Saturday, November 14, 2020

விண்ணரசுக்காகச் செயலாற்றுதல்

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

I. நீதிமொழிகள் 31:10-13,19-20,30-31 II. 1 தெசலோனிக்கர் 5:1-6 III. மத்தேயு 25:14-30

விண்ணரசுக்காகச் செயலாற்றுதல்

2017ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும், 'ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிற்றை' 'அகில உலக ஏழையர் நாள் அல்லது ஞாயிறு' எனக் கொண்டாட வேண்டும் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார். நம் வீட்டின் வாசலில் விழுந்து கிடக்கும் ஏழை இலாசர்களைச் சற்றே அடையாளம் காணவும், நீதி நிலைநாட்டப்படாமல் ஏழ்மை அழிவதில்லை என நாம் கற்றுக்கொள்ளவும், ஏழ்மை சூழ்ந்த இவ்வுலகில் புதிய மறைத்தூதுப் பணி திட்டங்களை வரையறுக்க நம்மைத் தூண்டவும் இந்த நாள் அழைப்பு விடுக்கிறது என்று இந்த நாள் பற்றிக் கூறுகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இங்கே, 'பொருளாதார ஏழ்மை' என்பதே மையப்படுத்தப்பட்டாலும், நற்செய்தியின் அடிநாதமாக 'ஏழ்மை' அல்லது 'எளிய உள்ளம்' இருக்கிறது என்பது நமக்குப் புலனாகிறது.

முதலில், 'பொருளாதார ஏழ்மை' என்பது ஒரு சார்பியல் வார்த்தை. அதாவது, ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தி நாம் ஒருவரை ஏழை என்றும், மற்றவரைப் பணக்காரர் என்றும் வரையறுக்கிறோம். என் பக்கத்து வீட்டுக்காரரோடு என்னை ஒப்பிட்டால் நான் அவரைவிடப் பணக்காரராக இருக்கலாம். ஆனால், தூரத்தில் இருக்கிற உறவினரரோடு என்னை ஒப்பிட்டால் அவர் என்னைவிடப் பணக்காரராக இருக்கலாம். ஆக, இதுதான் 'ஏழ்மை' என்பதை நாம் வரையறுத்துவிட முடியாது.

இரண்டாவதாக, ஒருவர் தன் ஏழ்மையை தன்னுடைய நிறைவு எனக் கருதலாம். எடுத்துக்காட்டாக, அருள்பணி மற்றும் துறவற நிலையில் நாம் 'ஏழ்மை' என்ற வாக்குறுதியை எடுக்கின்றோம். இங்கே, 'ஏழ்மை' என்பது 'ஒன்றும் இல்லாத நிலையை' அல்ல, மாறாக, 'எல்லாம் பெற்ற நிறைவை' அல்லது 'பற்றற்ற நிலையைக்' குறிக்கிறது.

மூன்றாவதாக, ஒருவர் தன்னிடம் உள்ளதை வைத்து நிறைவு பெறலாம். எடுத்துக்காட்டாக, குடிசை வீட்டில் வாழும் ஒருவர், தன்னிடம் உள்ளதே போதும் என்ற நிலையில் நிறைவுகொண்டு தன் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்யலாம். செல்வம் என்பது அவரைப் பொருத்தவரையில் சுமையாகத் தெரியலாம்.

ஏழ்மை பற்றிய புரிதலை வரையறுத்தல் அவ்வளவு எளிதன்று.

ஆனால், இந்த நாள் 'ஏழையர் அல்லது ஏழ்மை' பற்றிச் சொல்வது என்ன?

ஒன்று, அனைவரும் செல்வத்துக்கென அல்லது பொருளாதாரத் தன்னிறைவுக்கெனப் படைக்கப்பட்டவர்கள். ஒரு ஊரில் உள்ள மாமரத்தில் 50 கனிகள் பழுக்கின்றன என்றால், அது அந்த ஊரில் உள்ள 50 பேருக்கும் உரியது. ஆனால், என்னிடம் ஏணி இருக்கிறது என்பதற்காக நான் 50 கனிகளையும் பறித்துக்கொண்டு, 49 கனிகளை எனக்கென வைத்துக்கொண்டு, ஒற்றைக் கனியை மற்ற 49 பேரும் பகிர்ந்துகொள்ளுமாறு சொல்வது நீதி அன்று. அப்படி நான் சொல்லும்போது, அவர்களுக்கு உரிமையான கனியை அவர்களிடமிருந்து பறிப்பதோடு அல்லது அவர்களுக்கு மறுப்பதோடு, இயற்கையின் நீதி மற்றும் சமநிலை குறையவும் நான் காரணமாகிவிடுகிறேன். ஆக, ஏழை இலாசர்கள் உருவாகக் காரணம் வீட்டின் உள்ளே அமர்ந்து விருந்துண்பவர்களே. ஏனெனில், இயற்கைத் தாய் தன் பிள்ளைகள் யாரும் ஏழ்மையில் வாடுவதை விரும்புவதில்லை. எந்த அணிலாவது ஏழ்மையில் இறப்பதுண்டா? எந்தக் கிளியாவது ஏழ்மையால் உயிரை மாய்த்துக்கொள்வதுண்டா?

இரண்டு, ஏழ்மை என்பது ஒருவரின் பாவத்தாலும் சாபத்தாலும் வருவது என்ற புரிதலை நாம் மாற்ற வேண்டும். 'ஆண்டவரை நம்புகிறவனோ செழிப்பான்' என்ற இறைவார்த்தை ஆபத்தானது. ஏனெனில், செழிப்பாய் இருப்பவர்கள், தங்களை நினைத்துப் பெருமிதம் கொள்ளவும், தங்கள் செல்வம் கடவுள் தங்களுக்கு அளித்த ஆசீர் என்றும், ஏழையர்கள் கடவுளின் சாபத்துக்கு ஆளானவர்கள் என்றும் தவறான புரிதல் கொள்ளச் செய்கிறது. தன்னை நம்புகிறவர்களைக் கடவுள் செழிப்பாகவும், தன்னை நம்பாதவர்களைக் கடவுள் ஏழையராகவும் ஆக்குகிறார் என்று நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு தாய் தன்னைப் பாராட்டும் தன் மகளுக்கு வளமையும், தன்னை வெறுக்கும் தன் மகளுக்கு வறுமையையும் தருவாளா? இருவரும் எப்படி இருந்தாலும் இருவருமே தாய்க்குப் பிள்ளைகள்தாமே.

மூன்று, ஏழையர் ஏழையராக இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய சோம்பல் என்ற எண்ணத்தை நாம் களைய வேண்டும். ஒருவரின் கடின உழைப்பு அவரை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், உழைக்கிறவர்கள் எல்லாம் உயர்வடைவதில்லை. உயர்வடைபவர்கள் எல்லாம் உழைப்பதில்லை. சில நேரங்களில் மனிதர்களின் இயலாமை, சூழல், வாய்ப்பின்மை, திறன் பற்றாக்குறை போன்றவை நம் உழைப்புக்கேற்ற பலனை நாம் அனுபவிக்க இயலாமல் செய்துவிடலாம். இன்னொரு பக்கம், குடிமை அரசு தன் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுத்து ஏழ்மையை விரட்டுவதை விடுத்து, ஏழையரை அழிக்கும் நோக்குடன் வளர்ச்சித் திட்டங்களை வகுப்பது தவிர்க்கப்பட வேண்டும். கடினமான உலகில் போட்டி போடுவது ஏழையருக்கு இயலாதது ஆகிவிடுகிறது.

இன்று நாம் சாலைகளில் வேகமாகச் செல்லும்போது கொஞ்சம் நின்று பார்த்தால், எவ்வளவோ வகையான ஏழ்மையை நாம் அடையாளம் காண முடியும்: பசி என்னும் ஏழ்மை, வேலையின்மை என்னும் ஏழ்மை, தாழ்வு மனப்பான்மை என்னும் ஏழ்மை, வீடின்மை என்னும் ஏழ்மை, உறவுகளின்மை என்னும் ஏழ்மை, நம்பிக்கையின்மை என்னும் ஏழ்மை எனப் பல இனியவர்களை நாம் கடந்துசெல்கின்றோம். அல்லது நாமே இம்மாதிரியான ஏழ்மை நிலைகளில் இருக்கிறோம். ஒரு நிமிடம் நான் நின்று, 'இவன் ஏன் இப்படி இருக்கிறான்? இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?' என்று நம்மை இந்த நாள் கேட்கத் தூண்டினால், இந்த நாளைக் கொண்டாடுவது பொருளுள்ளதாகும்.

ஏழ்மையை நாம் கொண்டாட வேண்டாம், ஆனால், ஏழையரைக் கொண்டாடுவோம். ஏனெனில், ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைவுக்கான, வளர்ச்சிக்கான, செயலாற்றுதலுக்கான தீப்பொறி இருக்கிறது என்று சொல்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 25:14-20), விண்ணரசு பற்றிய இன்னொரு எடுத்துக்காட்டைத் தருகிறது. கடந்த வாரம், பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டு வழியாக, விண்ணரசுக்கான விழித்திருத்தல் பற்றிச் சிந்தித்தோம். இந்த வாரம், தாலந்து உவமை வழியாக, விண்ணரசுக்கான அல்லது விண்ணரசுக்காகச் செயலாற்றுதல் பற்றிச் சிந்திப்போம். 'தாலந்து உவமை' என்பது விண்ணரசு பற்றிய உவமையே தவிர, அது நம் 'டேலன்ட்கள்' ('திறன்கள்' அல்லது 'செயல்திறன்கள்') பற்றிய உவமை அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 'ஒரு தாலந்து' என்றால் '6000 தெனாரியம்'. ஒரு தெனாரியம் என்பது ஒருவரின் ஒருநாள் கூலி. ஒருநாள் கூலி ஒருவருக்கு நூறு ரூபாய் என்றால், ஒரு தாலந்து என்பது 6,00,000 ரூபாய். ஒரு பெரிய தொகைதான். இது பெரும்பாலும் வெள்ளி அல்லது ஏதாவது ஒரு உலோகத்தால் நிறுத்துக் கொடுக்கப்படும். இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் நெடும்பயணம் மேற்கொள்ளும் வீட்டுத் தலைவர் பொதுவாக, தன் சொத்துகள் அல்லது உடைமைகள் அனைத்தையும் பணமாக்கி, அவற்றைப் பணியாளர்களிடம் கொடுத்துச் செல்வது வழக்கம். ஏனெனில், நெடும்பயணத்தில் பலர் இறந்துபோவதும், அல்லது மறைந்துபோவதும், அல்லது காணாமல்போவதும் உண்டு. ஒருவேளை தலைவர் வீடு திரும்பினால் தன் சொத்துகள் அனைத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வார். அவற்றைப் பேணி வளர்த்த தன் பணியாளர்களுக்கு சில அன்பளிப்புகள் வழங்குவார். ஒவ்வொரு பணியாளரின் தகுதிக்கேற்ப தலைவர் பிரித்துக்கொடுப்பது வழக்கம்.

இந்தப் பின்புலத்தில்தான், ஒருவருக்கு ஐந்து, இன்னொருவருக்கு இரண்டு, இன்னொருவருக்கு ஒன்று என்று தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன. 'அவரவர் திறமைக்கு ஏற்ப' பிரித்துக்கொடுக்கிறார் தலைவர். ஐந்து மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்கள் வாணிகம் செய்து அவற்றை இரட்டிப்பாக்குகின்றனர். மூன்றாமவர் தான் பெற்ற தாலந்தை நிலத்தில் புதைத்து வைக்கிறார். பாலஸ்தீனத்தில் சொத்துகளை நிலத்தில் புதைத்து வைப்பதும் வழக்கம். திருட்டிலிருந்து தற்காத்துக்கொள்ள தங்கள் வீட்டருகிலோ அல்லது தங்கள் வயலிலோ அவற்றைப் புதைத்து வைப்பர். புதைத்து வைப்பதோடு அவற்றின் மேல் அவர்கள் ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பார்கள். மூன்றாமவர் தன் தலைவரின் வயலிலேயே புதைத்து வைத்திருக்கலாம். புதைத்து வைத்து அதைப் பேணிக் காத்ததோடு தன் பணிகளைச் செய்வதில் மும்முரமாய் இருந்தார். முதல் இரண்டு நபர்களும் தலைவரிடமிருந்து பரிசு பெற, மூன்றாம் நபரோ தண்டனை பெறுகின்றார்.

விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?

முதலில், விண்ணரசின் தலைவர் பற்றி உவமை சொல்வது பின்வருமாறு:

(அ) தலைவர் தான் விரும்பியதை, விரும்பியவர்க்குக் கொடுக்கிறார். 

ஆக, கடவுள் இதை ஏன் செய்கிறார், இதை ஏன் இவருக்குச் செய்கிறார் என்று நாம் அவரிடம் எதுவும் கேட்க முடியாது. நம் கையில் இருக்கும் தாலந்து அவரது விருப்பத்தால் நம் கைக்கு வருகிறது. விண்ணரசில் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர் அவரே.

(ஆ) தலைவர் தான் விரும்பிய நேரத்தில் திரும்புகிறார்.

வீட்டுத் தலைவர் இந்த நேரத்தில் வர வேண்டும் என்று சொல்ல பணியாளர்களுக்கு உரிமை இல்லை. பணியாளர்கள் எந்நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் பணியாளர்கள், அவர் தலைவர்.

(இ) நிகழ்வுகளையும் செயல்களையும் மதிப்பிடும் வரையறைகளை வகுப்பவர் தலைவரே

'நீ ஏன் வட்டிக்குக் கொடுக்கவில்லை?' என்று கேட்பவரும், 'உள்ளவருக்கும் இன்னும் அதிகம், இல்லாதவருக்கு ஒன்றும் இல்லை' என்று விதியை மாற்றி எழுதுபவரும் தலைவரே. 

ஆக, விண்ணரசின் தலைவராக இருக்கின்ற கடவுள் தான் விரும்பியதைச் செய்கிறார், விரும்பிய நேரத்தில் வருவார், விரும்பியவாறு நம்மை மதிப்பிடுவார்.

இரண்டாவதாக, விண்ணரசின் பணியாளர் பற்றி உவமை சொல்வது பின்வருமாறு:

(அ) தானே செயலாற்ற வேண்டும்

பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் செயல்களைத் தாங்களே நிர்ணயிக்க வேண்டும். வாணிகம் செய்வதும், வட்டிக்கு விடுவதும், நிலத்தில் புதைப்பதும் பணியாளர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது. பணியாளர்களின் விருப்புரிமை மற்றும் கட்டின்மையை (சுதந்திரம்) இது குறிக்கிறது.

(ஆ) தலைவர் விருப்பம் அறிந்து செயலாற்ற வேண்டும்

மூன்று பணியாளர்களும் தலைவரின் விருப்பம் மற்றும் அவருடைய குணநலன்களை அறிந்துள்ளனர். ஆனால், முதல் இரண்டு பேரும் அந்த அறிவின்படி செயலாற்றுகின்றனர். மூன்றாம் நபரோ அறிவதோடு நிறுத்திக் கொள்கிறார். செயலாற்ற மறுக்கிறார். அல்லது தன் தலைவர் பற்றிய தவறான அறிவைக் கொண்டிருக்கிறார்.

(இ) தலைவர் வரும்வரை செயலாற்ற வேண்டும்

இன்று அல்லது நாளையோடு நான் என் வேலையை நிறுத்திக்கொள்வேன் என்பது சாத்தியமல்ல. தலைவர் வரும் வரை பணியாளர்கள் செயலாற்ற வேண்டும்.

ஆக, விண்ணரசில் பணியாளர்கள் என்ற நிலையில் இருக்கின்ற நாம், தலைவரின் விருப்பம் அறிந்து தொடர்ந்து செயலாற்றினால்தான் அவரிடமிருந்து பரிசில் பெற முடியும்.

மூன்றாவதாக, விண்ணரசுக்காக எப்படிச் செயலாற்றுவது?

(அ) சிறியவற்றில்தான் பெரியவை அடங்கியுள்ளன என அறிவது

'சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவர்.' 'எண்ணி அறியக் கூடிய ஒன்றில்  - பணம், நேரம் - நம்பிக்கைக்குரியவர், எண்ணி அறிய இயலாதவற்றிலும் - உறவு, நட்பு, பிரமாணிக்கம், நற்பண்பு - நம்பிக்கைக்குரியவர். ஆக, சின்னஞ்சிறிய வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பது, சின்னஞ்சிறியவற்றில் நன்முறையில் செயலாற்றக் கற்க வேண்டும். 'சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்' (சீஞா 19:1). இன்றைய முதல் வாசகம் (காண். நீமொ 31), சிறியவற்றில் - உழைப்பதில், நூல் நூற்பதில், வியாபாரம் செய்வதில், எளியவருக்கு உதவுவதில், ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் - நம்பிக்கைக்கு உரியவராய் இருக்கும் நன்மனையாளை நமக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறது.

(ஆ) தவறான முற்சார்பு எண்ணங்களைக் களைவது

தன் தலைவரின் கடின உள்ளம் பற்றிய முற்சார்பு எண்ணம் கொண்டிருந்ததால் மூன்றாவது பணியாளர் செயலாற்ற மறுக்கிறார். கடவுள், உலகம், மனிதர்கள், உறவுகள் பற்றிய முற்சார்பு எண்ணங்களை நாம் களைய வேண்டும். எல்லா மனிதர்களும் நம்பிக்கை துரோகிகள் என்ற முற்சார்பு எண்ணம் எனக்கு இருந்தால் என்னால் நிம்மதியாக சோறு சாப்பிடக் கூட இயலாது. ஏனெனில், சாப்பிடும் ஒவ்வொரு முறையும் அதில் நச்சு இருக்குமோ என்ற எண்ணம் என்னைச் சாப்பிட விடாமல் செய்துவிடும். தலைவர் கடின உள்ளம் கொண்டவர்தான். ஆனால், நான் செயலாற்றுவேன் என நினைப்பது நன்று.

(இ) வாழ்வின் உறுதியற்ற நிலையைக் கொண்டாடுவது

திருடன் வருவது போல, கருவுற்ற பெண்ணுக்கு வலி வருவது போல ஆண்டவரின் வருகை இருக்கும் எனச் சொல்கிறார் பவுல் (காண். இரண்டாம் வாசகம்). வாழ்வின் உறுதியற்ற நிலையை நினைத்து நாம் அச்சம் கொள்ளக் கூடாது. 'இறப்பைக் கண்டு அவர் அஞ்சவும் இல்லை. வாழ்வதற்கு அவர் தயங்கவும் இல்லை' என்று புனித தூரின் நகர் மார்ட்டின் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. இறப்பும் வாழ்வும் உறுதியற்ற இரு துருவங்கள். ஆனால், இரு துருவங்களையும் இணைத்துக் கொண்டாடுதல் இனிமை.
இறுதியாக,

இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 128), 'உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!' என நம்மை வாழ்த்துகிறது. இவ்வார்த்தைகளைச் சொல்லி நாம் ஒருவர் மற்றவரை வாழ்த்தினால், ஏழ்மை மறையும். ஏனெனில், 'சீயோனிலிருந்து நமக்கு ஆசி வழங்குபவர் ஆண்டவரே!' (காண். திபா 128:5).

2 comments:

  1. ஏழ்மையை நாம் கொண்டாட வேண்டாம், ஆனால், ஏழையரைக் கொண்டாடுவோம். ஏனெனில், ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைவுக்கான, வளர்ச்சிக்கான, செயலாற்றுதலுக்கான தீப்பொறி இருக்கிறது என்று சொல்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

    நன்றி🙏

    ReplyDelete
  2. “ அகில உலக ஏழையர் ஞாயிறு”... புதிதாக இருக்கிறது. ஒருவன் ஏழையாய்ப் பிறந்து,ஏழையாய் மடிவது அவன் செய்த பாவமா? “ ஏழை இலாசர்களை உருவாக்குவது
    வீட்டின் உள்ளே அமர்ந்து விருந்துண்பவர்களே!” தலைவர் தான் விரும்புவதைத், தான் விரும்புபவருக்குக் கொடுக்கிறார்” என்று தந்தையே ஒத்துக்கொண்ட பிறகு லாசர்களை உருவாக்குவது தலைவரே எனத்தோன்றுகிறது.ஒவ்வொருவர் உள்ளத்திலும் வளர்ச்சிக்கான...நிறைவுக்கான,செயலாற்றுதற்கான தீப்பொறி இருப்பது உண்மையெனில் ஏழ்மையோ...நிறைவோ அவரவர் கைகளில் தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
    “ உறுதியற்ற நிலை குறித்த அந்த இறுதி வரிகள்....” இறப்பைக்கண்டு அவர் அஞ்சவும் இல்லை; வாழ்வதற்கு அவர் தயங்கவும் இல்லை.” உறுதியற்ற நெஞ்சங்களுக்கு உயிரூட்டும் அழகான வார்த்தைகள்.
    தங்களின் வாய்ப்பு,உடல்நிலை மற்றும் சூழ்நிலை எப்படியிருப்பினும் கைமேல் உள்ள வேலையைத் தலைமேல் உள்ள கடமையாகப் பாவிக்கும் தந்தையைப் பார்த்து “சீயோனிலிருந்து ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!” என வாழ்த்துகிறேன். தந்தைக்கு வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete