Sunday, December 16, 2018

ஐந்து பெண்கள்

இன்றைய (17 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 1:1-17)

ஐந்து பெண்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கின்றோம். இத்தலைமுறை அட்டவணையை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பதிவு செய்கின்றனர். இரண்டு பேருக்கும் இரண்டு முக்கிய வித்தியாசங்கள் உள்ளன: (அ) மத்தேயு இயேசுவின் தலைமுறையை ஆபிரகாமோடு நிறுத்திக்கொள்கிறார். லூக்காவோ ஆதாம் வரை நீட்டுகின்றார். (ஆ) மத்தேயுவின் அட்டவணை பழைமையில் தொடங்கி (ஆபிரகாம்), புதுமையில் (இயேசு) முடிகிறது. லூக்காவின் அட்டவணை புதுமையில் (இயேசு) தொடங்கி, பழமையில் (ஆதாம்) முடிகிறது.

இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பது மத்தேயு எழுதிய தலைமுறை அட்டவணை. இயேசுவின் தலைமுறையை மூன்று முறை 14 தலைமுறைகள் என முன்வைக்கின்றார். எண்கள் மூன்றும், பதினான்கும் நிறைவைக் குறிப்பவை.

இன்றைய நம் சிந்தனைக்கு இத்தலைமுறை அட்டவணையில் வரும் பெண்களை எடுத்துக்கொள்வோம். தலைமுறை அட்டவணை (விவிலியம் மற்றும் வரலாறு) வழக்கமாக ஆண்களின் பெயர்களைத்தான் கொண்டிருக்கும். ஆனால், மத்தேயு தன் அட்டவணையில் ஐந்து பெண்களின் பெயர்களைச் சேர்க்கின்றார்: (1) தாமார், (2) இராகாபு, (3) ரூத்து, (4) உரியாவின் மனைவி, மற்றும் (5) மரியா.

இவர்கள் யார்? மெசியாவின் தலைமுறை அட்டவணையில் இடம் பெறும் அளவுக்கு இவர்கள் செய்தது என்ன?

1. தாமார்
தாமார் பெரேட்சு மற்றும் செராவைப் பெற்றெடுக்கின்றார். இவரின் கதையை நாம் தொநூ 38ல் வாசிக்கின்றோம். யாக்கோபின் 12 மகன்களில் ஒருவரான யூதாவின் மருமகள் இவர். தாமாரின் கணவன் இறந்துவிடுகின்றார். அவர்கள் வழக்கப்படி கணவனின் தம்பியர் இவரை மணந்து குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும். ஆனால், யூதா தன் மகன்களை இவருக்கு மணமுடித்துக் கொடுக்கத் தயங்குகின்றார். ஆக, இவர் தன்னையே ஒரு விலைமாது போல உருமாற்றிக் கொண்டு சாலை ஓரம் அமர்ந்திருக்கிறார். ஆட்டுக்கு உரோமம் கத்தரிக்க வந்த தாமார் இவர் ஒரு விலைமாது என நினைத்து உடலுறவு கொள்கிறார். தாமார் கருத்தரிக்கிறார். 'உன் மருமகள் கருவுற்றிருக்கிறார்' என்று சொல்லப்பட்டபோது, தங்கள் சட்டப்படி அவர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்று எழும்போது, தன் கருவுக்குக் காரணம் யூதா என மொழிகிறார் தாமார். தாமாரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகின்றார் யூதா. தன் மாமனாரின் தவறைச் சுட்டிக்காட்டுவதோடு, தன் புத்திசாலித்தனத்தால் தன் கணவனின் சந்ததியை வாழ வைக்கின்றார். (ஆனால்! பெண்கள் எது செய்தாலும் அதைப் புத்திசாலித்தனம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது! மருமகளுக்கும் விலைமாதுக்கும் வித்தியாசம் தெரியாமலா உறவு கொண்டார் யூதா? கடவுளின் செயல்களை விந்தை என்று நினைத்து அமைதி காப்பதே நலம்!)

2. இராகாபு

இவரை நாம் யோசுவா 2 மற்றும் 6ஆம் அதிகாரங்களில் சந்திக்கின்றோம். எரிக்கோ நகரைக் கைப்பற்றுமுன் அந்நகரின் நெளிவு சுளிவுகளைக் கண்டறிய ஒற்றர்களை அனுப்புகிறார் யோசுவா. ஒற்றர்கள் புத்திசாலிகள். அவர்கள் நேராக அந்நகரின் விலைமாதின் வீட்டிற்குச் செல்கின்றனர். ஏனெனில், விலைமாதுக்கு நகரின் அனைவரையும், அனைத்தையும் தெரியும். ஆண்கள் பொதுவாக 'அந்த' நேரத்தில் பெண்கள் எதைக் கேட்டாலும் சொல்லி விடுவார்கள். 'இராகாபு' என்றால் 'அகன்ற தெரு' என்று பொருள். ஆக, விலைமாதின் 'வீடு' ஒரு தெரு போல அனைவரும் போய், வருகின்ற இடமாக இருக்கிறது. விபச்சாரம் அல்லது விலைமாதுக்கள் திருமணம் என்ற நிறுவனத்தைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது சமூக அறிவியல் பாடம். இந்தப் பெண்ணும் புத்திசாலி. இஸ்ரயேலின் கடவுளின் வல்லமையை ஏற்றுக்கொள்கின்றார். மேலும், தான் கொடுத்த தகவலுக்குக் கைம்மாறாக தன் வீட்டையும், தன் தாயையும் காப்பாற்றுமாறு கோரிக்கை வைக்கின்றார். நிகழ்வுகளையும், நேரங்களையும் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வதில் பெண்கள் கில்லாடிகள். இவ்வளவு காலம் தனக்கு 'சோறு' போட்ட எரிக்கோ மக்களையும், நகரத்தையும் காட்டிக்கொடுக்கின்றார். 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற தத்துவத்திற்கு இராகாபு நல்ல எடுத்துக்காட்டு. இது கடவுளின் திருவுளம். நோ கமெண்ட்ஸ்.

3. ரூத்து

இவர் மோவாபு நாட்டைச் சேர்ந்த ஒரு புறவினத்துக் கைம்பெண். தன் மாமியார் நகோமி மேல் கொண்ட அன்பால் அவரைப் பின்பற்றுகிறார். யாரும் இல்லாத ஓர் இரவில் எருசலேமின் மிகப் பெரும் பணக்காரரான போவாசு குடி போதையில் களத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்தவரின் போர்வையை விலக்கி அவரோடு படுக்கின்றார் ரூத்து (ரூத் 3:7) அன்று இரவு அவர்களுக்கிடையே ஒன்றும் நடக்கவில்லை என்றுதான் விவிலியம் சொல்கிறது. போவாசையே கணவராக்கி அவர் வழியாக குழந்தை பெற்றுக்கொள்கின்றார். இவரின் அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கம் போற்றுதற்குரியது.

4. உரியாவின் மனைவி

பின் மாலை நேரத்தில் - மதியம் கடந்த பின் - குளித்துக் கொண்டிருந்தவர் இவர் (2 சாமு 11:2). தாவீது பார்க்க வேண்டும் என்று இவர் குளித்தாரா, அல்லது இவரைப் பார்க்க வேண்டும் என்று தாவீது மொட்டை மாடிக்கு வந்தாரா என்று தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். செய்யக் கூடாததை செய்யக் கூடாத நேரத்தில் செய்தால் பிரச்சினை என்பதற்கு உரியாவின் மனைவி பெத்சேபா எடுத்துக்காட்டு. இவரும் ஒரு புறவினத்துப் பெண். தாவீது இவரோடு உறவு கொள்கின்றார். இவர் கருவுற்றதை தாவீது அறிந்த உரியாவை அதற்குக் காரணமாக்க நினைக்கிறார். ஆனால், விதி வேறு மாதிரி இருக்கிறது. உரியாவைக் கொலையும் செய்கின்றார் தாவீது. இந்நிகழ்வில் பெற்ற குழந்தை இறந்துவிடுகிறது (2 சாமு 12:16-23). ஆனால், இவர் வழியாகவே சாலமோன் பிறக்கிறார். தன் மகன் சாலமோனை அரசனாக்கி காரியம் சாதிக்கின்றார் (காண். 1 அர 1:11-53). தான் ஒரு பலிகடா ஆக்கப்பட்டாலும், சமயம் பார்த்து தலைவி ஆகிறார் பத்சேபா.

5. மரியா

இவரை ஓர் இளம்பெண்ணாக அறிமுகம் செய்கிறார் மத்தேயு. கிறிஸ்து பிறப்பு நிகழ்வின், மீட்பு வரலாற்றின் கதாநாயகி இவர். 'கணவனை அறியாமலேயே' கடவுளின் ஆவியால் கருவுறுகிறார் மரியா. ஆனால், தான் கருவுற்றிருப்பதை தன் துணைவர் யோசேப்புக்கு இவர் தெரிவிக்கும் விதம் அருமை. 'உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என சரணடைகின்றார் மரியா.

மேற்காணும் ஐந்து பெண்களும் மெசியாவின் தலைமுறை அட்டவணைக்குள் நுழையக் காரணம் அவர்களின் நம்பிக்கையே. தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளையும் தாண்டி அவர்கள் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தனர். கடவுள் மௌனமாக இருந்தாலும், கடவுள் தங்கள் வாழ்க்கை என்ற படகைப் புயலில் சிக்க வைத்தாலும், கடவுள் தூரமாகத் தெரிந்தாலும், இவர்கள் அவரின் விரலை இறுகப் பிடித்துக்கொண்டனர்.


2 comments:

  1. பொதுவாக குடும்பங்களில் பகிர்ந்து கொள்ளத் தயங்கும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை, அதில் வரும் பெண்களின் மேன்மை கருதி நமக்குப் படைத்திருக்கிறார் தந்தை. தந்தை குறிப்பிடும் இந்த ஐந்து பெண்களில் 'மரியா' தனித்து நிற்கிறார்..... இவருடன் போட்டி போட யாருமே இல்லை என்பது போல.மீதமுள்ள நான்கு பெண்களில் மட்டுமல்ல...பழைய ஏற்பாட்டில் வரும் அத்தனை பெண்களிலுமே என்னைக்கவர்ந்தவர் இந்த 'ரூத்து' மட்டுமே.கணவனை இழந்தபின்னும், தன் பிறந்த வீட்டிற்குப்போனால் தன் ஏழ்மை நிலை மாறுமென்று தெரிந்தும் அதை விரும்பாமல் தன் விதவை மாமியாருக்கு பக்க பலமாக ஏழ்மையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த விதம் இன்றைய கூட்டுக்குடும்பங்களை வெறுத்து ஒதுக்கும் நவநாகரிகப் பெண்களுக்கு ஒரு பாடம்.மற்றபடி புதிய ஏற்பாட்டின் மரியா...." உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்".., இதற்கு மேலும் வார்த்தைகள் உண்டா இவரின் மேன்மையை விளக்க? இன்றையக் கதாநாயகிகளில் காணும் தந்தை குறிப்பிடும் " நம்பிக்கை"... " கடவுள் மௌனமாக இருந்தாலும்,தங்கள் வாழ்க்கைப்படகைப் புயலில் சிக்க வைத்தாலும்,கடவுள் தூரமாகத் தெரிந்தாலும்,இவர்கள் அவரின் விரலை இறுகப் பிடித்துக்கொண்டனர்." அடுத்து என்ன? என்ற நிலை தெரியாமல் நிற்கும் பெண்களுக்கு ஒரு நங்கூரம் போல் வரும் தந்தையின் வார்த்தைகளுக்காக அனைத்து மகளிர் பேராலும் ஒரு " நன்றி" யைக் காணியாக்குகிறேன்.இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete
  2. அனைத்தும் இறை திருவுளம்...
    No comments!

    ReplyDelete