Tuesday, December 11, 2018

கற்றுக்கொள்ளுங்கள்

இன்றைய (12 டிசம்பர் 2018) நற்செய்தி (Mt 11:28-30)

கற்றுக்கொள்ளுங்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே' என்று தன் சமகாலத்தவர்களை நோக்கிப் பேசுகின்றார் இயேசு.

இயேசுவின் உரையாடலில் இரண்டு கட்டளைச் சொற்களும், மூன்று சுட்டுச் சொற்களும் இருக்கின்றன:

கட்டளைச் சொற்கள்: (அ) வாருங்கள், (ஆ) கற்றுக்கொள்ளுங்கள்

சுட்டுச் சொற்கள்: (அ) நான் இளைப்பாறுதல் தருவேன், (ஆ) நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன், (இ) என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது.

'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே' என்னும் வார்த்தைகளை சில அருங்கொடை போதகர்கள், 'பாவச்சுமை' என்று பொருள் கொடுக்கின்றனர். எந்நேரமும் ஏன் பாவத்தைப் பற்றிப் பேச வேண்டும்?

சுமை என்பது இயேசுவின் சமகாலத்தவர் அனுபவத்த அரசியல், பொருளாதார, சமய, சமூக சுமைகளாக இருக்கலாம். இவற்றைக் குறைப்பதற்காகவே இயேசு அவர்களைத் தங்களிடம் அழைக்கின்றார். இயேசுவின் அழைப்பு சுமைகளை அகற்றுவதற்காக அல்ல. மாறாக, அவர்கள் ஏற்கனவே வைத்திருக்கின்ற நுகத்தை அகற்றி, தன் நுகத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளப் பணிக்கின்றார். நுகம் ஏற்காத எந்த மாடும் சோம்பேறி ஆகிவிடும். அதே நேரத்தில் நுகம் அதிகம் அழுத்தினாலும் அது மாட்டின் அழிவிக்குக் கொண்டுபோய் விடும். நெறிக்கின்ற நுகத்தை அகற்றி இனிய நகத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பதாக இருக்கின்றன இயேசுவின் வார்த்தைகள்.

இயேசுவிடம் வருபவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது. அந்த இளைப்பாறுதல் ஒரு பாடசாலையாக மாறுகிறது. ஏனெனில், அந்நேரத்தில்தான் அவரின் கனிவும், மனத்தாழ்மையும் பாடங்களாக மாறுகின்றன.

'கற்றுக்கொள்ளுங்கள்' - இது ஒரு முக்கியமான மேலாண்மையியல் சொல்லாடல்.

கற்றல் என்பது அனுபவித்தல் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது ஒரு பள்ளிக்கூட மனனக் கற்றல் அல்ல. மாறாக, வாழ்க்கைக் கற்றல். வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் நாம் கற்கிறோம். டீக்குடிக்க செல்கிறேன். டீ சுடுகிறது. வாய் புண்ணாகிறது. 'இனி சூடாகக் குடிக்கக் கூடாது' எனக் கற்கிறேன். இந்தக் கற்றல் அடுத்தமுறை நான் டீ குடிக்கும்போது என்னை எச்சரிக்கிறது. ஆக, 'கனிவையும்,' 'மனத்தாழ்மையையும்' கூட நாம் கற்றுக்கொள்ள முடியும். இயல்பாக, நம்மில் இருக்கின்ற 'கரடுமுரடான நிலையும்,' 'ஆணவமும்' மறைய, நாம் கனிவையும், மனத்தாழ்மையையும் கற்றாக வேண்டும்.

பழைய இயல்பு மறைந்து புதிய இயல்பு நம்மைச் சீர்படுத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 40:25-31), எசாயா இறைவாக்கினர், 'ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்' என நம்பிக்கை தரும் ஆறுதலை முன்வைக்கின்றார்.

சில நேரங்களில் மனிதர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை குலையும் போது நம் ஆற்றலும் குறைந்தவிடுகிறது. ஆனால், இதன் எதிர்ப்பதமாக, ஆண்டவர்மேல் வைக்கும் நம்பிக்கை ஒருவருக்குப் புதிய ஆற்றலைத் தருகின்றது. இது பேட்டரியை ரீசார்ஜ் செய்வதுபோல அல்லாமல், புதிய பேட்டரியைப் பொருத்துவதாக இருக்கிறது. மேலும், கழுககள் போல இருப்பார்கள் என்ற உருவகத்தையும் தருகின்றார் எசாயா.

கழுகு ஒரு விந்தையான பறவை. புயல், சூறாவளி போன்ற நேரங்களில் மற்ற பறவைகள் தங்கள் கூடுகளைத் தேடிச் சென்று அடைந்து கொள்ளும். ஆனால், கழுகு புயல் மற்றும் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி யாரும் எட்ட முடியாத உயரத்தை அடையும். ஆக, ஒரு எதிர்மறையான சூழலை நேர்முகமாகப் பயன்படுத்தி நம் வாழ்வின் உச்சம் எட்டுவதற்கு கழுகு ஒரு நல்ல பாடம்.

இதையொத்த உருவகமே இன்றைய பதிலுரைப் பாடலிலும் (காண். திபா 103) தரப்படுகின்றது: 'அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார். உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.'

2 comments:

  1. ஆண்டவர் மேல் வைக்கும் நம்பிக்கை எனக்கு புதிய ஆற்றலை தருகிறது.
    இயேசுவே! இதோ உம்மிடம் வருகிறேன்.எனக்கு உம் கனிவையும் மனத்தாழ்ச்சியையும் கற்றுத்தாரும்.
    எனது நம்பிக்கை எல்லாம் உமது பேரில் வைக்கிறேன்.உம் நுகம் எளிது.
    இப்படி செபிக்க கற்றுத்தந்த, அன்பு யேசுவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நாம் கண்டாலே காத தூரம் ஓட நினைக்கும் ஒரு பறவையே கழுகு.ஆனால் விவிலியத்தில் இது ஒரு விந்தையான பறவையாகப் பார்க்கப்படுகிறது." நம்பிக்கை" எனும் வார்த்தைக்கு ஒரு ஐக்கானாகத் திகழ்கிறது.இந்தக் கழுகுகளைப்போல் இறக்கை விரித்து உயரே செல்லவும்,களைப்படையாமல் ஓடவும்,சோர்வடையாமல் நடக்கவும் என்னில் உள்ள இறைநம்பிக்கை எனக்கு உரமேற்றுவதாக! வாழ்க்கையில் நான் சந்திக்கும் சூறாவளியான நேரங்களில் கூடுகளில் சுருங்கிவிடும் பறவைகள் போலன்றி அந்த சூறாவளியோடு இணைந்து பயணிக்க இறைவன் எனக்கு ஆற்றலைத் தருவாராக! அழகான பல விஷயங்களால் பாசிடிவ் எனர்ஜி தரும் தந்தையை இறைவன் பல உச்சங்களுக்கு இட்டுச்செல்வாராக!!!

    ReplyDelete