Tuesday, November 17, 2020

பேதுரு, பவுல் பேராலயங்கள் நேர்ந்தளிப்பு

இன்றைய (18 நவம்பர் 2020) திருநாள்

பேதுரு, பவுல் பேராலயங்கள் நேர்ந்தளிப்பு

இந்த மாதம் 9ஆம் தேதி அன்று, புனித யோவான் லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு நாளைக் கொண்டாடினோம். 

உரோமை நகரின் முதன்மையான பேராலயங்கள் நான்கு: புனித பேதுரு, புனித பவுல், புனித யோவான் லாத்தரன், மற்றும் புனித மரியன்னை. 

புனித பேதுரு மற்றும் புனித பவுல் பேராலயங்களின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். புனித பேதுரு பேராலயம் உரோமை நகரில் உள்ள வத்திக்கானின் நடுவிலும், புனித பவுல் பேராலயம் உரோமை நகரின் சுவர்களுக்கு வெளியேயும் அமைந்துள்ளன. இரண்டு பேராலயங்களின் கட்டிடக்கலை அமைப்பும் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகின்றன. 

புனித பேதுரு பேராலயத்தில் மைக்கேல் ஆஞ்சலோ அவர்கள் தன் கையொப்பமிட்ட ஒரே சிற்பம் என்றழைக்கப்படுகின்ற 'பியத்தா' சிற்பம் உள்ளது. புனித பவுல் பேரலாயத்தில், நாம் எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் அந்தப் பக்கம் திரும்புவது போல வரையப்பட்டுள்ள அன்னை கன்னி மரியாளின் விண்ணேற்பு ஓவியம் அமைந்துள்ளது.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 28:11-16,30-31), பவுல் உரோமையை அடைந்த நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. பவுல் உரோமை நகரை அடைந்தவுடன் திருத்தூதர் பணிகள் நூல் முடிந்துவிடுகிறது. ஏனெனில், அன்றைய நாளில் உரோமைதான் உலகின் கடை எல்லை எனக் கருதப்பட்டது. 'பவுல் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார்' என்ற வாக்கியம் நம் சிந்தனையைத் தூண்டுகிறது. வாடகை வீட்டிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி, சொந்த வீட்டிற்கு நகரும் மனிதர்கள் நடுவில், இயேசுவுக்காகத் தன் சொந்த வீட்டை விட்டு, இறுதியில் வாடகை வீட்டிற்குள் குடிபுகுகின்றார் பவுல். அவரின் வாடகை வீடான உரோமை அவரது இறுதியான சொந்த வீடாக மாறியது கடவுளின் அருள்கொடை அல்லது கடவுளின் அழைப்பே. நற்செய்திக்காகப் பவுல் கொண்டிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடே இந்த நீண்ட நெடிய பயணம். தர்சு நகரத்திலிருந்து புறப்பட்ட அவருடைய கால்கள் உரோமையை அடைகின்றார்.

புனித பவுல் பேரலாயம் தரும் செய்தி இதுதான்: 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' (சஉ 8:7). திருஅவையை எதிர்ப்பவராகத் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாலும், திருஅவையின் தூணாகத் தன் வாழ்க்கையை முடிக்கிறார். நம் வாழ்வின் பயணங்களின் தொடக்கம் தாழ்வாக இருந்தாலும், பிறழ்வாக இருந்தாலும் வருத்தம் வேண்டாம். தொடர்ந்து நாம் கிளைகள் பரப்பிக் கொண்டே இருந்தால் நலம். நம் கிளைகளை அரவணைத்துக்கொள்ள அவர் இருக்கிறார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 14:22-33), பேதுரு கடலின் மேல் நடக்கும் முயற்சியைப் பார்க்கின்றோம். நீந்தத் தெரிந்த அவர், தன் இயேசுவுக்காக அந்தத் திறனை இழக்க முன்வருகின்றார். தன் தலைவரால் அள்ளப்படுவதற்காக தானே அமிழ்ந்து போகின்றார். தன் ஆண்டவரால் கடிந்துகொள்ளப்படுவதற்காகத் தானே தவறி விழுகின்றார். 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என்ற அவருடைய வார்த்தைகள் பயத்தில் எழுந்தவை போல தெரிந்தாலும், 'எங்க! காப்பாத்துங்க பார்ப்போம்!' என்று உரிமையுடன் ஆண்டவரோடு விளையாடுகிறார் பேதுரு. கொஞ்சம் கடிந்துகொள்கின்ற இயேசு அவரை அள்ளித் தூக்குகின்றார். 

கடவுளுக்காக நம் திறன்களை வீணாக்குவது நன்று என்று கற்றுத் தருகிறார் பேதுரு. புனித பேதுருவின் பேரலாயத்திற்குள் நுழையும் ஒவ்வொரு பொழுதும், கத்தோலிக்க நம்பிக்கை என்னும் தாயின் கருவறைக்குள் நுழைந்து வெளிவருவது போன்ற உணர்வு என்னில் எழுவதுண்டு.

பேதுருவும் பவுலும் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள்.

அவர்களின் பேரலாயங்கள் இயேசுவோடு நம்மை இணைக்கும் தொப்புள் கொடிகள்.

1 comment:

  1. உரோமை நகரின் தேவாலயங்கள்.....பெருமையை யாராலும் முழுவதுமாக எடுத்துரைக்க இயலாது. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுபவர்கள் மத்தியில் வாடகை வீடான உரோமையை சொந்த வீடாக மாற்றிக்கொண்டது பவுலுக்குக் கிடைத்த அருள் கொடையே என்பதும்,நீரில் நீந்தத் தெரிந்த பேதுரு இயேசுவால் அள்ளப்படுவதற்காகவே தன் திறனை இழக்க முன் வருவதும்..... பேதுருவும்,பவுலும்,இயேசுவோடு நம்மை இணைக்கும் கோடுகள் என்பதை நாம் தெரிந்துகொள்வதற்காகவே என்று நமக்கும் புரிகிறது.தந்தையின் அனுபவம் சொல்வது போல் ஒவ்வொரு ஆலயத்துக்குள் நாம் நுழையும் போதும் அது நம் “தாயின் கருவறை” எனும் நினைப்பு நம்மை உந்தித் தள்ளினால் நலம்....ஏனெனில் ஆலயங்கள் இயேசுவோடு நம்மை இணைக்கும் தொப்புள் கொடிகள். ....ஆம்! பார்க்காத விஷயங்களையம் தன் உயிரோட்டமான எழுத்துக்களால் நேரில் பார்க்கும் அனுபவத்தைத் தரும் தந்தைக்கு எத்தனை நன்றி சொல்லிடினும் நலமே! தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete