிகள் என்பதும், நம்மால் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த இந்த இறப்பின், இனிமையான பக்கங்களை சுவைப்பதும், பயம்,குற்றவுணர்ச்சி மற்றும் பற்றுக்கள் போன்ற உணர்வுகளைக் களைந்து சாவைக் கைநீட்டி வரவேற்கும் அளவிற்கு மனமுதிர்ச்சி பெறுவதும்,திருப்பாடல் ஆசிரியருடன் இணைந்து “ ஞானமிகு உள்ளத்தைப் பெற எங்கள் வாழ்நாட்களைக் கணிக்க எங்களுக்கு கற்பியும்” என இறைவனை நோக்கி இறைஞ்சி நிற்பதுமே! தந்தையுடன் இணைந்து நாமும்...” ஆண்டவரே! முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக! இன்றும்! என்றும்! என முமுணுப்போம்.
    எனக்குத் தெரிந்து பலருக்கு இன்றும்...இன்னும் இந்த ‘உத்தரிக்கிற நிலை’ என்பதே ஒரு பட்டிமன்ற விவாத்த்திற்குட்பட்ட தலைப்பாயிருப்பினும், தந்தை அதை அரகாக,உறுதியாக,திருஅவையின் கோட்பாடுகளுக்குட்பட்டு தெளிவு படுத்தியிருப்பது போற்றுதற்குரியது. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete