Tuesday, November 24, 2020

பிரச்சினையே வாய்ப்பாக

இன்றைய (25 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:12-19)

பிரச்சினையே வாய்ப்பாக

இயேசுவின் நிறைவுகாலப் போதனை தொடர்கிறது. லூக்கா நற்செய்தியாளரின் பதிவுகள் நிறைவுகாலத்தைப் பற்றிய அச்சத்தைத் தருவதாக இருந்தாலும், ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் செய்தி நிரம்பி வழியும். 

'உங்களைச் சிறையில் அடைப்பார்கள் .... உங்கள் எதிரிகளால் உங்களை எதிர்த்து நிற்க முடியாது'

'உங்களை எல்லாரும் வெறுப்பார்கள் ... உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது'

ஒரு பக்கம் எதிர்மறையாகத் தெரிந்தாலும், இன்னொரு பக்கம் நம்பிக்கையும் மனவலிமையும் தருகின்றன இயேசுவின் வார்த்தைகள்.

இன்றைய நற்செய்தியில் வரும் ஒரு சொல்லாடல் நம்மைக் கவர்கிறது: 'எனக்குச் சான்று பகர இவை வாய்ப்பளிக்கும்'

ஆக, பிரச்சினை என்று வருகின்ற ஒன்று வாய்ப்பாக மாறும்.

இது ஒரு பெரிய மேலாண்மைப் பாடம்.

கடந்த ஞாயிறன்று வெபினார் ஒன்று நடந்தது. ஏறக்குறைய 95 பேர் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து பங்குபெற்றார்கள். எனது முனைவர் பட்ட ஆய்வின் தேர்வர் இதை நெறிப்படுத்தினார். ஒரு மாலைப்பொழுதில் இந்தியாவில் ஆங்காங்கே இருந்த அனைவரும் என் கண்முன் வர கோவித்-19 பெருந்தொற்று வாய்ப்பளித்தது. இல்லையா?

தனிமை, சமூக இடைவெளி, விழித்திருத்தல், விலகியிருத்தல், தொற்றொதுக்கம் என நாம் தனித்தனி தீவுகளாக ஒதுங்கினாலும், எந்தவொரு பயணமும் இன்றி, மிகுதியான பொருள், ஆற்றல், நேர விரயமின்றி, தங்குமிடம், உணவும் என்ற எந்த அலைச்சலும் இன்றி ஒரே மாலையில் அனைவரும் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு பிறந்ததே பெருந்தொற்று என்னும் பிரச்சினையால்தான். இல்லையா?

இதுவே மனிதர்கள் கொண்டிருக்கின்ற மாபெரும் கொடை.

பிரச்சினைகளை வாய்ப்பாக மாற்றுதல் ஒரு சிறந்த மேலாண்மைப் பாடம்.

நாம் பயன்படுத்துகின்ற புதிய புதிய தொழில்நுட்பக் கருவிகள் அனைத்தும் நம் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அல்லது பிரச்சினைகளின் விளைவாலும் வந்தவையே.

இயேசுவின் பொருட்டு ஆளுநர் முன் நிறுத்தப்படுவது ஒரு பிரச்சினை அல்ல. மாறாக, அது ஆளுநரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு. இதுவே இயேசுவின் புரிதலாக இருக்கிறது.

நம் வாழ்வில் பிரச்சினைகள் என நினைக்கும் பல, பிரச்சினைகளே அல்ல.

மற்றும் சிலவற்றை நாம் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

இயேசு இரண்டு வாக்குறுதிகள் தருகின்றார்:

(அ) யாரும் உங்களை மேற்கொள்ள முடியாது

(ஆ) உங்கள் தலைமுடி ஒன்றுகூட விடாது. அதாவது, தேவையற்றது என நினைக்கும் எதுவும்கூட உங்களிடமிருந்து பறிக்கப்படாது.

இறுதியாக, மன உறுதியோடு இருக்க அழைப்பு விடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் வாதைகள் முடிய, உயிர்கள் அனைத்தும் கடவுளைப் புகழ்கின்றன.

மன உறுதி கொள்பவர்களுக்கு எல்லாப் பிரச்சினைகளும் வாய்ப்புகளே!

1 comment:

  1. இயேசுவின் பொருட்டு ஆளுநர் முன் நிறுத்தப்படுவது ஒரு பிரச்சனை அல்ல;மாறாக அது ஆளுநரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு என்பது இயேசுவின் புரிதலெனில் நாம் பல நேரங்களில் காரணமின்றி பழி சுமத்தப்பட்டு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும்போது நாம் சொல்லவும்,நினைக்கவும் வேண்டியது ஏதோ ஒரு நல்லதெற்கென்று தானே! எந்தத் தீய சக்தியும் நம்மை அண்டாது, நம்மிடமுள்ள தேவையற்றவை நம்மிடமிருந்து கழிந்து நாம் மன உறுதியோடு இருக்க அழைப்பு விடுக்கிறது இன்றைய வாசகம். எத்தனை பிரச்சனைகள் நம்மை மூழ்கடித்தாலும் மன உறுதி கொள்பவர்களுக்கு எல்லாப் பிரச்சனைகளும் வாய்ப்புக்களே! பிரச்சனைகளைக்கண்டு விலகி ஓடாமல் அவற்றை அணைத்துப்போக வழிசொல்லும் ஒரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete