Monday, December 10, 2018

காணாமற்போவதும் கண்டுபிடிப்பதும்

இன்றைய (11 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 18:12-14)

காணாமற்போவதும் கண்டுபிடிப்பதும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளில் ஒன்று வழி தவிறிச் செல்வதையும், அவர் அந்த ஆட்டைக் கண்டுபிடித்ததால் அடையும் மகிழ்ச்சியையும்' பதிவு செய்கிறார் மத்தேயு நற்செய்தியாளர்.

நீங்கள் எதையாவது என்றாவது தொலைத்த அனுபவம் இருக்கிறதா?

கண்டிப்பாக நம் அனைவருக்கும் இருக்கும்.

ஓட்டலுக்குச் செல்கிறோம். வீட்டிலிருந்து புறப்படும்போது பர்ஸ் எடுத்து வைத்தோம். சாப்பிட்டு விட்டு பில் வந்தவுடன் பர்ஸைக் காணோம். உடனே, ஒருவித பயம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

காரில் செல்கிறோம். எல்லாம் எடுத்து வைக்கின்றோம். டோல் கேட் வருகிறது. பணம் செலுத்த பர்ஸ் தேடுகிறோம். பர்ஸ் தொலைந்துவிட்டது.

பேருந்தில், மருத்துவமனையில், வீட்டில் என நாம் தொலைக்கும் பொருள்கள் ஏராளம் ஏராளம். தொலைந்துபோனதைக் கண்டுபிடிக்க நாம் அந்தோனியார் போன்ற புனிதர்களின் உதவியையும் நாடுகிறோம்.

ஆக, 'ஐயோ, அதைக் காணோமே!' என்று ஒன்றைப் பற்றி நினைப்பதுதான் தொலைத்தல் உணர்வு. இந்த உணர்வில் பயம், ஏமாற்றம், ஏக்கம், கலக்கம், குற்றவுணர்வு எல்லாம் ஒரசேரக் கலந்திருக்கிறது.

தேடிய பொருள் கிடைத்தவுடன், மேற்காணும் உணர்வுகள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சி வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது.

இன்றைய நாளில் நான் எனக்குள் தொலைத்த ஒன்று என்ற நிலையில் சிந்திப்போம்.

புனித அகுஸ்தினார். அவரிடம் எல்லாம் இருந்தது. நிறைய படிப்பு இருந்தது. பேச்சாற்றல் இருந்தது. அந்தப் பேச்சாற்றலை பாடமாக எடுக்கும் பள்ளி ஒன்றை அவர் நடத்தினார். நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நல்ல குடும்பப் பின்புலம் இருந்தது. உழைப்பு இருந்தது. பணம் இருந்தது. இப்படி எல்லாம் இருந்தும், தனக்குள் ஏதோ ஒன்று தொலைந்துவிட்டதாக அவர் எண்ணிக்கொண்டே இருந்தார். இப்படி எண்ணியவாறே, ஒருமுறை சாலையில் செல்லும்போது குடிகாரர் ஒருவர் கையில் ரொட்டித் துண்டையும், ஒயின் பாட்டிலையும் வைத்துக்கொண்டு, பாடிக்கொண்டே செல்வதைக் காண்கிறார். 'இந்தக் குடிகாரனிடம் இருக்கும் இந்த மகிழ்ச்சி கூட என்னில் இல்லையே! இவனுடைய போதை விடிந்தால் தீர்ந்துவிடும். ஆனால், படிப்பு, மோகம், வாழ்க்கை முன்னேற்றம் என நான் கொண்டிருக்கும் போதை எத்தனை நாள் விடிந்தாலும் தீர்வதில்லையே. நான் இன்று எந்த துன்பத்தோடு போராடுகிறேனோ, அந்தப் போராட்டத்தில் அயர்ந்து தூங்குகிறேனோ, அதே போரட்டத்தைத்தான் அடுத்த நாளும் போரார வேண்டியிருக்கிறது!' என புலம்பும் அகுஸ்தினார் தன் இறைவனைக் கண்டவுடன், அவருடைய அனுபவம் பெற்றவுடன், தேடியது கிடைத்த மகிழ்ச்சி அடைகிறார். அவர் இதுவரை வைத்திருந்த அனைத்தையும் தூக்கி எறிகிறார்.

ஆக, நாம் ஒவ்வொருவருமே நமக்குள் எதையோ தொலைத்திருக்கிறோம். அந்தப் பொருள் கைகூடும் போது நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கிறது.

இதை நாம் எப்படி அடைவது?

1. முதலில், 'எது தொலைந்திருக்கிறது' என்பதை நான் உணர வேண்டும். இந்த உணர்தல்தான் தேடுதலின் முதற்படி. எது தொலைந்திருக்கிறது என்று தெரியாமல் தேடினால் நம் தேடலுக்கு முடிவே இருக்காது.

2. இரண்டாவதாக, 'எங்கே தேடுவது' என்பதை அறிய வேண்டும். 'சாவியை எங்கோ தொலைத்துவிட்டு தெருவிளக்கின் கீழ் தேடிய முல்லா, 'இங்குதான் வெளிச்சம் இருக்கிறது. ஆக, நான் இங்கே தேடுகிறேன்'' என்று சொல்லாமல், தொலைந்ததை தொலைந்த இடத்தில், நபரில் தேட வேண்டும்.

3. மூன்றாவதாக, 'தேடலுக்காக இழப்பது.' தவறிய ஒரு ஆட்டைக் கண்டுபிடிக்க தன் கையில் இருக்கும் 99 ஆடுகளை இழக்க வேண்டும். இவற்றையும் கூட்டிக்கொண்டு தேடும்போது நேரமும், ஆற்றலும் விரயமாகும். மேலும், மற்ற ஆடுகளும் தொலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. ஆக, 99 ஆடுகளை இழக்கத் துணியும் ஒருவரால்தான் தவறிய ஆட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

திருவருகைக்காலம் தேடலின் காலம்.

நமக்கு வெளியே தொலைந்தவற்றைத் தேடுவதைவிட நமக்கு உள்ளே தொலைந்திருப்பவற்றைத் தேடுவதும், அந்தத் தேடல் தரும் மகிழ்வை அனுபவிப்பதுமே கிறிஸ்து பிறப்பு.

சில நேரங்களில் நாம் தேட வேண்டியதை இறைவனே காட்டுகின்றார் - இன்றைய முதல் வாசகத்தில் போல.


3 comments:

  1. "திருவருகைக் காலம் தேடலின் காலம்" பொதுவாக நாம் தொலைப்பது எனும் சொல்லைப் பொருட்களுடன் பொருத்தித்தான் பார்க்கிறோம்.ஆனால் பொருட்களுக்கும் மேலான உணர்வுகளை,உறவுகளை, மனித மனங்களைத் தொலைப்பது பற்றி அதிகம் பேசுவது இல்லை. ஒரு ஆடு தொலைந்தாலோ...ஆபரணம் தொலைந்தாலோ அந்த இழப்பை மற்றொன்றால் சரி செய்வது எளிது.ஆனால் ஒரு உறவின் இழப்பு தரும் வலி அதிகம்.இதையேதான் தந்தையும் " நமக்கு வெளியே தொலைந்தவற்றைத்தேடுவதை விட நமக்கு உள்ளே தொலைந்திருப்பவற்றைத் தேடுவதும்,அந்தத்தேடல் தரும் மகிழ்வை அனுபவிப்பதுமே கிறிஸ்து பிறப்பு" என்கிறார்..ஆம்.... தொலைத்தவற்றைத் தொலைத்த இடத்தில்,தொலைத்த நபரில் தேடுவோம்.காலத்திற்கேற்ற பதிவு; தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. நமக்கு வெளியே தொலைந்தவற்றை தேடுவதை விட நமக்கு உள்ளே தொலைந்திருப்பவற்றைத் தேடுவதும், அந்த தேடல் தரும் மகிழ்வை அனுபவிப்பது மே கிறிஸ்து பிறப்பு.--மகத்தான கருத்து.

    லீலி போல் பூத்துக்குலுங்கிமகிழ்ந்து பாடி களிப்படையவும், லெபனோனின் எழில், கார்மேல், சாரோனின்மேன்மை ஒளிர், ஆண்டவரின் மாட்சிமை யாம் காண இறைவா!எமக்குள் புரிவாய்!.

    ReplyDelete
  3. * எமக்கு அருள் புரிவாய்!

    ReplyDelete