Thursday, November 5, 2020

பொறுப்பற்ற முன்மதி

இன்றைய (6 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 16:1-8)

பொறுப்பற்ற முன்மதி

தான் தன் தலைவரிடம் மாட்டிக்கொண்டதால், தலைவரின் உடைமைகளைத் தான் பாழாக்கியதாகத் தன்மேல் குற்றம் சாட்டப்பட்டு தன் தலைவர் தன்னைக் கண்டித்ததால், வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்படும் நிகழ்வை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

வீட்டுப் பொறுப்பாளர் இறுதிவரை தன் தலைவரின் சொத்துகளைப் பாழாக்குபவராகவே இருக்கிறார்.

'நூறு குடம் எண்ணெய்' என்னும் கடனை, 'ஐம்பது குடம்' என்றும், 'நூறு மூடை கோதுமை' என்னும் கடனை, 'எண்பது மூடை' என்றும் எழுதுமாறு பணிக்கிறார். 

தலைவர் அவரது செயலைப் பாராட்டுவதுடன், இயேசுவும், 'ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்கிறார்கள்' என்று பாராட்டுகின்றார்.

பொறுப்பற்ற, ஆனால், முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளரின் செயலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? தலைவரின், இயேசுவின் பாராட்டு மொழிகளை எப்படிப் புரிந்துகொள்வது?

பொறுப்பாளரின் செயல்கள்:

(அ) தன்நிலை அறிதல் அல்லது தன்னறிவு

தான் பொறுப்பிலிருந்து அகற்றப்படுவது உறுதி என்பதை அவர் முன்னுணர்ந்தவராக இருக்கிறார். மேலும், தலைவர் அவரை நீக்கப்போவதாகச் சொன்னவுடன், 'மண் வெட்டவோ என்னால் இயலாது, இரந்து உண்ணவோ வெட்கமாய் இருக்கிறது' என்று தன்நிலை அறிகிறார். 

(ஆ) நல்உள்ளத்தை விலை கொடுத்து வாங்குவது

மற்றவர்களின் நல்லுள்ளத்தை நாம் பெற கண்டிப்பாக முயற்சிகள் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றார் இவர். தலைவரின் சொத்தைக் கொண்டே கடன்பட்டவர்களையும் அவர்களுடைய தயை மற்றும் நல்லுள்ளத்தையும் விலைக்கு வாங்குகின்றார்.

(இ) உடனடியாகச் செயலாற்றுதல்

தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் உடனடியாக ஈடுபடுகின்றார். தன்னைப் பற்றித் தன் தலைவரிடம் சொல்லிக் கொடுத்தவர் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கவில்லை அவர்.

மேற்காணும் மூன்றையும், 'முன்மதி' என்ற வார்த்தையில் சொல்லிவிடுகிறார் இயேசு.

எதிர்மறையான ஒரு நிகழ்வை அந்த வீட்டுப் பொறுப்பாளர் பிரச்சனையாகப் பார்க்காமல், வாய்ப்பாகப் பார்க்கிறார். அதற்காகத்தான் தலைவரும் இயேசுவும் அவரைப் பாராட்டுகின்றனர்.

எதிர்மறை நிகழ்வுகள் நடந்தே தீரும். ஆனால், அவற்றை நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் தீர்வு இருக்கின்றது. அவற்றை நாம் பிரச்சனைகள் என எடுத்தால், அவற்றைக் குறித்து புலம்பிக் கொண்டிருப்போம். அவற்றை வாய்ப்பாக நாம் பயன்படுத்தினால், எதிர்மறை நிகழ்வுகளையும் நமக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும், வீட்டுப் பொறுப்பாளர், அழிந்து போகும் செல்வத்தை வைத்து அழியாக நட்பைத் தேடிக்கொள்கின்றார். இதுதான் நாளைய நற்செய்தி வாசகம்.

1 comment:

  1. என்னதான் பொறுப்பாளரின் செயலை முன்மதி,நல் உள்ளத்தை விலைகொடுத்து வாங்குவது, உடனடியாகச் செயலாற்றுதல் என்னும் வரிகளில் இயேசு பாராட்டினாலும், நம் மதியும்,மனமும் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கத்தான் செய்யும். யார் சொத்தை எடுத்து யாருக்குக் கொடுப்பது?ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கலாம் உணவு என்னுடையதாக இருக்கும் பட்சத்தில்.ஆனால் இங்கே நடப்பது நியாயமான செயலாகத்தெரியவில்லை. வீட்டுப்பொறுப்பாளர் அழியும் செல்வத்தை வைத்து அழியாத நட்பைத்தேடிக்கொள்கிறார் என்கிறார் தந்தை. இயேசுவுக்கும், யேசுவுக்கும்( தந்தை) வேண்டுமெனில் அப்படித்தெரியலாம்.ஆனால் நாம் வாழும் இந்த உலகில் அதற்குப்பெயர் “ அடாவடித்தனம்”. ஆயினும் ‘எதிர்மறை நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் தீர்வு இருக்கிறது’ எனும் செய்திக்காகத் தந்தையைப் பாராட்டுகிறேன்.நன்றி!!!

    ReplyDelete