Monday, November 9, 2020

பயனற்ற பணியாளர்கள்

இன்றைய (10 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 17:7-10)

பயனற்ற பணியாளர்கள்

'நான் செய்ய வேண்டியது இதுதான். என் வாழ்வில் இறைவன் எதிர்பார்ப்பது இதுதான். என் கடமை இதுதான்' என்று நினைத்து நான் செய்யும் ஒன்றின் பலனை நான் எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில், அது என் கடமை.

- புனித அகுஸ்தினாரின் மேற்கூறிய வார்த்தைகள் இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் எழுதப்பட்டவை.

'நீங்கள் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்துமுடித்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்' என்று சொல்லுங்கள்!' என இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் அறிவுறுத்துகின்றார்.

பகவத் கீதையில் இதையொட்டிய சிந்தனை 'நிஷ்காமகர்மா' என்று உள்ளது. ஆனால், அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தவறாகும். 'கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!' என்பது கீதையின் போதனை.

ஆனால், இயேசு, 'எந்தப் பலனோடும் உன்னை ஒட்டிக்கொள்ளாதே!' என்று இன்னும் ஒரு படி மேலே போகின்றார். ஏனெனில், 'பலனை எதிர்பார்க்கின்ற' நிலையில், 'நான் பெறுபவனாகவும், இன்னொவருவர் தருபவராகவும் இருப்பார்.' 'பெறுபவர் - தருபவர்' என்ற வேறுபாடு உண்டாவதோடு, இருவருக்குமிடைய ஏற்றத்தாழ்வு உருவாகவும் வாய்ப்புண்டு. ஆனால், எந்தப் பலனோடும் நான் ஒட்டிக்கொள்ளாதபோது நான் என்னிலேயே விடுதலை பெற்றவன் ஆகின்றேன்.

நாம் செய்கின்ற பலவற்றிலும் நாம் பலனை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அடுத்தவர்களின் அங்கீகாரத்தை விரும்புகின்றோம். நான் அனுப்பிய குறுஞ்செய்தி, நான் அனுப்பிய படம், நான் அனுப்பிய குரல்செய்தி, நான் அனுப்பிய காணொளி, நான் செய்த வேலை, நான் வரைந்த ஓவியம் என நான் மற்றவர்களோடு எதைப் பகிர்ந்தாலும், அல்லது, மற்றவர்களின் நலனுக்காக நான் செய்த செயல்கள் அனைத்திலும், அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றோம். 'நான் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்தேன். ஆனால், அவர் ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை' என்று சில நேரங்களில் நாம் மற்றவர்களை நொந்துகொண்டு நம்மையே வருத்திக்கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் பணியாளரும் நம்மைப் போன்றவர்தான்.

வீட்டிற்கு வருகின்றார் ஒரு பணியாளர். நாள் முழுவதும் வயலில் வேலை. உழுகின்றார், மாடுகள் மேய்க்கின்றார். வெயில், மழை பாராது வயலில் கிடக்கின்றார். இரவாகிறது. வீடு திரும்புகிறார். 'தம்பி! நல்லா வேலை செய்கிறாய்!' என்ற பாராட்டு அவருக்குக் கிடைக்காது. 'என்னடா! வந்துட்டியா? என்ன இவ்ளோ நேரம்! வா, வா! சீக்கிரம் சமையல் செய்! பசியாய் இருக்கு!' என்று அடுத்த வேலை தலைவரிடமிருந்து வரும். பணியாளர் ஓய்வெடுக்கவோ உணவருந்தவோ இயலாது.

இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

வாழ்க்கை நம்மேல் அடுத்தடுத்து கடமைகளையும் வேலைகளையும் சுமத்திக்கொண்டே இருக்கின்றது. நாம் செய்து முடித்தவுடன் நம்மைப் பாராட்டாமல் இன்னும் சில வேலைகளைக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும். செய்து முடித்த வேலைகளுக்கு எந்தப் பாராட்டும் கிடைக்காது. ஆனால், கூலி கிடைக்கும். அந்தப் பணியாளருக்கு கூலி தரப்படுவது உறுதி. 'வேலையாளர் தன் கூலிக்கு உரிமையாளர் அன்றி, பாராட்டுக்கு அல்ல!' ஆக, கூலி பெற்றுக்கொண்டு அமைதி காப்பது நலம்.

அதே வேளையில், நாம் இன்னொரு பக்கம், 'வேலை' என்ற போதையில் சிக்கிவிடக் கூடாது. வேலை என்பது போதையாகி, வேலை இல்லை என்றால் மனது அடித்துக்கொள்ளத் தொடங்கும். 'நான் யாருக்காவது, எதையாவது செய்ய வேண்டும்' என சிலர் இயங்கிக் கொண்டே இருப்பர். இது தவறான மனநிலை. இத்தகையோர் தங்களிலே நிறைவற்றவர்கள். நானும் சில ஆண்டுகளுக்கு முன் இந்த நோயால் கஷ்டப்பட்டேன். 'நிறைய படித்தால், நிறைய எழுதினால், நிறைய வேலை செய்தால் எல்லாரும் பாராட்டுவர்' என படித்துக்கொண்டும், எழுதிக் கொண்டும், வேலை செய்துகொண்டும் இருந்தேன். அடுத்தவர்களுக்காக வேலை செய்வதை நான் பெரிய தவமாகக் கருதினேன். ஆனால், இந்த மனநிலை தவறு என்பதை இப்போது உணர்கிறேன். ஏனெனில், நான் என்பது என் செயல்கள் அல்ல. ஒன்றுமில்லாத ஒன்றுக்காக இருபத்து நான்கு மணி நேரங்கள் உழைத்துக் கொண்டிருப்பது வீண் தானே!

ஆக, நாம் செய்கின்ற எல்லா வேலைகளிலும், 'நானே தலைவன்' என்ற மனநிலை நமக்கு வர வேண்டும். என்னைப் பாராட்டுபவரும், திருத்துபவரும் நான் மட்டுமே என இருக்க வேண்டும். உறவுநிலைகளுக்கும் இது பொருந்தும். என்னிடம் ஒருவர் நன்றாக இருக்கிறார் என்பதற்காக நான் அவரோடு நன்றாக இருந்தால் அங்கே என் உறவின் பலனை நான் எதிர்பார்க்கிறேன். என்னிடம் ஒருவர் எப்படி இருந்தாலும் என் பண்பு இதுதான் என நான் மேன்மையோடு வாழ்ந்தால் அதுவே தலைவன் மனநிலை.

பலனை எதிர்பார்ப்பது பணியாளன் மனநிலை. பலனோடு ஒட்டிக்கொள்ளாதது தலைவன் மனநிலை.

இன்றைய முதல் வாசகத்தில், தன் அன்பிற்குரிய தீத்துவுக்கு எழுதுகின்ற பவுல், 'நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு!' என்று அறிவுறுத்துகின்றார். என் நற்செயல்கள் மற்றவர்களை நற்செயல்கள் செய்ய ஊக்குவித்தால் அதுவே போதும்.

பலனோடு ஒட்டிக்கொள்ளாமல் கடமைகளைச் செய்வது ஒரு நற்செயல்.

'நாங்கள் பயனற்ற பணியாளர்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்' என்று சொல்வதற்கு நிறைய துணிச்சல் தேவை.

2 comments:

  1. தந்தை தன் வாயினின்று அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை..” நாங்கள் பயன்ற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்.”பகவத் கீதையாக இருந்தாலும், பைபிளாக இருந்தாலும் எல்லா மதங்களும் சொல்வது “ கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே!” நான் செய்கின்ற வேலையில் என்றைப்பாராட்டுபவரும், திருத்துபவருமாக நான் மட்டுமே இருக்க வேண்டும்.”.... அருமை! இதைக்கடைபிடித்தால் “நான் என் கடமையைத் தான் செய்தேன்” எனும் துணிச்சல் எனக்கும் வரும். நற்செயல்களின் தூண்டுகோல்.... தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. என்னிடம் ஒருவர் எப்படி இருந்தாலும் என் பண்பு இதுதான் என நான் மேன்மையோடு வாழ்ந்தால் அதுவே தலைவன் மனநிலை.
    👍. இதற்கும் நிறைய துணிச்சல் வேண்டும்.

    வாழ்க தலைவா!🤝

    ReplyDelete