Thursday, December 13, 2018

குழந்தைகள் உலகம்

இன்றைய (14 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 11:16-19)

குழந்தைகள் உலகம்

'தெ லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்' என்ற திரைப்படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஹிட்லரின் நாசி ஜெர்மனியில் ஏற்படுத்தப்பட்டிருந்த வதைமுகாம்களில் யூதர்கள் கொடுமையாக நடத்தப்பட்டதை, அவர்கள் கொல்லப்பட்டதைப் பற்றிய திரைப்படம். கதாநாயகன், கதாநாயகி, அவர்களின் மகன் என மூவரும் ஒரு வதைமுகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர். 'நாம் எங்கே போகிறோம்?' என்ற அந்த மகனின் கேள்விக்கு, 'நாம் விளையாடப் போகிறோம். அங்கே நிறைய வகையான விளையாட்டுக்கள் இருக்கும். ஒவ்வொரு விளையாட்டிற்கும் வௌ;வேறு புள்ளிகள் கொடுக்கப்படும். இறுதியில் புள்ளிகள் கூட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்' என்பார் கதாநாயகன். மேலும், படத்தின் ஒவ்வொரு துயரமான நகர்வையும் ஒரு விளையாட்டு போல தன் மகனுக்கு எடுத்துரைக்கும் கதாநாயகனின் அணுகுமுறை மிகவும் இனிமையாக இருக்கும்.

மேலும், வாழ்க்கை துயரமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை நாம் ஒரு விளையாட்டு போல எடுத்துக்கொண்டால் புதிய பார்வை கிடைக்கும் என்ற வாழ்க்கைப் பாடத்தையும் இத்திரைப்படம் சொல்கிறது.

நிற்க.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்துக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு ஒன்றை உருவகமாகப் பயன்படுத்துகிறார் இயேசு:

சந்தை வெளியில் குழந்தைகள் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருப்பர். ஒரு வரிசையில் இருப்பவர் எதிர் வரிசையில் இருப்பவரைப் பார்த்து,

'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை' என்று சொல்ல,

எதிர் அணியினர் அதற்கு ஒத்த மற்றொரு சொல்லாடலைச் சொல்ல வேண்டும்:

'நாங்கள் ஒப்பாரி வைத்தோம். நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று அவர்கள் சொல்ல,

ஒன்றும் சொல்ல முடியாமல் நிற்கும் அணி தோற்றதாகக் கருதப்படும். ஏறக்குறைய நம்ம ஊர் பாட்டுக்குப் பாட்டு போல.

இந்த விளையாட்டில் 'முதல் வாக்கியத்திற்கு' முரணாக 'இரண்டாவது வாக்கியம்' இருக்க வேண்டும்.

இந்த விளையாட்டை நகர்த்திச் செல்வதே 'முரண்' தான்.

திருமுழுக்கு யோவான் வந்தார். அவர் உண்ணவுமில்லை. குடிக்கவுமில்லை. அவரைப் பேய் பிடித்தவன் என்கிறார்கள் மக்கள்.

இயேசு வந்தபோது உண்டார், குடித்தார். ஆனால், அதையும் முரணாகப் பார்த்தனர் மக்கள். ஆகையால், அவரை 'பெருந்தீனிக்காரன்' என்கிறார்கள்.

முரண் இருக்கும் போது விளையாட்டு வேண்டுமானால் இனிமையாக இருக்கும். ஆனால், வாழ்க்கை இனிமையாக இருக்காது.

எப்படி?

'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்கள் சான்று' என நிறைவு செய்கிறார் இயேசு.

ஞானமும் அதன் செயல்களும் முரண்படுவதில்லை.

ஏற்றுக்கொண்ட நம்பிக்கையும், நம்பிக்கையில் ஊற்றெடுக்கும் செயல்களும் முரண்படுவதில்லை.

ஆக, முரண்களைக் களைவதில்தான் ஆன்மீகம் இருக்கிறது.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 48:17-19), 'பயனுள்ளவற்றை உனக்கு கற்பிப்பவரும், செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! ... உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலவும், உன் வெற்றி கடல் அலை போலவும் இருக்கும்' என்கிறார் ஆண்டவர். ஆண்டவரின் நிறைவு நம் நிறைவாக வெளிப்படும். அங்கே முரண் என்பதே இல்லை.

இன்று என் உலகம் எப்படி இருக்கிறது?

என் சொல்-செயல், வார்த்தை-வாழ்வு, இருப்பு-இயக்கம், வெளி-உள் இவற்றில் முரண் இருந்தால் என் உலகம் குழந்தைகள் உலகமாகவே இருக்கும். குழந்தைகள் உலகம் மிகவும் தற்காலிகமானது. விளையாட்டு விரைவாக முடியும். முரண்களும் தற்காலிகானவையாக இருக்கும்.

2 comments:

  1. " ஞானமும் அதன் செயல்களும் முரண்படுவதில்லை.முரண்களைக் களைவதில் தான் ஆன்மீகம் இருக்கிறது" என்று கூறும் தந்தை " முரண் இருக்கும் உலகமே குழந்தைகளின் உலகம் எனவும் அதில் உள்ள முரண்களும் தற்காலிகமானவை" என்கிறார். ஏதோ அவர் விரும்பும் உலகமும் அதுவே என்பது போல் உள்ளது.இதுவே சிறிது முரண்பாடாகத் தோன்றுகிறது.நிரந்தரமோ,தற்காலிகமோ முரண் முரணே! நான் வேண்டுவதெல்லாம் முரண்களே இல்லாத...ஆண்டவரின் நிறைவு, நிறைவாக வெளிப்படும் வாழ்வே! கிடைக்குமா? முயல்கிறேன். ' த லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்'...படம் குறித்த தந்தையின் ஃப்ளாஷ் பேக்கும் அந்தப்படம் நமக்கு எடுத்துரைக்கும் பாடமும் என்றோ படத்தைப்பார்த்த எனக்கு சில மலரும் நினைவுகளைத் தந்தது.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. "முரண்களை களைவதில் தான் ஆன்மீகம்
    இருக்கிறது"பயனுள்ளவற்றை உனக்கு கற்பிப்பவரும், செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!
    உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலவும் , உன் வெற்றி கடல் அலை போலவும் இருக்கும் என்கிறார் ஆண்டவர்.
    ஆண்டவரின் நிறைவு நம் நிறைவாக வெளிப்படும் அங்கே முரண் என்பதே இல்லை.
    அத்தகைய முரண் இல்லா வாழ்வை இறைவா எமக்கு தாரும்!
    நன்றி தந்தை அவர்களே!

    ReplyDelete