Thursday, February 9, 2023

திறக்கப்பட்டன

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 10 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் வாரம்

தொநூ 3:1-8. மாற் 7:31-37.

திறக்கப்பட்டன

இன்றைய முதல் வாசகத்தில், நம் முதற்பெற்றோர் பாம்பின் சொல் கேட்டு விலக்கப்பட்ட கனியை உண்கின்றனர். விளைவாக, அவர்களுடைய கண்கள் திறக்கப்படுகின்றன. தங்கள் ஆடையின்மையை உணர்ந்து தற்காலிகமாக ஆடைகளைத் தயாரித்து அணிந்துகொண்டு இறைவன் திருமுன்னிலையிலிருந்து மரங்களுக்கு இடையே ஒளிந்துகொள்கிறார்கள். 

நம் முதற்பெற்றோர் செய்த தவறு என்ன?

'நோ சொல்ல மறுத்தது!'

நம் விடுதலை அல்லது சுதந்திரம் ஒன்றை வேண்டாம் என்று சொல்வதில்தான் இருக்கிறது. விலக்கப்பட்ட கனியின் சோதனையை மூன்று சொல்லாடல்களால் பதிவு செய்கிறார் ஆசிரியர்: 'உண்பதற்குச் சுவையானதாக,' 'கண்களுக்குக் களிப்பூட்டுவதாக,' 'அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாக'. இயேசுவின் மூன்று பாலைவனச் சோதனைகளும் ஒருவகையில் இவற்றின் நீட்சியே: கற்களை அப்பமாக்குமாறு சொல்லும் அலகை கற்களை உண்பதற்குச் சுவையானதாக மாற்றுகிறது. 'மேலிருந்து கீழே குதி' என்று அலகை இயேசுவைச் சோதித்து, கண்களுக்குக் களிப்பூட்டும் காட்சிப் பொருளாக அவரை மாற்ற விரும்புகிறது. 'என்னைப் பணிந்து வணங்கு' என்று சொல்வதன் வழியாக தன் அறிவையும் விருப்பத்தையும் இயேசுவின் அறிவு மற்றும் விருப்பமாக மாற்ற விழைகிறது. இயேசு மிகவும் உறுதியுடன் 'நோ' சொல்லிவிடுகின்றார்.

கனியை உண்ட அந்த நொடியில் நம் முதற்பெற்றோரின் கண்கள் திறக்கப்பட்டபோது, அவர்கள் அடைந்த பரிதவிப்பை நம்மால் உணர முடிகிறது. 'இந்த நிகழ்வு நடந்திருக்கவே கூடாது!' 'இந்தப் பொழுது வந்திருக்கவே கூடாது!' போன்ற வருத்த எண்ணங்கள், குற்றவுணர்வு, பயம் என அனைத்தும் ஒரு சேர அவர்களைப் பற்றிக்கொள்கின்றன. மரத்திற்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள். கடவுளிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்வதற்காகவும், ஒருவர் மற்றவரிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்வதற்காகவும். பாவம் நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்பதை மிக அழகாகப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

பாவம் மானுடம்! அதன் முதல் அறிவொளியே குற்ற உணர்வு மற்றும் பயம் என்னும் இருளால் அணைக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை குற்றவுணர்வும் பயமும் நம்மை விட்டு நீங்காமல் நிற்கின்றன.

நற்செய்தி வாசகத்தில், காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவருக்கு நலம் தருகின்றார் ஆண்டவர். 'எப்பத்தா' ('திறக்கப்படு') என்றவுடன் அவருடைய காதுகள் திறக்கப்படுகின்றன. நா கட்டவிழ்கின்றது. அவர் தெளிவாகப் பேசினார். இவருடைய குரலைக் கேட்டவர்களும் வியந்து, 'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்!' என்று இயேசுவைப் பாராட்டுகின்றனர்.

மேற்காணும் இரு வாசகங்களையும் அருகருகே வைத்துப் பார்ப்போம்:

(அ) முதற்பெற்றோரின் கண்கள் அவர்களுடைய முயற்சியால் திறக்கப்படுகின்றன. காதுகேளாதவரின் காதுகள் இயேசுவின் முயற்சியால் திறக்கப்படுகின்றன.

(ஆ) முதற்பெற்றோர் அச்சமும் குற்றவுணர்வும் கொள்கின்றனர். காது கேட்கத் தொடங்கியவர் நலமும் நிறைவும் பெறுகின்றார்.

(இ) முதற்பெற்றோர் மரங்களுக்கு இடையே ஒளிந்துகொள்கின்றனர். காது கேட்கத் தொடங்கியவர் தாம் பெற்ற நலத்தை மற்றவர்முன் அறிக்கையிடுகின்றார்.

இறைவன்தாமே முன்வந்து நம் காதுகளையும் கண்களையும் திறந்தால் நலம். நாமே முயற்சித்து அவற்றைத் திறக்க முற்படுதல் நலமன்று!

இறைவன் 'ஆம்' எனச் சொல்லும் வரை, அனைத்திற்கும் 'இல்லை' என நாம் சொல்லிப் பழகுதல் சால்பு.


No comments:

Post a Comment