Wednesday, December 12, 2018

அஞ்சாதே

இன்றைய (13 டிசம்பர் 2018) முதல் வாசகம் (எசா 41:13-20)

அஞ்சாதே

கடந்த சில நாள்களாக எசாயா இறைவாக்கினர் நூலிலிருந்து முதல் வாசகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். மெசியாவின் வருகை மற்றும் அந்த வருகையின்போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி இறைவாக்குரைக்கின்றார் எசாயா.

'அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன் ... யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே அஞ்சாதிரு. நான் உனக்குத் துணையாய் இருப்பேன்.' என ஆறுதல் தருகிறார் எசாயா.

புழு மற்றும் பொடிப்பூச்சி - வலுவின்மையின் உருவகங்கள் இவை.

இவைகளால் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள முடியுமே தவிர, அதைத் தாண்டி வேறு எதுவும் இவைகளால் செய்ய முடியாது. மேலும், இவை தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அடுத்தவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். மேலும், சில நேரங்களில் மற்றவர்கள் தவறாக இவற்றின் மேல் மிதித்தாலும் இவைகள் இறந்துவிடும்.

இப்படிப்பட்ட வலுவின்மையைக் கடவுள் வல்லமையாக மாற்றுவதாகச் சொல்கின்றார். எப்படி?

'நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கூர்மையாக்குவேன். நீ மலைகளைப் பேராடித்து நொறுக்குவாய். குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.'

போரடிக்கும் குச்சியைப் பார்த்ததுண்டா?

தட்டைப் பயிறு, பாசிப் பயிறு போன்ற பயிறு வகைகள் காய்ந்தவுடன், அவற்றைக் களத்தில் போட்டு ஒரு குச்சி அல்லது கட்டையால் தட்டுவர். போரடிக்கும் கட்டைகள் வலிமை கொண்டவை. அவற்றைக் கவனமகக் கையாண்டால்தான் பயிறு வகைகளை எடுக்க முடியும். புழு, பூச்சியாக இருந்த இஸ்ரயேலை போரடிக்குக் குச்சியாக மாற்றுகிறார் இறைவன். மேலும், இக்குச்சியின் வலிமை எப்படி இருக்கிறது என்றால், இக்குச்சிகளைக் கொண்டு மலைகளைப் போரடிக்க முடியும்.

வலிமையற்ற ஒன்று இறைவனின் அருள்கரத்தால் வலிமை பெறுகிறது.

இதையொட்டியே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (காண். மத் 11:11-15), விண்ணரசில் சிறியவரைப் பெரியவர் என அழைக்கிறார் இயேசு.இதுவும் இறைவனின் அருள்கொடையே.

2 comments:

  1. "வலு".... இது எதை வைத்து வரையறுக்கப்படுகிறது? ஆட்களுக்கேற்றாற்போல்,இடத்திற்கேற்றாற் போல்,உடல் கூறுக்கு ஏற்றாற் போல் மாறக்கூடியது. இங்கு தந்தை குறிப்பிடும் 'வலு'உடல் வலிமையைக் குறி வைப்பது போல் உள்ளது.புழு,பூச்சி.. இரண்டுமே சிறு ஜந்துக்கள்.இவற்றிற்குப் 'பொடி'எனும் அடைமொழி வேறு! வலு எனும் வார்த்தையின் உச்சரிப்பே வலுவிழந்து காணப்படுகிறது." இவற்றுக்கே போரடிக்கும் படியான கூர்மையையும்,மலைகளையும்,குன்றுகளையும் தவிடுபொடியாக்கும் படியான சக்தியையும் தரும் இறைவன் 'வலுவிழந்த என்னையும் தன் அருள்கரத்தால் தூக்கி நிறுத்துவார்' .....நிறைவான வார்த்தைகள்.அதுமட்டுமல்ல.." விண்ணரசில் மிகச்சிறிய வரும் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவரே' என்று கூறும் நற்செய்தி வாசகமும் என் வலிமை என்ன என்று பறைசாற்றுகிறது.வலுவா....வலுவின்மையா.... கொடுப்பவரும் அவரே! களைபவரும் அவரே!நம்மை நின்று,நிதானத்துடன் காக்கும் இறைவனின் வார்த்தைகள்..." அஞ்சாதே! நான் என்றும் உன்னோடு!" அசரீரியாய் ஒலிக்கின்றன தந்தையின் குரலில். நன்றியும்!!வாழ்த்தும்!!!

    ReplyDelete
  2. "வலிமையற்ற ஒன்று இறைவனின் அருட்கரத்தால் வலிமை பெறுகிறது"
    இறைவா! வலுவற்ற எனை உம் தயவால் வலுவூட்டும்.
    நன்றி

    ReplyDelete