Tuesday, February 14, 2023

தெளிவாகக் கண்டார்

இன்றைய இறைமொழி 

புதன், 15 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் வாரம்

தொநூ 8:6-13,20-22. மாற் 8:22-26.

தெளிவாகக் கண்டார்

இன்றைய வாசகங்களில் இருவர் தெளிவாகக் காண்கின்றனர். முதல் வாசகத்தில், நிலமெல்லாம் உலர்ந்திருப்பதை நோவா காண்கின்றார். நற்செய்தி வாசகத்தில், பார்வையற்ற நபர் அனைத்தையும் தெளிவாகக் காண்கின்றார். காணுதல் என்பது விவிலியத்தில் புறக் கண்களால் காண்பதைக் குறிப்பதை விட, அகக் கண்களால் காண்பதையே குறிக்கிறது. எனினும், இவ்விருவருடைய பார்வையும் புறம் சார்ந்ததாகவே இருக்கிறது.

முதல் வாசகத்தில், பெருவெள்ளத்திற்குப் பிந்தைய உடனடி நிகழ்வுகளை வாசிக்கிறோம். மூன்று நிகழ்வுகள் இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளன: (அ) மழை வடிந்தும் தண்ணீர் வடியாமல் நிற்கிறது. நோவா காகம் மற்றும் புறாக்களை அனுப்பி சோதித்துப் பார்க்கின்றார். 'பேழையின் மேற்கூரையை நோவா திறந்து பார்த்தார். நிலமெல்லாம் உலர்ந்திருந்தது' என்று ஆசிரியர் பதிவு செய்வது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. மேற்கூரையைத் திறந்தால் வானம்தானே தெரியும். அதை வைத்து நிலம் உலர்ந்திருப்பதை எப்படி நோவா கண்டார்? அவருடைய உள்ளுணர்வால் கண்டார். அல்லது, கடவுளின் பார்வையால் கண்டார். (ஆ) நோவா கடவுளுக்குப் பலி செலுத்துகின்றார். குலமுதுவர்களுக்கு முந்தைய காலத்தில் அனைவரும் பலி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். காயின், ஆபேல், நோவா என அனைவரும் கடவுளுக்கு நேரடியாகப் பலி செலுத்துகிறார்கள். குலமுதுவர்கள் காலத்தில் குலம் அல்லது வீட்டின் தலைவர் பலி செலுத்துகிறார். எ.கா. ஆபிரகாம். தொடர்ந்து வருகிற காலத்தில் குருத்துவம் என்னும் நிறுவனம் தோன்றுகிறது. நோவா செலுத்தும் பலி நன்றிப்பலியாக இருக்கிறது. (இ) நோவாவுடைய பலியின் நறுமணத்தை நுகர்ந்து நிறைவடைகிறார் கடவுள். 'இனி மனுக்குலத்தை அழிப்பதில்லை' என்று உறுதி ஏற்கிறார். 'மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகிறது' என்று அவரும் ஏற்றுக்கொள்கிறார். இதற்கு முன் எதிர்வினை ஆற்றியவர் இப்போது அமைதியாகிறார். பள்ளி இறையியல் கடவுள் - தாமஸ் அக்வினா முன்வைப்பது போல – 'மாறாதவராக, மாற்றத்திற்கு உட்படாதவராக' இருக்கிறார். ஆனால், இங்கே நாம் காணும் கடவுளும் மாற்றத்துக்கு உள்ளாகிறார்.

நோவா உலர்ந்த நிலத்தைக் காண்கிறார். கடவுள் மனித உள்ளத்தின் இயல்பைக் காண்கிறார்.

இரண்டாம் வாசகத்தில், பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை தருகிறார். மாற்கு நற்செய்தியில் மட்டுமே பார்வையற்றவர் பார்வை பெறும் நிகழ்வு இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு நிகழ்வுகளுமே 'வழியில்' – 'இயேசு எருசலேம் செல்லும் வழியில் - நடக்கின்றன. இவ்விரு நிகழ்வுகளுமே சீடர்களின் நம்பிக்கை வாழ்வின் உருவகங்களாக அமைகின்றன.

இன்றைய நற்செய்திப் பகுதி 'நெருடல் பகுதி' (ஆங்கிலத்தில், எம்பாரஸ்மன்ட் டெக்ஸ்ட்) என அழைக்கப்படுகிறது. அதாவது, இயேசுவால் இரண்டாம் முறை மட்டுமே முழுமையான பார்வையை அந்த நபருக்கு அளிக்க முடிகிறது. இப்பகுதியை வாசிக்கிற தொடக்கக் கிறிஸ்தவர்கள் தங்கள் தலைவரும் போதகரும் பெற்றிருந்த ஆற்றல் குறைவானது என எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? 

இந்த நெருடலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இந்நிகழ்வை வல்ல செயல் அல்லது அறிகுறி எனப் பார்த்தால் இந்த நெருடல் வருகிறது. ஆனால், இதையே ஓர் உவமை அல்லது உருவகமாகப் புரிந்துகொண்டால் நெருடல் வருவதில்லை. எப்படி?

பார்வையற்ற நபர் இயேசுவிடம் அழைத்துவரப்படுகிறார். இயேசு அவரை அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே செல்கிறார். இப்போது இயேசுவும் அவரும் மட்டுமே இருக்கிறார்கள். பாதிக் கண்கள் திறக்கப்பட்டவுடன் அவர் இயேசுவை மட்டுமே பார்த்திருக்க முடியும். 'மனிதர்களைப் பார்க்கிறேன். ஆனால், அவர்கள் மரங்கள்போலத் தெரிகிறார்கள். ஆனால், நடக்கிறார்கள்' என்று அவர் மொழிவது சீடர்களுடைய உள்ளப்பாங்கின் எதிரொலியாக இருக்கிறது. அதாவது, சீடர்கள் இயேசுவுக்கு அருகில் இருந்தாலும் அவர்களால் அவர் யாரென முழுமையாக அறிந்துகொள்ளவில்லை. தொடர்ந்து, இயேசு தொட்டவுடன் அவர் அனைத்தையும் தெளிவாகக் காண்கிறார். தொடர்ந்து, இயேசு பேதுரு வழியாகத் தம்மைச் சீடர்களுக்கு வெளிப்படுத்தியவுடன் அவர் யாரென அவர்கள் கண்டுகொள்கிறார்கள். 

இயேசுவைப் பற்றிய முழுமையான பார்வை அவருடைய தொடுதலால் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது.

மேற்காணும் இரு வாசகங்களும் நமக்குத் தரும் செய்திகள் எவை?

(அ) நம் வாழ்வின் பெருவெள்ளமும் ஒருநாள் வடிந்து போகும். மழை பெய்வதற்கு முன்னர் நோவாவுடைய ஊரார் அவரைக் கேலி பேசியது போல, மழை நிற்காமல் பெய்யத் தொடங்கியபோது பேழைக்குள் அவரோடு இருந்த அவருடைய உறவினர்கள் பொறுமை இழந்திருப்பார்கள். 'மழை நிற்காது' என்னும் விரக்திக்குக் கூடச் சென்றிருப்பார்கள். ஆனால், நோவா பொறுமை காக்கின்றார். உலர்ந்த தரையைக் காண்கின்றார். அவசரம் விடுத்துப் பொறுமை பற்றுதல் நலம்.

(ஆ) நம் இதயச் சிந்தனை பற்றி அக்கறையுடன் இருப்பது. மனிதரின் உள்ளத்தில் உள்ள தீய இதயச் சிந்தனையை அவர்களுடைய இயல்பு என ஏற்றுக்கொள்கிறார் கடவுள். இதையே நீதிமொழிகள்நூல் ஆசிரியர், 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல்செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (4:23) என்கிறார்.

(இ) இயேசுவைப் பற்றிய நம் பார்வை எப்படி இருக்கிறது? நடக்கும் மரம் போலத் தெரிகிறாரா? அல்லது தெளிவாகத் தெரிகிறாரா?


No comments:

Post a Comment