Friday, December 21, 2018

அன்னாவும் மரியாவும்

இன்றைய (22 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 1:46-56)

அன்னாவும் மரியாவும்

வானதூதர் கபிரியேல் தனக்கு மங்கள வார்த்தை சொன்னதும், அய்ன் கரீம் என்ற மலைநாட்டில் குடியிருக்கின்ற தன் உறவினர் எலிசபெத்தைச் சந்திக்கச் செல்கின்றார் மரியா. மரியாவும், எலிசபெத்தும் பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டபின் மரியா இறைவனைப் புகழ்ந்து பாடும் பாடலே இன்றைய நற்செய்தி வாசகம். மரியாவின் பாடல் ஏறக்குறைய முதல் ஏற்பாட்டு அன்னாவின் பாடலை ஒத்திருக்கிறது (காண். 1 சாமு 1, 2) என்பதும், மரியாவின் பாடல் வரிக்கு வரி முதல் ஏற்பாட்டுப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதும், மரியா இப்படி ஸ்பொன்டேனியஸாக பாடியிருக்க வாய்ப்பில்லை என்பதும், இது நற்செய்தியாளரின் உருவாக்கமே என்பதும் விவிலிய அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து.

ஆனால், மரியாவின் மனதின் உச்சகட்ட மகிழ்ச்சியில் அவருடைய உள்ளம் ஏதோ ஒரு பாடலைப் பாடத்தான் செய்திருக்கும். நாம் அதிகமாக சோகமாக இருக்கும்போதும், அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கும்போது நம் கண்கள் கண்ணீர் வடிப்பது போல, நம் உள்ளம் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுக்கின்றது.

'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது' என்று பாடுகிறார் மரியா.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 சாமு 1:24-28) அன்னா தன் குழந்தை சாமுவேலை இறைவனிடம் காணிக்கையாக்கும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

மரியா, அன்னா - இந்த இருவருக்கும் பொதுவான ஒன்று இருக்கிறது.

இருவருக்குமே அதிசயிக்கத்தக்க ஒன்று நடக்கிறது. ஆனால், அப்படி நடந்தவுடன் அவர்கள் ஊருக்குள் ஓடி, 'உங்களுக்கு ஒன்னு தெரியுமா? ... அப்படியாக்கும் ... இப்படியாக்கும்' என்று மார்தட்டிக் கொள்ளாமல், இறைவனை நோக்கி ஓடுகின்றனர்.

அதாவது, அடுத்தவர்களுக்குத் தங்களையே நிரூபிக்கும் எண்ணம் இவ்விரண்டு பேருக்கும் இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறது. சில நேரங்களில் நான் நினைப்பேன். 'நான் நல்லவனாக இருக்க விரும்புவதும்' கூட அடுத்தவரை திருப்திப்படுத்தும் எண்ணத்தில்தான் இருக்கிறது என்று. அதாவது, என்னைப் பார்ப்பவர்கள், 'இவன் நல்லவன்' என்று சொல்வதற்காகவே நான் நல்லவனாக இருப்பதுபோல.

'அடுத்தவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?' என்ற எண்ணமே பல நேரங்களில் கடவுளைப் பற்றிய நம் எண்ணத்தை நம்மிடமிருந்து அகற்றிவிடுகிறது.

ஆக, என்னை மறந்து, அடுத்தவர் மறந்து, இறைவன் நினைவை என்றும் கொள்ள நம்மை அழைக்கின்றனர் அன்னாவும் மரியாவும்.

3 comments:

  1. உண்மையே! நம் உச்சகட்ட மகிழ்ச்சியிலும்,சோகத்திலும் நம் கண்கள் கண்ணீர் சொறிவது போல நம் மனமும் ஏதோ ஒரு பாடலை முணுமுணுக்கும் என்பது உண்மையே!" ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது" என்று மரியாவின் மனம் மட்டுமா பாடியிருக்கும்? அன்னாவின் மனமும் கூடத்தான்.இறைவனிடமிருந்து நல்லதைப்பெற்றுக்கொண்ட இருவருமே இறைவனுக்கு நன்றி கூறுகின்றனர் என்கிறது பதிவு. எனக்கும் ஒரு நல்லது நடக்கையில் என்னை மறந்து,அடுத்தவரை மறந்து,இறைவன் நினைவை என்றும் கொள்ள நம்மை அழைக்கும் அன்னாவுக்கும்,மரியாவுக்கும் செவி கொடுப்போம்.

    நெல்லுக்கு நாம் பாய்ச்சும் நீர் புல்லையும் வளர்ப்பது போல் இறைவனை மகிழ்ச்சிப்படுத்த நான் செய்யும் ஒரு காரியம் அடுத்தவரையும் மகிழ்விப்பதில் என்ன தப்பு? தந்தை கொஞ்சம் யோசிக்கலாம்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் இல்லையா? என் வாழ்வின் வளமைக்கு இறைவன் மட்டுமே காரணம் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்த தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
  2. அதிசயிக்கத்தக்க ஒன்று நிகழ்ந்த போது,இறைவனை நோக்கி விரைந்த, அன்னா, மரியாள் போல் உம் நிறைவை யாம் என்றும், எப்பொழுதும்,தாங்கி செயல்பட, இறைவா! உயிருள்ள தாரும்...
    நன்றி.முனைவர்.அருட்பணி யேசு...

    ReplyDelete
  3. *உம் நினைவை , யாம் என்றும் ,எப்பொழுதும் , தாங்கி செயல்பட, இறைவா! உமதருள் எமக்கு தாரும்...

    ReplyDelete