Monday, December 17, 2018

யோசேப்பு நேர்மையாளர்

இன்றைய (18 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 1:18-24)

யோசேப்பு நேர்மையாளர்

'இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகள்' என்று தொடங்கும் முதற் நிகழ்வில் கதாநாயகனாக இருப்பவர் யோசேப்பு. மற்ற நற்செய்தியாளர்களைவிட யோசேப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் மத்தேயு ஒருவரே.

'அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.'

திருமணத்திற்குப் புறம்பாக ஒரு பெண் கருவுற்றால் அவர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது மோசேயின் சட்டம். மரியா இவ்வாறு கருவுற்றிருப்பதைத் தான் வெளியே சொன்னால் மரியாவுக்கும் அதே தண்டனை கிடைக்கும். மேலும், கருவுற்ற மரியாவை ஏற்றுக்கொள்ளவும் கடினமாக இருந்தது. ஆக, மறைவாக விலக்கிவிட - அதாவது, வேறு ஏதாவது காரணம் சொல்லி -  திட்டமிடுகின்றார். அப்படி அவர் திட்டமிட்டாலும் பாதிக்கப்படுபவர் மரியாளாகத்தான் இருக்க வேண்டும்.

மூளையில் கீழைத்தேய மூளை, மேலைத்தேய மூளை என இரண்டு இருப்பதாக நாவலாசிரியர் குஷ்வந்த் சிங் வரையறுக்கிறார். உறவு நிலை என்று வரும்போது மேலைத்தேய மூளை எதையும் கண்டுகொள்ளாமல், எல்லாருடனும் உறவு கொள்ளும். ஆனால், கீழைத்தேய மூளை, நாள், நேரம், இடம், அந்தஸ்து எனப் பார்த்து பழக ஆரம்பிக்கும். பழகிய சில நாள்களில் பழகிய நபரைத் தனக்கே சொந்தம் எனக் கொண்டாடும். அவர் தன்னைவிட்டுச் சிறிதும் விலகிவிடக்கூடாது என்பதில் மிகக் கருத்தாயிருக்கும். அப்படி அவர் விலகும் பட்சத்தில் அது அவருக்கு கோபத்தையும், பொறாமையையும் வருவிக்கும். ஏனெனில், மேலைத்தேய மூளை வியாபாரத்தையும் உறவாகப் பார்க்கும். ஆனால், கீழைத்தேய மூளை உறவையும் வியாபாராமக - உறவில் இருப்பவரைத் தன் பொருளாக - பார்க்கும் என்கிறார்.

மரியாள் திருமணத்திற்குப் புறம்பே கருவுற்றிருப்பதை மேலைத்தேய மூளை எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆனால், கீழைத்தேய மூளை அறவே ஏற்றுக்கொள்ளாது. யோசேப்பு கீழைத்தேயத்தவர் என்பதால் அவரும் இதே துன்பத்தை அனுபவித்திருப்பார். ஆத்மார்த்தமான அந்த உறவு தனக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில்தான் அவரின் எண்ண ஓட்டங்கள் இருந்திருக்கும். இந்தப் பின்புலத்தில்தான் மரியாவை விலக்கிவிடத் திட்டமிடுகின்றார். அதாவது, நான் வாங்க நினைக்கும் கார் ஒன்று புதியது அல்ல, அது ஏற்கனவே ஓடியிருக்கிறது. அதை ஓட்டியவர் தான் ஓட்டியதை மறைத்து ஸ்பீடோ மீட்டரில் மாற்றம் செய்து விற்பனை செய்து என்னை ஏமாற்றுகிறார் என நினைத்தவுடன், 'அந்தக் கார் எனக்கு வேண்டாம்' என நாம் சொல்வதுபோல!

இவரின் திட்டம் இப்படி இருக்க, இறைத்திட்டம் வேறு மாதிரி இருக்கிறது.

மேற்காணும் குழப்பத்தில் இருந்தவர் அப்படியே தூங்கிப் போகின்றார். மனம் குழப்பமாக இருக்கும்போது ஒன்று தூங்க வேண்டும். அல்லது குளிக்க வேண்டும். இது பிளேட்டோவின் பாடம். தூங்கியவருக்கு கனவில் விடை கிடைக்கிறது.

கனவை, 'கனவுதானே!' என எடுக்காமல் சீரியஸாக எடுக்கிறார்.

'யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' என நிறைவு செய்கிறார் மத்தேயு.

என்னைப் பொறுத்தவரையில், ஆண்டவராகிய கடவுள் யோசேப்புக்குக் கனவில் தோன்றவில்லை என்றாலும் அவர் மரியாவை ஏற்றிருப்பார் என்றே நினைக்கிறேன்.

ஏனெனில், மத்தேயு அவரை அறிமுகம் செய்யும்போது, 'யோசேப்பு நேர்மையாளர்' என்கிறார். யோசேப்பின் நேர்மை சட்டத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மை அல்ல. மாறாக, இரக்கம் காட்டும் நேர்மையாய் இருந்தது. சட்டத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மையாக இருந்தால் தான் மரியாவைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் சட்ட ரீதியான செயலில் ஈடுபட்டிருப்பார். ஆனால், அவர் மனத்தில் போட்டு குழம்பிக் கொண்டிருந்தார்.

நேர்மையான மனம்தான் எந்நேரமும் குழம்பிக் கொண்டே இருக்கும். 'இரக்கம் காட்டுவதால் என்னை முட்டாள் என்பார்களா?' 'நல்லவனாய் இருப்பதால் என்னை ஒதுக்கி விடுவார்களா?' என்று குழம்புவது நேர்மையான உள்ளம்தான்.

யோசேப்பு நேர்மையாளர். திருச்சட்டம் நிறைவேற்றும் நேர்மையாளர் அல்ல. மாறாக, இரக்கம் காட்டும் நேர்மையாளர். மேலும், இவர் தன் திட்டம் விடுத்து இறைத்திட்டம் நிறைவேற்றியவர். வாழ்வில் குழப்பங்களை எதிர்கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக, குழப்பத்திலும் நன்றாகத் தூங்கும் வரம் பெற்றவர்.


2 comments:

  1. "யோசேப்பின் நேர்மை சட்டத்தைக் கடைபிடிக்கும் நேர்மை அல்ல;மாறாக இரக்கம் காட்டும் நேர்மையாய் இருந்தது.".... இந்த வரி ஒன்றே போதும் யோசேப்பு எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்து கொள்ள.நேர்மையான மனம் தான் எந்நேரமும் குழம்பிக்கொண்டிருக்கும், ..என் போன்றோருக்கு காம்ளிமென்ட். வாழ்வில் குழப்பங்களை மட்டுமே எதிர்கொண்ட அவர், குழப்பத்திலும் நன்றாகத் தூங்கும் வரம் பெற்றவர் என்கிறார் தந்தை..இதனால் தானோ என்னவோ சமீபகாலங்களில் "உறங்கும் யோசேப்பு" எல்லார் இல்லங்களையும் அலங்கரிக்கிறார்.அடக்கத்தின் அடையாளமான யோசேப்பு பற்றி அடக்கி வாசித்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Wonderful interpretation!
    Car analogy marvelous!
    Then I believe, may be it was not even dream; but the revelation of his subconscious mind ( which is the real mind) which made him to accept Maria.

    ReplyDelete