Wednesday, November 11, 2020

உங்கள் நடுவே

இன்றைய (12 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 17:20-25)

உங்கள் நடுவே

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகின்ற சில பரிசேயர்கள், 'இறையாட்சி எப்போது வரும்?' என்று கேட்கின்றனர். இயேசுவோ, 'இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது' என்கிறார். இயேசுவின் வார்த்தைகளை நேரடிப் பொருளில் எடுத்தால், இறையாட்சி என்பது பரிசேயர்களில் செயல்படுகிறது, அல்லது பரிசேயத்தனத்தில் இருக்கிறது என்று பொருள் குறுகிவிடும். 'உங்கள் நடுவே' என்பதை நாம் பரந்துபட்ட பொருளில், அனைத்து மாந்தர்களையும் உள்ளடக்கிய பொருளில் எடுத்துக்கொள்வது நல்லது.

'இறையாட்சி இன்னொரு நாள் வரும் எனக் காத்திராதீர்கள். அது இன்று இப்போது உங்கள் நடுவே இருக்கிறது' என்கிறார் இயேசு. அது கண்ணுக்குப் புலனாகும்படி இருப்பதில்லை. ஆனால், அதை அனுபவித்து உணர முடியும்.

இறையாட்சி என்பது சமத்துவத்தின், மன்னிப்பின், மாண்பின் அடையாளம் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் (காண். பில 7-20) புனித பவுல் எடுத்தியம்புகிறார். முதல் வாசகம் பவுலுடைய திருமுகங்களில் மிகச்சிறிய திருமுகம் அல்லது பரிந்துரைக் கடிதம் என அழைக்கப்படும் பிலமோன் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய நூலாக இருந்தாலும் மிகப்பெரிய புரட்டிப் போடுதலை இது செய்கின்றது. அது என்ன புரட்டிப் போடுதல்? கொலோசை நகரின் முக்கியமான செல்வந்தர் பிலமோன். இவருடைய அடிமையின் பெயர் ஒனேசிமு. அடிமை என்றவுடன் இன்று அது வெறும் வார்த்தையாகத் தெரிகிறது. இன்று நாம் காலையிலிருந்து எழுந்தவுடன் ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிகிறது. குழாய் திறந்தவுடன் தண்ணீர் வருகிறது. ஒரு பக்கம் சுடுதண்ணீர் மறுபக்கம் குளிர்ந்த நீர். அங்கே அருகில் தொங்கும் புதிய டவல். அருகிலேயே கழிப்பறை. அருகில் சென்றாலே தானாகவே தண்ணீர் இட்டுக்கொள்ளும். குளித்து முடித்து வெளியே வந்தவுடன் முடி உலர்த்தி, மின்விசிறி, அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட ஆடைகள், மேலே ஒரு கையில் துணிகளை உயர்த்தி மறு கையால் துணியை உருவி பட்டன் மாட்டிக்கொண்டே ஊபர் ஈட்ஸ் துலாவி காலை உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அப்படியே அடுத்த வேலை பார்க்க கிளம்பிவிடலாம். ஆனால், அன்று இவை எல்லாவற்றையும் செய்ய பிலமோனுக்கு ஒனேசிமு தேவைப்பட்டார். எழுப்பி விட, தீப்பந்தம் ஏற்ற, தண்ணீர் கொண்டுவர, கழிவிற்கு மண்பானை கொண்டுவர, தண்ணீர் சுட வைக்க, விறகு பொறுக்க, அடுப்பு ஏற்ற, வெதுவெதுப்பாய் வாளியில் நிரப்ப, குளிக்க வைக்க, துண்டால் துவட்டி விட, ஆடையை மற்றும் உணவு தயாரிக்க, வண்டி இழுக்க என அடிமை இல்லாமல் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாத நிலை. ஒருநாள் காலை பிலமோன் துயில் எழும் நேரம் ஒனேசிமு இல்லை. அவர் தப்பிவிட்டார். அடிமை தப்பினால் அவருக்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்று கிரேக்க மற்றும் உரோமைச் சட்டங்கள் நிர்ணயித்தன. அப்படித் தப்பி வந்த ஒனேசிமு பவுலிடம் அடைக்கலம் அடைகிறார். பிலமோன் வீட்டிற்குப் பவுல் அடிக்கடி வந்து சென்றதால் பவுலை ஒனேசிமுவுக்குத் தெரிந்திருக்கலாம். இப்படித் தன்னிடம் வந்த ஒனேசிமுவை மீண்டும் பிலமோனிடம் அனுப்புகின்றார். பிலமோன் கோபத்தால் ஒனேசிமுவைத் தண்டித்துவிடலாம் என்று நினைத்த பவுல் ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதுகின்றார். அக்கடிதத்தின் ஒரு பகுதியே முதல் வாசகம். 

'என் இதயத்தையே அனுப்புகிறேன்' என்று பவுல் சொல்கின்றார். மேலும், 'நீர் அவனை ஓர் அடிமையாக அல்லாமல் கிறிஸ்தவ நம்பிக்கையில் ஒரு சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்' என்று பிலமோனுக்கு எழுதுகின்றார். அக்காலத்தில் அடிமை என்பவர்கள் விலங்குகள் அல்லது பொருள்களாகக் கருதப்பட்டனர். அஃறினையாகக் கருதப்பட்ட ஒருவரை உயர்திணையாகக் கருத பிலமோன் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும். அவருடைய உளப்பாங்கு மாற்றம் பெற வேண்டும். இறுதியாக, 'என்னை ஏற்றுக்கொள்வது போல அவனை ஏற்றுக்கொள்ளும்' என்று அடிமையோடு தன்னையே இணைத்துக்கொள்கின்றார் பவுல்.

மேலும், ஒனேசிமுவுக்காக தன்னையே பிணையாக்குகின்றார்.

ஆக, பவுலைப் பொருத்தவரையில் இறையாட்சி என்பது நம்பிக்கையாளர்களின் சமத்துவத்திலும், சகோதரத்துவத்திலும், மன்னிப்பிலும், பரந்த மனப்பான்மையிலும், தாராள உள்ளத்திலும் அடங்கியுள்ளது.

இறையாட்சி என்பது வானில் தோன்றும் அறிகுறி அல்ல.

மாறாக, நம் வாழ்வின் சின்னஞ்சிறு நிலைகளில் அது வந்துபோகின்றது.

எரிச்சல் வருகின்ற இடத்தில் ஒரு புன்முறுவல் பூக்கும்போது,

ஏமாற்றம் வருகின்ற இடத்தில் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்போது,

நிறைய சிரிக்கும்போது, நிறைய அழும்போது என எல்லா இடங்களிலும் இறையாட்சி நிரம்பியிருக்கிறது.

இல்லை, நாம் இறையாட்சியை நிரப்பி நிற்கிறோம்.

2 comments:

  1. இறையாட்சி,
    நம் வாழ்வின், சின்னஞ்சிறு நிகழ்வுகளில், வந்து போகிறது.

    👍

    ReplyDelete
  2. அருமை! பிலமோன் என்ற செல்வந்தனுக்குத் தேவைப்பட்டவரே ‘ ஒனேசிமு’ எனினும், அவரைத் தன்’ இதயமென’ வரித்த பவுல் என் பார்வையில் உயர்ந்து நிற்கிறார்.”ஒனேசிமுக்காக தன்னையே பிணையாக்குதல்”.... இறையாட்சியென நினைக்க இதற்குமேல் ஏதுமுள்ளதோ? ஆனாலும் ‘ இப்படிப்பட்ட பெரிய காரியங்களில் வருவதுவே இறையாட்சி’ என்று நினைப்பவர்களுக்காகத் தந்தை கூறுகிறார்....” அது புன்முறுவலிலும், பொறுமையிலும்,அழுகையிலும் ஏன் சிரிப்பிலும் கூட வரலாம். நம்மைச்சுற்றியுள்ள அனைத்திலும் இறையாட்சி நிரம்பியிருக்கிறது எனப் பார்க்காமல் நாம் தான் இறையாட்சியை நிரப்பி நிற்கிறோம் என்று பார்ப்பது எத்துணை சிறப்பு!”

    “ சிறிதிலும் பெரிது பார்”..... “இதுவே என் watch word“... என சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு ஒரு salute!!!

    ReplyDelete