Thursday, July 11, 2019

சாகத் தயார்

இன்றைய (12 ஜூலை 2019) முதல் வாசகம் (தொநூ 46:1-7, 28-30)

சாகத் தயார்

நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் திடீரென வெளிநாடு அல்லது வெளி மாநிலம் போய்விட்டார் என வைத்துக்கொள்வோம். அவரை நாம் மீண்டும் காணும்போது அப்படியே ஓடிப்போய் அவரை இறுகப் பற்றிக்கொள்வோம். கொஞ்ச நாள் மறைந்திருந்து பின் காணும்போதே இவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால், இறந்துவிட்டார் என்று சொல்லப்பட்ட ஒருவர் மீண்டும் கிடைத்தால் அது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தரும்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 10:16-23), இயேசு தன் சீடர்களிடம், 'ஓநாய்களிடையே ஆடுகள் போல அனுப்புகிறேன். பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் இருங்கள்' என்று சொல்லி அனுப்புகிறார்.

யோசேப்பின் எகிப்து வாழ்வு ஓநாய்களிடையே ஆடு போல இருந்தாலும், அவர் முன்மதி உடையவராக, கபடற்றவராக இருக்கிறார். அதனால்தான், ஆளுநராக மாறுகின்றார். அதனால்தான் தன்னுடைய சகோதரர்களை மன்னிக்கின்றார்.

'நான் உங்களுக்குத் தீங்கிழையேன்' என்று சொல்கின்ற யோசேப்பு அதை உண்மையாக்கும் பொருட்டு, தன்னுடைய தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை எகிப்திற்கு வந்து குடியேற அழைக்கின்றார். அவர்களும் புறப்பட்டு வருகின்றார்கள். வருகின்ற வழியில் ஆண்டவராகிய கடவுள் யாக்கோபுக்குத் தோன்றி அவருக்கு ஊக்கம் ஊட்டுகின்றார்.

யாக்கோபு யோசேப்பைச் சந்திக்கும்போது, 'இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்' என்கிறார்.

யாக்கோபு தன் வாழ்வின் நிறைவைத் தன் மகனில் காண்கின்றார்.

ஏறக்குறைய இதே வார்த்தைகளைத்தான் சிமியோன் குழந்தை இயேசுவைப் பார்க்கும்போதும் சொல்கின்றார்.

வாழ்வில் நிறைவு காணுதல் என்பது மிகப் பெரிய கொடை.

'நான் சாகத் தயார்' என்று சொல்வதற்கு இன்னும் நிறைய துணிச்சல் தேவை.

தன் வாழ்வின் இலக்கு தெளிவாக இருக்கும் ஒருவரே இப்படிக் கூற முடியும்.

இன்றைய பதிலுரைப் பாடல் நாம் எப்படி இலக்குடன் வாழ வேண்டும் என்று சொல்கின்றது:

'ஆண்டவரை நம்பு. நலமானதைச் செய். நாட்டிலேயே குடியிரு. நம்பத்தக்கவராய் வாழ். ஆண்டவரில் மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.'

3 comments:

  1. 🙏
    ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;
    உன் உள்ளத்து விருப்பங்களை, அவர் நிறைவேற்றுவார்.

    நன்றி!🙏

    ReplyDelete
  2. “ நான் சாகத் தயார்”... நம்மில் எத்தனை பேரால் இப்படிக்கூறமுடியும்? உண்மைதான்...” வாழ்வில் நிறைவு காணுதல்” என்பது மிகப்பெரிய கொடை. “போதுமெனும் மனமே பொன் செய்யும் மருந்து” எனும் முதுமொழி இருப்பினும் அதை வாழ்வாக்குபவர் மிகச்சிலரே! யோசேப்பைக் கண்டபோது யாக்கோபுக்கும்,இயேசுவைக்கண்ட போது சிமியோனுக்கும் இருந்த நிறைவு நமக்கு வர நாம் யாரைக்காண வேண்டும்? யோசிக்க வைக்கும் கேள்வி.மற்றபடி பாம்புகளைப்போல முன்மதியும்,புறாக்களைப் போல கபடற்ற தன்மையும் கொண்டிருந்தால், எந்திலையில் நாம் தள்ளப்படினும் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து வருவோம் எனும் வார்த்தைகள் ஒரு உத்வேகத்தைத் தருகின்றன.” அவரையே நம்பி,அவரில் மகிழ்ச்சி கொள்பவர்களின் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்” என்பது எக்ஸ்ட்ரா போனஸ்.குறைவற்ற வாழ்விற்கும்,நிறைவான மகிழ்ச்சிக்கும் வழி சொல்லும் ஒரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete