கைம்மாறு
ஆங்கிலத்தில் 'பொலிடிக்கலி கரெக்ட்' (politically correct) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதாவது, நான் பேசுவதும், எழுதுவதும், சொல்வதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஏற்புடையதாக, சமூகத்திற்கு இடறல் விளைவிக்காததாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, டோல் கேட்டில் திருநங்கையர் இரக்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம். நான் காரில் எனக்கு அருகிலிருப்பவரிடம், 'ஓர் அலி அல்லது ஓர் ஒன்பது பணம் கேட்கிறார்' என்று நான் சொன்னால், நான் 'பொலிடிக்கலி கரெக்ட்' அல்ல. அது மட்டுமல்ல. நான் அவர்களுடைய மாண்புக்கு எதிராகப் பேசுகிறவன் ஆகிவிடுவேன். கண் தெரியாதவரை 'குருடன்' என அழைப்பது, காது கேட்காதவரை 'செவிடன்' என அழைப்பது, அல்லது என் வகுப்பு மாணவரை 'மக்கு' என அழைப்பது போன்றவை. நான் பேசுவதில்கூட மற்றவரின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற பின்னணியில் உருவானவைதான் 'திருநங்கை', 'மாற்றுத்திறனாளி', 'அறிவுத்திறன் குறைந்தவர்' போன்ற வார்த்தைகள். வெறும் பெயர்கள் மட்டுமல்ல. அவர்களைக் குறிப்பிட்டு அவர்களுடைய செயல்களையும் நான் விமர்சனம் செய்யக்கூடாது. 'திருநங்கையர் அடாவடித்தனம் செய்வார்கள்' என்று நான் சொன்னாலும் அது தவறு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கொஞ்சம் 'பொலிடிக்கலி நாட் கரெக்ட்' என்றே தெரிகிறார். யாரையெல்லாம் விருந்துக்கு அழைக்கக்கூடாது, விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று சொல்கின்ற இயேசு, 'நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றவரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை' என்கிறார். இதை ஒருவேளை ஏழையோ, அநாதையோ, கால் ஊனமுற்றவரோ, அல்லது பார்வையற்றவரோ வாசித்தால் அல்லது கேட்டால் அவருடைய மனம் எப்படி பதைபதைக்கும்? ஏன் அவர்களிடம் கைம்மாறு செய்ய ஒன்றுமே இல்லையா? பொருளால் செய்வதுதான் கைம்மாறா? அன்பால், உடனிருப்பால் செய்வது கைம்மாறு ஆகாதா? இன்றைய நாளில் கால் ஊனமுற்றவர் அல்லது பார்வையற்றவர் செல்வத்தில் உயர்ந்த நிலையில் இல்லையா?
இந்தக் கேள்விகள் இன்று நாம் கேட்பது சரி.
ஆனால், இயேசுவின் காலத்தில் நிலை அப்படி அல்ல. ஏழைகளும், உடல் ஊனமுற்றவர்களும், அநாதைகளும், கைம்பெண்களும் சமூகத்தின் சாபங்களாகக் கருதப்பட்டனர். இன்றைய நம் அரசியல் சூழல்கூட, ஏழ்மையைக் களைவதற்குப் பதிலாக, ஏழையரையே ஒட்டுமொத்தமாகக் களைய மெனக்கெடுவதுபோலத்தான் இருக்கிறது.
இப்பாடத்தின் சொல்லாடல் பிரச்சினைகளை விட்டுவிட்டு பாடத்திற்கு வருவோம்.
இயேசுவின் சமகாலத்தில் விருந்தோம்பல் என்பது ஒருவரின் சமூக அந்தஸ்தை மற்றவர்களுக்குக் காட்டி பெருமை கொள்ளவும், அல்லது மற்றவர்களைவிட தான் உயர்ந்தவர் என்று பெருமிதம் கொள்ளவும், அல்லது இல்லாதவர்களை அவமானப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. மேலும், விருந்தோம்பல் செய்பவர் கைம்மாறு கருதியே விருந்தோம்பல் செய்தார். இந்த நிலையில் விருந்தோம்பல் பற்றிப் பேசுகிற இயேசு ஏழைகளால் விருந்தோம்பல் செய்ய முடியாது என்று சொன்னாலும், கடவுள் அவர்கள் சார்பாக விருந்தோம்பல் செய்வார் என்று சொல்வதன் வழியாக அவர்கள் கடவுளின் கண்மணிகள் என்றும், கடவுளின் பார்வையில் உயர்ந்தவர்கள் என்றும் சொல்லி அவர்களுடைய சமூக நிலையை உயர்த்துகின்றார்.
இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் எவை?
அ. நான் அனைத்திலும் கைம்மாறு செய்ய நினைப்பது தவறு. ஏனெனில், கடவுளிடமிருந்து நான் பெற்ற கொடைகளுக்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, தாயின் அன்பு, தந்தையின் தியாகம், உடன்பிறப்புக்களின் உடனிருப்பு, தோழர்களின் தோழமை போன்றவற்றிற்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்யவே முடியாது. கைம்மாறு செய்வதைப் பற்றி நான் யோசிக்கும்போது கணக்குப் பார்ப்பவனாக மாறிவிடுகிறேன். இன்று என் வாழ்வில் கடவுள் இனியவர்கள் பலர் வழியாக ஆற்றிய செயல்களை நாம் பட்டியல் இடுவோமா? கைம்மாறு செய்ய முடியாத இந்நிலையில் அவர்களை நான் கடவுளின் கொடையாக ஏற்றுக்கொள்கிறேனா?
ஆ. பிறரைப் பார்க்கும் என்னுடைய பார்வை எப்படி இருக்கிறது? ஒருவரின் அடையாளங்களைக் கடந்து என்னால் பார்க்க முடிகிறதா? நான் பார்க்கும் ஒருவரில் என்னுடைய வலுவின்மையையும் நொறுங்கிநிலையையும் நான் அனுபவிக்க முடிகிறதா?
இ. இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 11:29-36), 'கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை' என்கிறார் பவுல். இவை நமக்கு மிகவும் ஆறுதல் தருகின்றன. ஒரு பக்கம், நம்முடைய குற்றவுணர்வைக் களைகின்றன. இன்னொரு பக்கம், நம்முடைய அழைத்தல் மற்றும் அருள்கொடைகள் பற்றி இன்னும் அக்கறையுடனும் பொறுப்புடனும் இருக்க நம்மைத் தூண்டுகின்றன. நம்மிடம் அவர் கைம்மாறு கருதுவதில்லை என்றாலும், நாம் பொறுப்புணர்வுடன் இருக்க அவர் விழைகின்றார்.
இயேசுவின் பார்வையில் அவர் யாரையெல்லாம் விருந்துக்கு அழைக்கலாம்; அழைக்கக்கூடாது என்று கூறியதை முதலில் விமர்சித்த தந்தை, பின் அவர் முன்வைக்கும் கேள்விகளை ‘இயேசுவின் காலத்தில் கேட்டிருக்க முடியாது; ஏனெனில் இயேசுவின் காலத்தில் ஊனமுற்றவர்கள், அனாதைகள் போனறவர்கள் சாபங்களாக்க் கருதப்பட்டனர்’ என்பது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. திருப்பித்தர இயலாத கடவுள் மற்றும் என் வாழ்வின் இனியவர்கள் எனக்காக ஆற்றிய செயல்களைப் பட்டியலிட்டு அவைகளை கொடைகளாக ஏற்றுக்கொள்ளவும்,நான் அடுத்தவரைப் பார்க்கும் பார்வை என்னில் உள்ள சிறுமையை எனக்கு உணர்த்தவும் இன்றைய வலைப்பூ எனக்கு உதவி செய்யட்டும்! கைமாறு கருதாமல் அள்ளித்தரும் இறைவனுக்கு நம் பொறுப்புணர்வையும், அடுத்தவரின் மேல் அக்கறையையும் பரிசாகத் தந்தால் அவர் நம்மையும் பார்த்து ‘ கண்மணிகளே!’ என்று கட்டியணைக்கும் நாள் தொலைவில் இல்லையெனக் கூறும் தந்தைக்கு .....ஒரு இரசனை மிக்க பதிவைத் தந்த தந்தைக்கு ........என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!
ReplyDelete