Monday, October 14, 2019

உட்புறத்தில் உள்ளவற்றை

இன்றைய (15 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:37-41)

உட்புறத்தில் உள்ளவற்றை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பரிசேயர் ஒருவரின் வீ;ட்டிற்கு உணவருந்த அழைக்கப்படுகின்றார். உணவருந்தும் முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைகின்றார். அவரின் உள்ளுணர்வைப் புரிந்துகொள்கின்ற இயேசு உள்புறத் தூய்மையை வலியுறுத்துவதோடு, புதிதாக ஒரு கருத்தையும் சொல்கின்றார்:

'உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும்     தூய்மையாயிருக்கும்.'

இதைச் சொல்லுமுன் 'உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன' என்கிறார் இயேசு.

அப்படி என்றால், ஒருவர் தனக்கு உள்ளே இருக்கின்ற கொள்ளையையும் தீமையையும் தர்மமாகக் கொடுக்க வேண்டுமா?

இல்லை.

உங்களுடைய உள்ளத்தில் தூய்மையாக - அதாவது, பரிவு, இரக்கம், கனிவு, மனவுறுதி, மன்னிப்பு, அன்பு, தாராள உள்ளம் கொண்டிருக்க - இருக்க வேண்டிய நீங்கள் இவற்றை கொள்ளை மற்றும் தீமையால் நிரப்பியுள்ளீர்கள். அவற்றைக் களையுங்கள். களைந்துவிட்டு, பரிவு, இரக்கம், கனிவு ஆகியவற்றை தர்மமாகக் கொடுங்கள் என்கிறார்.

'கொள்ளை, தீமை'

இவை இரண்டும் நம்மை நமக்குள்ளே திரும்பியவர்களாக வாழச் செய்கின்றன.

'கொள்ளையில்' ஈடுபடும் ஒருவர், தனக்குள்ளதும் தனக்கு, பிறருக்குரியதும் தனக்கு என எண்ணிக்கொள்கிறார்.

'தீமையில்' ஈடுபடும் ஒருவர், தன் இருப்பை மட்டும் முன்னிறுத்தி மற்றவரின் இருப்பை அழிக்கின்றார்.

பிறருக்கு உரியதை தனதாக்க நினைப்பவரும், தீமையை அழிக்க நினைப்பவரும் ஒரு போதும் தர்மம் செய்ய முடியாது. அவர் தன்னுடைய பொருள் மட்டுமல்ல, நேரம், ஆற்றல், திறன் எதையும் அடுத்தவருக்குக் கொடுக்க மாட்டார்.

என் மனதில் இன்று இவ்விரண்டு உணர்வுகள் - 'கொள்ளை,' 'தீமை' - இருக்கின்றனவா?

இவற்றை அகற்றினால் நான் என்னை மற்றவர்களுக்குத் தர முடியும்.

அந்தத் தருதலே என்னைத் தூய்மையாக்கும்.


1 comment:

  1. “உங்கள் உள்ளத்தில் நிரம்பியுள்ள தீமை,கொள்ளை இவற்றை அகற்றிவிட்டு பரிவு,கனிவு மற்றும் இரக்கம் இவற்றால் நிரப்புங்கள்.” .... இன்றையப் பதிவின் சாராம்சம். “பிறருக்குரியதைத் தனதாக்க நினைப்பவரும், தன் இருப்பை மட்டும் முன்னிறுத்தி மற்றவரின் இருப்பை அழிக்க நினைக்கும் ஒருவரும் தர்மம் செய்ய இயலாது” என்கிறார் தந்தை.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? எதை நான் தருவேன் இறைவா? கேட்கிறது என் மனது! தீமை,கொள்ளை இவற்றையா?இல்லை பரிவு,இரக்கம்,கனிவு இவற்றையா? மனத்திலிருந்து முன்னதைக் களைந்து,பின்னதால் நிரப்ப அறைகூவல் விடும் தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete