Thursday, February 16, 2023

நமது பெயரை

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 17 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் வாரம்

தொநூ 11:1-9. மாற் 8:34-9:1.

நமது பெயரை

படைப்பின் தொடக்கக் கதையாடல்களின் இறுதிக் கதையாடலுக்கு நம்மை இன்றைய முதல் வாசகம் இட்டுச் செல்கிறது. மனுக்குலத்தில் மொழிகள் தோன்றியதன் காரணக் கதை என்று இன்றைய இலக்கிய உலகில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

இன்னொரு பக்கம், இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்தின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்க்கிற ஆய்வாளர்கள், இந்நிகழ்வில் வரும் 'பாபேல்' என்பது 'பாபிலோன்' அல்லது 'பாபிலோனியாவை' குறிக்கிறது என்றும், 'மொழிகளில் ஏற்பட்ட குழப்பம்' இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அந்நாட்டின் மொழி தெரியாது அடைந்த துன்பத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறது என்றும், 'பாபேலின் அழிவு' என்பது தங்களின் எதிரி நாடான பாபேல் அழிய வேண்டும் என்னும் இஸ்ரயேல் மக்களின் 'விருப்ப நிறைவு' (ஆங்கிலத்தில் 'விஷ் ஃபுல்பில்மென்ட்') குறிக்கிறது என்றும் எழுதுகின்றனர்.

காரணக் கதை என்று இதைச் சுருக்கிவிடாமல், பாபிலோனியா பற்றிய உருவகம் என்று எடுத்துக்கொள்ளாமல், இந்நிகழ்வு தரும் இறைச் செய்தி அல்லது இறை அனுபவம் என்பதை நாம் புரிந்துகொள்வது நல்லது.

படைப்பின் தொடக்கத்திலிருந்து பார்க்கும்போது, சில எதிர்மறை உணர்வுகள் மனிதர்களைத் தழுவிக்கொண்டே வருகின்றன. மானுடத்தைத் தழுவிய முதல் எதிர்மறை உணர்வு தனிமை ('ஆதாம் தனிமையாக இருந்தான்), அச்சம் (முதற்பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் தின்றவுடன் மரத்தின்பின் ஒளிந்துகொள்கின்றனர்), கோபம் (காயின் தன் சகோதரன்மேல் கோபம் கொண்டு அவனைக் கொலை செய்கிறான்), தீய எண்ணம் (மனிதரின் உள்ளத்தில் இருந்துகொண்டு மனிதரின் இயக்கத்தை இது நிர்ணயிக்கிறது – நோவா காலத்துப் பெருவெள்ளம் ஏற்படக் காரணம் இதுவே). இந்த வரிசையில் இன்றைய முதல் வாசகப் பகுதி – பாபேல் கோபுர நிகழ்வு – மனிதர்களின் எதிர்மறை உணர்வுகளில் ஒன்றான ஆணவம் அல்லது பெருமை உணர்வு மையமாகக் கொண்டு சுழல்கிறது. 

மனிதர்கள் அறிவுசெறிந்தவர்கள். விலக்கப்பட்ட இரு கனிகளில் - 'நன்மை-தீமை அறிதல்,' 'இறவாமை அல்லது நிலைவாழ்வு' ஒன்றை மட்டும்தான் அவர்களால் உண்ண முடிந்தது. இரண்டாம் கனியை உண்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்ற எண்ணத்தில்தான் ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றுகிறார். ஆனால், தோட்டத்திலிருந்து வெளியே விரட்டப்பட்ட மானுடம் தன்னுடைய இறவாமைக்கான வழிகளைத் தானே கண்டுகொள்கிறது. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட வழிகளில் ஒன்று 'குழந்தை பெற்றுக்கொள்வது.' தாங்கள் இறந்து போனாலும் தங்களுடைய உயிர் தங்களுடைய குழந்தைகளில் தொடருமாறு செய்துவிடுகின்றனர். குறிப்பாக, ஓர் ஆண் தன் உயிரணுவை தன் மகன் வழியாக இந்த உலகில் விட்டுச் செல்கின்றார். இப்படியாக, அவர் இறவாமைக்குள் நுழைகிறார். ஆகையால்தான், பெரும்பான்மையான மரபுகளில் ஆண் குழந்தைகள் மிகவும் விரும்பத்தக்கவர்களாக இருக்கிறார்கள். (ஆனால், உயிரணுவைக் கொடுப்பவர் ஆண் என்றால், அதற்கு உடல் தருகிறவர் பெண்ணே!)

இறவாமைக்கான இரண்டாவது வழியை இன்றைய முதல் வாசகத்தில் மானுடம் முயற்சி செய்கிறது. 'உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலைநாட்டுவோம்.' இவர்களுடைய உழைப்பும் தொலைநோக்குப் பார்வையும் நமக்கு வியப்பு தருகிறது. 'நமது பெயரை நிலைநாட்டுவோம்' என்னும் இலக்கு கடவுளுக்கு நெருடலாக இருக்கிறது. 'அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்' என்று கடவுள் இறங்கி வருவது வாசகர்களாகிய நமக்கு நெருடலாக இருக்கிறது. ஒற்றுமையை விரும்பும் கடவுள் வேற்றுமையையும் பிரிவையும் விரும்புவது ஏன்? கடவுளுடைய வழிகள் கடவுளுடைய வழிகளே!

நற்செய்தி வாசகத்தில், இயேசு சீடத்துவத்தின் முதல் பாடத்தைத் தம் சீடர்களுக்கு வழங்குகிறார். ஒத்தமைவு நற்செய்திகளில் இயேசு தம் பாடுகளை மூன்று முறை முன்னறிவிக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் பாடுகளை முன்வைக்கும்போதும் தொடர்பாடமாக சீடத்துவம் பற்றி அறிவுறுத்துகின்றார்: தன்னலும் துறத்தலும் சிலுவையைத் தூக்குதலும் இயேசுவைப் பின்பற்றுதலும் சீடத்துவத்தின் முதன்மையான பண்புகள்.

மேற்காணும் இரு வாசகங்களை இணைக்கின்ற ஒரு சொல்: 'பெயரை நிலைநாட்டுதல்.'

முதல் வாசகத்தில் மானிடர் தங்களுக்கென ஒரு பெயரை நிலைநாட்ட விரும்புகிறார்கள். அவர்களின் அந்த முயற்சியைக் கடவுள் தகர்க்கிறார். நற்செய்தி வாசகத்தில் தன்னலம் துறக்குமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. தன்னலம் துறத்தல் என்பது நமக்கென பெயரையும் பற்றிக்கொள்ளாத நிலையைக் குறிக்கிறது.

நம் உடல் மற்றும் மூளை இயல்பாகவே, தன்னலம் கொண்டதாக இருக்கிறது. அப்படி இருந்தால்தான் உயிரைக் காத்துக்கொள்ள இயலும். ஆனால், தன்மையம் கொண்ட வாழ்க்கை நம்மையே ஒரு தற்சுழலுக்குள் தள்ளி அழித்துவிடுகிறது.

'நான்,' 'எனது பெயர்' என்ற எண்ணம் எழும்போதெல்லாம் சிலுவையின் வெறுமை நம் கண்முன் நின்றால், நாம் நம்மையும் நம் பெயரையும் பற்றிக்கொள்வதைக் குறைக்க முடியும்.


No comments:

Post a Comment