Wednesday, October 9, 2019

தொல்லை கொடுக்காதே

இன்றைய (10 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:5-13)

தொல்லை கொடுக்காதே

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இறைவேண்டல் பற்றிக் கற்பித்த இயேசு, தொடர்ந்து இறைவேண்டலில் ஒருவரிடம் இருக்க வேண்டிய விடாமுயற்சியை இன்று நமக்கு உருவகமாகக் கற்பிக்கின்றார்.

என்னுடைய மாணவர்கள் என்னுடைய கதவுகளை இரவு நேரத்தில் தட்டினால் எனக்குக் கோபம் வருவதுண்டு. நாங்கள் இளங்குருமடத்தில் படிக்கும்போது எங்களுடைய அதிபர் தந்தை அவர்களின் கதவுகளை தெரியாமலும் யாராவது தட்டிவிடக்கூடாது. தட்டிவிட்டால் அவ்வளவுதான். ஆனால், பல நேரங்களில் நம்முடைய கதவுகள் தட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

நாம் ரொம்ப மும்முரமாக ஏதாவது எழுதிக்கொண்டிருக்கும் நேரம் யாராவது காலிங் பெல் அடித்தால், ஓடி ஆடிவிட்டு கொஞ்சம் அயரலாம் என்று நினைத்துச் சற்றுச் சாய, 'அம்மா' என்று யாராவது அழைத்தால் நமக்கு நிறைய கோபம் வரும்.

அந்தக் கோபத்தை முதலில் நாம் அமைதியாக மாற்றுவோம். உள்ளே இருந்துகொண்டு இல்லாததுபோல இருக்க முயற்சிப்போம். அந்த நபர் விடவில்லை என்றால் அவருடைய தொல்லையை நீக்குவதற்காகவே வந்து திறப்போம். இப்படி தொல்லையின் பொருட்டு நம்மிடம் உதவிகள் வாங்கிச் சென்றவர் பலர் இருப்பார்கள்.

ஏன் நாம் அடுத்தவரைத் தொல்லையாக நினைக்கிறோம்? அல்லது நமக்கு ஏன் கோபம் வருகிறது?

'என்னுடைய முதன்மையை யாரெல்லாம் அல்லது எதெல்லாம் சிதைக்கிறதோ அது எனக்குத் தொல்லையாகத் தெரிகிறது. அல்லது அந்த நேரத்தில் எனக்கு கோபம் வருகிறது.' இது எல்லாருக்கும்தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் வீட்டிற்குள் இருக்கும் அந்த நபர் புதிதாய் குழந்தை பெற்றவராக இருக்கலாம். குழந்தையைத் தூங்க வைப்பதன் பிரச்சினை அவர்களுக்குத்தான் தெரியும். இப்போது யாராவது எழுப்பினால் தானும் எழுந்து தன்னுடைய குழந்தையும் எழுந்த என வேலைகள் இரண்டாகிவிடும். ஆக, அவருடைய முதன்மை சிதைக்கப்படுவதால் அவர் அதைத் தொல்லை என நினைக்கிறார். ஆனால், தொல்லை கூடக்கூட முதன்மையோடு அவர் சமரசம் செய்துகொள்கின்றார். எழுந்து கதவைத் திறந்து தேவையானதைக் கொடுக்கின்றார்.

இதைக் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தால் கடவுளுக்கு என்று எந்த முதன்மைகளும் இல்லை. நாம் எல்லாரும் ஒரே நேரத்தில் அவருடைய முதன்மைகள். ஆக, அவர் நம்மைத் தொல்லை என்று நினைப்பதில்லை. இது முதல் பாடம்.

தொடர்ந்து இயேசு ஒரு மகாவாக்கியத்தைக் கற்பிக்கின்றார்: 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'

இந்த மூன்றிலும் யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர் தன்னுடைய தேவையை கேட்டோ, தேடியோ, தட்டியோ முதலில் பதிவு செய்ய வேண்டும். பசி இருக்கிற குழந்தை அழ வேண்டும், அல்லது ஏதாவது ஒன்று செய்து தன் தாயிடம் தன் தேவையைப் பதிவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அந்தத் தேவை நிவர்த்தி செய்யப்படும். அதுவும் எந்தத் தேவையோ அந்தத் தேவை மட்டும். மீன் கேட்டால் மீன், முட்டை கேட்டால் முட்டை.

ஆனால், தந்தை என்ன செய்கிறார்? கேட்பவருக்குக் கேட்டதைத் தராமல் மேலான நற்கொடையான தூய ஆவியைத் தருகின்றார். ஆக, கடவுளின் கொடுத்தல் நாம் கேட்பதையும் மிஞ்சுகிறது.

இயேசுவின் மகாவாக்கியம் நம்முடைய முன்னெடுப்பை வலியுறுத்துகின்றது. இங்கே கடவுள் நம்மைக் கேட்க வைக்கிறார் என்பது பொருள் அல்ல. மாறாக, என்னுடைய தேவை என்ன என்பதை வரையறை செய்யும் சுதந்திரத்தை எனக்குத் தருகின்றார்.

நான் நண்பனாகச் சென்றால் அவர் என்னைப் பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார்.


2 comments:

  1. இந்த அழைப்பு மணி மற்றும் ‘அம்மா’ எனும்’ குரலால் சிதைக்கப்படுவது இல்லத்தரசிகளே! அவர்கள் அந்த அழைத்தலைத் தொல்லை என்று நினைப்பதால் அல்ல.... அவர்களின் முதன்மை சிதைக்கப்படுவதால்.உண்மைதான்...கடவுளுக்கு எல்லோரும்,எல்லாமும் ஒரே நேரத்தில் முதன்மைகளாக இருப்பதால் அவர் நம்மைத்தொல்லை என நினைப்பதில்லை. ‘நாம் கடவுள் அல்லரே’ எனும் சமாதானத்தை என் மனம் முணுமுணுப்பதை உணரமுடிகிறது. தந்தை குறிப்பிடும் இயேசுவின் மகா வாக்கியம்....” கேளுங்கள்............திறக்கப்படும்.” கேட்பவருக்கு (கேட்பதைத் தராமல்) கேட்பதையும் தந்து,அதற்கும் மேலான தூய ஆவியையும் கொடையாகத் தருகிறார்.கேட்பதை மட்டும் கொடுக்கும் மனிதக் கொடுத்தலிலிருந்து இறைவனின் கொடுத்தல் வேறுபடுவதை உணரமுடிகிறது.தந்தையின் அந்த இறுதி வரி இவ்வலைப்பூவின் கொடுமுடி. “ நான் நண்பனாகச் சென்றால். அவர் என்னைப் பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார்.”....... இதற்கு மேலும் நமக்குத் தேவை என்று ஒன்று உண்டோ? வாய் மூடி, நம் கரங்களை நீட்டி அவரை நம் தந்தையாக நாம் ஏற்கும் பட்சத்தில் நமக்குத் ‘தேவை’ என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறைகூவல். விடும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete