Sunday, November 22, 2020

பற்றாக்குறை இருந்தும்

இன்றைய நிகழ்வ எருசலேம் ஆலயத்தில் நடைபெறுகிறது. பெண் ஒருவர் இரண்டு செப்புக்காசுகளைக் காணிக்கைப் பெட்டியில் போடுகின்றார். அவருடைய செயலை இயேசு மிகவே பாராட்டுகின்றார். 

தன்னிடம் உள்ள இரண்டு செப்புக்காசுகளையும் போடச் செய்யும் அளவுக்கு அன்றைய சமூக அல்லது சமய நெறி இருந்தது என்று நினைக்கும்போது நமக்குச் சற்று கோபம் வரவே செய்கிறது.

இந்தப் பெண் மூன்று வார்த்தைகளால் அறிமுகப்படுத்தப்படுகின்றார்:

(அ) 'வறுமையில் வாடினார்' - பொருளாதார வறுமை அல்லது ஏழ்மையே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, அந்தப் பெண்ணிடம் இதைத் தவிர வேறு பணம் அல்லது சேமிப்பு இல்லை.

(ஆ) 'அவர் ஒரு கைம்பெண்' - ஏழ்மையே அவரைப் பிறரைச் சார்ந்தவராக வாழச் செய்திருக்க, கைம்பெண் என்னும் நிலை அவரை இன்னும் கையறுநிலைக்குத் தள்ளுகிறது.

(இ) 'தன்னிடம் பற்றாக்குறை இருந்தும் தன்னிடம் உள்ள அனைத்தையும் காணிக்கையாகப் போட்டார்' - தனக்கென அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் தன்னிடம் வைத்திருந்தது மிகவும் சொற்பமான பணம். ஏனெனில், ஒரு காசு என்பது 1 தெனாரியத்தில் 128இல் ஒரு பகுதியாகும்.

'பணம் என்றால் என்ன?' என்ற ஒரு காணொயைக் கடந்த வாரம் பார்த்தேன்.

பணத்தைப் பற்றிய பார்வை நமக்கு மூன்று நிலைகளில் உள்ளது: (அ) பண விருப்பம் - அதாவது, பணமின்றி ஒன்றும் செய்ய இயலாது. ஆக, அதிக பணம் சேர்க்க வேண்டும் என நினைப்பது. (ஆ) பண வெறுப்பு - அதாவது, பணம் ஒரு பேய். பணத்தைத் தேடக் கூடாது. பணம் எல்லாத் தீமைகளுக்கும் காரணம் என நினைப்பது. (இ) பணப் பயன்பாடு - அதாவது, பணம் என்பது நம்முடைய உழைப்பு, ஆற்றல், சேமிப்பின் மிச்சம். நம் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் ஒரு பணியாள். இப்படிப்பட்ட நடுநிலைப் பார்வை.

பண்டமாற்று முறையிலிருந்துதான் பணம் வந்தது. என்னிடம் 100 மூடை அரிசி இருக்கிறது. உங்களிடம் 100 மூடை கோதுமை இருக்கிறது. நாம் இருவரும் மாற்றிக்கொள்கிறோம். ஆனால், எனக்கு ஒரு கிலோ அரிசிதான் தேவையாக இருக்கிறது. நான் என்ன செய்கிறேன்? மீதமிருக்கிற 99 மூடைகளைப் பணமாக மாற்றி வைத்துக்கொள்கிறேன். அப்படி வைத்தால் எனக்குத் தேவையானதை நான் பின்னர் வாங்கிக்கொள்ள முடியும். ஆக, என்னிடம் உள்ள ஒன்றை இன்னொற்றாக மாற்றி மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள உதவுவதே பணம்.

மேற்காணும் நிகழ்வில் காணும் கைம்பெண்ணின் பார்வை நடுநிலைப் பார்வையாக இருக்கிறது.

தனக்கென உள்ளதை, தன்னிடம் உள்ளதை இன்னொன்றாக மாற்றி - காணிக்கையாக மாற்றி, கடவுளுக்குக் கொடுத்து - அதன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்கிறார்.

ஆனால், பணத்தை ஏன் கடவுளுக்குக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி அடுத்து எழலாம். நாம் கொடுக்கும் பணம் கடவுளுக்கா செல்கிறது? என்று அடுத்த கேள்வி தொடரலாம்.

அந்தப் பெண் கேள்விகள் கேட்கவில்லை. 

எழுந்தாள். நடந்தாள். தன் பணத்தைக் கடவுளுக்குக் கடன் கொடுத்து அமர்ந்தாள். தன் செப்புக் காசுகளின் மதிப்பைத் தங்கக் காசுகள் எனக் கூட்டினாள்.

'பற்றாக்குறை' என்பது மனம் சார்ந்ததே அன்றி, பணம் சார்ந்தது அல்ல என நமக்கு இந்த ஒற்றைச் செயலால் சொல்லிவிட்டாள்.

'போதும்' என்றால், இதுவே நமக்குப் போதும்!

'போதாது!' என்றால், எதுவுமே நமக்குப் போதாது!

பற்றாக்குறை இல்லாத மனம் அனைத்தையும் இழக்கும். 

இப்பெண்ணிடம் இருந்த நிறைவு நமக்குக் கிடைத்தால் எத்துணை நலம் - பொருளாதார நிறைவு மட்டுமல்ல. உறவு நிறைவு, ஆன்மிக நிறைவு, அன்பு நிறைவு, தன்மதிப்பு நிறைவும் கூட.

2 comments:

  1. இந்நிகழ்வில் காணும் கைம்பெண்ணின் பார்வை நடுநிலைப் பார்வையாக இருக்கிறது.

    தனக்கென உள்ளதை, தன்னிடம் உள்ளதை இன்னொன்றாக மாற்றி - காணிக்கையாக மாற்றி, கடவுளுக்குக் கொடுத்து - அதன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்கிறார்.

    அந்தப் பெண் கேள்விகள் கேட்கவில்லை.

    எழுந்தாள். நடந்தாள். தன் பணத்தைக் கடவுளுக்குக் கடன் கொடுத்து அமர்ந்தாள். தன் செப்புக் காசுகளின் மதிப்பைத் தங்கக் காசுகள் எனக் கூட்டினாள்.

    பற்றாக்குறை' என்பது மனம் சார்ந்ததே அன்றி, பணம் சார்ந்தது அல்ல என நமக்கு இந்த ஒற்றைச் செயலால் சொல்லிவிட்டாள்.

    பற்றாக்குறை இல்லாத மனம் அனைத்தையும் இழக்கும்.

    அருமை👌 நன்றி🙏


    ReplyDelete
  2. “என்னிடம் உள்ள ஒன்றை இன்னொன்றாக மாற்றித்தக்க வைத்துக் கொள்வதே பணம்” தன்னிடம் உள்ளதை காணிக்கையாக மாற்றி, கடவுளுக்குக் கொடுத்து அதன் மதிப்பைத்தக்க வைத்துக்கொள்கிறார் இன்றையப் பதிவில் வரும் ‘கைம்பெண்.’ எதற்காக க் கடவுளுக்குக் காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற கேள்வியெல்லாம் அவள் உள்ளத்தில் எழவில்லைத்...தந்தையைப்போல.
    “எழுந்தாள்..நடந்தாள்.... தன் பணத்தைக் கடவுளுக்குக் கடன் கொடுத்து அமர்ந்தாள்.தன் செப்புக்காசுகளின் மதிப்பைத் தங்கக் காசுகள் எனக்கூட்டினாள்.” இவளுடைய செயலின் மேன்மையைச் சொல்ல இதைவிட வார்த்தைகள் இருக்க முடியாது.ஒருவருக்குப் போதும்,போதாது என்பது மனம் சார்ந்ததேயன்றி பணம் சார்ந்தது அல்ல எனச் சொல்லாமல் சொல்லி விட்டாள்.
    தந்தை தன் மனம் திறக்கிறார்....போதும் என்ற மனமும்,,நிறைவும் அடுத்தவர் எனக்குத் தருவதல்ல...நானே எனக்கே கொடுத்துக் கொள்வது.. என்று.
    விவிலியத்தில் வரும் கதாபாத்திரங்களில் என் மனத்திற்கு மிக நெருக்கமானவள் இந்தக் கைம்பெண். அவளின் தாராள மனம் எனக்கும் இருந்தால் எத்துணை நலம்!
    தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete