Tuesday, October 29, 2019

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து

இன்றைய (30 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:22-30)

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து

இயேசு ஒரு யூதராக இருந்ததால் இயேசுவின் மீட்பு யூதர்களுக்கு மட்டும்தான் என்ற புரிதல் தொடக்க கிறிஸ்தவர்களுக்கு நிறையவே இருந்தது. புறவினத்தார்க்கு மீட்பு இல்லை என்ற புரிதல் மேலோங்கியிருந்ததன் பின்புலத்தில் இன்றைய நற்செய்தி வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தியை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. எருசலேம் நோக்கி இயேசு (13:22)

இயேசு எருசலேம் நோக்கிச் செல்வதை லூக்கா அடிக்கடி பதிவு செய்கிறார் (காண். 9:51, 53, 57, 10:1, 38, 11:1, 13:22, 33, 14:25, 17:11, 18:31, 18:37, 19:1,11,28). ஆனால், எதற்காக இயேசு எருசலேம் செல்கிறார் என்பதை மூன்றுமுறை மட்டுமே - தொடக்கத்தில் (9:51), நடுவில் 17:11), இறுதியில் (18:35) - பதிவுசெய்கிறார். இக்குறிப்பு நமக்கு உணர்த்தவது என்ன? என் வாழ்வின் இலக்கு எனக்கு தெளிவாக இருக்கின்றதா? ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பத்து ஆண்டுகளுக்குப் பின், இருபது ஆண்டுகளுக்குப் பின் என நான் என்ன திட்டங்கள் அல்லது இலக்கை நிர்ணயித்துள்ளேன்? இலக்கைப் பின்தொடர்வதற்கான மனவுறுதியும் விடாமுயற்சியும் என்னிடம் இருக்கிறதா?

ஆ. மீட்பு பெறுபவர் சிலர்தானா? (13:23)

வழியில் பலர் இயேசுவிடம் பல விடயங்களைக் கேட்கின்றனர். இறந்த கலிலேயர்கள், விவாதங்கள் என நிறைய விடயங்களில் ஒன்றாக, 'மீட்பு எல்லாருக்குமா?' என்று கேட்கப்பட, இயேசு அதற்கு நேரிடையாகப் பதில்கூற மறுக்கின்றார்.

இ. இடுக்கமான வாயில் (13:24)

'இடுக்கமான வாயிலில் நுழைவது' பற்றி அண்மையில் டி.டி. ரங்கராஜன் இப்படி எழுதுகிறார்: 'நம் ஒவ்வொருவரிலும் இரண்டு அல்லது மூன்று மனிதர்கள் ஒரே நேரத்தில் வாழ்கின்றனர். இவர்களை நான் குறைத்து ஒரே நபராக எப்போதும் வாழ முயற்சிக்க வேண்டும். ஒரே நபராக வாழும்போது என்னில் உண்மையும், நாணயமும், நேர்மையும் இருக்கும். ஒரே நபராக இருப்பவரே இடுக்கமான வாயிலுக்குள் நுழைய முடியும்.' இன்று நான் எத்தனை மனிதர்களாகப் பிளவுண்டு வாழ்கிறேன்?

ஈ. உங்களை எனக்குத் தெரியாது (13:25-28)

'இவரை எனக்குத் தெரியும்!' என்று இயேசுவிடம் செல்பவர்களை, 'உங்களை எனக்குத் தெரியாது' என்கிறார் இயேசு. ஆக, இயேசுவுடன் உணவு உண்ட, குடித்த, போதனையைக் கேட்ட நெருக்கம் மட்டும் போதாது. மாறாக, அவருடன் ஒருவர் கொண்டுள்ள தனிப்பட்ட உறவே அவருக்கு மீட்புத் தரும்.

உ. எல்லாரும் வரலாம் (13:29-30)

ஆக, அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமாய் கதவுகள் திறக்கப்படுகின்றன. இலக்கு தெளிவாய் இருக்கும் எவரும், இடுக்கமான வாயில் வழியே நுழையும் எவரும் உள்ளே வந்து பந்தியில் அமரலாம். இவ்வாறாக, கடைசியானவர்கள் முதன்மையாவார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:26-30) கூட்டுஒருங்கியக்கம் (synergy) என்ற மேலாண்மை விதி பற்றிப் பேசுகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது, அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.' இதையே, 'ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கும்போது பிரபஞ்சமே அவருக்கு ஒத்துழைக்கும்' என்கிறார் நாவலாசிரியர் பவுலோ கோயலோ. இலக்கு தெளிவானவர்களும், இடுக்கமான வாயிலில் நுழைபவர்களும் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கிறார்கள்.

சில கேள்விகள்:

அ. என்னுடைய வாழ்வின் குறுகிய மற்றும் நீடித்த இலக்குகள் எவை? அவற்றை நான் எப்போதும் என் கண்முன் கொண்டுள்ளேனா?

ஆ. நான் இடுக்கமான வாயில் வழியே நுழைய, ஒற்றை நபராக மாற, தடையாக இருப்பவை எவை?

இ. கடவுளின் ஆவியார் என்னில் நிகழ்த்தும் கூட்டுஒருங்கியக்கத்தை நான் அனுபவிக்கிறேனா?


1 comment:

  1. யாரெல்லாம் இயேசுவிடம் செல்லவும்,மீட்பு பெறவும் முடியுமெனப் பட்டியலிடுகிறது இன்றைய வலைப்பூ.தனக்கென சில இலக்குகள் நிர்ணயித்து,அந்த இலக்குகளை அடையும் திசை நோக்கிப் பயணிப்பவர்களும்,எந்நிலையிலும் பிளவுபடாத,உண்மையும்,நாணயமும்,நேர்மையும் தன்னுள் கொண்ட ஒரே நபராக வாழ்பவர்களும்,இயேசுவுடன் தனிப்பட்ட உறவு கொண்டவருமே என்பதையும் தாண்டி, இவர்களால் மட்டுமே இடுக்கான வாயிலில் நுழைய முடியும் என்றும் உணர்த்தப்படுகிறோம்.இப்படிப்பட்டவர்களுக்குமே மட்டுமே கதவு திறக்குமெனவும்,இவர்கள் மட்டுமே பந்தியில் அமரமுடியுமென்பதும் கூடுதல் செய்தி.
    முதல் வாசகம் பற்றிக்கூறும் தந்தை தூய ஆவியானவரின் ஒத்துழைப்பையும் தாண்டி, பவுலோ கோயலோ அவர்களின் .... “”ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கும்போது, பிரபஞ்சமே அவருக்கு ஒத்துழைக்கும்.” எனும் வரிகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஏனெனில் கடந்த ஒரு வாரத்தில் இந்த வரிகள் மூன்றாவது முறையாக என் செவிகளை வந்தடைகின்றன.( எனககு ஏதேனும் விசேஷமாக சொல்லப்படுகிறதா...தெரியவில்லை)
    தந்தையின் கேள்விகள் யோசிக்க வைப்பது உண்மை.நான் தடையின்றி இடுக்கமான வாயில் வழியே உள்ளே நுழையவும், தூய ஆவியார் என்னில் நிகழ்த்தும் கூட்டுஒருங்கியத்தை நான் அனுபவிக்க ஏதுவாக என் இலக்குகளை நான் நிர்ணயிக்கவும் வேண்டுமென்பதே இன்றைய செய்தி.
    தந்தைக்கு ஒரு வார்த்தை... தங்களின் சொந்த விருப்பப்படி இலக்குகளை நிர்ணயித்து அவற்றின் படி வாழும் சுதந்திரம் தங்களைப்போன்ற அருட்பணியாளர்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் எங்களைப்போன்ற பெண்களுக்கு? ஒரு சிலர் வேண்டுமானால் தாங்கள் குறிப்பிடும் பட்டியலின் படி வாழலாம்.ஆனால் பலருக்கு?? ஆரம்பிக்கும்போதே முற்றுப்புள்ளி வைப்பவர்கள் தானே எங்களைச் சுற்றி இருக்கிறார்கள்! குற்றம் சுமத்தவில்லை...என்னைப்போன்ற பலரின் மனக்கசப்பை எடுத்து வைக்கிறேன்.அவ்வளவே! எனினும் யோசிக்க வைத்த பல விஷயங்களுக்காகத் தங்களுக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete