Tuesday, December 25, 2018

எதிர்த்து நிற்க இயலவில்லை

இன்றைய (26 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 10:17-22)

எதிர்த்து நிற்க இயலவில்லை

இன்று திருத்தொண்டர் ஸ்தேவானின் (முடியப்பர்) திருநாளைக் கொண்டாடுகிறோம்.

மனித இனம் தவிர எந்த விலங்கு அல்லது பறவை இனமோ தன் இனத்தைத் தானே கொல்வதில்லை என்றே நினைக்கிறேன். கோழி மற்றொரு கோழியால் கொல்லப்பட்டதையோ, ஒரு நாய் மற்றொரு நாயைக் கொல்வதையோ நாம் கேள்விப்பட்டதில்லை. சில விலங்கினங்கள் தங்கள் குட்டிகளைத் தாங்களே தின்றுவிடுவது என்பது விதிவிலக்காக இருக்கலாம்.

கிறிஸ்து பிறப்பில் இறைவன் மனிதனாக வந்து மனிதனின் மாண்பை நமக்குக் காட்டினார்.

ஆனால், இன்று நாம் கொண்டாடும் ஸ்தேவானின் மறைசாட்சிய நிகழ்வில் ஒரு மனிதர் தன் சக மனிதர்களால் கொல்லப்படுகின்றார். நாம் வாழும் சிறிய இல்லத்தில் அல்லது குழுமத்தில் அல்லது சமூகத்தில் நமக்குப் பிடிக்காத நபரை நாம் வார்த்தைகளால் கொன்றழிக்க முனைகின்றோம். அதுவும் முடியாதபோது, 'அவருடன் நான் இனி பேசப்போவதில்லை' என்று அவர் நம் வாழ்விலிருந்து அகன்றுவிட்டதாக வைக்கிறோம். இதுவும் ஒரு மினி கொலை முயற்சியே.

ஸ்தேவான் ஏன் கொல்லப்படுகின்றார்?

'அவர் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அரும்செயல்களையும், அடையாளங்களையும் செய்து வந்தார்'

'அவரது ஞானத்தையும் தூய ஆவி வழியாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை'

இவ்வாறாக, ஸ்தேவானின் செயல்களோடும் அவர்களால் போட்டி போட முடியவில்லை. அவருடைய சொற்களோடும் போட்டி போட முடியவில்லை.

விளைவு, பொறாமை.

அவர்களின் பொறாமை அடுக்கடுக்காக வெளிப்படுகிறது:

முதலில், உள்ளம் கொதித்தெழுகிறார்கள். ஆக, மூளைதான் கொலையின் ஊற்று.

இரண்டாவதாக, பற்களை நறநறவெனக் கடிக்கிறார்கள். கோபத்தின் வெளிப்பாடு.

மூன்றாவதாக, ஒருமிக்க ஸ்தேவான்மேல் பாய்கிறார்கள்.

ஆக, கொலை என்பது வெறும் உடல் செயல் அல்ல. மாறாக, அது உள்ளத்தில் எழுகின்ற உள்ளச் செயல். ஒருவர் முதலில் தன் மனத்தில் ஒருவரைக் கொலை செய்கின்றார். பின் வெளிப்புறத்தில் நடந்தேறுவது வெறும் செயலே.

ஆனால், ஸ்தேவான் பக்கம் இருந்து பார்க்கும்போது அவர் முழுக்க முழுக்க கையறுநிலையில் இருக்கின்றார். அரும் செயல்களும், ஞானமிகு சொற்களும் பேசும் அவரால் தன்னைத் தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் உடல் பலம் இல்லை. அருளையும், ஞானத்தையும் கொடுத்த கடவுள் அவருக்கு அதைக் கொடுக்கவில்லை.

நீதிமான் ஒருவர் பாவிகளின் கையில் அகப்பட்டு இறப்பதை மறைசாட்சியம் என்று கொண்டாடும் நாம் பல நேரங்களில் அந்தப் பாவிகளைத் தண்டிக்க முனைவதில்லை.

மறைசாட்சியம். பொறாமையின் மறுபக்கம்.

3 comments:

  1. புனித.ஸ்தோவான்....முதல் வேத சாட்சி.அவர் கொல்லப்படக் காரணம்..."அவரிடம் இருந்த வல்லமையும் ,மக்களிடையே அவர் செய்த அருஞ்செயல்களும், அடையாளங்களும்" என்கிறார் தந்தை.ஒரே வார்த்தையில் சொல்வதெனில் "பொறாமை". பொதுவாக நாம் ஒருவர் உடலளவில் அழிக்கப்படுவதையே கொலை என்கிறோம்.கையறு நிலையில் இருக்கும் ஒருவர் அடுத்தவரின் பொறாமை காரணமாக உள்ளம் நொறுக்கப்படுவதை நாம் கண்டு கொள்வதில்லை.ஸ்தோவானுக்கு "அருளையும்,ஞானத்தையும் கொடுத்த இறைவன் உடல்பலத்தைக் கொடுக்கவில்லை" கண்களைக் கசியவைக்கும் வார்த்தைகள்.உண்மைதான்...நீதிமான் ஒருவர் பாவிகளின்கையில் அகப்பட்டு இறப்பதை மறைசாட்சியம் என்று கொண்டாடும் நாம் பல நேரங்களில் அந்தப்பாவிகளைத்தண்டிக்க முடிவதில்லை.....இதுவும் கூட கையறுநிலையே! " உங்கள் ஆன்மாவைக்கொல்பவர்களுக்கன்றி உங்கள் உயிரைப்பறிப்பவர்கள் குறித்துப் பயப்பட வேண்டாம்" இந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வரும் வார்த்தைகள்...நேற்றைய தினத்தின் மகிழ்ச்சி மறைவதற்குள் மனத்தைக் கனமாக்கும் வார்த்தைகள். இதுதான் வாழ்க்கை....உணரச்செய்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. மினி கொலை முயற்சிகளை வாழ்வின் சிறிய நிகழ்வுகளில் இனி நிச்சயமாக தவிர்க்கிறோம்.
    பதிவு...நன்று...முனைவர்.அருட்பணி யேசு அவர்களே....

    ReplyDelete