Wednesday, October 16, 2019

நினைவுச் சின்னங்கள்

இன்றைய (17 அக்டோபர் 2019) நற்செய்தி (காண். லூக் 11:47-54)

நினைவுச் சின்னங்கள்

திருச்சி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு ஆண்டனி டிவோட்டா அவர்கள் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருடைய இறுதி ஊர்வலத் திருப்பலி இன்று காலை திருச்சி புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. ஆயருடைய உடல் இறுதித் திருப்பலிக்குப் பின், அவருடைய விருப்பத்தின்படி, பெங்களுரு புனித யோவான் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டது.

'ஆயர் தன் உடலைத் தானம் செய்தார்' என்ற செய்தி பொதுமக்களிடம் பரவ ஆரம்பித்தபோது அது மூன்றுவகை எதிர்வினைகளை எழுப்பியது. ஒன்று, ஏற்கனவே உடல் தானம் பற்றித் தெரிந்தவர்கள், 'இது ஒன்றும் புதிதல்லவே. நிறையப் பேர் தங்களுடைய உடலை மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக்காகக் கொடையாகக் கொடுக்கிறார்கள்' என்று அமைதியாயினர். இரண்டு, உடல் கொடை பற்றித் தெரியாதவர்கள், 'இது மாபெரும் செயல். இதுவரை இப்படி யாரும் செய்ததில்லை. இவர் இருக்கும் போதும் தன்னையே கொடுத்தார். இறந்தபின்னும் தன்னையே கொடுத்தார்' என்று ஆயரைப் புகழ்ந்தார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் இன்னும் உடல் கொடை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. மூன்று, உடல் கொடை பற்றித் தெரிந்தும் தெரியாதவர்கள், 'ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்டு உடல் குப்பையில் எறியப்படும் என்றால், இறப்புக்குப் பின் வாழ்வு, இறப்புக்குப் பின் உடலோடு வாழ்வு என்ற நம்பிக்கை என்ன ஆவது?' என்று கத்தோலிக்கத் திருஅவையின் கோட்பாடுகளை ஆழமாகப் பிடித்துக்கொண்டிருப்பவர்களின் எதிர்வினை இப்படியாக இருக்கிறது. கண்கொடை செய்தால் உயிர்ப்புக்குப் பின் கண்கள் இருக்காது என்பது இன்னும் சிலரால் நம்பப்படுகிறது. மேலும், இந்த மூன்றாம் வகையினர், 'ஆயரின் இறந்த நினைவை நாம் எப்படிக் கொண்டாடுவது? எந்தக் கல்லறைக்குச் சென்று மாலை இடுவது? அவருக்கு எப்படி மரியாதை செலுத்துவது?' என்று கேட்டு, 'மறைமாவட்டம் மருத்துவ ஆய்வுக்குப் பின் ஆயருடைய உடலை வாங்கி அடக்கம் செய்ய வேண்டும் அல்லது ஆயருடைய நினைவாக சின்னம் ஒன்றை எழுப்ப வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டனர்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள்' என்று தன் சமகாலத்துப் பரிசேயர்கள், குருக்கள், மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுகின்றார் இயேசு.

அதாவது, 'நீங்களே இறைவாக்கினர்களைக் கொலை செய்கிறீர்கள். நீங்களே நினைவுச் சின்னமும் எழுப்புகிறீர்கள்' என்றும் சொல்வதோடு, நீங்கள் எழுப்பும் நினைவுச்சின்னங்களே நீங்கள் கொலையாளிகள் என்பதற்குச் சாட்சிகள் என்று மொழிகின்றார்.

இன்று நாம் நினைவுச்சின்னங்களை விட்டுச்செல்ல நினைக்கின்றோம். அல்லது நம்முடைய பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் நினைவாக நினைவுச்சின்னங்களை வைத்திருக்கின்றோம்.

நினைவுச் சின்னங்கள் வெறும் அடையாளங்களே!

எடுத்துக்காட்டாக, என்னுடைய தந்தையின் கல்லறை என்னுள் தூண்டி எழுப்பும் உணர்வை, அந்தப் பகுதியில் நின்று இன்னொருவருக்காக குழி தோண்டுபவரை ஒன்றும் பாதிக்காது. அவரைப் பொறுத்தவரையில் அது இன்னொரு கல்லறை அவ்வளவுதான். ஆக, நினைவுச்சின்னங்கள் பாதிப் பொருளைத்தான் கொண்டிருக்கின்றன. அதன் மற்ற பாதிப் பொருள் அதைக் காண்பவரின் உள்ளத்தில் இருக்கின்றது.

இறப்பை எதிர்கொள்கின்ற நாம், இறப்பை வெல்ல, அல்லது காலத்தையும் நேரத்தையும் நீட்டித்துக்கொள்ள முனைகின்றோம். 'உன் நினைவாக ஒரு சிறிய தோட்டம், அழகான புத்தகம், அல்லது நல்ல குழந்தை என இந்த மூன்றில் ஒன்றை உனக்குப் பின் விட்டுச்செல்' என்கிறது செல்டிக் பழமொழி. 'மனிதர்கள் நினைவில் நீ நிற்க உன் பெயரில் நகரைக் கட்டி எழுப்பு' என்கிறது சீராக்கின் ஞானநூல்.

அதே வேளையில், 'முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை. அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை' (சஉ 1:11) என எச்சரிக்கிறார் சபை உரையாளர்.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்வது என்ன?

நினைவுச் சின்னங்கள் எழுப்புவது பற்றி இது பேசவில்லை.

ஆனால், அடுத்தவர் நினைப்பார், நினைக்கமாட்டார், அல்லது இப்படி நினைப்பார், அப்படி நினைப்பார் என்பதைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஆன்மாவின் நிறைவிற்கு ஒருவர் வாழ்கிறார் என்றால் அதுவே சிறப்பு.

மேதகு ஆயர் அவர்களின் எளிமை, தாராள உள்ளம், பொதுநிலையினர் பங்கேற்பின்மேல் உள்ள ஆர்வம், திட்டமிடல், சொத்துக்களை உருவாக்குதல், நிதிநிலையைச் சீர்படுத்துதல், சகஅருள்பணியாளர்களோடு உறவு, மேய்ப்புப்பணி கற்பனைத்திறன் போன்ற மதிப்பீடுகள்அவரின் மதிப்பீடுகளாகப் பேசப்பட்டன.

இம்மதிப்பீடுகளே இவரின் நினைவுச் சின்னங்கள்.


1 comment:

  1. இரண்டாம் முறையாக உடல்தானம் குறித்துப் பேசுகிறார் தந்தை. அண்மையில் மரித்த ஆயரின் உடல் தானம் குறித்த செய்கையோடு மீண்டும் அதை இணைத்துப் பேசுகிறார்.கத்தோலிக்கத் திருச்சபை தன் மக்களுக்கு இந்த உடல்தானம் குறித்த விழிப்புணர்வைத் தராத நிலையில் மக்கள் இதைத் தங்களின் அறிவுக்கெட்டிய நிலையில் பலவிதமாகப் பேசுவது எதிர்பார்க்கப்பட...ஏற்கப்பட வேண்டிய ஒன்றே! இறந்தவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் எழுப்புவது சரியா..தவறா? இக்கேள்விக்கு சரியானதொரு பதிலை யார்தான் தர இயலும்? தாஜ்மஹால் அளவிற்கு இல்லை எனினும் நம் எண்ணத்திலும்,உள்ளத்திலும் வாழ்பவர்களுக்காக ஏதோ ஒரு கல்லறையேனும் வேண்டுமென்று எதிர்பார்ப்பது சரியே! ஒருவர் தான் நினைவுக்கூறப்பட ஒரு தோட்டம், புத்தகம்,நல்ல குழந்தையை விட்டுச்செல்வது ஏற்கப்படுமெனில், ஒருவர். இறந்தபின் அவர் நினைவு கூறப்பட அவருக்காக அவர் சந்ததியினர் ஏதேனும் ஒன்றை (அது எத்தனை சிறியதாக இருப்பினும் கூட) அவருக்காக எழுப்புவதும் ஏற்கப்பட வேண்டியதே! ஏனெனில் உயிர்த்த இயேசுவைத் தொட்டுப்பார்த்த பிறகே நம்பிய ‘தோமா’ வின் சந்ததியினர் தானே நாம்! மற்றபடி தந்தை பட்டியலிடும் ஆயரின் மதிப்பீடுகளின் படி அவரின் ஆன்மாவின் நிறைவிற்கு அவர் வாழ்ந்தார் என்பதே அவருக்கான ‘ நினைவுச் சின்னங்கள்’ என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சரியான புரிதல் இல்லாத ஒரு விஷயம் குறித்த விழிப்புணர்வைத் தர தந்தை எடுத்திருக்கும் முயற்சியும் போற்றுதற்குரியதே!!!

    ReplyDelete