Tuesday, December 4, 2018

எதுவும் இல்லை

இன்றைய (5 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 15:29-37)

இவர்களிடம் எதுவும் இல்லை

இன்று மேலாண்மையியலில் அதிகமாகப் பேசப்படும் ஒரு சொல்லாடல் 'நிறைவு மனநிலை' (abundance mentality or attitude). அதாவது, நிறைவாகச் சிந்திப்பது. ஒரு அலுவலகத்தின் மேனேஜர் தன் பணியாளர்கள், நிறுவனம், முதலீடுகள், வாடிக்கையாளர்கள் பற்றி நிறைவாகச் சிந்திக்க வேண்டும். அப்படியே ஒவ்வொருவரும். நிறைவாகச் சிந்திப்பது என்றால் குறைகளை மூடி மறைப்பது அல்ல. மாறாக, 'எல்லாம் நன்றாக இருக்கிறது,' 'இனியும் நன்றாக இருக்கும்' என்று நேர்முகமாகப் பார்ப்பது. இப்படிப் பார்க்கிறபோது குறைகள் எல்லாம் மறைந்துபோகும்.

பெருந்திரளான மக்களுக்குப் போதிக்கிறார் இயேசு. போதித்து முடித்தாயிற்று. ஒரு சிறு அறையில் எந்த ஒரு வெளிச்சத்தமும் வராத இடத்தில், எந்த முணுமுணுப்பும் இல்லாத வகுப்பறையில் 45 நிமிடங்கள் பாடம் நடத்துவதற்கே ஆற்றல் எல்லாம் கரைந்துவிடும் நிலை இருக்க, நாள் முழுவதும் வெட்ட வெளியில், இரைச்சல் அதிகம் உள்ள இடத்தில், மக்கள் இங்குமங்கும் அமர்ந்திருக்க அவர்களுக்குப் போதிக்கின்றார் இயேசு. நாள் இறுதியில் அவருக்கு சக்தி இருக்க வாய்ப்பேயில்லை. அது போதாதென்று, தன்னிடம் வந்த கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், பிற நோயாளர் என குறைவுள்ளவர்களாய்ச் சந்தித்து அவர்களுக்கு நலம் தருகின்றார். கொஞ்ச நஞ்ச சக்தியும் போய்விட்டது. இப்போது புது பிரச்சினை வருகிறது. மக்களின் பசி.

'உண்பதற்கும் இவர்களிடம் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை' - இயேசுவின் இந்த வார்த்தைகள் ஒரே நேரத்தில் மக்களின் பசியையும், இயேசுவின் பரிவையும் சொல்லிவிடுகின்றன. இயேசு ஒரு நல்ல பார்வை கொண்டவர் (observer). அவர்களிடம் இல்லை என்பதைக் கண்டுகொள்கிறார். 'அவர்களிடம் இல்லை' என்ற வார்த்தைகள் இயேசுவின் சமகாலத்தில் நிலவிய ஏழ்மையையும் தோலுரிக்கின்றன.

பாமரனின் பசியை பரமனின் பரிவு வெல்கிறது.

சீடர்களிடம் ஆலோசனை கேட்கிறார்.

அவர்களோ, இல்லாத ஊருக்கு வழி சொல்கின்றனர். 'இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்க போதுமான உணவு பாலைநிலத்தில் எங்கு கிடைக்கும்?'

இவர்களின் விடையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. சில நேரங்களில் சிலரின் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்.

ஏன்? பாலைநிலத்தில் உணவு கிடைக்காது என்பது இயேசுவுக்குத் தெரியாதா?

கேள்வியை மாற்றுகிறார் இயேசு: 'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' 'ஏழு' 'தரையில் அமருங்கள்.'

அற்புதம் நடந்தேறுகிறது.

எதுவும் இல்லை என்றவர்கள் ஏழு கூடைகள் நிறைய அள்ளுகின்றனர்.

இதுதான், நிறைவு மனநிலை.

நிறைவு நிறைவையே பெற்றெடுக்கும்.

நாலு பேருகிட்ட நாலு நல்ல வார்த்தைகள் சொல்லுங்க. அது அப்படியே நாற்பது மடங்காகத் திரும்பிவரும்.

இன்றைய முதல் வாசகத்தில் (எசா 25:6-10) எசாயா இறைவாக்கினர் மெசியாவின் வருகையின் விருந்தை முன்னுரைக்கின்றார். சாவு, கண்ணீர் என மறைந்து மக்கள் பெருவிருந்தின் மகிழ்ச்சியில் களிப்படைகின்றனர்.

'இவரே ஆண்டவர். இவருக்காகவே நாம் காத்திருந்தோம்.' என பெருமை கொள்கின்றனர்.

யார் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள், 'இவரே அவர். இவருக்காகவே நாம் காத்திருந்தோம்' என்று சொல்கிறார்களோ, அந்த நபரே நிறைவு மனநிலை கொண்டவர். நிறைவு மனநிலை அனைத்தையும், அனைவரையும் நிறைவுள்ளதாக்கும்.

2 comments:

  1. இறைவா அருட்பணி.யேசு குறிப்பிடுகின்ற நிறைவான மனநிலையை எமக்கு தாரும்!ஆமேன்.

    ReplyDelete
  2. " உண்பதற்கு இவர்களிடம் ஒன்றுமில்லை; பட்டினியாய் இவர்களை அனுப்பிவிடவும் மனமில்லை"..... "பாமரனின் பசியை பரமனின் பரிவு வெல்கிறது.எதுவும் இல்லை என்றவர்கள் ஏழு கூடை நிறைய அள்ளுகிறார்கள்". அண்ணல் இயேசுவின் வார்த்தைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்கிறது தந்தை யேசுவின் எண்ண ஓட்டம்." யார் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் 'இவரே அவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்.' என்று சொல்கிறார்களோ,அந்த நபரே நிறைவு மனநிலை கொண்டவர்." யோசிக்க வைக்கும் வார்த்தைகள்.யாரேனும் எனக்காகக் காத்திருக்கின்றனரா?யாருடைய பசியையேனும் என்னால் போக்க முடிகிறதா? என் பதில் எப்பொழுதுமே "ஆம்!" என்றிருக்க இறைவன் அருள் பொழிவாராக! நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக அழகையும்,அர்த்தத்தையும் தாங்கி நிற்கும் தமிழ் வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete