Saturday, July 20, 2019

மாவு புளிக்கவில்லை

இன்றைய (20 ஜூலை 2019) முதல் வாசகம் (விப 12:37-42)

மாவு புளிக்கவில்லை

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நிகழ்வை வாசிக்கின்றோம்.

எத்தனை பேர் புறப்பட்டுச் சென்றார்கள் என்று பதிவு செய்கின்ற ஆசிரியர் இரண்டு வார்த்தைகளைக் பயன்படுத்தி இப்பயணத்தின் வேகத்தையும் அவசரத்தையும் காட்டுகின்றார்:

அ. 'மாவு இன்னும் புளிக்காமல் இருந்தது'

ஆ. 'ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே'

நம் ஊர்களில் இன்னும் புளிக்காரம் இரவிலேயே கலக்கப்படுகிறது. விடியும்போது புளித்த மாவு தயாராகிவிடுகிறது. மாவு புளிக்க நேரம் இல்லை.
இரவோடு இரவாக மக்கள் புறப்பட்டுச் செல்கிறார்கள். அந்த இரவில் இறைவன் அவர்களோடு விழித்திருக்கிறார்.

இன்று இறைவன் தருகின்ற செய்தி இதுதான்.

நம்முடைய மாவு புளிக்க முடியாமல் இருக்கும் அளவுக்கு நாம் அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கலாம். பல வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். சோர்ந்து போய் இருக்கலாம். இந்த நேரங்களில் இறைவன் நம்மோடு விழித்திருக்கிறார். இறைவனின் இயல்பே விழித்திருப்பதுதான். ஆனால், நாம் கொஞ்சம் கண்களைக் கசக்கி அவரின் உடனிருப்பைக் கண்டுகொள்ள நம்மை அழைக்கிறார்.

மற்றொரு பக்கம். நாம் விட்டுப் புறப்பட வேண்டிய எகிப்து என்னும் எதிரியை உடனே விட்டுவிடத் தயாராக இருத்தல் அவசியம். விடிந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது தவறு.

1 comment:

  1. “ மாவு இன்னும் புளிக்காமல் இருந்தது” மற்றும் “ ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே” எனும் இரு வாக்கியங்கள் சொல்ல வந்த விஷயத்தையும் தாண்டி, அந்த விஷயம் நடத்தப்பட வேண்டிய வேகத்தையும்,அந்த விஷயம் நடத்தப்படுகையில் இறைவனின் பிரசன்னம் இஸ்ரேல் மக்களோடு இருந்ததையும் குறிப்பிடுவதாக்க் கூறுகிறார் தந்தை.இன்றைய நாளின் அவசரங்கள் நாம் அறிந்தவையே! ஆக்கப்பொறுத்த மனம் ஆறப் பொறுப்பதில்லை.இம்மாதிரியான நேரங்களில் நாம் ஆற,அமர யோசித்து நம்மிலிருந்து களையப்பட வேண்டியவற்றைக்களையவும், நமக்கே தெரியாமல் நம்மோடு உடன் வரும் இறைவனின் உடனிருப்பை....பிரசன்னத்தைக் கண்டு கொள்ளவும், அழைக்கப்படுகிறோம்.” மாவு” பற்றிய விஷயம் மிகச்சாதாரணமே! ஆனால் அதன் பின்னே ஒளிந்திருக்கும் செய்தி நம் வாழ்க்கையையே புரட்டிப்போடக் கூடியது. இன்றைய ‘சாதாரணங்கள்’ தான் நாளைய ‘அசாதாரணங்கள்’ என்று சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete