Monday, July 15, 2019

நீராட வந்தவள்

இன்றைய (16 ஜூலை 2019) முதல் வாசகம் (விப 2:1-15)

நீராட வந்தவள்

விவிலியத்தில் நிறைய வியப்புக் கதைகள் உள்ளன. வயதானவர்களுக்கு குழந்தை பிறக்கும், கன்னிப் பெண்ணுக்கு குழந்தை வாக்களிக்கப்பெறும், நானூறு ஆண்டுகளாக அடிமை வேலை செய்தவர்கள் எகிப்திய பாரவோனையும் அவனுடைய படைகளையும் கடலில் ஆழ்த்துவர், சுற்றி வந்தே எரிக்கோவின் மதில்களை உடைப்பர், இளைஞன் ஒருவன் ஒரு கவனைக் கொண்டு பெரிய பிலிஸ்திய வீரனை வீழ்த்துவான். இப்படி நிறைய.

இன்றைய முதல் வாசகத்தில் நீராட வந்த பாரவோனின் மகள் ஒரு குழந்தையைக் கண்டெடுக்கிறாள்.

'எபிரேயக் குழந்தை அது' என்று தெரிந்தும் அதை வளர்க்கின்றாள்.

வாசகத்தின் இறுதியில், எபிரேயன் ஒருவன் மோசேiயைக் கண்டுகொள்ள மறுக்கின்றான்.

எபிரேயர் அல்லாத ஒருத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மோசே,

எபிரேயர் ஆன தன் இனத்தாருள் ஒருவரால் எகிப்தைவிட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகிறார்.

முதலாவது, ஆச்சர்யம்.

இரண்டாவது, அதிர்ச்சி.

ஆச்சர்யமும் அதிர்ச்சியும் திடீரென நடப்பவைதாம்.

ஆச்சர்யம் நேர்முக விளைவை ஏற்படுத்துகிறது.

அதிர்ச்சி எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது.

ஆற்றில் இடப்பட்ட மோசேக்கு பாரவோனின் அரண்மனை வளர்ப்பும் தேவைப்பட்டது. பாலைவன அனுபவமும் தேவைப்பட்டது.

அரண்மனையில் தன் மாற்று அன்னையின் அரவணைப்பைக் கண்டார்.

பாலைவனத்தில் தன் இறைவனையே கண்டார்.

ஆக, ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும் இறைவனின் செயல்களே.

இரண்டும் நமக்குத் தேவை.

1 comment:

  1. “விடுதலைப் பயணத்தில்” என் மனத்தைக் கவர்ந்த ஒரு பகுதி தான் இந்த பாரவோன் மகள் மோசேயை ஆற்றில் கண்டெடுக்கும் பகுதி.மோசேயின் வாழ்வை எபிரேயரும்,எபிரேயர் அல்லாதோரும் புரட்டிப்போடுவதை, ஒருவரின் வாழ்வில் ஆச்சரியங்களும்,அதிசயங்களும் பின்னிப் பிணைந்திருப்பதாக்க் கூறுகிறார் தந்தை. அரவணைப்பும்,இறைவனின் நேரடிக்கண்பார்வையும் மோசே மட்டுமல்ல; நாம் அனைவருமே அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் தான். ஒளியும் இருளும் போல,இரவும் பகலும் போல,துக்கமும் மகிழ்ச்சியும் போல...ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் கூட ஒருவரின் வாழ்வில் இனறியமையாதவை. ஏனெனில் நம் வாழ்வில் எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை; அனைத்துமே இறைவன் செயல்களே! உணர்ச்சிப் பூர்வமான ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete