Monday, October 28, 2019

விதையும் மாவும்

இன்றைய (29 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:18-21)

விதையும் மாவும்

இறையாட்சி பற்றிய இயேசுவின் உருவகங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. நம்ம வீட்டு அஞ்சறைப்பெட்டியின் மூடியைச் சுற்றிவிட்டு, அதன் ஒரு பெட்டியில் கிடக்கும் கடுகுமணிகளைக் கையில் எடுத்து, 'இதோ! இறையாட்சி இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்!' என்கிறார். பின் அப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார். ஒரு டம்ளரில் வீட்டுத்தலைவி எடுத்து வைத்த புளிக்கார மாவு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தள்ளிப் பார்க்கிறார். அங்கே ஒரு பானை நிறைய புதிதாய் அரைத்த மாவு இருக்கிறது. 'இந்தப் புளிக்காரத்தை இந்த மாவில் கொட்டவா?' என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டுக்கொண்டே அந்த மாவில் கொட்டி, அருகிலிருந்த அகப்பையை எடுத்து மெதுவாகக் கிண்டி விடுகின்றார். 'மொத்தத்தையும் போட்டுட்டீங்களா?' என்று சிணுங்குகிறாள் அந்தப் பெண்மணி. 'ஆம்!' என்று சொல்லிக்கொண்டே வரவேற்பரைக்குள் ஓடியவர், அங்கே இருந்த சீடர்களிடம், 'இறையாட்சி இந்தப் புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்' என்கிறார்.

இயேசுவின் உருவகங்கள் வெகுசன மக்களுக்கும் புரியக்கூடிய வகையில் இருக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியை கடுகுவிதை மற்றும் புளிப்புமாவுக்கு ஒப்பிடுகின்றார்.

முதலில் இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்றால் (அ) திருச்சபை, (ஆ) விழுமியங்கள், (இ) இறப்புக்குப் பின் வாழ்வு என்று நிறைய புரிதல்கள் இருக்கின்றன. ஆனால், இறையாட்சி என்பது இயேசு. அவ்வளவுதான். அதனால்தான், 'இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது. ஏனெனில் நான் உங்கள் நடுவில் இருக்கிறேன்' என்கிறார் இயேசு. இயேசு இயங்கும் இறையாட்சித் தளம் இந்த உலகம்.

அ. கடுகுவிதை

யூதர்கள் கடுகுவிதையை எல்லா விதைகளிலும் மிகச் சிறியதாகக் கருதினார்கள் (காண். மத் 13:31-33, மாற் 4:30-32). இயேசுவும் 'கடுகளவு நம்பிக்கை' (காண். லூக் 17:6) என்று சொல்லும்போது, கடுகின் சிறிய அமைப்பையே சொல்கின்றார். 'கடுகு' என்பது 'ஸினாப்பிஸ் நீக்ரா' என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கிறது. இத்தாவரம் நான்கு அடிகளிலிருந்து பதினைந்து அடிகள் வரை வளரும். ஆகையால் இதை மரம் என்றும் அழைப்பர். இயேசு கடுகுவிதையின் வளர்ச்சியைப் பற்றிப் பேசினாலும், அவருடைய அழுத்தம் கடுகுவிதையின் தொடக்கம் மற்றும் இறுதியைப் பற்றியே இருக்கின்றது. சிறிய தொடக்கம். ஆனால், பெரிய முடிவு. சிறிய விதை பெரிய மரமாகிறது.

இங்கே மற்றொரு வாக்கியத்தையும் சொல்கின்றார்: 'வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.' இயேசுவின் 'விதைப்பவர்' எடுத்துக்காட்டில், பறவைகள் விதைகளின் எதிரிகளாக இருக்கின்றன (காண். லூக் 8:5, 12). ஆனால், இங்கே அவைகள் விருந்தினர்களாக வருகின்றன. ஆக, இறையாட்சி என்ற கடுகு மரம் வெறும் 'செல்ஃபோன் டவர்' அல்ல. மாறாக, பறவைகளை ஈர்த்து அவைகளுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும் தன்மை கொண்டது. 'பறவைகள்' என்பது 'புறவினத்தாரைக்' குறிப்பதாக திருஅவைத் தந்தையர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் (காண். தானி 4:12, 21, திபா 104:13, எசே 17:23). உருவகத்தை நிறைவேற்றும் விதமாகக் கூட 'பறவைகளைப் பற்றி' இயேசு சொல்லியிருக்கலாம்.

ஆ. புளிப்புமாவு

புளிப்புமாவு என்பது நாம் பாலில் ஊற்றும் தயிர் உறை போன்றது. பழைய தயிர் புதிய பாலில் ஊற்றப்படும்போது பாலும் தயிராகிவிடுகின்றது. 'புளிப்புமாவு' என்று சொல்வது இன்று நாம் ரொட்டி அல்லது கேக் செய்யும்போது சேர்க்கும் 'ஈஸ்ட்' என்ற பாக்டீரியா. இது மாவில் சேர்க்கப்பட்டு கொஞ்ச நேரத்தில் மாவு நெகிழ்வுத்தன்மை அடைகிறது. மாவில் உள்ள க்ளுக்கோஸூடன் சேரும் இந்தப் பாக்டீரியா கார்பன்-டை-ஆகஸ்ஸைடாக மாறி சின்ன சின்ன காற்றுப் பைகளை மாவில் உருவாக்குகிறது. இப்போது அடுமனையில் இடப்படும்போது வெப்பத்தில் காற்றுப் பைகள் இன்னும் விரிய மணமான, சுவையான கேக் அல்லது பிரட் கிடைக்கிறது. மாவு எந்த அளவில் இருந்தாலும் புளிக்காரம் அந்த அளவிற்குச் செயலாற்றும். அதே செய்திதான். சிறிய தொடக்கம். பெரிய முடிவு.

புளிக்காரம் யார் பார்த்தாலும்பார்க்காவிட்டாலும் தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும். இதன் வேலையைப் பாதி இரவில் நிறுத்த முடியாது. இது செய்து முடித்த வேலையை மீண்டும் திருப்ப முடியாது. இறையாட்சியும் அத்தகையதே.

புளிப்புமாவு விவிலியத்தில் எதிர்மறையான பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். லூக் 12:1, 1 கொரி 5:6-8, கலா 5:9). ஆனால், இங்கே நேர்முகப் பொருளில்தான் உள்ளது.

சரி!

கடுகுவிதையும் புளிப்புமாவும் போல இiறாட்சி இன்று இருக்கிறதா? எப்போது உலகம் பெரிய மரமாகவும் புளிப்பான மாவாகவும் மாறும்?

இந்த எதிர்நோக்கு அல்லது காத்திருத்தலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:18-25) பவுல் மற்றொரு உருவகத்தின்வழி விளக்குகிறார்: 'படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது.' 'தள்ளு!' 'தள்ளு!' என்று ஒருபக்கம் வலி, இன்னொரு பக்கம் முடியாத போது பெருமூச்சு. ஆனால், இறுதியில் மகிழ்ச்சி! இறையாட்சியை, இயேசுவைக் கையில் ஏந்தும் மகிழ்ச்சி!


1 comment:

  1. நிறைய கற்பனா சக்தியுடன் சிறிதே நகைச்சுவை சேர்த்து வரும் ஒரு வலைப்பதிவு.இறையாட்சியின் மாட்சியைக்குறிக்கும் வார்த்தைகளே இந்தக் கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு.நம்முடைய பார்வையில் ஒரு விஷயமாகவே தெரியாத கடுகு விதையையும்,புளிப்பு மாவையும் எத்தனை உச்சத்திற்குத் இயேசு கொண்டு செல்கிறாரெனில் அவற்றின் தொடக்கம் சிறியதே எனினும் முடிவு மகத்தானதொன்றாக மாறுவது போல்,இந்த உலகமும் இயேசு இயங்கும் இறையாட்சித் தளமாக மாறும் என்பதே அது. இப்பேர்ப்பட்ட ஒரு விஷயத்திற்காக எதிர்நோக்கியிருக்கும் ஒரு விஷயத்தைப் பேறுகால வேதனை முடிந்து ஒரு தாய் தன் குழந்தையைக் கையில் ஏந்தும் நிழ்வோடு தந்தை ஒப்பிட்டிருப்பது அழகு! இறையாட்சியின் மகிமையை எடுத்துரைக்கவரும் அதே வலைப்பூவின் வழியாக “எதையும்/ யாரையும் சிறியது/ சிறியவர் எனப் புறந்தள்ள முடியாது” எனும் பெரிய செய்தியையும் சேர்த்தே சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete