Tuesday, December 18, 2018

எனக்கு எப்படித் தெரியும்?

இன்றைய (19 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 1:5-25)

எனக்கு எப்படித் தெரியும்?

இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகளில் கடந்த இரண்டு நாள்களாக மத்தேயு நற்செய்தியை வாசித்தோம். இன்று முதல் லூக்கா நற்செய்தியை வாசிக்கின்றோம். லூக்காவின் நற்செய்தி இயேசுவின் பிறப்போடு தொடங்காமல், அவருடைய குரலாக அல்லது அவருக்கு முன் சென்ற திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வோடு தொடங்குகிறது.

முதன்மையானவர்கள் மற்றும் மேன்மையானவர்களின் பிறப்பெல்லாம் முன்னறிவிக்கப்படும் என்பது வரலாறு. நன்றாக வீட்டில் கேட்டுப்பாருங்கள். உங்கள் மற்றும் என் பிறப்பும் கூட முன்னறிவிக்கப்பட்டிருக்கலாம். இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீத 13:2-7, 24-25) நீதித்தலைவர் சிம்சோனின் (சாம்சன்) பிறப்பு முன்னறிவிப்பை வாசிக்கக் கேட்கின்றோம். சிம்சோனின் பிறப்பு அவருடைய தாய்க்கு முன்னறிவிக்கப்படுகிறது. அவர் பெண் என்ற காரணத்தாலும், மேலும் அவர் நல்ல பெண் என்ற காரணத்தாலும், அவர் எளிமையாக இருந்ததாலும் இறைவனின் செய்தியை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். பிறக்கப்போகும் சிம்சோன் கடவுளுக்கான நாசீராக இருப்பார் என்று அங்கே சொல்லப்படுகிறது.

ஆனால், இங்கே சக்கரியா ஆண் என்ற காரணத்தாலும், அவர் வயது வந்தவர் என்ற காரணத்தாலும், எல்லாருக்கும் மேலாக குரு என்ற காரணத்தாலும் இறைவனின் செய்தியை ஏற்க மறுக்கின்றார். ஆண், வயது வந்தவர், குரு - இந்த மூன்று பேரையும் நீங்கள் எளிதாக நம்ப வைக்க முடியாது. மேலும், இந்த மூன்றும் ஒரே நபராக இருந்தால் எவ்வளவு கடினம்?

முதலில் சக்கரியாவையும், எலசபெத்தையும் வாசகருக்கு அறிமுகம் செய்கின்றார் லூக்கா: 'அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்துவந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை. ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும், அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.'

ஒரே நேரத்தில் அவர்களின் அக மற்றும் புற குணநலன்களைச் சொல்கின்றார் லூக்கா. நல்லவர்கள் அவர்கள். ஆனால், குழந்தையில்லை. அதற்கு எலிசபெத்து ஒரு காரணம். சக்கரியாவின் வயது வந்த நிலையும் ஒரு காரணம்.

ஆக, ஒரு குழந்தையின்மை என்னும் பிரச்சினை. ஆனால், அந்தப் பிரச்சினைக்கான மனித வழிகள் அடைபட்டுக் கிடக்கின்றன. இது சக்கரியாவுக்குத் தெரியும். கடவுள்தான் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியும் என்பதும் தெரியும். இப்படித் தெரிந்தும், அவர், 'எப்படி?' எனக் கேட்டதால்தான் வானதூதரால் ம்யூட் செய்யப்படுகின்றார். ஆனாலும் அவர் பாவம்! மரியாளும் 'எப்படி?' என்றுதான் கேட்டார். ஆனால், அவருக்கு ம்யூட் செய்யவில்லை வானதூதர். பெண்ணைக் கண்டால் பேயும் இரங்கும் என்பார்கள். வானதூதர் என்ன விதிவிலக்கா?

சக்கரியா ஒரு குரு. ஆண்டவரின் இல்லத்திற்குள் சென்று தூபம் காட்ட அவருக்கு சீட்டு விழுகின்றது. இது முதல் அதிர்ஷ்டம். நிறையக் குருக்கள் இருந்ததால் இப்படிச் சீட்டுப் போட்டுதான் அவர்கள் தூபம் இடுபவரைத் தேர்ந்தெடுப்பர். தூபம் இடுவது என்பது ஆடு வெட்டுவதுபோல கடினமான வேலை. இன்று நம் கோவிலில் அருள்பணியாளர் தொட்டும் தொடாமல் இடும் சாம்பிராணி போன்றது அல்ல அது. மாறாக, சக்கரியா நெருப்பின் சூட்டில் நிற்க வேண்டும். விறகுக் கட்டைகளை எடுத்து அடுக்கி நெருப்பு உண்டாக்க வேண்டும். அந்த நெருப்பு கங்காக ஆகும் நேரத்தில் அதை அணைக்க வேண்டும். பின் அதில் சாம்பிராணி இட வேண்டும். அந்தப் புகையின் வாட்டத்தைத் தாங்க வேண்டும். இப்படி அவர் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். லேவியர்கள் சிலர் அவருக்கு உதவி செய்வர்.

இந்த ஒரு பதற்றமான வேலைப் பளுவின் நடுவில்தான் வானதூதர் தோன்றுகிறார். ஆக, இறைவனின் வெளிப்பாடு நாம் அதிக வேலைப் பளுவோடு இருக்கும்போதுதான் வரும். (ஆனால், மரியா வீட்டில் ஓய்ந்திருக்கும்போது அவருக்கு வெளிப்பாடு வருகிறது. கடவுளின் வழிகள் ஊகத்திற்கு அப்பாற்பட்டவை). கபிரியேல் ரொம்பவும் ஸ்ரெயிட்: 'அஞ்சாதீர். உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீரும் மகிழ்வீர். அவர் இப்படி இருப்பார் ...' அவர் முடித்தவுடன், 'எப்படிப்பா தம்பி?' என்று கேட்டுவிடுகிறார். பேச்சற்றவராகிவிடுகிறார். ஆக்கப்படுகிறார்.

இதற்கிடையில் அடுத்த ஆள் உள்ளே அனுப்பப்பட வேண்டும். அவருக்குத் தாமதமாகிறது. அங்கே வந்து சேர்கிறார் சக்கரியா. 'ஏன்ப்பா லேட்டு?' 'ப ப ப' என்கிறார். பேச்சு வரவில்லை. ஆனால், மக்கள் புத்திசாலிகள். அவர் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என உணர்ந்து கொள்கிறார்கள். மேலும், பணி முடிந்து வீடு திரும்புகிறார். எப்படி எலிசபெத்துக்குச் சொல்லி புரியவைத்தார் என்று தெரியவில்லை. எலிசபெத்து கருவுறுகின்றார். 'ஆண்டவர் என்மேல் அன்பு கூர்ந்தார்' (அதாவது, 'யோவான்') எனத் துள்ளிக் குதிக்கிறார் எலிசபெத்து.

மிக அழகான கதையாடல்.

இவை நமக்குத் தரும் பாடங்கள் மூன்று:

அ. கடவுள் பார்வையில் நாம் நேர்மையானவர்களாய் இருந்தால் அவர் நம் உள்ளம் கலங்கவிட மாட்டார்.

ஆ. நமக்குத் தெரிந்ததை, தெரிய முடியாததை அப்படியே நம்பும் எளிமை வேண்டும்.

இ. நம் வாழ்வில் குறைகள் இருந்தாலும், நாம் செய்ய வேண்டிய வேலையைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கையின் சூரிய அஸ்தமனத்தில் இருந்தவர்களுக்கு, உலகின் சூரியனைச் சுட்டிக் காட்டும் ஒரு குட்டிக்குழந்தை பிறக்கிறது.

3 comments:

  1. தந்தையின் குறும்புத்தனத்தின் உச்சகட்டம் வெளிப்படுகிற ஒரு பதிவு.1 சிம்சோனின் தாய்- பெண்-எளிமை- இறைவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் சக்காரியா- ஆண்- வயது வந்தவர்- குரு- இறைவனின் செய்தியை ஏற்க மறுக்கிறார்.2.சக்காரியா எப்படி எனக்கேட்டதால் 'ம்யூட்' செய்யப்படுகிறார்.ஆனால் மரியா..'ம்யூட்' செய்யப்படவில்லை. மற்றும் 'நம் அருள்பணியாளர் தொட்டும் தொடாமலும் இடும் சாம்பிராணி போன்றது இல்லை'..... போன்ற குறும்புத்தனம் கொப்பளிக்கும் வரிகளின் ஊடே சீரியஸான விஷயங்கள் இருப்பதைப்புரிந்து கொள்ள முடிகிறது.இவற்றைத்தாண்டி தந்தையின் அந்த அ,ஆ,இ சொல்லும் விஷயங்கள் நம்மை நேர்மையாளராக மாற்றக்கூடிய வழிகள் என்று புரிகிறது. எல்லாவற்றுக்கும் மகுடம் அந்த இறுதி வரி..." வாழ்க்கையின் சூரிய அஸ்தமனத்தில் இருந்தவர்களுக்கு,உலகின் சூரியனைச் சுட்டிக்காட்டும் ஒரு குட்டிக்குழந்தை பிறக்கிறது." கிறிஸ்துமஸ் கேக் மீது வைத்த செர்ரி டாப்பிங்.அருமை.

    படத்தில் பாதி மறைந்து தெரியும் சக்காரியாவின் முகம்....மறைப்பது சாம்பிராணிப்புகையோ?! தந்தையின் கற்பனா சக்திக்கு ஒரு சபாஷ்!!!!

    ReplyDelete
  2. வானதூதரால் சக்கரியா mute செய்யப்படுகிறார்....humourous/ real presentation.
    மூன்று பாடங்களும் அற்புதம்...
    நன்றி...
    இறுதி வரிகள் simply marvelous.
    உலகின் சூரியனை சுட்டிக்காட்டும் ஒரு குட்டி குழந்தை பிறக்கிறது...
    " இயேசு"...

    ReplyDelete