Sunday, October 27, 2019

புனித சீமோன், யூதா

இன்றைய (28 அக்டோபர் 2019) திருநாள்

புனித சீமோன், யூதா

இன்று நம் தாய்த்திருச்சபை திருத்தூதர்களும் புனிதர்களுமான சீமோன், யூதா திருநாளைக் கொண்டாடுகிறது. 'தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா அல்லது ததேயு' என்று இவர்களை அழைக்கின்றார் லூக்கா. சீமோனை மையமாக வைத்த பக்தி முயற்சிகள் அதிக அளவில் இல்லை. ஆனால், அன்னை மரியாள், அந்தோனியார்க்கு அடுத்த நிலையில் உலகெங்கும் அதிக பக்தர்களை ஈர்க்கக்கூடியவர் யூதா ததேயு எனலாம். 'கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்' அல்லது 'கையறுநிலையின் பாதுகாவலர்' இவர். இவர் இயேசுவின் உறவினர் என்பதும், கானாவூரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்வு நடந்தது இவருடைய திருமணத்தில்தான் என்பதும் மரபுவழிச் செய்தி. நான் உரோமையில் என் படிப்பிற்காகச் சென்றிருந்தபோது எனக்கு அடைக்கலம் தந்தது புனித யூதா ததேயு பங்குத்தளம்தான். இன்று அந்தப் பங்குத்தளத்தின் திருநாள். கையின் இடுக்கில் ஒரு பெரிய கட்டையும், இடுப்பில் தான் எழுதிய கடிதப் பகுதியையும், இரண்டு கைகளில் இயேசுவின் முகம் தாங்கிய துணியையும் (வெரோணிக்காவுக்கு இயேசு வழங்கியது) ஏந்தியவராக இவர் காட்சி அளிப்பார் அந்தப் பங்குத்தளத்தில்.

திருத்தூதர்கள் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள் அல்லது பாலங்கள். இவர்களை அடித்தளங்கள் என்கிறார் பவுல் (காண். முதல் வாசகம்).

இவ்விரு திருத்தூதர்களும் இன்று நமக்குச் சொல்வது என்ன?

அ. அழைத்தல் அனுபவம் பெறுதல்

'இயேசு ஒரு மலைக்குப் போனார். கடவுளிடம் வேண்டினார். விடிந்ததும் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்' என்று வேகமாக நாம் நற்செய்தி நூலில் வாசித்துவிடுகின்றோம். ஆனால், அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தால் நமக்கு வியப்பின்மேல் வியப்பாக இருக்கிறது. பெரிய கூட்டம். அந்தக் கூட்டத்தின் நடுவில் சில சீடர்கள். எல்லாரும் நிற்கிறார்கள். இயேசு அவர்கள் முன்னால் நின்று, 'நீ வா! சீமோன் ... நீ வா! ததேயு! உன்னைத்தான் ... வா!' என்று சொல்லும்போது மற்ற சீடர்கள் நடுவில், மற்ற மக்கள் நடுவில் அவர்கள் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருப்பார்கள்! 'நானா!' என்று ஓடியிருப்பார்கள். சிலர் தயங்கியிருப்பார்கள். ஆனால், அழைக்கப்பட்ட அனைவரும் சென்றுவிடுகின்றனர். கூட்டத்திலிருந்து பெயர் சொல்லி அழைக்கப்படுதல் ஒரு முக்கியமான அனுபவம். நம்மை யாராவது கூட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதிச் செயல்பட்டால் நமக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில், கூட்டத்தில் நம்முடைய தனித்தன்மை அழிக்கப்படுகிறது. ஆக, என்னுடைய தனித்தன்மையை இறைவன் எனக்கு நினைவூட்டும் நிகழ்வுதான் அழைத்தல் அனுபவம். இன்றும் குருத்துவ அருள்பொழிவில் திருத்தொண்டர்களையும், திருத்தொண்டர் அருள்பொழிவில் மாணவர்களையும், துறவற சபையில் முதல் மற்றும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும் இளவல்களையும், திருமுழுக்கின் போது நம்மை பெயர் சொல்லி அழைப்பதன் பொருள் இதுதான். இந்த அழைத்தல் அனுபவம் ஒருநாள் அனுபவம் அல்ல. இது அன்றாட அனுபவமாக இருத்தல் வேண்டும்.

ஆ. அவரோடு நிற்றல்

இவர்கள் இயேசுவுடன் நிற்க வேண்டும். ஆக, இவர்களுக்கென்ற தனிப்பட்ட நிற்றல் இனி இல்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தோடும், உறவினர் நண்பர்களோடும் இனி நிற்க முடியாது. இயேசுவோடு நிற்க அவர்கள் மற்றவற்றை இழக்க வேண்டும். இல்லை என்றால், இயேசுவை நெறித்துக்கொண்டு நிற்பது போல ஆகவிடும். இயேசுவுடன் நிற்க நான் என்னுடைய முதன்மைகளைக் கைவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் என் இல்ல அதிபருடன் வெளியே செல்ல வேண்டுமென்றால், எனக்கென அன்று நான் வைத்திருக்கும் வேலைகளை விட்டு எழ வேண்டும். இதையும் பார்த்துக்கொண்டே அவரோடு செல்ல முடியாது. அவரோடு சென்றுகொண்டே இவற்றைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க நேரிட்டால் இரண்டிலும் முழுமை இராது.

இ. அவருடைய பணிகளைச் செய்தல்

இயேசு திருத்தூதர்களுடன் சமவெளில் நின்றுகொண்டு மூன்று பணிகளைச் செய்வதாகப் பதிவு செய்கிறார் லூக்கா: மக்களுடன் பேசுகிறார் அல்லது போதிக்கிறார், அவர்களின் பிணிகளை நீக்குகின்றார், தீய ஆவியை அகற்றுகிறார். போதித்தல், நலம் தருதல், தீமையை அகற்றுதல் - இம்மூன்றும்தான் திருத்தூதருடைய பணிகள். திருத்தூதராக இருப்பவர் இந்த மூன்று பணிகளிலும் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. இன்று பல நேரங்களில் நான் போதிக்கத் தயங்குகிறேன். நலம் தரும் வார்த்தைகளைக் பேசுவதில்லை. என்னிடம் உள்ள தீமையை அகற்றுவதையே பெரிய போராட்டமாகக் கருதுகிறேன். இப்பணிகளோடு சமரசம் செய்துகொள்ளும்போது என் பணியில் பிறழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.

இறுதியாக,

'மக்கள் யாவரும் இயேசுவைத் தொட முயன்றனர்' என முடிகிறது நற்செய்தி வாசகம்.

இயேசுவைத் தொடுவதற்கான கருவிகள்தாம் திருத்தூதர்கள். நீங்களும் நானும் திருத்தூதர்களாக இருந்தால் இன்னும் பலர் இயேசுவைத் தொட முடியும் - இன்றும் என்றும்!

1 comment:

  1. திருத்தூதர்கள் சீமோன் மற்றும் யூதா த்தேயு இவர்களின் திருநாளான இன்று பவுலின் பார்வையில் திருத்தூதர்கள் ‘அடித்தளங்கள்’ என்றழைக்கபடுகின்றனர்.தந்தை சொல்வதுபோல் சீமோன் குறித்த அதிக பக்தி முயற்சிகள் இல்லைதான்.ஆனால் இயேசுவின் உறவினரான யூதா த்தேயு ‘கையறு நிலையில்’ இருப்பவர்களின் காவலர் என்பதென்னவோ உண்மைதான்.இந்த இரு திருத்தூதர்களும் செய்தியாக நமக்குச்சொல்ல வருவது... அழைத்தல் அனுபவத்திற்கு குருத்துவ மற்றும் துறவற அழைப்பைச் சார்ந்து தந்தை முக்கியத்துவம் தந்திடினும், திருமுழுக்கு பெற்ற அனைவருமே அழைக்கப்பட்டவர்கள் தான் என்பதை நினைவு கொள்ளவும்,அந்த அழைத்தல் அனுபவத்தை ’ வாழ்நாள்’ அனுபவமாகப் பார்க்கவும், அவரை என் அனுபவமாகத தெரிந்து கொண்ட நான் அவரோடு நிற்கவும், இல்லறமோ...துறவறமோ என்னைத்தழுவியுள்ள.... நான் தழுவியுள்ள பணிகளை நான் செவ்வனே செய்வதுமே!
    “நானும்,நீங்களும் திருத்தூதர்களாக இருந்தால் இன்னும் பலர் இயேசுவைத்தொட முடியும்- இன்றும் என்றும்!”... அழகாக முடிக்கிறார் தந்தை. யூதா த்தேயு குறித்த நிறைய உபரி தகவல்கள் கொடுத்த தந்தைக்கு என் நன்றிகள். இந்த வாரம் தந்தைக்கும்,அனைவருக்கும் இனிய வாரமாகட்டும்!!!

    ReplyDelete