Sunday, December 30, 2018

புத்தாண்டு ஆசி செபம்


உன் திருமுன் நான் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்
உன் காலடியில் என் கண்களைப் பணிக்கிறேன்
இந்தப் பணிவில்
உன் காலடிகளில் நான் என்னையே அர்ப்பணிக்கிறேன்...

இந்த ஆண்டு நான் கண்ட முகங்கள்
நான் கேட்ட குரல்கள்
நான் பேசிய வார்த்தைகள்
நான் குலுக்கிய கரங்கள்
நான் நடந்த பயணங்கள்
நான் செய்த சேவைகள்
நான் பகிர்ந்த மகிழ்ச்சிகள்
நான் அதிர்ந்த துன்பங்கள்

அனைத்தையும் உன் காலடிகளில் படைக்கிறேன்
என் தலையை உன் திருமுன் பணிகிறேன்
என் தலையை நீயே தாங்குவாய்...

இருள்சூழ்ந்த இந்த இரவின் நீண்ட பொழுதில்
எங்களைக் காப்பாற்றும்
எங்களை சூழ்ந்து கொள்ளும்
தந்தை, மகன், தூய ஆவி
மூன்றாகி ஒன்றானவா

நாங்கள் செய்த தவறுகளை மன்னியும்
நாங்கள் காட்டிய ஆணவத்தை மன்னியும்
பிறரைக் காயப்படுத்திய எம் வார்த்தைகளை மன்னியும்
இந்த இரவில் நாங்கள் உள்ளம்நிறை அமைதியுடன் உறங்கி,
உம் திருவுளம் நிறைவேற்ற புதிய நாளில் புதிய ஆண்டில் 
புத்துணர்ச்சியுடன் எழுவோமாக...

இருள்சூழ்ந்த இந்த இரவின் நீண்ட பொழுதில்
எங்களைக் காப்பாற்றும்
எங்களை சூழ்ந்து கொள்ளும்
தந்தை, மகன், தூய ஆவி
மூன்றாகி ஒன்றானவா

அமைதியின் இறைவன் இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
அமைதியின் மகன் இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
அமைதியின் ஆவி இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
இந்த இரவும்...
எல்லா இரவுகளும்...

(அயர்லாந்து நாட்டு புத்தாண்டு ஆசி செபம்)

ஆங்கிலத்தில்: பவுலோ கோயலோ

Friday, December 28, 2018

கையில் ஏந்தி

இன்றைய (29 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 2:22-35)

கையில் ஏந்தி

இயேசுவின் பெற்றோர்கள் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேம் வருகின்றனர்.

இயேசுவின் பெற்றோர்களின் எளிமையான, ஏழ்மையான பின்புலத்தைக் காட்டுவதற்காக 'இரு மாடப்புறாக்களை அல்லது புறாக்குஞ்சுகளை' பலியாகக் கொடுப்பதாகப் பதிவு செய்கிறார் லூக்கா. கடவுளின் மகன் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டபோது அவர் தன் ஏழ்மையால் கடைசி வரிசையில்தான் நின்றிருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் தூய ஆவியின் தூண்டுதலால் சிமியோன் கோவிலுக்கு வருகின்றார். இவர் தன் ஆண்டவரோடு இணைப்பில் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கோவிலுக்குள் 100க்கு மேல் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அப்படி இருந்தும் அந்த ஒரு நாள் அவர் தூண்டப்பட்டது எப்படி? அந்த ஒரு குழந்தையை மட்டும் மெசியாவாகக் கண்டுகொண்டது எப்படி?

வந்தவர் குழந்தையைத் தன் கைகயில் ஏந்துகிறார்.

குழந்தையைக் கைகளில் தூக்குவது ஒரு கலை. எல்லாக் குழந்தைகளும் எல்லாரிடத்திலும் போவதில்லை. சிலர் கைகளை விரித்து நீட்டினாலும், என்னதான் கொடுக்க முயன்றாலும் குழந்தைகள் அவர்களிடம் வருவதில்லை. சில கைகளில் குழந்தைகளில் சிரிக்கும். சில கைகளில் குழந்தைகள் அழும். இதற்குக் காரணம் குழந்தைகளுக்குள் இருக்கும் தூண்டுதல் என்றே நினைக்கிறேன்.

இன்று நான் என் உள்ளத்தில் இருக்கும் ஆவியின் குரலைக் கேட்கத் தடையாக இருக்கின்ற இரைச்சல் எது?

காத்திருப்பவர்கள் மட்டுமே கண்டுகொள்வார்கள்.

Wednesday, December 26, 2018

திருத்தூதர் யோவான்

இன்றைய (27 டிசம்பர் 2018) நற்செய்தி (யோவா 20:2-8)

திருத்தூதர் யோவான்

இன்று நாம் திருத்தூதர் யோவானின் திருநாளைக் கொண்டாடுகிறோம். புதிய ஏற்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியைப் பிடித்திருக்கின்றன இவருடைய எழுத்துக்கள்: நற்செய்தி, மூன்று மடல்கள், மற்றும் திருவெளிப்பாடு. இவருடைய நற்செய்திக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாளம் 'கழுகு.'

கழுகு போல இவருடைய உள்ளம் பறந்தது.

திருத்தூதர்களில் மிக இளமையானவராகவும், திருமணம் முடிக்காதவராகவும் இருப்பவர் இவரே. ஆண்டவருடைய நெஞ்சில் - பொதுவிடத்தில் - சாயும் அளவுக்கு நெருக்கமானவர். சிலுவையின் அடியில், 'இதோ உம் மகன்' என்று தன்னை அர்ப்பணித்தவரும், 'இதோ உம் தாய்' என்று இயேசு தம் தாயைக் கையளித்தபோது அவரை ஏற்றுக்கொண்டவர்.

இவர் ஒரு சிறந்த சிந்தனையாளர். நிறைய நல்ல விடயங்களை இவருடைய நற்செய்தி பதிவு செய்திருக்கிறது.

இவர் தன்னையே 'இயேசுவின் அன்புச் சீடர்' என்று அடிக்கடி அழைத்துக்கொள்கிறார். இது இவரின் அடையாளப் பிரச்சினையா? அல்லது தாழ்ச்சியா? என்று தெரியவில்லை.

மேலும், இவருக்கும் யூதாசுக்கும் கருத்து வேறுபாடு அல்லது உறவுச் சிக்கல் இருந்திருக்கும் என நினைக்கிறேன். அடிக்கடி யூதாசையும், அவரின் தகைமையையும் பற்றி எதிர்மறையான சொல்லாடல்களைக் கையாளுகின்றார்.

அடுத்ததாக, அன்பைப் பற்றி அதிகம் பேசுபவர்.

திருத்தூதர்கள், குறிப்பாக நற்செய்தியாளர்கள், இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள்.

Tuesday, December 25, 2018

எதிர்த்து நிற்க இயலவில்லை

இன்றைய (26 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 10:17-22)

எதிர்த்து நிற்க இயலவில்லை

இன்று திருத்தொண்டர் ஸ்தேவானின் (முடியப்பர்) திருநாளைக் கொண்டாடுகிறோம்.

மனித இனம் தவிர எந்த விலங்கு அல்லது பறவை இனமோ தன் இனத்தைத் தானே கொல்வதில்லை என்றே நினைக்கிறேன். கோழி மற்றொரு கோழியால் கொல்லப்பட்டதையோ, ஒரு நாய் மற்றொரு நாயைக் கொல்வதையோ நாம் கேள்விப்பட்டதில்லை. சில விலங்கினங்கள் தங்கள் குட்டிகளைத் தாங்களே தின்றுவிடுவது என்பது விதிவிலக்காக இருக்கலாம்.

கிறிஸ்து பிறப்பில் இறைவன் மனிதனாக வந்து மனிதனின் மாண்பை நமக்குக் காட்டினார்.

ஆனால், இன்று நாம் கொண்டாடும் ஸ்தேவானின் மறைசாட்சிய நிகழ்வில் ஒரு மனிதர் தன் சக மனிதர்களால் கொல்லப்படுகின்றார். நாம் வாழும் சிறிய இல்லத்தில் அல்லது குழுமத்தில் அல்லது சமூகத்தில் நமக்குப் பிடிக்காத நபரை நாம் வார்த்தைகளால் கொன்றழிக்க முனைகின்றோம். அதுவும் முடியாதபோது, 'அவருடன் நான் இனி பேசப்போவதில்லை' என்று அவர் நம் வாழ்விலிருந்து அகன்றுவிட்டதாக வைக்கிறோம். இதுவும் ஒரு மினி கொலை முயற்சியே.

ஸ்தேவான் ஏன் கொல்லப்படுகின்றார்?

'அவர் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அரும்செயல்களையும், அடையாளங்களையும் செய்து வந்தார்'

'அவரது ஞானத்தையும் தூய ஆவி வழியாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை'

இவ்வாறாக, ஸ்தேவானின் செயல்களோடும் அவர்களால் போட்டி போட முடியவில்லை. அவருடைய சொற்களோடும் போட்டி போட முடியவில்லை.

விளைவு, பொறாமை.

அவர்களின் பொறாமை அடுக்கடுக்காக வெளிப்படுகிறது:

முதலில், உள்ளம் கொதித்தெழுகிறார்கள். ஆக, மூளைதான் கொலையின் ஊற்று.

இரண்டாவதாக, பற்களை நறநறவெனக் கடிக்கிறார்கள். கோபத்தின் வெளிப்பாடு.

மூன்றாவதாக, ஒருமிக்க ஸ்தேவான்மேல் பாய்கிறார்கள்.

ஆக, கொலை என்பது வெறும் உடல் செயல் அல்ல. மாறாக, அது உள்ளத்தில் எழுகின்ற உள்ளச் செயல். ஒருவர் முதலில் தன் மனத்தில் ஒருவரைக் கொலை செய்கின்றார். பின் வெளிப்புறத்தில் நடந்தேறுவது வெறும் செயலே.

ஆனால், ஸ்தேவான் பக்கம் இருந்து பார்க்கும்போது அவர் முழுக்க முழுக்க கையறுநிலையில் இருக்கின்றார். அரும் செயல்களும், ஞானமிகு சொற்களும் பேசும் அவரால் தன்னைத் தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் உடல் பலம் இல்லை. அருளையும், ஞானத்தையும் கொடுத்த கடவுள் அவருக்கு அதைக் கொடுக்கவில்லை.

நீதிமான் ஒருவர் பாவிகளின் கையில் அகப்பட்டு இறப்பதை மறைசாட்சியம் என்று கொண்டாடும் நாம் பல நேரங்களில் அந்தப் பாவிகளைத் தண்டிக்க முனைவதில்லை.

மறைசாட்சியம். பொறாமையின் மறுபக்கம்.

Friday, December 21, 2018

அன்னாவும் மரியாவும்

இன்றைய (22 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 1:46-56)

அன்னாவும் மரியாவும்

வானதூதர் கபிரியேல் தனக்கு மங்கள வார்த்தை சொன்னதும், அய்ன் கரீம் என்ற மலைநாட்டில் குடியிருக்கின்ற தன் உறவினர் எலிசபெத்தைச் சந்திக்கச் செல்கின்றார் மரியா. மரியாவும், எலிசபெத்தும் பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டபின் மரியா இறைவனைப் புகழ்ந்து பாடும் பாடலே இன்றைய நற்செய்தி வாசகம். மரியாவின் பாடல் ஏறக்குறைய முதல் ஏற்பாட்டு அன்னாவின் பாடலை ஒத்திருக்கிறது (காண். 1 சாமு 1, 2) என்பதும், மரியாவின் பாடல் வரிக்கு வரி முதல் ஏற்பாட்டுப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதும், மரியா இப்படி ஸ்பொன்டேனியஸாக பாடியிருக்க வாய்ப்பில்லை என்பதும், இது நற்செய்தியாளரின் உருவாக்கமே என்பதும் விவிலிய அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து.

ஆனால், மரியாவின் மனதின் உச்சகட்ட மகிழ்ச்சியில் அவருடைய உள்ளம் ஏதோ ஒரு பாடலைப் பாடத்தான் செய்திருக்கும். நாம் அதிகமாக சோகமாக இருக்கும்போதும், அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கும்போது நம் கண்கள் கண்ணீர் வடிப்பது போல, நம் உள்ளம் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுக்கின்றது.

'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது' என்று பாடுகிறார் மரியா.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 சாமு 1:24-28) அன்னா தன் குழந்தை சாமுவேலை இறைவனிடம் காணிக்கையாக்கும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

மரியா, அன்னா - இந்த இருவருக்கும் பொதுவான ஒன்று இருக்கிறது.

இருவருக்குமே அதிசயிக்கத்தக்க ஒன்று நடக்கிறது. ஆனால், அப்படி நடந்தவுடன் அவர்கள் ஊருக்குள் ஓடி, 'உங்களுக்கு ஒன்னு தெரியுமா? ... அப்படியாக்கும் ... இப்படியாக்கும்' என்று மார்தட்டிக் கொள்ளாமல், இறைவனை நோக்கி ஓடுகின்றனர்.

அதாவது, அடுத்தவர்களுக்குத் தங்களையே நிரூபிக்கும் எண்ணம் இவ்விரண்டு பேருக்கும் இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறது. சில நேரங்களில் நான் நினைப்பேன். 'நான் நல்லவனாக இருக்க விரும்புவதும்' கூட அடுத்தவரை திருப்திப்படுத்தும் எண்ணத்தில்தான் இருக்கிறது என்று. அதாவது, என்னைப் பார்ப்பவர்கள், 'இவன் நல்லவன்' என்று சொல்வதற்காகவே நான் நல்லவனாக இருப்பதுபோல.

'அடுத்தவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?' என்ற எண்ணமே பல நேரங்களில் கடவுளைப் பற்றிய நம் எண்ணத்தை நம்மிடமிருந்து அகற்றிவிடுகிறது.

ஆக, என்னை மறந்து, அடுத்தவர் மறந்து, இறைவன் நினைவை என்றும் கொள்ள நம்மை அழைக்கின்றனர் அன்னாவும் மரியாவும்.

Thursday, December 20, 2018

குழந்தை துள்ளிற்று

இன்றைய (21 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 1:39-45)

குழந்தை துள்ளிற்று

மீட்பரின் வருகையை முதல் முதலாக அறிந்துகொண்டது ஒரு தாயின் வயிற்றில் இருந்த குழந்தைதான்.

மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த அதே நேரம், மரியாள் வயிற்றில் உள்ள குழந்தையும், எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தையும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. மகிழ்ச்சி எப்போதும் தொற்றிக்கொள்ளக்கூடியது என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். இபா 2:8-14) பின்புலத்தில் இன்றைய நற்செய்தியைப் புரிந்துகொள்வோம். இனிமைமிகு பாடல் நூலிலிருந்து வெகு அரிதாகவே திருப்பலி வாசகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய இறைவாக்குப் பகுதி தலைவி தன் தலைவனைப் பற்றிக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

'என் காதலர் குரல் கேட்கின்றது. இதோ அவர் வந்துவிட்டார். மலைகள்மேல் தாவி வருகின்றார். குன்றுகளைத் தாண்டி வருகின்றார் ... எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கிறார். பலகணி வழியாகப் பார்க்கிறார். பின்னல் தட்டி வழியாக நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார் ...'

இங்கே, முதற் பொருளில், தலைவி என்பது எலிசபெத்தையும், தலைவர் என்பது மரியாளைக் குறிப்பதாகவும், இரண்டாம் பொருளில், தலைவி என்பது எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தையையும், தலைவர் என்பது மரியாளின் வயிற்றில் உள்ள குழந்தையையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இங்கே என்ன அழகு என்றால்,

காதலர் முதலில் தூரமாக இருக்கிறார்.

பின் மறைந்தும் தெரிந்தும் இருக்கிறார்.

பின் அருகில் நின்று பேசுகின்றார்.

இவ்வாறாக, தூரத்திலிருந்து புறப்படும் காதலனின் நெருக்கத்தைப் பதிவு செய்கிறது முதல் வாசகம். தூரமாய்த் தெரிந்த கிறிஸ்து இன்று வெகு அருகில் இருக்கிறார்.

அவர் என்னருகில் இருப்பது என்னில் மகிழ்வைத் தூண்டி எழுப்புகிறதா?

தலைவியின் மகிழ்ச்சி தலைவனில். என் மகிழ்ச்சி அவரில்.

Wednesday, December 19, 2018

ஆண்டவர் உம்மோடு

இன்றைய (20 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 1:26-38)

ஆண்டவர் உம்மோடு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு பற்றி வாசிக்கின்றோம். மரியாவை மூன்று சொல்லாடல்கள் வழியாக வாசகருக்கு அறிமுகம் செய்கிறார் லூக்கா: (அ) கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னி அல்லது இளம்பெண், (ஆ) தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர், (இ) அவர் பெயர் மரியா.

இவ்வாறாக, மரியாவின் வேர் (நாசரேத்து) மற்றும் விழுது (யோசப்பு) ஒருசேர பதிவுசெய்யப்படுகிறது.

தொடர்ந்து, 'வானதூதருக்கும் மரியாளுக்கும் நடந்த உரையாடலைப் பதிவு செய்கின்றார் லூக்கா.

'அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' என வாழ்த்துகிறார் வானதூதர்.

'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' - இந்த மூன்று வார்த்தைகளின் விரிவே இனி வரும் உரையாடலாக இருப்பதால், இம்மூன்று வார்த்தைகளை நாம் இன்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இவ்வாண்டு பிப்ரவரி முதல், 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்று அருள்பணியாளர் திருப்பலியிலும், வழிபாட்டிலும் சொல்ல, 'உம் ஆன்மாவோடும் இருப்பாராக!' என்று பதில் சொல்கின்றோம். அப்படின்னா, 'உடலோடு, உள்ளத்தோடு இல்லையா?' என்ற கேள்வியெல்லாம் தோன்றி மறைகிறது.

மரியாவுக்கு வானதூதர் சொன்ன வாழ்த்தில் இக்குளறுபடிகள் இல்லை. ரொம்பவும் ப்ளைனாக இருக்கிறது. நல்லது.

'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!'

இவ்வார்த்தைகள் பெரும்பாலும் விவிலியத்தில் 'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக!' என்று ஆசீர் அளிப்பதாகவோ, அல்லது 'ஆண்டவர் உன்னோடு இருப்பார்!' என நம்பிக்கை தருவதாகவோ இருக்கின்றது. (காண். ரூத் 2:4, 1 சாமு 17:37, 2 சாமு 14:17, ஆமோஸ் 5:14, 2 தெச 3:16, யோசு 1:17, 1 சாமு 20:13, 2 குறி 36:23, எஸ்ரா 1:3, விப 10:10).

ஆனால், நீத 6:12ல் கிதியோனுக்குத் தோன்றும் ஆண்டவரின் தூதர்,

'வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!' என வாழ்த்துகிறார்.

இதை அப்படியே, இன்றைய நற்செய்தியோடு பொருத்துவோம்:

'அருள் நிறைந்தவரே! (வாழ்க) ஆண்டவர் உம்மோடு (உன்னோடு) இருக்கிறார்!'

அங்கே, வலிமை. இங்கே அருள்.

இதுதான் கிறிஸ்து பிறப்பின் மிக முக்கியமான செய்தி.

'ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.' சரி.

ஆனால், எப்படி? என்பதில்தான் பிரச்சினை வருகிறது.

அங்கே அவர் 'மனித வலிமையில்' இருக்கிறார். இங்கே அவர் 'கடவுளின் அருளில்' இருக்கிறார். மனித வலிமை எல்லை உடையது. அது வலுவிழக்கக் கூடியது. ஆனால், கடவுளின் அருள் எல்லை இல்லாதது. அது ஒருபோதும் குறையாதது.

இவ்வாறாக, மனித வலிமையை நம்பியிருந்த மனித இனம் இனி கடவுளின் அருளில் நம்பிக்கை கொள்ளும். மனித வலிமையால் நிறையவற்றை அடைய முடிவதில்லை. 'ஆனால், கடவுளால் (அருளால்) இயலாதது ஒன்றுமில்லை!'

இதையொட்டியே, இன்றைய முதல் வாசகத்தில், 'அடையாளம்' கேட்ட ஆகாசுக்கு, 'இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') அடையாளம் தரப்படுகிறது.

கடவுளின் அருள் மரியாளின் குழந்தையின் பிஞ்சு விரல்கள் வழியாக மனுக்குலத்திற்கு வருகிறது. மனித வலிமை அங்கே வலுவின்மையாக இருக்கிறது. அந்த வலுவின்மையில் அவருடைய அருள் செயலாற்றுகிறது.

ஆக, இன்று எல்லாமே என் வலிமையில் என நான் மறந்து, அவரின் அருளால்தான் என்ற நிலைக்குக் கடக்க அழைக்கப்படுகிறேன்.

ஆண்டவர் உங்களோடு! ஏனெனில் அவருடைய அருள் உங்களோடு!

Tuesday, December 18, 2018

எனக்கு எப்படித் தெரியும்?

இன்றைய (19 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 1:5-25)

எனக்கு எப்படித் தெரியும்?

இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகளில் கடந்த இரண்டு நாள்களாக மத்தேயு நற்செய்தியை வாசித்தோம். இன்று முதல் லூக்கா நற்செய்தியை வாசிக்கின்றோம். லூக்காவின் நற்செய்தி இயேசுவின் பிறப்போடு தொடங்காமல், அவருடைய குரலாக அல்லது அவருக்கு முன் சென்ற திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வோடு தொடங்குகிறது.

முதன்மையானவர்கள் மற்றும் மேன்மையானவர்களின் பிறப்பெல்லாம் முன்னறிவிக்கப்படும் என்பது வரலாறு. நன்றாக வீட்டில் கேட்டுப்பாருங்கள். உங்கள் மற்றும் என் பிறப்பும் கூட முன்னறிவிக்கப்பட்டிருக்கலாம். இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீத 13:2-7, 24-25) நீதித்தலைவர் சிம்சோனின் (சாம்சன்) பிறப்பு முன்னறிவிப்பை வாசிக்கக் கேட்கின்றோம். சிம்சோனின் பிறப்பு அவருடைய தாய்க்கு முன்னறிவிக்கப்படுகிறது. அவர் பெண் என்ற காரணத்தாலும், மேலும் அவர் நல்ல பெண் என்ற காரணத்தாலும், அவர் எளிமையாக இருந்ததாலும் இறைவனின் செய்தியை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். பிறக்கப்போகும் சிம்சோன் கடவுளுக்கான நாசீராக இருப்பார் என்று அங்கே சொல்லப்படுகிறது.

ஆனால், இங்கே சக்கரியா ஆண் என்ற காரணத்தாலும், அவர் வயது வந்தவர் என்ற காரணத்தாலும், எல்லாருக்கும் மேலாக குரு என்ற காரணத்தாலும் இறைவனின் செய்தியை ஏற்க மறுக்கின்றார். ஆண், வயது வந்தவர், குரு - இந்த மூன்று பேரையும் நீங்கள் எளிதாக நம்ப வைக்க முடியாது. மேலும், இந்த மூன்றும் ஒரே நபராக இருந்தால் எவ்வளவு கடினம்?

முதலில் சக்கரியாவையும், எலசபெத்தையும் வாசகருக்கு அறிமுகம் செய்கின்றார் லூக்கா: 'அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்துவந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை. ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும், அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.'

ஒரே நேரத்தில் அவர்களின் அக மற்றும் புற குணநலன்களைச் சொல்கின்றார் லூக்கா. நல்லவர்கள் அவர்கள். ஆனால், குழந்தையில்லை. அதற்கு எலிசபெத்து ஒரு காரணம். சக்கரியாவின் வயது வந்த நிலையும் ஒரு காரணம்.

ஆக, ஒரு குழந்தையின்மை என்னும் பிரச்சினை. ஆனால், அந்தப் பிரச்சினைக்கான மனித வழிகள் அடைபட்டுக் கிடக்கின்றன. இது சக்கரியாவுக்குத் தெரியும். கடவுள்தான் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியும் என்பதும் தெரியும். இப்படித் தெரிந்தும், அவர், 'எப்படி?' எனக் கேட்டதால்தான் வானதூதரால் ம்யூட் செய்யப்படுகின்றார். ஆனாலும் அவர் பாவம்! மரியாளும் 'எப்படி?' என்றுதான் கேட்டார். ஆனால், அவருக்கு ம்யூட் செய்யவில்லை வானதூதர். பெண்ணைக் கண்டால் பேயும் இரங்கும் என்பார்கள். வானதூதர் என்ன விதிவிலக்கா?

சக்கரியா ஒரு குரு. ஆண்டவரின் இல்லத்திற்குள் சென்று தூபம் காட்ட அவருக்கு சீட்டு விழுகின்றது. இது முதல் அதிர்ஷ்டம். நிறையக் குருக்கள் இருந்ததால் இப்படிச் சீட்டுப் போட்டுதான் அவர்கள் தூபம் இடுபவரைத் தேர்ந்தெடுப்பர். தூபம் இடுவது என்பது ஆடு வெட்டுவதுபோல கடினமான வேலை. இன்று நம் கோவிலில் அருள்பணியாளர் தொட்டும் தொடாமல் இடும் சாம்பிராணி போன்றது அல்ல அது. மாறாக, சக்கரியா நெருப்பின் சூட்டில் நிற்க வேண்டும். விறகுக் கட்டைகளை எடுத்து அடுக்கி நெருப்பு உண்டாக்க வேண்டும். அந்த நெருப்பு கங்காக ஆகும் நேரத்தில் அதை அணைக்க வேண்டும். பின் அதில் சாம்பிராணி இட வேண்டும். அந்தப் புகையின் வாட்டத்தைத் தாங்க வேண்டும். இப்படி அவர் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். லேவியர்கள் சிலர் அவருக்கு உதவி செய்வர்.

இந்த ஒரு பதற்றமான வேலைப் பளுவின் நடுவில்தான் வானதூதர் தோன்றுகிறார். ஆக, இறைவனின் வெளிப்பாடு நாம் அதிக வேலைப் பளுவோடு இருக்கும்போதுதான் வரும். (ஆனால், மரியா வீட்டில் ஓய்ந்திருக்கும்போது அவருக்கு வெளிப்பாடு வருகிறது. கடவுளின் வழிகள் ஊகத்திற்கு அப்பாற்பட்டவை). கபிரியேல் ரொம்பவும் ஸ்ரெயிட்: 'அஞ்சாதீர். உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீரும் மகிழ்வீர். அவர் இப்படி இருப்பார் ...' அவர் முடித்தவுடன், 'எப்படிப்பா தம்பி?' என்று கேட்டுவிடுகிறார். பேச்சற்றவராகிவிடுகிறார். ஆக்கப்படுகிறார்.

இதற்கிடையில் அடுத்த ஆள் உள்ளே அனுப்பப்பட வேண்டும். அவருக்குத் தாமதமாகிறது. அங்கே வந்து சேர்கிறார் சக்கரியா. 'ஏன்ப்பா லேட்டு?' 'ப ப ப' என்கிறார். பேச்சு வரவில்லை. ஆனால், மக்கள் புத்திசாலிகள். அவர் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என உணர்ந்து கொள்கிறார்கள். மேலும், பணி முடிந்து வீடு திரும்புகிறார். எப்படி எலிசபெத்துக்குச் சொல்லி புரியவைத்தார் என்று தெரியவில்லை. எலிசபெத்து கருவுறுகின்றார். 'ஆண்டவர் என்மேல் அன்பு கூர்ந்தார்' (அதாவது, 'யோவான்') எனத் துள்ளிக் குதிக்கிறார் எலிசபெத்து.

மிக அழகான கதையாடல்.

இவை நமக்குத் தரும் பாடங்கள் மூன்று:

அ. கடவுள் பார்வையில் நாம் நேர்மையானவர்களாய் இருந்தால் அவர் நம் உள்ளம் கலங்கவிட மாட்டார்.

ஆ. நமக்குத் தெரிந்ததை, தெரிய முடியாததை அப்படியே நம்பும் எளிமை வேண்டும்.

இ. நம் வாழ்வில் குறைகள் இருந்தாலும், நாம் செய்ய வேண்டிய வேலையைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கையின் சூரிய அஸ்தமனத்தில் இருந்தவர்களுக்கு, உலகின் சூரியனைச் சுட்டிக் காட்டும் ஒரு குட்டிக்குழந்தை பிறக்கிறது.

Monday, December 17, 2018

யோசேப்பு நேர்மையாளர்

இன்றைய (18 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 1:18-24)

யோசேப்பு நேர்மையாளர்

'இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சிகள்' என்று தொடங்கும் முதற் நிகழ்வில் கதாநாயகனாக இருப்பவர் யோசேப்பு. மற்ற நற்செய்தியாளர்களைவிட யோசேப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் மத்தேயு ஒருவரே.

'அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.'

திருமணத்திற்குப் புறம்பாக ஒரு பெண் கருவுற்றால் அவர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது மோசேயின் சட்டம். மரியா இவ்வாறு கருவுற்றிருப்பதைத் தான் வெளியே சொன்னால் மரியாவுக்கும் அதே தண்டனை கிடைக்கும். மேலும், கருவுற்ற மரியாவை ஏற்றுக்கொள்ளவும் கடினமாக இருந்தது. ஆக, மறைவாக விலக்கிவிட - அதாவது, வேறு ஏதாவது காரணம் சொல்லி -  திட்டமிடுகின்றார். அப்படி அவர் திட்டமிட்டாலும் பாதிக்கப்படுபவர் மரியாளாகத்தான் இருக்க வேண்டும்.

மூளையில் கீழைத்தேய மூளை, மேலைத்தேய மூளை என இரண்டு இருப்பதாக நாவலாசிரியர் குஷ்வந்த் சிங் வரையறுக்கிறார். உறவு நிலை என்று வரும்போது மேலைத்தேய மூளை எதையும் கண்டுகொள்ளாமல், எல்லாருடனும் உறவு கொள்ளும். ஆனால், கீழைத்தேய மூளை, நாள், நேரம், இடம், அந்தஸ்து எனப் பார்த்து பழக ஆரம்பிக்கும். பழகிய சில நாள்களில் பழகிய நபரைத் தனக்கே சொந்தம் எனக் கொண்டாடும். அவர் தன்னைவிட்டுச் சிறிதும் விலகிவிடக்கூடாது என்பதில் மிகக் கருத்தாயிருக்கும். அப்படி அவர் விலகும் பட்சத்தில் அது அவருக்கு கோபத்தையும், பொறாமையையும் வருவிக்கும். ஏனெனில், மேலைத்தேய மூளை வியாபாரத்தையும் உறவாகப் பார்க்கும். ஆனால், கீழைத்தேய மூளை உறவையும் வியாபாராமக - உறவில் இருப்பவரைத் தன் பொருளாக - பார்க்கும் என்கிறார்.

மரியாள் திருமணத்திற்குப் புறம்பே கருவுற்றிருப்பதை மேலைத்தேய மூளை எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆனால், கீழைத்தேய மூளை அறவே ஏற்றுக்கொள்ளாது. யோசேப்பு கீழைத்தேயத்தவர் என்பதால் அவரும் இதே துன்பத்தை அனுபவித்திருப்பார். ஆத்மார்த்தமான அந்த உறவு தனக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில்தான் அவரின் எண்ண ஓட்டங்கள் இருந்திருக்கும். இந்தப் பின்புலத்தில்தான் மரியாவை விலக்கிவிடத் திட்டமிடுகின்றார். அதாவது, நான் வாங்க நினைக்கும் கார் ஒன்று புதியது அல்ல, அது ஏற்கனவே ஓடியிருக்கிறது. அதை ஓட்டியவர் தான் ஓட்டியதை மறைத்து ஸ்பீடோ மீட்டரில் மாற்றம் செய்து விற்பனை செய்து என்னை ஏமாற்றுகிறார் என நினைத்தவுடன், 'அந்தக் கார் எனக்கு வேண்டாம்' என நாம் சொல்வதுபோல!

இவரின் திட்டம் இப்படி இருக்க, இறைத்திட்டம் வேறு மாதிரி இருக்கிறது.

மேற்காணும் குழப்பத்தில் இருந்தவர் அப்படியே தூங்கிப் போகின்றார். மனம் குழப்பமாக இருக்கும்போது ஒன்று தூங்க வேண்டும். அல்லது குளிக்க வேண்டும். இது பிளேட்டோவின் பாடம். தூங்கியவருக்கு கனவில் விடை கிடைக்கிறது.

கனவை, 'கனவுதானே!' என எடுக்காமல் சீரியஸாக எடுக்கிறார்.

'யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' என நிறைவு செய்கிறார் மத்தேயு.

என்னைப் பொறுத்தவரையில், ஆண்டவராகிய கடவுள் யோசேப்புக்குக் கனவில் தோன்றவில்லை என்றாலும் அவர் மரியாவை ஏற்றிருப்பார் என்றே நினைக்கிறேன்.

ஏனெனில், மத்தேயு அவரை அறிமுகம் செய்யும்போது, 'யோசேப்பு நேர்மையாளர்' என்கிறார். யோசேப்பின் நேர்மை சட்டத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மை அல்ல. மாறாக, இரக்கம் காட்டும் நேர்மையாய் இருந்தது. சட்டத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மையாக இருந்தால் தான் மரியாவைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் சட்ட ரீதியான செயலில் ஈடுபட்டிருப்பார். ஆனால், அவர் மனத்தில் போட்டு குழம்பிக் கொண்டிருந்தார்.

நேர்மையான மனம்தான் எந்நேரமும் குழம்பிக் கொண்டே இருக்கும். 'இரக்கம் காட்டுவதால் என்னை முட்டாள் என்பார்களா?' 'நல்லவனாய் இருப்பதால் என்னை ஒதுக்கி விடுவார்களா?' என்று குழம்புவது நேர்மையான உள்ளம்தான்.

யோசேப்பு நேர்மையாளர். திருச்சட்டம் நிறைவேற்றும் நேர்மையாளர் அல்ல. மாறாக, இரக்கம் காட்டும் நேர்மையாளர். மேலும், இவர் தன் திட்டம் விடுத்து இறைத்திட்டம் நிறைவேற்றியவர். வாழ்வில் குழப்பங்களை எதிர்கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக, குழப்பத்திலும் நன்றாகத் தூங்கும் வரம் பெற்றவர்.


Sunday, December 16, 2018

ஐந்து பெண்கள்

இன்றைய (17 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 1:1-17)

ஐந்து பெண்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கின்றோம். இத்தலைமுறை அட்டவணையை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பதிவு செய்கின்றனர். இரண்டு பேருக்கும் இரண்டு முக்கிய வித்தியாசங்கள் உள்ளன: (அ) மத்தேயு இயேசுவின் தலைமுறையை ஆபிரகாமோடு நிறுத்திக்கொள்கிறார். லூக்காவோ ஆதாம் வரை நீட்டுகின்றார். (ஆ) மத்தேயுவின் அட்டவணை பழைமையில் தொடங்கி (ஆபிரகாம்), புதுமையில் (இயேசு) முடிகிறது. லூக்காவின் அட்டவணை புதுமையில் (இயேசு) தொடங்கி, பழமையில் (ஆதாம்) முடிகிறது.

இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பது மத்தேயு எழுதிய தலைமுறை அட்டவணை. இயேசுவின் தலைமுறையை மூன்று முறை 14 தலைமுறைகள் என முன்வைக்கின்றார். எண்கள் மூன்றும், பதினான்கும் நிறைவைக் குறிப்பவை.

இன்றைய நம் சிந்தனைக்கு இத்தலைமுறை அட்டவணையில் வரும் பெண்களை எடுத்துக்கொள்வோம். தலைமுறை அட்டவணை (விவிலியம் மற்றும் வரலாறு) வழக்கமாக ஆண்களின் பெயர்களைத்தான் கொண்டிருக்கும். ஆனால், மத்தேயு தன் அட்டவணையில் ஐந்து பெண்களின் பெயர்களைச் சேர்க்கின்றார்: (1) தாமார், (2) இராகாபு, (3) ரூத்து, (4) உரியாவின் மனைவி, மற்றும் (5) மரியா.

இவர்கள் யார்? மெசியாவின் தலைமுறை அட்டவணையில் இடம் பெறும் அளவுக்கு இவர்கள் செய்தது என்ன?

1. தாமார்
தாமார் பெரேட்சு மற்றும் செராவைப் பெற்றெடுக்கின்றார். இவரின் கதையை நாம் தொநூ 38ல் வாசிக்கின்றோம். யாக்கோபின் 12 மகன்களில் ஒருவரான யூதாவின் மருமகள் இவர். தாமாரின் கணவன் இறந்துவிடுகின்றார். அவர்கள் வழக்கப்படி கணவனின் தம்பியர் இவரை மணந்து குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும். ஆனால், யூதா தன் மகன்களை இவருக்கு மணமுடித்துக் கொடுக்கத் தயங்குகின்றார். ஆக, இவர் தன்னையே ஒரு விலைமாது போல உருமாற்றிக் கொண்டு சாலை ஓரம் அமர்ந்திருக்கிறார். ஆட்டுக்கு உரோமம் கத்தரிக்க வந்த தாமார் இவர் ஒரு விலைமாது என நினைத்து உடலுறவு கொள்கிறார். தாமார் கருத்தரிக்கிறார். 'உன் மருமகள் கருவுற்றிருக்கிறார்' என்று சொல்லப்பட்டபோது, தங்கள் சட்டப்படி அவர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்று எழும்போது, தன் கருவுக்குக் காரணம் யூதா என மொழிகிறார் தாமார். தாமாரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகின்றார் யூதா. தன் மாமனாரின் தவறைச் சுட்டிக்காட்டுவதோடு, தன் புத்திசாலித்தனத்தால் தன் கணவனின் சந்ததியை வாழ வைக்கின்றார். (ஆனால்! பெண்கள் எது செய்தாலும் அதைப் புத்திசாலித்தனம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது! மருமகளுக்கும் விலைமாதுக்கும் வித்தியாசம் தெரியாமலா உறவு கொண்டார் யூதா? கடவுளின் செயல்களை விந்தை என்று நினைத்து அமைதி காப்பதே நலம்!)

2. இராகாபு

இவரை நாம் யோசுவா 2 மற்றும் 6ஆம் அதிகாரங்களில் சந்திக்கின்றோம். எரிக்கோ நகரைக் கைப்பற்றுமுன் அந்நகரின் நெளிவு சுளிவுகளைக் கண்டறிய ஒற்றர்களை அனுப்புகிறார் யோசுவா. ஒற்றர்கள் புத்திசாலிகள். அவர்கள் நேராக அந்நகரின் விலைமாதின் வீட்டிற்குச் செல்கின்றனர். ஏனெனில், விலைமாதுக்கு நகரின் அனைவரையும், அனைத்தையும் தெரியும். ஆண்கள் பொதுவாக 'அந்த' நேரத்தில் பெண்கள் எதைக் கேட்டாலும் சொல்லி விடுவார்கள். 'இராகாபு' என்றால் 'அகன்ற தெரு' என்று பொருள். ஆக, விலைமாதின் 'வீடு' ஒரு தெரு போல அனைவரும் போய், வருகின்ற இடமாக இருக்கிறது. விபச்சாரம் அல்லது விலைமாதுக்கள் திருமணம் என்ற நிறுவனத்தைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது சமூக அறிவியல் பாடம். இந்தப் பெண்ணும் புத்திசாலி. இஸ்ரயேலின் கடவுளின் வல்லமையை ஏற்றுக்கொள்கின்றார். மேலும், தான் கொடுத்த தகவலுக்குக் கைம்மாறாக தன் வீட்டையும், தன் தாயையும் காப்பாற்றுமாறு கோரிக்கை வைக்கின்றார். நிகழ்வுகளையும், நேரங்களையும் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வதில் பெண்கள் கில்லாடிகள். இவ்வளவு காலம் தனக்கு 'சோறு' போட்ட எரிக்கோ மக்களையும், நகரத்தையும் காட்டிக்கொடுக்கின்றார். 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற தத்துவத்திற்கு இராகாபு நல்ல எடுத்துக்காட்டு. இது கடவுளின் திருவுளம். நோ கமெண்ட்ஸ்.

3. ரூத்து

இவர் மோவாபு நாட்டைச் சேர்ந்த ஒரு புறவினத்துக் கைம்பெண். தன் மாமியார் நகோமி மேல் கொண்ட அன்பால் அவரைப் பின்பற்றுகிறார். யாரும் இல்லாத ஓர் இரவில் எருசலேமின் மிகப் பெரும் பணக்காரரான போவாசு குடி போதையில் களத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்தவரின் போர்வையை விலக்கி அவரோடு படுக்கின்றார் ரூத்து (ரூத் 3:7) அன்று இரவு அவர்களுக்கிடையே ஒன்றும் நடக்கவில்லை என்றுதான் விவிலியம் சொல்கிறது. போவாசையே கணவராக்கி அவர் வழியாக குழந்தை பெற்றுக்கொள்கின்றார். இவரின் அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கம் போற்றுதற்குரியது.

4. உரியாவின் மனைவி

பின் மாலை நேரத்தில் - மதியம் கடந்த பின் - குளித்துக் கொண்டிருந்தவர் இவர் (2 சாமு 11:2). தாவீது பார்க்க வேண்டும் என்று இவர் குளித்தாரா, அல்லது இவரைப் பார்க்க வேண்டும் என்று தாவீது மொட்டை மாடிக்கு வந்தாரா என்று தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். செய்யக் கூடாததை செய்யக் கூடாத நேரத்தில் செய்தால் பிரச்சினை என்பதற்கு உரியாவின் மனைவி பெத்சேபா எடுத்துக்காட்டு. இவரும் ஒரு புறவினத்துப் பெண். தாவீது இவரோடு உறவு கொள்கின்றார். இவர் கருவுற்றதை தாவீது அறிந்த உரியாவை அதற்குக் காரணமாக்க நினைக்கிறார். ஆனால், விதி வேறு மாதிரி இருக்கிறது. உரியாவைக் கொலையும் செய்கின்றார் தாவீது. இந்நிகழ்வில் பெற்ற குழந்தை இறந்துவிடுகிறது (2 சாமு 12:16-23). ஆனால், இவர் வழியாகவே சாலமோன் பிறக்கிறார். தன் மகன் சாலமோனை அரசனாக்கி காரியம் சாதிக்கின்றார் (காண். 1 அர 1:11-53). தான் ஒரு பலிகடா ஆக்கப்பட்டாலும், சமயம் பார்த்து தலைவி ஆகிறார் பத்சேபா.

5. மரியா

இவரை ஓர் இளம்பெண்ணாக அறிமுகம் செய்கிறார் மத்தேயு. கிறிஸ்து பிறப்பு நிகழ்வின், மீட்பு வரலாற்றின் கதாநாயகி இவர். 'கணவனை அறியாமலேயே' கடவுளின் ஆவியால் கருவுறுகிறார் மரியா. ஆனால், தான் கருவுற்றிருப்பதை தன் துணைவர் யோசேப்புக்கு இவர் தெரிவிக்கும் விதம் அருமை. 'உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என சரணடைகின்றார் மரியா.

மேற்காணும் ஐந்து பெண்களும் மெசியாவின் தலைமுறை அட்டவணைக்குள் நுழையக் காரணம் அவர்களின் நம்பிக்கையே. தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளையும் தாண்டி அவர்கள் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தனர். கடவுள் மௌனமாக இருந்தாலும், கடவுள் தங்கள் வாழ்க்கை என்ற படகைப் புயலில் சிக்க வைத்தாலும், கடவுள் தூரமாகத் தெரிந்தாலும், இவர்கள் அவரின் விரலை இறுகப் பிடித்துக்கொண்டனர்.


Friday, December 14, 2018

கண்டுணரவில்லை

இன்றைய (15 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 17:10-13)

கண்டுணரவில்லை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வின் இரண்டாம் பகுதியை வாசிக்கின்றோம். தாபோர் மலையில் தம் சீடர்கள் மூவர் முன்னிலையில் இயேசு உருமாற்றம் அடைகின்றார். மோசேயும் எலியாவும் தோன்றி இயேசுவோடு உரையாடுகின்றனர்.

இந்நிகழ்வு முடிந்து இயேசுவும் சீடர்களும் மலையை விட்டு இறங்கும்போது அவர்களின் உரையாடல் எலியாவைப் பற்றி இருக்கின்றது. 'எலியா ஏற்கனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை' என திருமுழுக்கு யோவானை எலியாவின் உருவமாக முன்வைக்கிறார் இயேசு.

மேலும், தாங்கள் விரும்பியவாறெல்லாம் மக்கள் யோவானுக்குச் செய்தார்கள்.

நெருப்பு, பஞ்சம், சீற்றம் - இப்படியாக பழைய ஏற்பாட்டில் எலியா தன்னை வெளிப்படுத்துகிறார்.

காணக்கூடிய நபராக, காணக்கூடிய செயல்களை யோவான் செய்யவில்லை.

கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் வெகு அருகில் வந்துவிட்டது.

குடில், நட்சத்திரம், தோரணம் என காணக்கூடியவை நிறைய வந்த வண்ணம் இருக்கின்றன.

காணக்கூடிய இவற்றின் நடுவில் காணமுடியாத அவரும் இருக்கிறார்.

அவரைக் கண்டுணர நேரமும், விருப்பமும் இருக்கிறதா நமக்கு?

Thursday, December 13, 2018

குழந்தைகள் உலகம்

இன்றைய (14 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 11:16-19)

குழந்தைகள் உலகம்

'தெ லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்' என்ற திரைப்படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஹிட்லரின் நாசி ஜெர்மனியில் ஏற்படுத்தப்பட்டிருந்த வதைமுகாம்களில் யூதர்கள் கொடுமையாக நடத்தப்பட்டதை, அவர்கள் கொல்லப்பட்டதைப் பற்றிய திரைப்படம். கதாநாயகன், கதாநாயகி, அவர்களின் மகன் என மூவரும் ஒரு வதைமுகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர். 'நாம் எங்கே போகிறோம்?' என்ற அந்த மகனின் கேள்விக்கு, 'நாம் விளையாடப் போகிறோம். அங்கே நிறைய வகையான விளையாட்டுக்கள் இருக்கும். ஒவ்வொரு விளையாட்டிற்கும் வௌ;வேறு புள்ளிகள் கொடுக்கப்படும். இறுதியில் புள்ளிகள் கூட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்' என்பார் கதாநாயகன். மேலும், படத்தின் ஒவ்வொரு துயரமான நகர்வையும் ஒரு விளையாட்டு போல தன் மகனுக்கு எடுத்துரைக்கும் கதாநாயகனின் அணுகுமுறை மிகவும் இனிமையாக இருக்கும்.

மேலும், வாழ்க்கை துயரமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை நாம் ஒரு விளையாட்டு போல எடுத்துக்கொண்டால் புதிய பார்வை கிடைக்கும் என்ற வாழ்க்கைப் பாடத்தையும் இத்திரைப்படம் சொல்கிறது.

நிற்க.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்துக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு ஒன்றை உருவகமாகப் பயன்படுத்துகிறார் இயேசு:

சந்தை வெளியில் குழந்தைகள் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருப்பர். ஒரு வரிசையில் இருப்பவர் எதிர் வரிசையில் இருப்பவரைப் பார்த்து,

'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை' என்று சொல்ல,

எதிர் அணியினர் அதற்கு ஒத்த மற்றொரு சொல்லாடலைச் சொல்ல வேண்டும்:

'நாங்கள் ஒப்பாரி வைத்தோம். நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று அவர்கள் சொல்ல,

ஒன்றும் சொல்ல முடியாமல் நிற்கும் அணி தோற்றதாகக் கருதப்படும். ஏறக்குறைய நம்ம ஊர் பாட்டுக்குப் பாட்டு போல.

இந்த விளையாட்டில் 'முதல் வாக்கியத்திற்கு' முரணாக 'இரண்டாவது வாக்கியம்' இருக்க வேண்டும்.

இந்த விளையாட்டை நகர்த்திச் செல்வதே 'முரண்' தான்.

திருமுழுக்கு யோவான் வந்தார். அவர் உண்ணவுமில்லை. குடிக்கவுமில்லை. அவரைப் பேய் பிடித்தவன் என்கிறார்கள் மக்கள்.

இயேசு வந்தபோது உண்டார், குடித்தார். ஆனால், அதையும் முரணாகப் பார்த்தனர் மக்கள். ஆகையால், அவரை 'பெருந்தீனிக்காரன்' என்கிறார்கள்.

முரண் இருக்கும் போது விளையாட்டு வேண்டுமானால் இனிமையாக இருக்கும். ஆனால், வாழ்க்கை இனிமையாக இருக்காது.

எப்படி?

'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்கள் சான்று' என நிறைவு செய்கிறார் இயேசு.

ஞானமும் அதன் செயல்களும் முரண்படுவதில்லை.

ஏற்றுக்கொண்ட நம்பிக்கையும், நம்பிக்கையில் ஊற்றெடுக்கும் செயல்களும் முரண்படுவதில்லை.

ஆக, முரண்களைக் களைவதில்தான் ஆன்மீகம் இருக்கிறது.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 48:17-19), 'பயனுள்ளவற்றை உனக்கு கற்பிப்பவரும், செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! ... உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலவும், உன் வெற்றி கடல் அலை போலவும் இருக்கும்' என்கிறார் ஆண்டவர். ஆண்டவரின் நிறைவு நம் நிறைவாக வெளிப்படும். அங்கே முரண் என்பதே இல்லை.

இன்று என் உலகம் எப்படி இருக்கிறது?

என் சொல்-செயல், வார்த்தை-வாழ்வு, இருப்பு-இயக்கம், வெளி-உள் இவற்றில் முரண் இருந்தால் என் உலகம் குழந்தைகள் உலகமாகவே இருக்கும். குழந்தைகள் உலகம் மிகவும் தற்காலிகமானது. விளையாட்டு விரைவாக முடியும். முரண்களும் தற்காலிகானவையாக இருக்கும்.

Wednesday, December 12, 2018

அஞ்சாதே

இன்றைய (13 டிசம்பர் 2018) முதல் வாசகம் (எசா 41:13-20)

அஞ்சாதே

கடந்த சில நாள்களாக எசாயா இறைவாக்கினர் நூலிலிருந்து முதல் வாசகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். மெசியாவின் வருகை மற்றும் அந்த வருகையின்போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி இறைவாக்குரைக்கின்றார் எசாயா.

'அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன் ... யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே அஞ்சாதிரு. நான் உனக்குத் துணையாய் இருப்பேன்.' என ஆறுதல் தருகிறார் எசாயா.

புழு மற்றும் பொடிப்பூச்சி - வலுவின்மையின் உருவகங்கள் இவை.

இவைகளால் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள முடியுமே தவிர, அதைத் தாண்டி வேறு எதுவும் இவைகளால் செய்ய முடியாது. மேலும், இவை தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அடுத்தவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். மேலும், சில நேரங்களில் மற்றவர்கள் தவறாக இவற்றின் மேல் மிதித்தாலும் இவைகள் இறந்துவிடும்.

இப்படிப்பட்ட வலுவின்மையைக் கடவுள் வல்லமையாக மாற்றுவதாகச் சொல்கின்றார். எப்படி?

'நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கூர்மையாக்குவேன். நீ மலைகளைப் பேராடித்து நொறுக்குவாய். குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.'

போரடிக்கும் குச்சியைப் பார்த்ததுண்டா?

தட்டைப் பயிறு, பாசிப் பயிறு போன்ற பயிறு வகைகள் காய்ந்தவுடன், அவற்றைக் களத்தில் போட்டு ஒரு குச்சி அல்லது கட்டையால் தட்டுவர். போரடிக்கும் கட்டைகள் வலிமை கொண்டவை. அவற்றைக் கவனமகக் கையாண்டால்தான் பயிறு வகைகளை எடுக்க முடியும். புழு, பூச்சியாக இருந்த இஸ்ரயேலை போரடிக்குக் குச்சியாக மாற்றுகிறார் இறைவன். மேலும், இக்குச்சியின் வலிமை எப்படி இருக்கிறது என்றால், இக்குச்சிகளைக் கொண்டு மலைகளைப் போரடிக்க முடியும்.

வலிமையற்ற ஒன்று இறைவனின் அருள்கரத்தால் வலிமை பெறுகிறது.

இதையொட்டியே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (காண். மத் 11:11-15), விண்ணரசில் சிறியவரைப் பெரியவர் என அழைக்கிறார் இயேசு.இதுவும் இறைவனின் அருள்கொடையே.

Tuesday, December 11, 2018

கற்றுக்கொள்ளுங்கள்

இன்றைய (12 டிசம்பர் 2018) நற்செய்தி (Mt 11:28-30)

கற்றுக்கொள்ளுங்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே' என்று தன் சமகாலத்தவர்களை நோக்கிப் பேசுகின்றார் இயேசு.

இயேசுவின் உரையாடலில் இரண்டு கட்டளைச் சொற்களும், மூன்று சுட்டுச் சொற்களும் இருக்கின்றன:

கட்டளைச் சொற்கள்: (அ) வாருங்கள், (ஆ) கற்றுக்கொள்ளுங்கள்

சுட்டுச் சொற்கள்: (அ) நான் இளைப்பாறுதல் தருவேன், (ஆ) நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன், (இ) என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது.

'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே' என்னும் வார்த்தைகளை சில அருங்கொடை போதகர்கள், 'பாவச்சுமை' என்று பொருள் கொடுக்கின்றனர். எந்நேரமும் ஏன் பாவத்தைப் பற்றிப் பேச வேண்டும்?

சுமை என்பது இயேசுவின் சமகாலத்தவர் அனுபவத்த அரசியல், பொருளாதார, சமய, சமூக சுமைகளாக இருக்கலாம். இவற்றைக் குறைப்பதற்காகவே இயேசு அவர்களைத் தங்களிடம் அழைக்கின்றார். இயேசுவின் அழைப்பு சுமைகளை அகற்றுவதற்காக அல்ல. மாறாக, அவர்கள் ஏற்கனவே வைத்திருக்கின்ற நுகத்தை அகற்றி, தன் நுகத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளப் பணிக்கின்றார். நுகம் ஏற்காத எந்த மாடும் சோம்பேறி ஆகிவிடும். அதே நேரத்தில் நுகம் அதிகம் அழுத்தினாலும் அது மாட்டின் அழிவிக்குக் கொண்டுபோய் விடும். நெறிக்கின்ற நுகத்தை அகற்றி இனிய நகத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பதாக இருக்கின்றன இயேசுவின் வார்த்தைகள்.

இயேசுவிடம் வருபவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது. அந்த இளைப்பாறுதல் ஒரு பாடசாலையாக மாறுகிறது. ஏனெனில், அந்நேரத்தில்தான் அவரின் கனிவும், மனத்தாழ்மையும் பாடங்களாக மாறுகின்றன.

'கற்றுக்கொள்ளுங்கள்' - இது ஒரு முக்கியமான மேலாண்மையியல் சொல்லாடல்.

கற்றல் என்பது அனுபவித்தல் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது ஒரு பள்ளிக்கூட மனனக் கற்றல் அல்ல. மாறாக, வாழ்க்கைக் கற்றல். வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் நாம் கற்கிறோம். டீக்குடிக்க செல்கிறேன். டீ சுடுகிறது. வாய் புண்ணாகிறது. 'இனி சூடாகக் குடிக்கக் கூடாது' எனக் கற்கிறேன். இந்தக் கற்றல் அடுத்தமுறை நான் டீ குடிக்கும்போது என்னை எச்சரிக்கிறது. ஆக, 'கனிவையும்,' 'மனத்தாழ்மையையும்' கூட நாம் கற்றுக்கொள்ள முடியும். இயல்பாக, நம்மில் இருக்கின்ற 'கரடுமுரடான நிலையும்,' 'ஆணவமும்' மறைய, நாம் கனிவையும், மனத்தாழ்மையையும் கற்றாக வேண்டும்.

பழைய இயல்பு மறைந்து புதிய இயல்பு நம்மைச் சீர்படுத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 40:25-31), எசாயா இறைவாக்கினர், 'ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்' என நம்பிக்கை தரும் ஆறுதலை முன்வைக்கின்றார்.

சில நேரங்களில் மனிதர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை குலையும் போது நம் ஆற்றலும் குறைந்தவிடுகிறது. ஆனால், இதன் எதிர்ப்பதமாக, ஆண்டவர்மேல் வைக்கும் நம்பிக்கை ஒருவருக்குப் புதிய ஆற்றலைத் தருகின்றது. இது பேட்டரியை ரீசார்ஜ் செய்வதுபோல அல்லாமல், புதிய பேட்டரியைப் பொருத்துவதாக இருக்கிறது. மேலும், கழுககள் போல இருப்பார்கள் என்ற உருவகத்தையும் தருகின்றார் எசாயா.

கழுகு ஒரு விந்தையான பறவை. புயல், சூறாவளி போன்ற நேரங்களில் மற்ற பறவைகள் தங்கள் கூடுகளைத் தேடிச் சென்று அடைந்து கொள்ளும். ஆனால், கழுகு புயல் மற்றும் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி யாரும் எட்ட முடியாத உயரத்தை அடையும். ஆக, ஒரு எதிர்மறையான சூழலை நேர்முகமாகப் பயன்படுத்தி நம் வாழ்வின் உச்சம் எட்டுவதற்கு கழுகு ஒரு நல்ல பாடம்.

இதையொத்த உருவகமே இன்றைய பதிலுரைப் பாடலிலும் (காண். திபா 103) தரப்படுகின்றது: 'அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார். உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.'

Monday, December 10, 2018

காணாமற்போவதும் கண்டுபிடிப்பதும்

இன்றைய (11 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 18:12-14)

காணாமற்போவதும் கண்டுபிடிப்பதும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளில் ஒன்று வழி தவிறிச் செல்வதையும், அவர் அந்த ஆட்டைக் கண்டுபிடித்ததால் அடையும் மகிழ்ச்சியையும்' பதிவு செய்கிறார் மத்தேயு நற்செய்தியாளர்.

நீங்கள் எதையாவது என்றாவது தொலைத்த அனுபவம் இருக்கிறதா?

கண்டிப்பாக நம் அனைவருக்கும் இருக்கும்.

ஓட்டலுக்குச் செல்கிறோம். வீட்டிலிருந்து புறப்படும்போது பர்ஸ் எடுத்து வைத்தோம். சாப்பிட்டு விட்டு பில் வந்தவுடன் பர்ஸைக் காணோம். உடனே, ஒருவித பயம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

காரில் செல்கிறோம். எல்லாம் எடுத்து வைக்கின்றோம். டோல் கேட் வருகிறது. பணம் செலுத்த பர்ஸ் தேடுகிறோம். பர்ஸ் தொலைந்துவிட்டது.

பேருந்தில், மருத்துவமனையில், வீட்டில் என நாம் தொலைக்கும் பொருள்கள் ஏராளம் ஏராளம். தொலைந்துபோனதைக் கண்டுபிடிக்க நாம் அந்தோனியார் போன்ற புனிதர்களின் உதவியையும் நாடுகிறோம்.

ஆக, 'ஐயோ, அதைக் காணோமே!' என்று ஒன்றைப் பற்றி நினைப்பதுதான் தொலைத்தல் உணர்வு. இந்த உணர்வில் பயம், ஏமாற்றம், ஏக்கம், கலக்கம், குற்றவுணர்வு எல்லாம் ஒரசேரக் கலந்திருக்கிறது.

தேடிய பொருள் கிடைத்தவுடன், மேற்காணும் உணர்வுகள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சி வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது.

இன்றைய நாளில் நான் எனக்குள் தொலைத்த ஒன்று என்ற நிலையில் சிந்திப்போம்.

புனித அகுஸ்தினார். அவரிடம் எல்லாம் இருந்தது. நிறைய படிப்பு இருந்தது. பேச்சாற்றல் இருந்தது. அந்தப் பேச்சாற்றலை பாடமாக எடுக்கும் பள்ளி ஒன்றை அவர் நடத்தினார். நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நல்ல குடும்பப் பின்புலம் இருந்தது. உழைப்பு இருந்தது. பணம் இருந்தது. இப்படி எல்லாம் இருந்தும், தனக்குள் ஏதோ ஒன்று தொலைந்துவிட்டதாக அவர் எண்ணிக்கொண்டே இருந்தார். இப்படி எண்ணியவாறே, ஒருமுறை சாலையில் செல்லும்போது குடிகாரர் ஒருவர் கையில் ரொட்டித் துண்டையும், ஒயின் பாட்டிலையும் வைத்துக்கொண்டு, பாடிக்கொண்டே செல்வதைக் காண்கிறார். 'இந்தக் குடிகாரனிடம் இருக்கும் இந்த மகிழ்ச்சி கூட என்னில் இல்லையே! இவனுடைய போதை விடிந்தால் தீர்ந்துவிடும். ஆனால், படிப்பு, மோகம், வாழ்க்கை முன்னேற்றம் என நான் கொண்டிருக்கும் போதை எத்தனை நாள் விடிந்தாலும் தீர்வதில்லையே. நான் இன்று எந்த துன்பத்தோடு போராடுகிறேனோ, அந்தப் போராட்டத்தில் அயர்ந்து தூங்குகிறேனோ, அதே போரட்டத்தைத்தான் அடுத்த நாளும் போரார வேண்டியிருக்கிறது!' என புலம்பும் அகுஸ்தினார் தன் இறைவனைக் கண்டவுடன், அவருடைய அனுபவம் பெற்றவுடன், தேடியது கிடைத்த மகிழ்ச்சி அடைகிறார். அவர் இதுவரை வைத்திருந்த அனைத்தையும் தூக்கி எறிகிறார்.

ஆக, நாம் ஒவ்வொருவருமே நமக்குள் எதையோ தொலைத்திருக்கிறோம். அந்தப் பொருள் கைகூடும் போது நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கிறது.

இதை நாம் எப்படி அடைவது?

1. முதலில், 'எது தொலைந்திருக்கிறது' என்பதை நான் உணர வேண்டும். இந்த உணர்தல்தான் தேடுதலின் முதற்படி. எது தொலைந்திருக்கிறது என்று தெரியாமல் தேடினால் நம் தேடலுக்கு முடிவே இருக்காது.

2. இரண்டாவதாக, 'எங்கே தேடுவது' என்பதை அறிய வேண்டும். 'சாவியை எங்கோ தொலைத்துவிட்டு தெருவிளக்கின் கீழ் தேடிய முல்லா, 'இங்குதான் வெளிச்சம் இருக்கிறது. ஆக, நான் இங்கே தேடுகிறேன்'' என்று சொல்லாமல், தொலைந்ததை தொலைந்த இடத்தில், நபரில் தேட வேண்டும்.

3. மூன்றாவதாக, 'தேடலுக்காக இழப்பது.' தவறிய ஒரு ஆட்டைக் கண்டுபிடிக்க தன் கையில் இருக்கும் 99 ஆடுகளை இழக்க வேண்டும். இவற்றையும் கூட்டிக்கொண்டு தேடும்போது நேரமும், ஆற்றலும் விரயமாகும். மேலும், மற்ற ஆடுகளும் தொலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. ஆக, 99 ஆடுகளை இழக்கத் துணியும் ஒருவரால்தான் தவறிய ஆட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

திருவருகைக்காலம் தேடலின் காலம்.

நமக்கு வெளியே தொலைந்தவற்றைத் தேடுவதைவிட நமக்கு உள்ளே தொலைந்திருப்பவற்றைத் தேடுவதும், அந்தத் தேடல் தரும் மகிழ்வை அனுபவிப்பதுமே கிறிஸ்து பிறப்பு.

சில நேரங்களில் நாம் தேட வேண்டியதை இறைவனே காட்டுகின்றார் - இன்றைய முதல் வாசகத்தில் போல.


Friday, December 7, 2018

அமல உற்பவம்

இன்றைய (8 டிசம்பர் 2018) திருவிழா

அமல உற்பவம்

அன்னை கன்னி மரியாளின் அமல உற்பவப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்தப் பதிவை எழுதும் நேரம், 2015ஆம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் மரியாள் தோன்றிய இடத்தில் நிற்கும், 'நாமே அமல உற்பவம்' என்று எழுதப்பட்ட சுரூபம் இருக்கும் இடம் நோக்கி என் மனம் செல்கிறது.

'அமலம்' - சில சமஸ்கிருதச் சொற்கள் முன் 'அ' சேர்க்கும்போது எதிர்ப்பதம் உருவாகும். 'மலம்' என்பதோடு 'அ' சேரும்போது, இந்த வார்த்தை 'தூய்மை' (அதாவது 'தூய்மையற்றது இல்லாதது') என்று பொருள்படுகிறது.

காஷ்மீர் சைவ சமயம் என்று சொல்லப்படும் சைவ சமயம் மூன்று வகை 'மலம்' ('தூய்மையற்ற நிலை' அல்லது 'அழுக்கு') பற்றி பேசுகிறது: 'ஆணவ மலம்,' 'கர்ம மலம்,' 'மாய மலம்'. இந்த மூன்று மலங்களும் ஒருவரைக் கடவுளிடமிருந்து தள்ளி வைக்கிறது. 'ஆணவ மலம்' ஆட்கொள்ளும்போது நான் என்னை மட்டும் முன்நிறுத்துகிறேன். 'கர்ம மலம்' ஆட்கொள்ளும்போது நான் என் செயல்களோடு என்னை ஒருங்கிணைத்துக்கொள்கிறேன். 'மாய மலம்' ஆட்கொள்ளும்போது நான் நிலையற்றவற்றில் என் மனத்தைச் செலுத்துகிறேன்.

இந்த மூன்று 'மலங்களும்' மறையும்போதுதான் ஒருவர் 'நிர்வாண நிலை' (மோட்சம்) அடைகின்றார்.

சைவ சமயத்தின் இந்தப் போதனை ஒரு பக்கம் இருக்கட்டும்.

அன்னை மரியாள் 'அமல உற்பவம்' என்ற சொல்லும்போது, நாம் அன்னை மரியாளிடம் மேற்காணும் தூய்மையற்ற நிலை என்று சொல்கிறேரமா? அல்லது திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் 1854ல் மொழிந்த 'இன்எஃப்பாபிலிஸ் தேயுஸ்' என்ற கொள்கைத் திரட்டு சொல்வதை நம்புகிறோம் என்று சொல்கிறோமா?

'அன்னை மரியாள் பிறப்பிலிருந்தே எந்த மாசும், எந்தத் துன்பமும் இல்லாமல் இருக்கிறார். இது கடவுள் அவருக்கு வழங்கிய தனிப்பட்ட கொடை. இந்தக் கொடை அவர் இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுப்பதற்கான தயாரிப்பாக இருக்கிறது.'

- இதுதான் கொள்கைத்திரட்டின் சுருக்கம்.

இந்தக் கொள்கைத்திரட்டிற்கு நாம் 'ஆம்' என்று சொல்ல வேண்டும். ஏனெனில், இது திருத்தந்தை அவர்களின் 'வழுவாநிலைக் கோட்பாடு' வழியாக நமக்கு அருளப்பட்டது.

மேற்காணும் கொள்கைத்திரட்டின் சாரம் திருக்குரானிலும் உள்ளது. அங்கே, 'உலகிற்கு வரும் எல்லார் மேலும் சாத்தானின் நிழல் இருக்கிறது. ஆனால், மிரியம் மற்றும் அவளின் மகனிடம் இல்லை' என்கிறது திருக்குரான்.

அமல உற்பவத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

வழக்கமாகக் கொடுக்கப்படும் சாமானிய எடுத்துக்காட்டு, 'பாலும் பாத்திரமும்.' பாலை ஏந்த வேண்டிய பாத்திரம் தூய்மையாய் இருந்தால் பால் தூய்மையாக இருக்கும்.

ஆனால், இது மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டு அன்று.

'பாவ இயல்பு' - இதைப் புரிந்துகொண்டால் இந்தத் திருநாளைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய முதல் வாசகத்தில் ஏவாள் சபிக்கப்படும் நிகழ்வைப் பார்க்கிறோம். 'உயிருள்ளோர் அனைவருக்கும் தாய்' என்று ஏவாள் பெயர்பெறுவது இந்த நிகழ்வில்தான். 'மனுசி' என்று இருந்தவள் 'தாய்' என்ற பெயர் பெறுகிறாள். 'நீ ஏன் உண்டாய்?' என கடவுள் கேட்க, 'பாம்பு என்னை ஏமாற்றியது. நானும் உண்டேன்' என்கிறாள் ஏவா.

'பாம்பு' அல்லது 'சாத்தான்' - இதன் குணம் ஏமாற்றுதல் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. 'ஏமாற்றுதல்' என்பதை 'ஒற்றைத்தன்மையை மறுதலிக்கும் நிலை.' எடுத்துக்காட்டாக, நான் 'உண்மை' என்று ஒன்றைச் சொல்லி அங்கே 'பொய்' சொன்னால் அங்கே ஒற்றைத்தன்மை மறுக்கப்படுகிறது.

பாவ இயல்பின் பண்பு ஏமாற்றுதல்.

திருடுவது நல்லது என என் இயல்பு ஏமாற்றுகிறது. நான் திருடுகிறேன்.
பொய் சொல்வது நல்லதுதான். எல்லாரும் செய்கிறார்கள் என என் இயல்பு ஏமாற்றுகிறது. நான் பொய் சொல்கிறேன்.

உலகத்துல இல்லாததா? நீயும் அதைப்போல இரு! என என் இயல்பு ஏமாற்றுகிறது. நான் அதன்படி செய்கிறேன்.

ஆனால், அடுத்த நாளே என் 'நன்மை இயல்பு' நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை எனக்கு உணர்த்திவிடுகிறது. உடனே, என் உள்ளம் குற்ற உணர்விற்கும், தொடர்ந்து பயத்திற்கும் ஆட்படுகிறது. ஆக, ஏமாற்றம், குற்ற உணர்வு, பயம் - இந்த மூன்றும் நாம் எந்தத் தவறு செய்தாலும் நம்மைச் சுற்றிக்கொள்ளும். மேலும், ஒருமுறை சிக்கிக் கொள்ளும் இந்தச் சூறாவளியிலிருந்து நம்மால் எளிதில் தப்ப முடிவதில்லை. இந்த மூன்றையும் குணமாக்காமல் சில நேரங்களில் நாம் மேலோட்டமாக மருந்து போட்டுக்கொள்கிறோம். இவை நாற்றம் எடுக்காமல் இருக்க சின்னச் சின்ன சமரசங்கள் என்னும் ஊதுபத்திகளை ஏற்றிக்கொள்கிறோம்.

இதிலிருந்து தப்பிக்க கடவுளின் அருள் மிக அவசியம் அவருடைய அருள் அன்றி நாம் இதிலிருந்து விடுபட முடியாது. அவர் நம்மை ஏமாற்றுவதில்லை.

ஆக, இன்றைய நாளில் நாம் அன்னை மரியாளின் பேறுபெற்ற நிலையைவிட, அவருக்குக் கடவுள் தந்த அருள்கொடையைத்தான் கொண்டாடுகிறோம். இவ்வாறாக, இது ஆண்டவரின் அருளின் திருவிழா.

அன்னை மரியாளுக்கு இந்தக் கொடை அவருடைய பிறப்பிலேயே கிடைத்தது.

உங்களுக்கும், எங்களுக்கும் பிறந்த பின் கிடைக்கிறது.

மேற்காணும் சூறாவளியிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள நம் முன்மாதிரியான அமல உற்பவியின் பரிந்துரையை நாடும்.

'ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அன்னை மரியே, உம் அடைக்கலம் தேடி வரும் பிள்ளைகளைக் காத்தருளும்!'

இன்றைய நாளில் தங்களின் பாதுகாவலியின் திருநாளைக் கொண்டாடும் தனிநபர்கள், நிறுவனங்கள், துறவற சபைகள், நாடுகள், நகரங்கள், ஆலயங்கள் அனைத்திற்கும் நம் வாழ்த்துக்கள்.

Thursday, December 6, 2018

இதைச் செய்ய முடியும்

இன்றைய (7 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 9:27-31)

நான் இதைச் செய்ய முடியும்

'முடியும் என்று சொன்னதாலதான் அமெரிக்காக்காரன் நிலவுக்கு ராக்கெட் விட்டான்.
முடியாது என்று சொன்னதாலதான் நாம இன்னும் நிலாச்சோறு ஊட்டிக்கிட்டு இருக்கும்.

முடியாது என்று சொன்னால் மனுசன் இன்னும் குரங்காவே இருந்திருப்பான்'

- அமைதிப்படை திரைப்படத்தில் வரிகள் இப்படித்தான் இருக்கும்.

'முடியும்' - இது வரலாற்றில் முக்கியமான வார்த்தை.

மீட்பு வரலாற்றில் இது இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்றோர் இருவர் இயேசுவிடம் வந்து பார்வைபெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்:

'தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும்'

'நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'

'ஆம் ஐயா!'

'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'

பார்வையற்றவர்கள் பார்வை பெறுகின்றனர்.

கபிரியேல் வானதூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன நிகழ்வில், மரியா தூதரிடம், 'இது எப்படி முடியும்? நான் கன்னி ஆயிற்றே' எனத் தயக்கம் காட்டுகிறார். 'கடவுளால்  முடியாதது எதுவும் இல்லை' என்று தூதர் சொன்னவுடன், சரணாகதி அடைகின்றார் மரியா.

'இவரால் முடியும்' என்று பார்வையற்றவர் நினைத்ததால் அவர்கள் பார்வை பெற்றனர்.

'இவரால் முடியும்' என்று மரியா சொன்னதால் மீட்பர் இவ்வுலகில் பிறந்தார்.

இவர்கள் இருவரும் அடுத்தவரை நம்பினர். இந்த நம்பிக்கையின் ஊற்று அவர்கள்தாம். அதாவது, 'என்னால் முடியும்' என்று நினைக்கும் ஒன்றைத்தான், 'இவரால் முடியும்' என அடுத்தவரில் என்னை நம்ப முடியும்.

இன்றைய பதிலுரைப்பாடல் ஆசிரியரும், 'ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு' என நம்புகிறார். அவர் அந்த ஒளியின் துணையைக் கண்டுகொள்கிறார்.

Tuesday, December 4, 2018

எதுவும் இல்லை

இன்றைய (5 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 15:29-37)

இவர்களிடம் எதுவும் இல்லை

இன்று மேலாண்மையியலில் அதிகமாகப் பேசப்படும் ஒரு சொல்லாடல் 'நிறைவு மனநிலை' (abundance mentality or attitude). அதாவது, நிறைவாகச் சிந்திப்பது. ஒரு அலுவலகத்தின் மேனேஜர் தன் பணியாளர்கள், நிறுவனம், முதலீடுகள், வாடிக்கையாளர்கள் பற்றி நிறைவாகச் சிந்திக்க வேண்டும். அப்படியே ஒவ்வொருவரும். நிறைவாகச் சிந்திப்பது என்றால் குறைகளை மூடி மறைப்பது அல்ல. மாறாக, 'எல்லாம் நன்றாக இருக்கிறது,' 'இனியும் நன்றாக இருக்கும்' என்று நேர்முகமாகப் பார்ப்பது. இப்படிப் பார்க்கிறபோது குறைகள் எல்லாம் மறைந்துபோகும்.

பெருந்திரளான மக்களுக்குப் போதிக்கிறார் இயேசு. போதித்து முடித்தாயிற்று. ஒரு சிறு அறையில் எந்த ஒரு வெளிச்சத்தமும் வராத இடத்தில், எந்த முணுமுணுப்பும் இல்லாத வகுப்பறையில் 45 நிமிடங்கள் பாடம் நடத்துவதற்கே ஆற்றல் எல்லாம் கரைந்துவிடும் நிலை இருக்க, நாள் முழுவதும் வெட்ட வெளியில், இரைச்சல் அதிகம் உள்ள இடத்தில், மக்கள் இங்குமங்கும் அமர்ந்திருக்க அவர்களுக்குப் போதிக்கின்றார் இயேசு. நாள் இறுதியில் அவருக்கு சக்தி இருக்க வாய்ப்பேயில்லை. அது போதாதென்று, தன்னிடம் வந்த கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், பிற நோயாளர் என குறைவுள்ளவர்களாய்ச் சந்தித்து அவர்களுக்கு நலம் தருகின்றார். கொஞ்ச நஞ்ச சக்தியும் போய்விட்டது. இப்போது புது பிரச்சினை வருகிறது. மக்களின் பசி.

'உண்பதற்கும் இவர்களிடம் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை' - இயேசுவின் இந்த வார்த்தைகள் ஒரே நேரத்தில் மக்களின் பசியையும், இயேசுவின் பரிவையும் சொல்லிவிடுகின்றன. இயேசு ஒரு நல்ல பார்வை கொண்டவர் (observer). அவர்களிடம் இல்லை என்பதைக் கண்டுகொள்கிறார். 'அவர்களிடம் இல்லை' என்ற வார்த்தைகள் இயேசுவின் சமகாலத்தில் நிலவிய ஏழ்மையையும் தோலுரிக்கின்றன.

பாமரனின் பசியை பரமனின் பரிவு வெல்கிறது.

சீடர்களிடம் ஆலோசனை கேட்கிறார்.

அவர்களோ, இல்லாத ஊருக்கு வழி சொல்கின்றனர். 'இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்க போதுமான உணவு பாலைநிலத்தில் எங்கு கிடைக்கும்?'

இவர்களின் விடையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. சில நேரங்களில் சிலரின் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்.

ஏன்? பாலைநிலத்தில் உணவு கிடைக்காது என்பது இயேசுவுக்குத் தெரியாதா?

கேள்வியை மாற்றுகிறார் இயேசு: 'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' 'ஏழு' 'தரையில் அமருங்கள்.'

அற்புதம் நடந்தேறுகிறது.

எதுவும் இல்லை என்றவர்கள் ஏழு கூடைகள் நிறைய அள்ளுகின்றனர்.

இதுதான், நிறைவு மனநிலை.

நிறைவு நிறைவையே பெற்றெடுக்கும்.

நாலு பேருகிட்ட நாலு நல்ல வார்த்தைகள் சொல்லுங்க. அது அப்படியே நாற்பது மடங்காகத் திரும்பிவரும்.

இன்றைய முதல் வாசகத்தில் (எசா 25:6-10) எசாயா இறைவாக்கினர் மெசியாவின் வருகையின் விருந்தை முன்னுரைக்கின்றார். சாவு, கண்ணீர் என மறைந்து மக்கள் பெருவிருந்தின் மகிழ்ச்சியில் களிப்படைகின்றனர்.

'இவரே ஆண்டவர். இவருக்காகவே நாம் காத்திருந்தோம்.' என பெருமை கொள்கின்றனர்.

யார் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள், 'இவரே அவர். இவருக்காகவே நாம் காத்திருந்தோம்' என்று சொல்கிறார்களோ, அந்த நபரே நிறைவு மனநிலை கொண்டவர். நிறைவு மனநிலை அனைத்தையும், அனைவரையும் நிறைவுள்ளதாக்கும்.

Monday, December 3, 2018

ஆண்டவரின் கொடை

இன்றைய (4 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 10:21-24)

ஆண்டவரின் கொடை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேருவகையடைந்து தன் தந்தையை வாழ்த்துகின்றார். இறுதியாக, 'நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பு பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் காணவில்லை' என்று தன் சீடர்களின் பாக்கியம் பெற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இறைவன் தாம் விரும்புபவருக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார்.

இவ்வாறாக, இறைவெளிப்பாடு என்பதை ஒரு கொடை என்று சொல்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 11:1-10) ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து துளிர்க்கும் தளிர் பற்றி இறைவாக்குரைக்கின்றார் இறைவாக்கினர் எசாயா.

'ஓநாய் செம்மறியோடு, கன்று சிங்கக்குட்டியோடு, பசு கரடியோடு, குழந்தை பாம்போடு' என யாரும் யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழும் வாழ்வை மெசியாவின் வருகையோடு தொடர்புபடுத்தி எழுதுகின்றார் எசாயா. இதுவும் அவரின் கொடையே.

நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வில் அவரின் கொடைகள் என்னவென்று பார்த்து, அவருக்கு நன்றி நவில்வது சால்பு.

Sunday, December 2, 2018

புனித சவேரியார்

இன்றைய (3 டிசம்பர் 2018) திருநாள்

புனித சவேரியார்

தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் 'பெரிய தகப்பன்' என்று அன்போடு அறியப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளை நாம் இங்கு கொண்டாடுகிறோம். ஏப்ரல் 7, 1506ல் ஸ்பெயின் நாட்டில் பிறந்து, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணிபுரிந்தபோது, புனித இஞ்ஞாசியார் மேற்கோள் காட்டிய நற்செய்தி வார்த்தைகளை - 'ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் அவர் தன் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன? - கேட்டு, மனம் மாறி, தன் பணியைத் துறந்துவிட்டு, இயேசு சபையின் அருள்பணியாளராக மாறி, ஆப்பிரிக்கா, ஆசியா கடற்கரைகளில் நற்செய்திப் பணி செய்து டிசம்பர் 3, 1552 அன்று இறந்தார்.

ஏறக்குறைய 38000 கடல் மைல்கள் பயணம் செய்துள்ளார் இவர். புதிய மொழி, புதிய பண்பாடு, புதிய கலாச்சாரம், புதிய உணவுப்பழக்கம் என அனைத்தோடும் தன்னை ஒன்றிணைத்துக்கொண்டார். அதற்கு ஒரே காரணம் இவர் நம்பிய இயேசு கிறிஸ்து ஒருவரே.

இவருடைய நல்லுடல் இன்றும் அழியாமல் கோவாவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் நற்செய்தி அறிவிக்க தான் கொண்டுள்ள பொறுப்பு பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்றார்.

'எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு ... எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' (காண். 1 கொரி 9:16-19,22-23)

பவுலின் வார்த்தைகளில் இரண்டு விடயங்களில் முக்கிமாகத் தெரிகின்றன:

அ. நற்செய்தி அறிவிப்பதிலுள்ள மனநிறைவு

வழக்கமாக நாம் நன்றாகச் சாப்பிட்டால், நல்ல நண்பர் ஒருவரைப் பார்த்தால், நல்ல திரைப்படம் ஒன்று பார்த்தால், நல்ல புத்தகம் ஒன்று படித்தால் நம் மனம் ஒருவித நிறைவு கொள்கிறது. ஆனால், பவுலுக்கு இவை எல்லாம் நிறைவு தருவதாகத் தெரிவதில்லை. 'நற்செய்தி அறிவிப்பதிலுள்ள மனநிறைவு' - கடலில் புயலில் பயணம் செய்து, சாலைகளில் நடந்து, பல துன்பங்களை எதிர்கொண்டு, பசியோடும், தாகத்தோடும் இருந்து கொண்டு, நற்செய்தி அறிவித்த பவுலுக்கு சோர்வு வரவில்லை. ஆனால், மனநிறைவு வருகிறது. எப்படி? நற்செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அது அதைக் கேட்பவரின் மனத்தில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதை நினைக்கும்போதுதான் பவுல் மனநிறைவு கொள்கிறார். ஒரு தாய் போல. தான் பசியாக இருந்தாலும் தன் குழந்தைக்கு உணவு கொடுத்தவுடன், அதன் முகத்தில் தெரியும் புன்முறுவல் தாய்க்கு நிறைவு தருகிறது. தான் சோர்வாக இருந்தாலும் தன் வகுப்பில் இருக்கும் மாணவ, மாணவியர் அறிவு பெருகிறார்கள் என்ற எண்ணம் ஆசிரியருக்கு நிறைவு தருகிறது. இவ்வாறாக, தன் குறைவிலும் அடுத்தவரின் நிறைவு கண்டு நிறைவு அடைகிறார் பவுல்.

ஆ. எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்

'நான் என் வாழ்வில் இப்படித்தான் இருப்பேன்' என்று தனக்கென கொள்கை வரைவுகளையும், வரையறைகளையும் வைத்தக்கொண்டு வாழ்ந்து வலம் வந்த புனித பவுல், ஒரு கட்டத்தில், கிறிஸ்துவை அறிவிக்க அவை தடையாக இருக்கக் கண்டு, 'எல்லாருக்கும் எல்லாம் ஆக' துணிகின்றார்.

புனித சவேரியாரிலும் நாம் மேற்காணும் இந்த இரண்டு விடயங்களையும் பார்க்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கை கொண்டோர் செய்யும் அரும் அடையாளங்களைப் பட்டியலிடுகிறார் இயேசு:

'அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்.
புதிய மொழிகளைப் பேசுவர்.
பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்.
கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது.
அவர்கள் உடல்நலமற்றோர் மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர்.' (காண். மாற் 16:15-20)

புதிய இடத்தில் மினரல் வாட்டர் குடிச்சாலே நான்கு நாள்களுக்கு தொண்டை கட்டிக்கொள்கிறது. இயேசு சொல்லும் இந்த அரும் அடையாளங்கள் புனித சவேரியார் வாழ்வில் நடந்தன என்று சொல்லலாம்.

'எல்லாவற்றிலும் மேன்மை' - இது ஒன்றே சவேரியாரின் விருதுவாக்காக இருந்தது.

மேன்மையானவற்றை நாடவும், மேன்மையானவற்றை நோக்கி நடக்கவும் சவேரியார் நம்மை உந்தித் தள்ளுவாராக!