Sunday, October 20, 2019

அறிவிலியே

இன்றைய (21 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:13-21)

அறிவிலியே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறது. அக்கூட்டத்திலிருக்கும் ஒருவர், 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்!' எனக் கேட்கிறார். யூதர்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற தோராவில் இச 21:17, எண் 27:1-11, எண் 36:7-9 ஆகிய இடங்களில் சொத்துக்கள் பிரிப்பு அல்லது பரம்பரைச் சொத்துக்கள் பகிர்ந்தளிப்பு பற்றிய விதிகள் கூறப்பட்டுள்ளன. இவ்விதிகளை இயேசுவின் சமகாலத்தில் ரபிக்கள் விளக்கிச் சொல்வார்கள். இயேசுவையும் ஒரு ரபி என்று நினைக்கின்ற கூட்டத்து மனிதர் மிகச் சரியாக அவரை, 'போதகர்' என அழைக்கின்றார். இவருடைய தந்தை இறந்திருக்க வேண்டும். இவர் வீட்டில் இரண்டாவது அல்லது அதற்கு அடுத்த மகனாக இருந்திருப்பார். ஏனெனில் மூத்த மகனுக்கே சொத்தின் பெரும்பான்மை செல்லும். ஆக, தனக்கு வீட்டில் இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்ய இயேசுவை அழைக்கிறார் இந்த இளவல்.

'என்னை உங்களுக்கு நடுவராக நியமித்தவர் யார்?' என்ற இயேசுவின் கேள்வி, மோசேயைப் பார்த்து எபிரேயன் ஒருவன் எகிப்தில் கேட்ட கேள்வி போல இருக்கிறது: 'உன்னை எங்களுக்கு நடுவனாக நியமித்தவன் எவன்?' (காண். விப 2:14). இந்த இடத்தில் தான் நடுவர் இல்லை என்றாலும், இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு ஒரு மகாவாக்கியத்தை உதிர்க்கின்றார்: 'எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!'

இயேசுவின் வார்த்தைகளில் 'பேராசை வேண்டாம்' என்ற எச்சரிக்கையும், 'உடைமைகள் வாழ்வு தருவதில்லை' என்ற உறுதியும் அடங்கியிருக்கிறது.

பேராசை என்பது ஆசையின் எக்ஸ்ட்ரா வளர்ச்சி. ஒன்றுமில்லாமல் இருக்கும் ஒரு முனிவர் பிச்சையெடுக்க மரத்தின் கீழ் அமர்கிறார். ஒரு திருவோடு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். பின், தூங்க ஒரு கல் கிடைத்தால் நலம் என்கிறார், பின் ஒரு பாய், பின் சிறிய குடிசை, பின் அருகே சென்று வர மிதிவண்டி. ஆக, ஒன்று கிடைத்தவுடன் மற்றொன்றுக்கு மனம் தாவுகிறது. ஆனால், கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், நமக்குக் கிடைக்கும் இவை எவையும் நம்முடைய வாழ்வை - அதாவது, நமக்குள் இருக்கும் ஆன்மாவைக் - கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. இவற்றால் உடல் பயனடையுமே தவிர ஆன்மாவிற்குப் பயனேதும் இல்லை. ஆன்மாவிற்குள் தேவையற்ற பயமும், கவலையும், பொறாமையும் வந்து கட்டில் போட்டு படுத்துக்கொள்கின்றன.

மேலும் இயேசு, 'அறிவற்ற செல்வன் உவமை' சொல்கிறார். இந்தச் செல்வன் எதில் அறிவற்றவன்? நிதிமேலாண்மையில் இவன் சிறந்த அறிவாளி. விவசாயத்தில், பணத்தைப் பெருக்குவதில், வேலைக்காரர்களையும், இடத்தையும் மேலாண்மை செய்வதில் இவன் பெரிய ஞானி. ஆனால், எதில் தவறிவிட்டான்? 'நெஞ்சே, நீ ஓய்வெடு, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டியவை கிடைத்துவிட்டன!' என்று சொல்கிறான். இதில் தான் தவறுகிறான்.

'பல்லாண்டுகளுக்குத் தேவையானவை இருக்கின்றன!' ஆனால், 'உனக்குப் பல்லாண்டுகள் இருக்கின்றனவா?' எனக் கேட்கின்றார் கடவுள். 'இந்த இரவே உன் உயிர் உன்னைவிட்டுப் போய்விடும். நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'

இங்கேயும் இரண்டு விடயங்கள்: ஒன்று, என் பணம் என்னுடைய உயிரை எனக்குள் கட்டிவைக்க முடியாது. ஒருவேளை மருத்துவச் சிகிச்சை செய்யப் பணம் உதவலாம். ஆனாலும், சிகிச்சையின் பலன் பணத்தில் இல்லை. இரண்டு, நாம் இங்கிருந்து செல்லும்போது எல்லாவற்றையும் விட்டுச்செல்ல வேண்டும். இதை மனிதர்களின் பெரிய சாபமாகக் கருதுகிறார் சபை உரையாளர். ஏனெனில், மடையர்களிடம் விட்டுச்செல்ல வேண்டும் என வருந்துகிறார் அவர். நம்ம பக்கத்து வீட்டுக்காரர் வீட்டைக் காலி செய்கிறார் என வைத்துக்கொள்வோம். 'இந்த மிதிவண்டியை எங்களால் தூக்கிப் போக முடியாது. நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்' என நம்மிடம் தந்துவிட்டுப் போகிறார். அந்த மிதிவண்டியால் எனக்குப் பயன் என்றால் நான் அதை மதிப்பேன். ஆனால், எனக்குப் பயனில்லை என்றால் அது எனக்குச் சுமையாக மாறிவிடும். இதே நிலைதான் நாம் சொத்துக்களை விட்டுச்செல்லும்போதும். ஒருவர் அரும்பாடுபட்டு, கண்விழித்து, உடல்நலம் மறந்து சம்பாதிக்கும் சொத்தை, ஒன்றுமே செய்யாமல் தான்தோன்றித்தனமாக சுற்றித்திரியும் மூடன் ஒருவனுக்கு விட்டுச் செல்ல வேண்டுமே என்று புலம்புகிறார் சபை உரையாளர் (காண். சஉ 4:8-20). 'மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர். வருவது போலவே இவ்வுலகைவிட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் எதையும் தம்மோடு எடுத்துச்செல்வதில்லை' (காண். சஉ 4:15).

சில கேள்விகள்:

அ. இயேசு இப்படிச் சொல்வதால் மனித உழைப்பையோ, நேர்மையையோ, செல்வம் சேகரித்தலையோ குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக, செல்வத்தால் எல்லாம் முடியும் என்ற நம்முடைய எண்ணத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றார். செல்வத்தைப் பற்றிய என் எண்ணம் என்ன?

ஆ. என்னுடைய பேராசையின் அளவுகோல் எது? என்னிடம் உள்ளவற்றின்மேல் நான் அதிகம் பற்றுக்கொண்டுள்ளேனா? என்னுடைய அடையாளத்தையும் பிறருடைய அடையாளத்தையும் பொருள்களை வைத்து தீர்மானிக்கிறேனா?

இ. 'நான், எனக்கு, என்னுடைய' என்ற நிலையில் என்னைக் கடந்து என்னால் மற்றவரையும் கடவுளையும் பார்க்க முடியாமல் நான் இருக்கிறேனா? இந்த நிலையைக் கடக்க நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையால் ஆபிரகாம் கடவுளுக்கு ஏற்புடையவரானார் எனப் பெருமை பாராட்டுகிறார் பவுல் (காண். முதல் வாசகம், உரோ 4:20-25)


3 comments:

  1. 🙏.

    மிகுதியான உடைமை ( இவ்வுலகைச் சார்ந்த)
    ஒருவனுக்கு வாழ்வு தந்துவிடாது....
    Yes....

    ReplyDelete
  2. 🙏
    மிகுதியான உடைமை (இவ்வுலகைச் சார்ந்த) ஒருவனுக்கு வாழ்வு தந்துவிடாது....
    Yes absolutely... Only God's grace provides it... நன்றி 🙏.

    ReplyDelete
  3. “பேராசை வேண்டாம் என்ற எச்சரிக்கையையும், உடைமைகள் வாழ்வு தருவதில்லை என்ற உறுதியையும்” வலுத்திச் சொல்கின்ற ஒரு வலைப்பூ.
    “பல்லாண்டுகளுக்குத் தேவையானவை இருக்கின்றன.! ஆனால் உனக்குப் பல்லாண்டுகள் இருக்கின்றனவா?” செவிட்டில் அறையும் ஒரு கேள்வி.
    “மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர். வருவது போலவே இவ்வுலகை விட,டுப்போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் எதையும் கையோடு எடுத்துச்செல்வதில்லை”....நின்று,நிதானமாக யோசிக்க வைக்கும் வார்த்தைகள்.
    தந்தையின் அ,ஆ, எனும்முதல் இரண்டு கேள்விகளுக்கு அந்த மூன்றாவது (இ) யைப் பதிலாகப் பார்க்கிறேன்.ஆம்! கடவுள் மேல் அபிரகாமிற்கு இருந்த நம்பிக்கையால் அபிரகாம் கடவுளுக்கு ஏற்புடையவரானார். நான் கடவுளுக்கு ஏற்புடையவளாகத் தேவையானது எது? கள்வருக்கும்,கரையானுக்கும் இரையாகிப்போக்க்கூடிய செல்வமா? இல்லை மலையையும் இடம் பெயர்க்க கூடிய “ இறை நம்பிக்கையா?” யோசிக்கிறேன். யோசிக்க வைத்த காரணி தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete