Thursday, December 20, 2018

குழந்தை துள்ளிற்று

இன்றைய (21 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 1:39-45)

குழந்தை துள்ளிற்று

மீட்பரின் வருகையை முதல் முதலாக அறிந்துகொண்டது ஒரு தாயின் வயிற்றில் இருந்த குழந்தைதான்.

மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த அதே நேரம், மரியாள் வயிற்றில் உள்ள குழந்தையும், எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தையும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. மகிழ்ச்சி எப்போதும் தொற்றிக்கொள்ளக்கூடியது என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். இபா 2:8-14) பின்புலத்தில் இன்றைய நற்செய்தியைப் புரிந்துகொள்வோம். இனிமைமிகு பாடல் நூலிலிருந்து வெகு அரிதாகவே திருப்பலி வாசகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய இறைவாக்குப் பகுதி தலைவி தன் தலைவனைப் பற்றிக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

'என் காதலர் குரல் கேட்கின்றது. இதோ அவர் வந்துவிட்டார். மலைகள்மேல் தாவி வருகின்றார். குன்றுகளைத் தாண்டி வருகின்றார் ... எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கிறார். பலகணி வழியாகப் பார்க்கிறார். பின்னல் தட்டி வழியாக நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார் ...'

இங்கே, முதற் பொருளில், தலைவி என்பது எலிசபெத்தையும், தலைவர் என்பது மரியாளைக் குறிப்பதாகவும், இரண்டாம் பொருளில், தலைவி என்பது எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தையையும், தலைவர் என்பது மரியாளின் வயிற்றில் உள்ள குழந்தையையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இங்கே என்ன அழகு என்றால்,

காதலர் முதலில் தூரமாக இருக்கிறார்.

பின் மறைந்தும் தெரிந்தும் இருக்கிறார்.

பின் அருகில் நின்று பேசுகின்றார்.

இவ்வாறாக, தூரத்திலிருந்து புறப்படும் காதலனின் நெருக்கத்தைப் பதிவு செய்கிறது முதல் வாசகம். தூரமாய்த் தெரிந்த கிறிஸ்து இன்று வெகு அருகில் இருக்கிறார்.

அவர் என்னருகில் இருப்பது என்னில் மகிழ்வைத் தூண்டி எழுப்புகிறதா?

தலைவியின் மகிழ்ச்சி தலைவனில். என் மகிழ்ச்சி அவரில்.

2 comments:

  1. Extremely different interpretation...
    Which only Rev.Dr.Yesu Karunanidhi,
    can do...I believe...
    அவர் நம்மருகில் இருப்பது எத்துணை மகிழ்ச்சி என்பதில் ஐயமும் உளதோ?
    No... Only thing We have to allow HIM to be near us always!
    Thank you.

    ReplyDelete
  2. கருத்தொருமித்த இரு மனித மனங்கள் இணையுமிடத்தில் ஒரு 'இறைப்பிரசன்னம்' பிறக்கிறது எனில்,இறையும் மனிதமும் இணையுமிடத்தில் ' துள்ளல்' பிறப்பது ஒரு விடயமா என்ன? எலிசபெத்தையும்,அவள் வயிற்றின் குழந்தையையும் தலைவியாகவும்,மரியாவையும் அவள் வயிற்றின் குழந்தையையும் தலைவனாகவும் தந்தை வரித்திருப்பது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் சக்தி "ரொமான்சுக்கு" உண்டு என்பதைக்காட்டுகிறது.தூரத்தில் இணையும் காதலர்களின் நெருக்கத்தை என்னை நோக்கி வரும் இயேசுவிலும் காண்கிறேன்.கண்டிப்பாக என் மகிழ்ச்சி அவரில் சங்கமிக்க விழைகிறேன். அழகான கவிதை படைத்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete