Friday, February 24, 2023

உன் ஒளி உதிக்கும்

இன்றைய இறைமொழி

சனி, 25 பிப்ரவரி 2023

திருநீற்றுப்புதனுக்குப் பின்வரும் சனி

எசா 58:9-14. லூக் 5:27-32.

உன் ஒளி உதிக்கும்

இன்றைய முதல் வாசகம் மூன்றாவது எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா நூலின் இறுதிப் பகுதி, பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து தங்களுடைய சொந்த நாடு திரும்பும் யூதா மக்களுக்கு ஆறுதல் சொல்கின்ற பகுதியாக இருக்கிறது.

'இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்,' 'நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும், வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்' என்னும் இரு வாக்கியங்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. இவை இரண்டுமே உருவகங்கள். இருள் என்பது அடிமைத்தனத்தின் அடையாளம். இஸ்ரயேல் மக்கள் இப்போது பாபிலோனிய அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டனர். புற இருள் அகன்றுவிட்டது. ஆனால், அவர்களை அக இருள் இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறது. அந்த இருள் நடுவே இஸ்ரயேல் மக்களின் ஒளி உதிக்க வேண்டியது இப்போது அவசியம். ஒருவரின் உள்ளே நிகழும் மாற்றம் அடுத்து வருகின்ற உருவகத்தால் புறத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. வற்றாத நீரூற்று போல இஸ்ரயேல் மக்களின் வாழ்வு திகழும்.

ஒளி உதிப்பதும், வாழ்வு நீரூற்றாக மாறுவதும் எப்போது?

(அ) உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றும்போது – கழுத்தை அழுத்திய பாபிலோனிய நுகம் அகன்றாலும், உள்ளத்தில் அடிமைத்தனம் சுமையாக அவர்களை அழுத்துகிறது. குறிப்பாக, தங்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகத் தாங்கள் செய்த பாவம் குற்றவுணர்வாக மாறுகிறது. அவர்கள் தங்கள் எதிரிகள்மேல் பகையுணர்வை வளர்க்கின்றனர். தங்கள் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கின்றனர். ஆக, குற்றவுணர்வு, பகை, மற்றும் அச்சம் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அகல வேண்டும்.

(ஆ) குற்றம் சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்தும்போது – பழைய வாழ்க்கையை எண்ணி வருந்துவதை விடுத்து, மற்றவர்களுக்கு எதிராகப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

(இ) பசித்திருப்போருக்கு உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்யும்போது – அடிமைத்தனம் பலரை வறுமைக்கு உள்ளாக்கியது. வளமையுடையோர் வறியவர்களுடன் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மேற்காணும் மூன்றும் நிகழும்போது ஒளி உதிக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், லேவியின் (மத்தேயு) அழைப்பு நிகழ்வை வாசிக்கிறோம். இந்நிகழ்வில் மத்தேயுவின்மேல் இயேசு என்னும் ஒளி உதிக்கிறது. மத்தேயுவின் வாழ்க்கைப் பாதை மாறுகிறது. இயேசுவின் அழைப்புக்கு மத்தேயு உடனடியாகப் பதிலிறுப்பு செய்கிறார். தொடர்ந்து இயேசுவுக்கு விருந்தளிக்கிறார் மத்தேயு. அங்கே இயேசு தாம் யாருக்காக என்பதை முன்மொழிகிறார்.

பல நேரங்களில், 'நான் யார்?' என்னும் கேள்வி நம்மைப் பெரும்பாலும் ஆட்கொள்கிறது. ஆனால், 'நான் யாருக்காக?' என்பதில்தான் 'நான் யார்?' என்பதற்கான விடை ஒளிந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

இஸ்ரயேல் மக்களின் தான்மை அவர்கள் பிறருக்காகத் தங்களைக் கையளிப்பதில் ஒளிர்கிறது.

மத்தேயு தான் யாருக்காக என்பதை உணர்ந்து தன் இருக்கையை விட்டு எழுகின்றார்.

என்னை இன்று அழுத்தும் நுகம் எது?

நான் யாருக்காக?

இயேசு என்னும் ஒளி என்னை நோக்கி வரும்போது, என் பதிலிறுப்பு என்ன?


No comments:

Post a Comment