Tuesday, November 3, 2020

சீடராய் இருத்தல்

இன்றைய (4 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 14:25-33)

சீடராய் இருத்தல்

இயேசுவின் சீடத்துவப் போதனையும், சீடத்துவம் பற்றிய உவமைகளும் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கின்றன. இந்த நற்செய்திப் பகுதியின் பாடத்தில் ஏதோ ஒரு பிழை இருப்பது போல, அல்லது ஏதோ ஒரு பகுதி காணாமல்போனது போல இருக்கிறது.

தன்னிடம் வருபவர் அல்லது தன்னைப் பின்பற்றுபவர், தன்னை மிகவும் உயர்வாக அல்லது மேலாகக் கருத வேண்டும் என இயேசு விரும்புகிறார். அல்லது, தந்தை, தாய், பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் போன்ற யாரும் இயேசுவின் இடத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது.

இதைச் சொல்லிவிட்டு, 'கோபுரம் கட்ட விரும்பும் ஒருவர்' மற்றும் 'போருக்குச் செல்லும் அரசன்' என்ற இரண்டு உருவகங்களை அல்லது உவமையைப் பயன்படுத்துகிறார் இயேசு. உவமைகளின் இறுதியில், 'அப்படியே, உங்களுள் தம் உடைமையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராயிருக்க முடியாது' என்கிறார்.

உறவுகள் பற்றி இயேசு தொடங்கி, உடைமைகள் பற்றி நிறைவு செய்கின்றார். 'உடைமை' பற்றிய இயேசுவின் செய்தி பாடத்திற்குள் வராமல் மறைந்துவிட்டதா? அல்லது இயேசுவின் வார்த்தைகளே இவ்வளவுதாமா?

முதல் உருவகத்தில், ஒருவர் கோபுரம் கட்டுகின்றார். அவர் அதற்கான செலவை முன்கூட்டியே கணிக்க வேண்டும். அல்லது பாதி தூரம் வந்தவர் மீதி தூரம் வர முடியவில்லை என்றால் மற்றவர்கள் அவரைக் கேலி செய்வர். 'கோபுரம்' எல்லாருடைய கண்களுக்கும் எளிதாகத் தெரியக் கூடியது. ஒருவேளை அந்த நபர் கிணறு தோண்டி, பாதி தூரம் தூண்டிவிட்டு மீதித்தூரம் தோண்டாமல் விட்டால் மற்றவர்கள் அதைக் கேலி பேசுவதில்லை. மேலும், தண்ணீர் கிணற்றில் ஊறுவதும் ஊறாமல் இருப்பதும் நம் கைகளில் இல்லை. ஆனால், கோபுரம் கட்டுதல் அப்படி அல்ல. இயேசுவைப் பின்பற்றுவதும் மறைவான ஒரு செயல் அல்ல. மாறாக, எல்லாருடைய கண்களிலும் படுமாறு நடக்கும் ஒரு செயல். ஆக, ஒருவர் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தன் பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் முன்கணித்து ஏற்பாடு செய்ய வேண்டும். பாதி வழி போன பிற்பாடு, அதற்கான தயாரிப்பில் ஈடுபடுவது தவறானது.

இரண்டாம் உருவகத்தில், ஓர் அரசர் போருக்குச் செல்கின்றார். தன்னைவிட அதிக நபர்களோடு வருபவரை எதிர்கொள்ள இயலாத நிலையில் அவரோடு அமைதியை ஏற்படுத்த அரசர் முயல்கிறார். அதை விடுத்து, விடாப்பிடியாகப் போய் மோதினால், போரில் இவர் தோல்வியைத் தழுவுவதோடு, தன் படையின் மக்களையும் இழக்க நேரிடும். ஆக, இங்கே, அரசரின் முன்மதி, சமயோசித யோசனை, முடிவெடுக்கும் திறன் ஆகியவை பாராட்டுதற்குரியவை.

ஆக, முதல் உருவகம் தொடர்ந்து முன்னேறுவதையும், இரண்டாம் உருவகம், தேவைப்படின் பயணத்தை நிறுத்துவதையும் சொல்லி, சீடத்துவத்தின் பண்புகளை நிறைவுசெய்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். பிலி 2:12-18), புனித பவுல், 'உலகில் ஒளிரும் சுடர்களாகத் திகழ்வீர்கள்' என வாழ்த்துகின்றார். இவ்வுலகில் ஒளிரும் சுடராக நாம் திகழ்வதற்கான ஒரு வழி சீடத்துவம். அந்த ஒளி இந்த உலகில் சுடர, ஒருவர் முன்மதியும், முடிவெடுக்கும் திறனும், பிரச்சனைகளைக் கையாளும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்.

1 comment:

  1. “ சீடத்துவம்” ...இந்நாட்களில் அதிகமாகக் கையாளப்படும் ஒரு வார்த்தை. ஒரு காரியத்தைக் கையாளுமுன் அதற்கான முன்மதியை ஆராயும் படியான உருவகங்கள். “கோபுரம் கட்ட விரும்பும் ஒருவர்” உருவகத்தில் “ பாதி தூரம் வந்தவரால் மீதி தூரம் வர இயலவில்லை” என்பதற்கு கோபுரம் கட்டுதலையும்,கிணறு தோண்டுதலையும் ஒப்பிட்டுக் கூறுவது அழகான புரிதலைத் தருகிறது.” போருக்குச் செல்லும் அரசன்” உருவகத்தில் “ எதிரியின் பலம்,பலவீனம் தெரிந்து அவனைத் தாக்க முயல்வதே புத்திசாலித்தனம் என்று உணர்த்தப்படுகிறது. ஒருவன் ஒரு முடிவெடுக்கையில் அவனின் முன்மதியும்,சமயோசித யோசனையும், முடிவெடுக்கும் திறனும் அவனுக்கு முன்னே செல்ல வேண்டுமென்பதே சால்பு என்பதைத் தன் முடிவாகத் தருகிறார் தந்தை. இன்றையப்பதிவில் குறிப்பிட்டுள்ள அத்தனையையும் கொண்டுள்ள ஒருவனே....ஒரு சீடனே ஒளிரும் சுடராகப் பிரகாசிக்க முடியும்! இன்றைய உலகிற்கு....வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைத் தனக்கே உரித்தான முன்மதியோடு தந்திருக்கும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete