Monday, July 8, 2019

உம்மைப் போகிவிடேன்

இன்றைய (10 ஜூலை 2019) முதல் வாசகம் (தொநூ 32:22-32)

உம்மைப் போகிவிடேன்

'நான் உம்மைப் போகவிடேன்!' என்று உங்களிடம் யாராவது சொல்லியிருக்கிறார்களா?

'என் வீட்டில் உணவருந்தாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என்னோடு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்காமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என்னைக் குணப்படுத்தாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ இந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடாமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ வழக்கைத் திரும்பப் பெறாமால் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

'நீ என் வண்டியை இடிச்சதுக்கு ஈடு தராமல் நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்!'

- இப்படியாக அன்பு, நட்பு, பிளவு, விரிசல், பிரச்சினை வரை, 'நான் இங்கிருந்து உன்னைப் போகவிடேன்' என்று நான் மற்றவரிடமும், மற்றவர்கள் நம்மிடமும் என வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு, தன்னுடன் மற்போர் செய்த ஆடவரிடம், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்!' என்கிறார்.

இந்த நிகழ்வின் பின்புலம் என்ன?

தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையையும், ஆசீரையும் வாங்கிக்கொண்டு, தன் மாமா லாபானிடம் தப்பி ஓடுகின்றார் யாக்கோபு. அங்கே லாபானால் ஏமாற்றப்படுகிற யாக்கோபு அங்கிருந்து தப்பி மீண்டும் தன் ஊர் திரும்புகின்றார். திரும்பும் வழியில் இவர் தன் சகோதரன் ஏசாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். தன் சகோதரனை ஏமாற்ற இன்னொரு வழியைக் கண்டுபிடிக்கலாமே! என்ற எண்ணத்தில் யாக்கோபு இருக்கும்போதுதான், பெயர் தெரியாத ஆ(ண்)டவரோடு மற்போர் நிகழ்கிறது.

இது யாக்கோபின் உள்ளத்திலிருந்து ஒரு போர் என்று இதைச் சொல்லலாம்.

'ஏமாற்றுவதா? வேண்டாமா?' என்று மனத்திற்குள் போராடி, 'ஏமாற்றுவதில்லை. சகோதரனை நேருக்கு நேர் எதிர்கொள்வோம்' என்று முடிவெடுக்கிறார் யாக்கோபு. ஆகையால்தான், 'யாக்கோபு' (ஏமாற்றுபவன்) என்ற பெயர் மாற்றப்பட்டு, 'இஸ்ரயேல்' (போரிடுபவன்) என்ற பெயர் அவருக்கு வழங்கப்படுகிறது.

நிகழ்வின் இறுதியில் யாக்கோபு நொண்டி நொண்டி நடக்கிறார்.

அதாவது, தனக்கு எல்லா நேரமும் வெற்றி கிடைக்க வேண்டும், தனக்கே எல்லாம் வேண்டும், தன்னைத் தவிர இவ்வுலகில் யாரும் சிறந்தவர் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி, தன்னுடைய வலுவின்மையை முதன்முதலாக ஏற்றுக்கொள்கிறார் யாக்கோபு.

இங்கே மனம் மாறுகின்ற யாக்கோபு துணிவுடன் ஏசாவை எதிர்கொள்கிறார்.

இந்த வாழ்க்கை மாற்றம் தான் இவர் பெற்ற ஆசி.

ஆகையால், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய நான் உம்மைப் போகவிடேன்' என அடம் பிடிக்கிறார் யாக்கோபு.

நம் மனத்திலும் சில போராட்டங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். என்னுடைய இந்தப் பழக்கத்திற்கு நானே நியாயம் கற்பிப்பேன். 'யார்தான் குடிக்கல?' 'நான் மட்டும்தான் தப்ப செய்றேனா?' 'அடுத்தவரை ஏமாற்றி வாங்கிய பணத்திலா குடிக்கிறேன். என் பணத்தில்தானே குடிக்கிறேன்!' 'நான் குடித்துவிட்டு சண்டையா போடுறேன்' என்றெல்லாம் நிறையக் கேள்விகள் கேட்பேன். 'நான் விட்டுவிட நினைக்கும் ஒன்றின் மேல் இன்னும் என் மனம் சென்றால் அங்கேயேதான் நான் இருக்கிறேன்' என்பது செல்டிக் ஞானம். 'விட்டுவிட்டால் என்ன ஆகும்?' 'விடாவிட்டால் என்ன?' என்ற கேள்விகளும் என் மனத்தில் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தும். 'விட்டுவிடலாம்' என்பதற்கு என் மூளை நூறு பதில்கள் தரும். 'விட்டுவிட வேண்டாம்' என்பதற்கும் நூறு பதில்கள் தரும். இப்படிப்பட்ட நேரத்தில்தான் நான் கடவுளிடம், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலன்றி நான் உம்மைப் போகவிடேன்!' என்று அடம் பிடிக்க வேண்டும்.

இந்த நேரத்தில், 'கடவுள் இருக்கிறாரா?' என்று கேட்டு மூளை இன்னும் என்னைக் குழப்பிவிடும்.

யாக்கோபின் போராட்டங்கள் போல நம் வாழ்வின் போராட்டங்கள் எளிதாய் இருப்பதில்லை.

இந்த இழுபறி நிலையைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 9:32-38) பார்க்கிறோம். 'ஆயர் இல்லா ஆடுகள் போல மக்கள் அலைக்கழிக்கப்பட்டதைக் கண்டு அவர்கள் மேல் பரிவு கொள்கிறார்' இயேசு.

அலைக்கழிக்கப்பட்டு, 'ஏமாற்றவா?' 'வேண்டாமா' என்ற போராடிய யாக்கோபு வெல்கிறார்.

நொண்டி நொண்டி நடத்தல் கூட, 'இனி ஏமாற்றக் கூடாது' என்பதற்கான வெளிப்புற அடையாளமாக, நினைவூட்டலாக அவருக்கு மாறியிருக்கலாம்.

1 comment:

  1. என் பள்ளிப்பருவத்தில் படித்த பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளில் பசுமரத்தாணிபோல் இன்றும் என் நினைவுகளில் நிற்கும் நிகழ்வுகளில் ஒன்று யாக்கோபு பற்றியது.தன் சகோதரனுக்கெதிராக வன்மையான செயல்களில் ஈடுபட்டாலும் கூட மென்மையானவராகவே அவரை நான் பார்க்கிறேன்.யாக்கோபின் போராட்டங்கள் போல நம் போராட்டங்கள் எளிதாய் இருப்பதில்லை தான்.”நான் விட்டுவிட நினைக்கும் ஒன்றின் மேல் என் மனம் சென்றால் இன்னும் நான் அங்கேயேதான் இருக்கிறேன்.” மிகச்சரியே! விட்டுவிடலாம் என்பதற்கு மூளையின் பதில்கள் நூறெனில் விடவேண்டாம் என்பதற்கும் அதே நூறு பதில்கள். யாரோ அனுபவசாலிதான் இதைக்கூறியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட குழப்பம் மிகுந்த நேரங்களில் நாம் செய்ய வேண்டியது “ நீர் எனக்கு ஆசி வழங்கினாலன்றி நான் உம்மைப்போகவிடேன்/ நான் போக மாட்டேன்” என முரண்டு பிடிப்பது. முரட்டுப்பிடிவாதம் கூட அப்பப்போ நம் வாழ்க்கை சிறப்புறத் தேவைப்படும் ஒன்றுதான்.இம்மாதிரி பிடிவாதம் தான் ஆண்டவரின் கடைக்கண் பார்வையை நம்மேல் தக்க வைக்க வழி செய்கிறது. இனி நொண்டி நடக்கும் ஒருவரைப் பார்க்கையில், அச்செயலின் பின்னே இருக்கும் செய்தி நம் மூளைக்கு எட்டட்டும்! சாதிக்க நினைப்பவர்களுக்கேற்றதொரு பதிவு.தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete